ரயிலோடு என் சிநேகம்

Posted by அகத்தீ Labels:


னக்கும் ரயிலுக்கும் இடையேயான சிநேகம் 45 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். முதன் முதலாக நான் ரயிலைச் சந்தித்த அனுபவத்தை இன்றைக்கும் அசைபோட்டுப் பார்க்கிறேன். நான் படிக்கிற காலத்தில் எங்கள் பள்ளி சுற்றுலாவில் ரயிலைப் பார்ப்பது நிச்சயம் இடம் பெறும். அப்போதெல்லாம் திருநெல்வேலியைத் தாண்டி குமரிமாவட்டத்துக்குள் ரயில் வராது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்வரை ரயில்பாதை இல்லா மாவட்டமாகவே குமரிமாவட்டம் இருந்தது. இன்றைக்கும் ரயில் பாதை இல்லாமல் திரிபுரா உட்பட பலவடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகள் உள்ளன.
நான் பத்தாவது முடித்து 11வதுக்கு சென்னைக்கு மேமாத முதல் வாரத்தில் புறப்பட்டேன். ஐயப்பன் மாமா மாம்பலத்தில் இருந்தார். அவர்தான் அழைத்து வந்தார். அப்பா, அம்மா, அண்ணன் முன்கூட்டியே பிழைப்பு நாடி சென்னை வந்துவிட்டனர். அக்காவீட்டில் தங்கியே பத்தாவது படித்தேன். ஐயப்பன் மாமா என்னை பஸ்ஸில்தான் அழைத்துக் கொண்டு வந்தார். தாழையூத்து அருகே ரயில்வே கிராஸ்சிங்கில் கேட் மூடியிருந்ததால் பஸ் நின்றது.கீழே இறங்கி நின்று கண்களை அகலத் திறந்து ரயில் போவதைப் பார்த்தேன். சென்னையில் காலையில் இறங்கியதும் அப்பா காத்திருந்து என்னை மின்சார ரயிலில் கிண்டியிலிருந்து குரோம்பேட்டைக்கு அழைத்துப்போனார். எனது முதல் ரயில் பயணம் அதுதான். ஆனால் எனக்கு ஒரு பெரிய சங்கடம். சுசீந்திரத்தில் இருந்தபோது டூர் போய் வந்த மாணவர்கள் ரயில் பயணம் குறித்து கதைகதையாகச் சொல்வார்கள். ஆனால் நான் சென்னையில் யாரிடம் சொல்வது? ரயில் இங்கு கை, கால் போல் அவர்களின் உறுப்பாக அல்லவா இருந்தது!
இரண்டொரு நாள் ரயிலில் அப்பா அங்கும் இங்கும் அழைத்துச் சென்றதோடு சரி. குரோம்பேட்டை நேரு போர்டு ஹைஸ்கூலில் சேர்த்துவிட்டதால் ரயில்பயண அனுபவம் தொடரவில்லை. முதலமைச்சர் அண்ணா இறந்த போது ரயிலின் மேல்கூரையில் பயணம் செய்தவர்கள் பாலத்தில் மோதி இறந்த செய்தி அப்போதைய முக்கியமான செய்தி. அண்ணா இறந்த செய்தி கேட்டு அழுததும் பள்ளி மாணவர் மலரில் பெரியகட்டுரை எழுதியதும் நினைவில் உள்ளது.
 அப்பாவும் அண்ணனும் வைத்திருந்த மஞ்சள் வண்ண சீசன் டிக்கெட்டை பலமுறை வாங்கி தொட்டுப்பார்த்ததுண்டு. இனி கிட்டத்தட்ட வாழ்நாளில் கணிசமான பகுதியை ரயில் பயணத்தில் கழிக்கப்போகிறேன் என்பதை அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை.
1969ல் கிண்டி மத்திய தொழிற் பயிற்சிப் பள்ளியில் டூல் அன்ட் டை மேக்கராய் சேர்ந்து பள்ளி மாணவர்க்கான சலுகை சீசன் டிக்கெட் வாங்கிய பின் குரோம்பேட்டை-கிண்டி அன்றாடப் பயணம் என்னை ரயிலோடு நெருக்கமானவனாக்கியது. ரயிலில் பல சிநேகிதர்கள் உருவானார்கள். ரயிலே என் சிநேகிதனாகியது. பல வாழ்க்கை உண்மைகளைக் கற்றுத் தந்தது. நண்பன், ஃபிரண்ட் என்கிற வார்த்தைகள் அன்றைக்கு புழக்கத்திலதிகமில்லை. சிநேகிதன் என்றே அன்று அழைத்தோம் இன்றுவரை ரயில் சிநேகம் தொடர்கிறது.
ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயது என்பதுபோல ஓடுகிற வண்டியில் ஏறுகிற வயசு என நாங்களாக ஏற்படுத்திக் கொண்ட புது மொழிக்கு விசுவாசமாய் இருந்தோம். படிக்கட்டுப் பயணம் ஆபத்தானது என்கிற எச்சரிக்கை இப்போது உறைக்கிறது. உபதேசமும் செய்கிறேன். ஆனால் அப்போது அச்சமும் இல்லை. அலுக்கவும் இல்லை. படிக்கட்டில் பயணித்து பெரியவர்கள் பலரின் அர்ச்சனைக்கு ஆளாகியிருக்கிறோம்.
அன்றைய ரயில் பயண அனுபவங்களை நினைத்துப்பார்த்தால் பல உண்மைகள் முள்ளம்பன்றியாய் சிலிர்த்து நிற்கிறது. அன்றைக்கு 10 காசுக்கு வேர்க்கடலை கைநிறைய வாங்கி மூன்று நான்குபேர் தின்றோம். இன்று  வேர்க்கடலை விலை ஐந்து ரூபாய் ஆகிவிட்டது. அளவும் குறைந்து விட்டது. ஒரு ஆள் வாய்நிறைய அள்ளிப்போட வழியில்லை. விலை எங்கள் ஆட்சியில் குறைந்திருக்கிறது என சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பொய்பேசும் மந்திரிக்கு இது புரியாதோ!
ஆனாலும் வயிற்றுப் பிழைப்புக்கு வேர்க்கடலை விற்பவனை விரட்டி விரட்டிக் காசு பிடுங்கும் ரயில்வே போலீஸாரின் வழக்கம் மட்டும் மாறாமலே தொடர்கிறது.
ரயில் அரட்டையில் அலசப்படாத விஷயமே இருக்காது. சிவாஜி-எம்ஜிஆர் மோதல், திமுக அதிமுக சண்டை, இடையே புகுந்து கம்யூனிசம் பேசும் ஏ.கே.வீரராகவன் என்ற  டெலிகிராப் ஊழியர் என மறக்க முடியாத அந்த நாட்கள் நினைவிலாடுகிறது (அந்த ஏ.கே.வீ. தமது பணி ஓய்வுக்குப் பிறகு தீக்கதிரிலேயே பணியாற்ற வந்தது தனியொரு கதை). எங்கே சுற்றினாலும் இறுதியில் செக்ஸ் விவகாரம் பேசாமல் அரட்டை முடியாது. காந்தியை விமர்சிக்கலாம், கடவுள் மறுப்பை உரக்கப் பேசலாம் - அன்றைக்கு எதிர்ப்பு இருக்காது. ஆனாலும் எம்ஜிஆர் பற்றி சற்று அடக்கித்தான் பேசவேண்டும்.
பொதுவாக சீர்திருத்த மனோபாவம் கொண்டவர்கள் நிறைய இருப்பார்கள். எனவே சனாதனவாதிகள் குரல் சன்னமாகவே எதிரொலிக்கும். பலநேரங்களில் அவர்கள் வாய்பேசவே தயங்குவார்கள். எனது சி.டி.ஐ. படிப்பு முடிந்து, ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியும் முடிந்தது. நண்பர்கள் நாலாபக்கமும் வேலைதேடி பறந்து விட்டனர். பல இடங்களில் மாறிமாறி தண்டையார்பேட்டை பெஸ்ட் அண்ட் கிராம்டன் வந்து சேர்ந்தேன். இடையே திராவிட இய்க்கத்திலிருந்து விடுபட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பக்கம் வரத்துவங்கிவிட்டேன்.
வீடும் பழவந்தாங்கல் எம்ஜிஆர் நகருக்கு இடம் பெயர்ந்துவிட்டது. தாம்பரம் முதல் கடற்கரை வரை சீசன் டிக்கெட் எடுக்கலானேன். படிக்கட்டுப் பயணம் அலுக்க-புத்த வாசிப்புக்கு பயணம் பயன்படலானது. நண்பர் வட்டமும் அதற்கொப்ப விரியலாயிற்று.
நெருக்கடி நிலை ஆட்சி அமலுக்கு வந்தது. ரயிலில் அரசியல் பேச எல்லோரும்  தயங்கினர். ரயிலில் அவசர காலத்தை விமர்சிக்கும் கையெழுத்துப் போஸ்டர்கள் திடீர் திடீரென ஒட்டப்பட்டிருக்கும் அதனை மக்கள் விரும்பி வாசிக்கத் துவங்கினர். ஊதிய முடக்கத்தை அறிவித்த அரசு-போணஸையும் இல்லை என்றது. கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை என்பன போன்ற அவசர நிலை ஆட்சி முழக்கத்தைக் கிண்டலடித்து அந்த வாசகத்தின் கீழே  ஆம், ஈடான ஊதியம் இல்லை; இணையான போனஸ்  இல்லை என்று நாங்கள் எழுதும் வாசகங்கள் பயணிகளைக் கவர்ந்தது. போலீஸார் மோப்பம் பிடிக்க அலைந்தனர். டிமிக்கி கொடுத்து நாங்கள் எழுதிய சுவரெழுத்துகளை அழிப்பதே போலீஸின் வேலையாக, மீண்டும் மீண்டும் நாங்கள் எழுத ஒருகட்டத்தில் போலிஸார் எங்களை அடையாளங் கண்டுவிட்டனர். நாங்கள் யுத்தியை மாற்றினோம். இங்கு அது தேவையில்லை என்பதால் எழுதவில்லை இதற்கிடையில் மக்களிட்மும் சலனம் உண்டானது. மௌனம் முணுமுணுப்பானது.
புறநகர் ரயில் எப்போதுமே அரசியல் தர்மாமீட்டராக இருக்கும். அவசரநிலையை எதிர்த்தவர்களும் திமுக ஊழலால் முகம் சுழித்தனர். எம் ஜி ஆர் மீதான ஈர்ப்பு காந்தமாய் வெளிப்பட்டது.
தினத்தந்தியும் குமுதமும் ரயில் பயணத்தில் ஓசியில் படித்துவிடலாம். இப்போது மேலோட்டமாய் கயிறு திரிக்கும் புலனாய்வு ஏடுகள் அந்த இடத்தைப் பிடித்துள்ளன. அரசியல் விமர்சனம் பொதுவாகக் குறைந்துள்ளது. நாத்திகம் பேசுவது குறைந்துள்ளது. அப்போது சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் பெரும்பாலும் நாற்பது வயதைக் கடந்தவர்களாக இருப்பர். இப்போது இளைஞர்கள் கணிசமாக உள்ளனர். திராவிட  இயக்கம் கொள்கை ரீதியாக மெலிய தமிழ் தீவிர தேசியவாதம், வலதுசாரி சனாதனம் போன்ற இடது வலது திரிபுகள் ரயிலிலும் வெளிப்படுகிறது.
 பெரியாரைக் கொச்சைப் படுத்துவதும் சாதிய ஆதிக்க நெடியும் வீசுகிறது. ராணி முத்து, பாக்கெட் நாவல்களின் இடத்தை ஐ பாட், எஃப்எம் பிடித்துக்கொண்டுள்ளன. உரையாடல்கள் மெலிந்து  செல்போன்களில் தனித் தனித் தீவுகளாகிக் கொண்டிருக்கிறோம். எண்பதுகள் வரை தாம்பரம்-கடற்கரை மீட்டர் கேஜ்தான். வேகமும் குறைவு, கொள்ளளவும் குறைவு. இன்று எங்கும் மீட்டர்கேஜ் கிடையாது, பிராட்கேஜ் வந்துவிட்டது. சாபக்கேடாக தமிழகம் புறக்கணிக்கபட்டிருந்தது.
நான் செயலாளராக செயல்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கவலைப்பட்டது. அப்போதைய ரயில்வே டிஆர்இயு தொழிற்சங்கத் தலைவர்கள் இளங்கோவன், அய்யலு ஆகியோர் சில விபரங்கள் தந்தனர். அப்போது பெண்களுக்கு தனிபெட்டி கிடையாது. இப்போது முதல் வகுப்புப் பயண்களுக்கு ஒதுக்குவதுபோல் கொஞ்ச இடமே இதுக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் உடனே அகல ரயில் பாதையாக மாற்று, இரண்டு பெட்டிகளை பெண்களுக்கென ஒதுக்கு என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து இயக்கம், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் காலை, மாலை ஆர்ப்பாட்டம் என தொடர்ச்சியாகப் போராடினோம். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவும் எங்களோடு சேர்ந்து போராட முன்வந்தது. கையெழுத்துகள் குவிந்தன.
அப்போது ஒரு நெகிழ்வான அனுபவம். முண்டன் என்கிற ரிசர்வ் வங்கி ஊழியர் தினசரி ஆர்ப்பாட்டத்திற்கு வருவார். அவர் அப்போது புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார், மூத்திரப் பையை சுமந்து கொண்டு அவர் வந்து நிற்கிறகாட்சி இன்னும் மனத்திரையில் அப்படியே உள்ளது. அவரிடம் மிக உருக்கமாக வரவேண்டாம் என்று கூறினேன். அவர் சொன்னார், என் நாட்கள் எண்ணப்படுகின்றன. எத்தனைநாள்  இப்படி வருவேன் எனக் கூற முடியாது. முடிந்தவரை வருகிறேன். எனக்கு அது மகிழ்ச்சியாய் இருக்கிறது, என்றார். அப்புறமும் அவர் தொடர்ந்து வந்தார் (சில நாட்களில் காலமானார்).
 கையெழுத்துகளைத் திரட்டி ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தி தென்னக ரயில்வே பொது மேலாளர் கோவில்பிள்ளையைச் சந்தித்தோம். அவர் உங்கள் கோரிக்கை மிகச் சரி, என்று கூறியதுடன், இது நீண்ட நாள் திட்டம். ஆனால் சில அதிகார நந்திகள் இதற்கு இடையூறாக இருக்கின்றன. உங்கள் போராட்டம் அந்த நந்திகளை அகற்றி திட்டத்தைக் கொண்டுவர உதவும், என்றார்.
பெண்களுக்கு அடுத்த சில தினங்களிலேயே ஒரு பெட்டி தனியாக ஒதுக்கப்பட்டது. இந்த வெற்றி எங்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்தது. வாலிபர் சங்கம் சார்பில் க. சின்னையா, உழைக்கும் பெண்கள் சார்பில் சரஸ்வதி இருவரும் தந்த பேட்டி ஆனந்தவிகடனில் வெளிவந்தது. எல்லாக்கட்சிகளிலும் தீர்மானங்களிலும் எங்கள் கோரிக்கை இடம்பிடித்தது. அதேபோல் ரயில்வே மேம்பாலம் கோரி சைதாப்பேட்டை உட்பட பல இடத்தில் போராட்டம் நடத்தினோம். இவையெல்லாம் பின்னர் வெற்றி பெற்றன. அது எங்களுகு-வாலிபர் சங்கத்திற்கு கிடைத்த வெற்றியன்றோ! இப்போது பயணிக்கும் எத்தனை பேருக்கு இது தெரியும்?
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக திருவள்ளூர்-சைதாப்பேட்டை சீசன் டிக்கெட் வைத்துள்ளேன். தினசரி சுமார் நான்கு மணிநேரம் போகவும் வரவுமாய் பயணிக்கிறேன். கடற்கரை தாம்பரம் மார்க்கத்தில் ஒருநாள் ரயில் லேட்டானால் அது பரபரப்பான செய்தி, ஆனால் கும்மிடிபூண்டி மார்க்கத்திலோ, அரக்கோணம் மார்க்கத்திலோ தினசரி லேட்தான். ரயில் பயணிகள் என்றேனும் பொறுமை இழந்து தண்டவாளத்தில் அமர்ந்து போராடினால் சட்டம் கடுமையாகப் பாய்கிறது. பிரச்சனையும் தீர்ந்த பாடில்லை. தாம்பரம் மார்க்கத்தில் 12 பெட்டிகள் ஆனால் கும்மிடிப்பூண்டி அரக்கோணம் மார்க்கங்களில் இன்னும் 9 பெட்டிகளே. போன செப்டம்பர் மாதத்திலே 12 ஆகிவிடுமென ரயில்வே அறிவித்தது வெறும் பேச்சாகநிற்கிறது. தாம்பரம் மார்க்கம் போல் இரு பாதைகள் புறநகர் ரயிலுக்கென அரக்கோணம், கும்மிடிபூண்டி மார்க்கத்தில் வருவதும் வெறும் கனவாகவே உள்ளன, ரயில் பயணிகளை கவனித்துப் பார்த்தால் மத்தியதரவர்க்கம் தாம்பரம் மார்க்கத்தில் அதிகம் பயணிப்பதும் அதனால் அங்கே தும்மினால் கூட ஆங்கிலப்பத்திரிகைகளில் மறுநாள் செய்தியாவதையும் பார்க்கலாம். தீர்வும் சற்றேனும் கிடைக்கும். ஆனால் அரக்கோணம், கும்மிடிபூண்டி மார்க்கங்களிலோ ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களே, அன்றாடக் கூலிகளே அதிகம். ஆகவே ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப் பார்வையும் மிக அதிகம், அதிகார நந்திகளுக்கு அங்குள்ளவர்கள் மக்களாகவே தெரிவதில்லை.
வேளச்சேரி பறக்கும் ரயில் புதிய வரவு . ஆனால் ஸ்டேஷன்கள் பராமரிப்பு மிகமிகமோசம். தனியாரிடம் விட்டால் எவ்வளவு அழகாக பராமரிப்பார்கள் என மக்களை பேசவைத்து தனியார்மயபோதைக்கு தள்ளிவிடுகிறது.
இன்று மெட்ரோ ரயில் வேலைகள் சுறுசுறுப்பாக நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது ஆனால் வேளச்சேரி ஸ்டேஷன்களை இரவில் பார்க்கும் போதும், குமட்டும் துர்நாற்றம் தாங்காமல் மூக்கைப் பொத்தும்போதும் சுரங்கரயிலைப் பற்றி நினைக்கும் போதே வயிற்றில் புளியைக் கரைக்கிறது. திமுக-அதிமுக போட்டி அரசியல் இங்கும் நாறுகிறது. ஐயா மெட்ரோ என்றால் அம்மா மோனோ என்கிறார். மோனோ உலகெங்கும் தோற்றுப்போன திட்டம். மும்பையிலும் பாதியில் கைவிடப்பட்ட திட்டம். அம்மாவின் அரசியல் வீம்பினால் அது சென்னைக்கு வரப்போகிறது.
எத்தனை ரயில் வந்தும் போதவில்லை, பஸ் கட்டண உயர்வு மேலும் அதிகப் பயணிகளை ரயிலைநோக்கித் துரத்தியுள்ளது. மக்கள் எந்திரமாய் பயணிக்கிறார்கள். உரையாடல் குறைந்து விட்டது. காதுகளில் மாட்டிய செல்போன்களின் உலகத்தில் நடக்கிறார்கள். காதல் அரும்பி வளரும் இடமாகவும், முறியும் இடமாகவும் ரயில் மாறிப்போனது. ரயில் இருக்கைகளும் படிக்கட்டுகளும் உயிர்பெற்றுப் பேசினால் ஓராயிரம் திரைக்கதைகள் கிடைக்கும். பண்பாட்டு முகத்திரை கிழிந்து தொங்கும்.
மக்கள் போராடும்போது அவர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து ரயில்வே சேவையை மேம்படுத்தாத அரசு;மெட்ரோ,மோனோ என் போட்டிபோட்டு புதிய ரயில் வழிகளை நீட்டிப்பது ஏனோ!சென்னையில் இப்போதே நடுத்தர மக்கள்கூட வீட்டுமணையோ,அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடோ வாங்க முடியாது.வீட்டுவாடகைகூட எக்குத்தப்பா எகிறுகிறது.சென்னை மேல்தட்டு பணக்காரர்களின் சென்னை ஆக்கப்படுகிறது.உழைப்பாளிகளை சென்னைக்கு வெளியே துரத்தத்தான் இந்த ஏற்பாடுகளெல்லாம் என எண்ணுவதில் என்ன பிழை?ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களைத் தந்தவாறே ரயில் தொடர்கிறது. நானும் அதன் சிநேகிதனாய் தொடர்கிறேன்..   
                                                           
சு.பொ.அகத்தியலிங்கம்
வண்ணக்கதிர் [தீக்கதிர் இணைப்பு] 20 மே 2012

















பிழை?
ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களைத் தந்தவாறே ரயில் தொடர்கிறது. நானும் அதன் சிநேகிதனாய் தொடர்கிறேன்..

1 comments :

  1. Unknown

    உங்களின் இதுநாள் வரையிலான ரயில்பயண அனுபவத்தில் நீங்கள் கற்றதையும் பெற்றதையும் வாலிபர் சங்க பணியோடு இணைத்து எழுதி இருப்பது சிறப்பு...வரலாறுகளை இப்படியும் கொடுக்கலாம்...

Post a Comment