ஓய்வும் விருப்ப ஓய்வும்....

Posted by அகத்தீ Labels:

ன்பான தோழர்களே!


வணக்கம்.


நாகை சென்றதால் கடந்த சில நாட்களாக முகநூலில்-வலைப்பூவில் உங்களோடு உரையாட முடியவில்லை.இப்போது மீண்டும் பயணம். புதிய உற்சாகத்தோடு..ஆம்.


உங்களுக்கு நினைவிருக்கிறதா 2011 ஜுன் 15 எனது 59 வது பிறந்த நாளையொட்டி[58வயது நிறைவு] வாழ்க்கையில் முதன் முதலாக பிறந்த நாள் செய்தியை எழுதினேன். ” ஓய்வெனப்படுவது யாதென”கேள்வி எழுப்பி ஒரு கட்டுரை தீட்டியிருந்தேன்.அதில் எழுதியவைகளை இங்கு மீண்டும் நினைவு கூர்கிறேன்.

இந்த முறை என் பிறந்த

நாளுக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது.நான் பொதுவாழ்வுக்கு வராமல்

நண்பர்கள் வற்புறுத்தியபடி தொழிற்பயிற்சி ஆசிரியராக( ஐ டி ஐ

இன்ஸ்ட்ரக்டர்) போயிருந்தால்(அதற்குரிய தகுதியும் எனக்கு இருந்தது

வாய்ப்பும் எனக்கு வந்தது)இன்று நான் பணி ஓய்வு பெற்றிருப்பேன்.அல்லது

பெஸ்ட் அண்ட் கிராம்ப்டன் தொழிற்சாலையில் தொடர்ந்து பணியாற்றி இருந்தால்

எப்போதோ வீதிக்கு வந்திருப்பேன். ஆம், அந்த ஆலையை சில ஆண்டுகளுக்கு

முன்பே மூடிவிட்டார்கள்.பொதுவாழ்வில் இருப்பதால் எனக்கு ஓய்வு உண்டா?

இல்லையா?இன்றைக்கு என்நெஞ்சில் சுழன்றடிக்கும் கேள்வி இதுதான்.



எதற்கு ஓய்வு? ஏன் ஓய்வு? எதிலிருந்து ஓய்வு?எப்போதிலிருந்து ஓய்வு?உடல்

தளர்ந்துவிட்டதா? உள்ளம் சோர்ந்துவிட்டதா?வாழ்வின் தேவைகள்

நிறைவாகிவிட்டதா?இலக்கை எட்டியாயிற்றா?மனம் சாந்தியாகிவிட்டதா?இப்படி பல

கேள்விகளை எனக்கு நானே எழுப்பிப் பார்க்கிறேன்.ஒரு புறம் பளிச்சென்று சில

பதில்கள் கிடைக்கின்றன.மறுபுறம் சில குழப்பங்கள் மிஞ்சுகின்றன.இது

குறித்து அண்மைக்காலமாக நான் நிறையவே யோசித்திருக்கிறேன்..பணச்சிக்

கலைத்

தவிர குடும்பத்துக்குள்  பெரிய சிக்கல் ஏதுமில்லை-இன்னும் சொல்லப்போனால்

இணக்கமான குடும்பமே.2013க்குள் பண நெருக்கடியிலிருந்தும் மீண்டுவிடுவேன்.

உடலைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாகவே இதுவரை

உணர்கிறேன்.உள்ளத்தைப் பொறுத்தவரை அப்படிச் சொல்ல இயலவில்லை.குறிப்பாக

பணிச்சூழல் மனநிறைவைத் தரவில்லை.பொதுவாழ்விலும் ஏதோ ஒரு வெறுமை

சூழ்ந்துள்ளதை என்னாலும் மறைக்கமுடியவில்லை-சுற்றியுள்ளோ

ரும்

அவதானிக்கின்றனர்.அதன் தொடர் விளைவாக சில தீர்மானங்களுக்கு

வந்துள்ளேன்.இது சரியா? தவறா? காலம்தான் தீர்ப்பெழுதும்.



என்னைப் பொறுத்தவரை ஓய்வு எல்லோருக்கும் தேவை.ஆனால், ஓய்வெனப்படுவது

சும்மா இருப்பதல்ல ; மனதிற்கு மகிழ்வுதரும் தொண்டொன்றில் தன்னைக்

கரைத்துக்கொள்வதே.பதவி,பொறுப்பு எதனையும் நாடாமல் இளைஞர்களுக்கு

தோள்கொடுப்பது. துணை நிற்பது.வருவாயை எதிர்பார்ப்பதும்

எதிர்பார்க்காததும் அவரவர் குடும்பச் சூழல் சார்ந்தது.சிலரின் தலைமைப்

பண்பும் அறிவுத்திறனும் அனுபவஞானமும் வலுவாக இருக்கக்கூடும்.குறிப்பிட்ட

அந்த அமைப்புக்கோ நிறுவனத்துக்கோ அத்தகையவர்களின் தேவை இருக்கக்கூடும் ;

அச்சூழலில் விதிவிலக்காக அவர்கள் நீடிப்பது தவிர்க்க

முடியாததாகும்.ஆயினும் அது பொது விதியாகிவிடகூடாது. அது விதிவிலக்கே.



உடல் உழைப்பாளிகளுக்கு ஓய்வு வயது 58 ஆக இருக்கிறது. மாநில அரசு

ஊழியர்களுக்கும் இதுவே விதி. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ;

விஞ்ஞானிகள் போன்ற அறிவுத்துறையினருக்கு ஒய்வு வயது 65.ஆனால் பொது

வாழ்வுக்கு இப்படி வயதுவரம்பு இல்லாதிருப்பது சரியா?அதிலும் அரசியலில்

ஐம்பது அறுபதுக்கு மேல்தான் பதவி வாய்க்கிறது..அப்படியானால் அவர்களுக்கு

ஓய்வே கிடையாதா?விவாதத்திற்குரியது...



ஆனாலும் தவிர்க்க முடியாதவர்கள் தவிர மற்றவர்கள் பதவி

பொறுப்புகளிலிருந்து விலகி வழிவிடும் மரபு துளிர்க்க

வேண்டும்.வெளியிலிருந்து கொண்டே ஆலோசனகள் வழங்கலாம் -தொண்டாற்றலாம் -

எழுதலாம்- பேசலாம்- பிறரைப் பயிற்றுவிக்கலாம்-ஆம் இதற்கு இதயம்

விசாலமாகவேண்டும்.



என் தகுதியை திறமையை நான் நன்கு அறிந்துள்ளேன்.விதிவிலக்கு பெறுமளவுக்கு

பெருந்தகுதி எதுவும் எனக்கு இருப்பதாக நான் கருதவில்லை.எனவே நான்

விரைவில் ஓய்வுபெற விழைகிறேன்.முன்னர் என் இச்சையினால்

பிறந்தேனில்லை..முதல் இறுதி என் வசத்தில் இல்லை..நான் ஒரு அமைப்பின்

அங்கம். நானாக ஒரு முடிவுக்குவருவது எளிதல்ல..ஆயினும் இந்த பிறந்த நாளில்

எனது உரத்த சிந்தனை ஓய்வைப்பற்றியதே..அதனை பகீரங்கமாகப் பகிர்ந்து

கொள்வதுகூட அமைப்பு ரீதியாக சரியில்லைதான்..ஆயினும்  என்னுள் தகிக்கும்

உணர்வினை ஏதேனுமொரு வகையில் கொட்டிவிட்டேன்..அவ்வளவுதான்



ஓய்வே இன்று என் விருப்பமாக உள்ளது.ஓய்வெனப்படுவது யாதெனில் யாருக்கும்

எந்த இடைஞ்சலுமின்றி -பதவி பொறுப்புகள் எதுவுமின்றி- எழுத்துப் பணியில்

இயன்றவரை கரைந்துபோகவே விரும்புகிறேன்.கைகூடுமா



ஓய்வெனப்படுவது யாதெனில்.
...


கட்டுரையில் நான் விழைந்தபடி பயணிக்கத் துவங்கிவிட்டேன்.ஆம்.நாகையில் நடை பெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் என் விருப்பத்தை வேண்டுகோளை ஏற்று மாநிலக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவித்துள்ளனர்.மாநிலத்தலைமைக்கு நெஞ்சம் நிறந்த நன்றி.சுருக்கமாகச் சொன்னால் பெரும் பொறுப்பிலிருந்து விருப்ப ஒய்வு பெற்றுள்ளேன்.ஆயினும்  தீக்கதிரில் சில கடமைகள் தற்போது உள்ளன.படிப்படியாக அதிலிருந்தும் ஒய்வுபெறுவேன் எனகிற நம்பிக்கை துளிர்க்கிறது.

அறுபதாவது வயதை நிறைவு செய்யும் போது இப்போது ஆற்றுகிற பணிகள் அனைத்தில் இருந்தும் முழுமையாய் விடுதலை பெற்று-எழுத்துத் தவததை மட்டும் மேற்கொள்ளும் சூழல் கனியுமென நம்புகிறேன்.

மனநிறைவோடும் உற்சாகமாகவும் நான் ஏற்றுக்கொண்ட பொதுவுடைமை சித்தாந்ததை எஞ்சிய என்காலம் முழுவதும் என்னால் இயன்றவரைத் தூக்கிச் சுமப்பேன்.ஓய்வெனப்படுவது அதுதானே...

தோழன்

சு.பொ.அகத்தியலிங்கம்.

தோளில் சுமக்க வேண்டிய நாவல்கள்

Posted by அகத்தீ Labels:



தோளில் சுமக்க வேண்டிய நாவல்கள்

த்து மாதம் சுமந்து பெற்ற வலியும்-பேறுகாலத்தில் பட்டவலியும்-உதிரத்தைக் கொடுத்து வளர்த்த வலியும் பிள்ளைகள் மீது தாய் வெறித்தனமாக பாசம் கொள்ளச் செய்கிறது. இந்த வலிகளை தன் வலியாக உணர்ந்த தந்தையின் பாசமும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. பிரசவ வலியைவிட கொடுமையான வலி வேறு எதுவும் இல்லை என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். இப்போதெல்லாம் குழந்தை பிரசவத்தின்போது கணவர் அருகிலிருந்து பார்க்கச்செய்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் இது வழக்கமாகிவிட்டது. நமது நாட்டிலும் இந்த வழக்கம் மெல்ல பயிற்றுவிக்கப்படுகின்றது. பெற்றவளுக்குத்தானே தெரியும் பிள்ளை அருமை என்பதை  மாற்றி  பெற்றோர்களுக்குத்தான் தெரியும் பிள்ளை அருமை என உணர்த்த சமூகம் பெருமுயற்சி எடுக்கிறது.


பிள்ளைகளுக்கு மட்டுமல்ல ஒரு நிறுவனத்தை-இயக்கத்தை-விடுதலையை- உரிமைகளை பெற்றிட; சிந்திய வியர்வையை,ரத்தத்தை,பட்டபாட்டினை அறியாத-உள்வாங்காத தலைமுறையால் அதனை பாதுகாக்க இயலுமா?வரலாற்றை கற்கவேண்டிய தேவை ஒருபுறம். அதன் உயிர்த்துடிப்பை உள்வாங்க வேண்டிய தேவை மறுபுறம்.முன்னதை வரலாற்று நூல்கள் அளிக்கும்.பின்னதை நாவல்,சிறுகதைகள் போன்ற படைப்பிலக்கியங்கள் அளிக்கும்.கம்யூனிஸ்ட் இயக்கத் தியாகத் தலைமுறையின் கடைசிச் சுவடும் காலநகர்வில் கரைந்து கொண்டிருக்கிறது.பொல்லாத உலகமயம் நம்மை சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது.இனி முன்நகர்தலுக்கான உயிர்ச்சூட்டை நேற்றைய தலைமுறையிடமிருந்து நாம் பருகியாக வேண்டும்.ஆம்.நமது வரலாற்றை படிக்கவேண்டும் நமது தியாகச் செங்குருதியை சுவாசிக்கவேண்டும்.


முதலாவதாக நமது வரலாறு முழுமையாக எழுதப்பட்டுவிட்டதா? அகில இந்திய அளவில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு 1920-33 ஆண்டு வரை முதல் பாகமாக தொகுக்கப்பட்டுள்ளது. தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதுபோக அருணன் எழுதிய இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் தமிழக வரலாறும் பிணைந்துள்ளது. அகில இந்திய மாநில தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளில் பல செய்திகள் கிடைக்கின்றன. என். ராமகிருஷ்ணன் எழுதிய தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு 1964 வரையிலுமான வரலாற்றைக் குறித்து நம்பகமான முதல் தகவல் அறிக்கையாக நம்முன் உள்ளது.


கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு என்பது தியாகிகளின் வரலாறா? சம்பவங்களின் தொகுப்பா? தத்துவ மோதல்களின் சித்தரிப்பா? உள்கட்சி சண்டைகளின் விவரிப்பா? அன்றைய கால அரசியல் - பொருளாதார - சமூகப் பின்னணியோடு கட்சி மேற்கொண்ட முயற்சிகளின் தொகுப்பா? இப்படி பல கேள்விகள் எழும். ஒரு புத்தகத்தில் இவை அனைத்தும் கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லை என்றால் பல புத்தகங்கள் தேவைப்படும். ஏனெனில் வரலாற்றை ஒற்றைக் கோணத்தில் மட்டும் புரிந்து கொள்ள இயலாது - புரிந்து கொள்ளவும் கூடாது. என். ராமகிருஷ்ணனின் வரலாற்றுப் பதிவும் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளும் இதற்கான ஆரம்ப ஆதாரங்களை திரட்டித் தந்திருக்கிறது. ஒரு தனி மனிதரின் முயற்சி என்ற வகையில் இதனை இருகை தட்டி வரவேற்போம். போற்றுவோம்.  அதே சமயம் தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை எல்லாக் கோணங்களிலும் புரிந்தகொள்ள ஏதுவாக புதிதாக எழுத வேண்டும். அது பல பாகங்களாக பல ஆயிரம் பக்கங்களாக வரக்கூடும். இதை ஒரு தனி மனிதர் செய்ய இயலாது. ஒரு குழுவாக முயற்சித்தால் முடியாதது இல்லை. அவசியம் செய்தாக வேண்டும். அடுத்த தலைமுறைக்கு - கடந்த தலைமுறையின் தியாகத்தை   உழைப்பை சரியாக உணர்த்தாமல் அடுத்த கட்ட பயணம் சாத்தியமில்லை அல்லவா?


இதுஒரு புறம் இருக்கட்டும். வரலாற்றின் உள்துடிப்பை தியாகத்தின் உயிர்மூச்சை படிக்கிற வாசகன் குருதியில் கலந்து நாடி நரம்புகளை முறுக்கேறச் செய்கிற வல்லமை படைப்பிலக்கியங்களுக்கு உண்டு. மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல் புரட்சியின் உந்துவிசை என்றால் மிகையல்ல. நான் இந்த நாவலை முதன்முதலில் நான் வாசித்த அனுபவம் இன்றும் என்னுள் பசுமையாக இருக்கிறது.


ஒருநாள் காலை வேலைக்குச் செல்வதற்காக சோற்றுமூட்டையுடன் குரோம்பேட்டையில் மின்சார ரயிலில் ஏறினேன். நாவலைப் படிக்கத் துவங்கினேன். என்னை மறந்தேன். அந்த ரயில் எத்தனை முறை கடற்கரைக்கும் தாம்பரத்திற்கும் சென்று வந்தது என்று கூட எனக்குத் தெரியாது. பசித்தபோது சாப்பிட்டேன். வேலைக்கு போகவில்லை. படித்து முடித்துவிட்டு இரவுதான் ரயிலை விட்டு இறங்கினேன். இந்த நாவலின் கதாநாயகன் பாவேல் என்னைப் புரட்டிப்போட்டு விட்டான். எத்தனை பேரை இவன் இப்படி வேதியியல் மாற்றம் செய்தானோ? நான் அறியேன்.


அதுபோல் கையூர் தியாகிகளின் வீரவரலாற்றைப் பேசும் நினைவுகள் அழிவதில்லை (மொழி பெயர்ப்பு - பி.ஆர். பரமேஸ்வரன்) என் நெஞ்சை விட்டு இன்றளவும் நீங்கவில்லை. 1946ல் நடந்த கப்பற்படை எழுச்சியின் பின்புலத்தில் யஸ்பால் எழுதிய காம்ரேட் நாவலின் கீதாவை யார்தான் மறக்க இயலும்? இப்படி பல நாவல்கள் கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட் உணர்வை ஊட்டுவதில் ஆற்றிய பங்கை அசைபோட்டு பார்க்கவேண்டும். மேலே குறிப்பிட்ட நாவல்கள் மொழிபெயர்ப்பாக வந்தவை.


தமிழில் சுயமாக எழுதப்பட்ட இத்தகைய நாவல்களை சற்று நினைவுத்திரையில் ஓடவிட்டு பார்க்கிறேன். பெரிய பட்டியல் இருக்கிறது. ஒன்று இரண்டை தொட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. பஞ்சாலைப் போராட்ட வாழ்வைப் படம்பிடித்த தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும்; தேயிலைத் தோட்டத்தில் அட்டைக் கடிகளுக்கு மத்தியில் வதைப்பட்ட தொழிலாளர்களின்  வாழ்க்கை அவலத்தையும் - கொடுமையை எதிர்த்து அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் சங்கம் சேர்ந்த வரலாற்றையும் ரத்தமும் சதையுமாய் பேசும் டி. செல்வராஜின் தேநீர்; மலைமக்களின் வாழ்க்கையை எழுச்சியை உயிர்க்காவியமாய் ஆக்கியிருக்கும் கு. சின்னப்ப பாரதியின் சங்கம்; சின்னியம்பாளையம் தியாகிகளின் வீரக்கதையை சொல்லும் ராஜாமணியின் சங்கமம் ; இந்த வரிசையில் தொண்டு நிறுவனங்களோடு செயல்பட கற்றுக்கொடுக்கும் தனுஷ்கோடியின் தோழன் இப்படி ஒவ்வொன்றும் நம் இதயத்தில் நுழைந்து மூளையைக் குடைந்து ரத்த நாளங்களை சூடேற்றும்.


இந்த வரிசையில் கு. சின்னப்ப பாரதியின் தாகம், சர்க்கரை, டி. செல்வராஜின் மலரும் சருகும், ச. தமிழ்செல்வனின் ஜிந்தாபாத் உட்பட பல உண்டு. மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கே. முத்தையா எழுதிய விளைநிலம், உலைக்களம். போன்ற நாவல்கள் வெறும் கதையல்ல. கம்யூனிஸ்ட் இயக்கம் தமிழகத்தில் வேர் கொண்டபோது சந்தித்த அடக்குமுறைகளை போராட்டங்களை ஜீவத்துடிப்போடு நம்மிடம் பேசும்.  சுபாஷ் சந்திர போஸ் எழுதிய சாம்பவான் ஓடை மற்றும், சிவராமன் போன்ற நாவல்களும் இதே பணியைச் செய்கின்றன. (நினைவிலிருந்து எழுதியதால் பல நூல்களின் பெயர்கள் விடுபட்டிருக்கக்கூடும். அதையும் இக்கட்டுரை வாசிப்போர் சேர்த்துக் கொள்ளலாம்)


கடைசியாக வெளிவந்த டி. செல்வராஜின் தோல் நாவல், ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் அவசியம் படிக்க வேண்டிய தோளில் சுமக்கவேண்டிய நாவல். திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தொழிலாளிகளை அணிதிரட்டிய வரலாற்றை - அதன் கதாநாயகனாய் களத்தில் நின்ற எ. பாலசுப்பிரமணியம், மதனகோபால், எஸ்.கே. தங்கராஜ் உட்பட தலைவர்களின் வாழ்க்கையை - தியாகத்தை, தீரத்தை, ஒடுக்கப்பட்ட மக்களின் அர்ப்பணிப்பு மிக்க போர்க்குணத்தை இந்த நாவல் நம் இதயத்தில் ரத்தத்தால் எழுதுகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு நான் என்னை மறந்து படித்த நாவல் இது.


இவை மட்டுமல்ல. டால்ஸ்டாய் எழுதிய  அன்னா கரீனா மற்றும் போரும் வாழ்வும்,வாண்ட வசலிவஸ்கா  எழுதிய வானவில்,குவான் தின் கோ எழுதிய உன் அடிச்சுவட்டில் நானும், அலெக்ஸ் ஹெலே  எழுதிய ஏழு தலைமுறைகள், சி.ஆர். ரவீந்திரன்  எழுதிய பிணம் தின்னிகள், மைக்கேல் ஷோலோகோ எழுதிய டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது, ஒஸ்திரவொஸ்கி எழுதிய வீரம் விளைந்தது, சூ.ஈ-போ எழுதிய சூறாவளி இப்படி பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த நாவல்கள் தமிழர்களின் நாவல் ரசனையையே பல மடங்கு உயர்த்திய நாவல்கள். இவற்றையெல்லாம் படித்தவர்கள் மரணத்தின் வாயில் போகும்போதும் செங்கொடியின் மதிப்பைப் போற்றுவார்கள்.


கம்யூனிச எதிர்ப்பு விஷம் கக்கும் ரா.சு. நல்லபெருமாளின்போராட்டங்கள், பாலகுமாரனின் மெர்க்குரி பூக்கள், கண்ணதாசனின் ரத்த புஷ்பங்கள் போன்ற பல நாவல்களும் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய விலங்கு பண்ணை, பாஸ்டர்நாக் எழுதிய டாக்டர் ஷிவாகோ, ஷோல் ஷெனிட்சன் எழுதிய ஒரு நாவல் உட்பட பல கம்யூனிச எதிர்ப்பு வைரஸை தொடர்ந்து பரப்பிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் தமிழ்நாட்டில் ஜெயமோகன் இந்த திருப்பணியில் முன்நிற்கிறார். பல கம்யூனிச எதிர்ப்பு நாவல்களின் விஷத்தொகுப்பாக அவர் எழுதிய பின் தொடரும் நிழலின் குரல்கள் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுகின்றன. நமது வர்க்க எதிரிகள் கம்யூனிஸ்டுகளை அவதூறு செய்யவும், கொச்சைப்படுத்தவும், வெறுப்பை விதைக்கவும் படைப்பிலக்கிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளபோது நாம் சும்மாயிருக்கலாமா? நாம் நிராயுதபாணிகள் அல்ல தான்! ஆனாலும் வார்த்த ஆயுதங்கள் போதுமா? போதாது. மேலும் மேலும் புதிது புதிதாய் வார்க்க வேண்டும்.


யாங்மோ எழுதிய இளமையின் கீதம் என்ற நாவலை மயிலை பாலு மொழிபெயர்த்திருந்தார். அதன் வெளியீட்டு விழாவில் பேசிய மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் என். சங்கரய்யா சீன மாணவர் இயக்க வரலாற்றை உயிரோடு இந்த நாவலில் நாம் காண்கிறோம். நம் விடுதலைப் போராட்டத்தில் வீறுகொண்டெழுந்த மாணவர் இயக்க வரலாற்றை இதுபோல் யாரும் எழுதவில்லையே என்று வேதனைப்பட்டதோடு முற்போக்கு எழுத்தாளர்கள் இதனை முன் மாதிரியாகக் கொண்டு இதுபோல் வரலாற்று நாவல்கள் படைக்க முன்வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அது சரியானது. அனுபவம் என்ன? வெண்மணியின் வீரஞ்செறிந்த வரலாற்றை கொச்சைப் படுத்தி இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல் குருதிப்புனல் வெளிவந்து பல வருடங்களுக்கு பிறகு சோலை சுந்தரபெருமாளின் செந்நெல் வெளிவந்தது. இது மட்டும் போதுமா? வெண்மணியின் நெருப்பில் இருந்து கங்கெடுத்து நூறு நாவல்கள் பூத்திருக்க வேண்டாமா? பொன்மலை தியாகிகளின் தன்னலமற்ற தியாகம் நாவலாய் மலர்ந்திருக்க வேண்டாமா? வாச்சாத்தி கொடூரமும்  நியாயத்துக்காக நடந்த போராட்டமும் அதன் வெற்றியும் அற்புதமான நாவல் களமல்லவா? இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது துணிச்சலாய் எல்லையோரத்தில் ரயிலை இயக்கி பெருந்தொண்டாற்றிய தமிழக ரயில்வே தொழிலாளர்கள் நினைவலைகள் பல நாவல்களின் உலைக்களம் அல்லவா? ஏன் மிகச் சமீபத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய தியாகி லீலாவதி இன்னும் தமிழ் நாவலின் கதாநாயகியாகவில்லையே? அவரை மையமாக வைத்து ஒரு ஹிந்தி திரைப்படம்கூட தயாராகிவிட்டது. லீலாவதியும், தூக்குமேடை பாலுவும், களப்பால் குப்புவும் இன்னபிற தியாகிகளும் நமது இலக்கிய நாயகர்களாய் உலா வருவது எப்போது?


நாம் சுமக்க வேண்டிய நாவல்கள் மேலே சுட்டியதுபோல் நிறைய உண்டு. நாம் சமைக்க வேண்டிய நாவல்களும் நிறைய உண்டு. படைப்பாளிகளுக்கு உத்தரவு போட்டு நாவலை உருவாக்க முடியாதுதான். இதயத்தில் ஊறி எண்ணத்தில் நிறைந்து எழுத்தில் வரவேண்டியவையன்றோ படைப்புகள்! ஆம்! அதே நேரத்தில் படைப்பாளிகளே எங்கள் தியாகிகளின் உதிரத்தை சுமந்து வரும் நாவல்கள் எங்களுக்கு நீங்கள் தரும் ஆயுதங்கள் என்பதை மறவாதீர்கள். சமூக மாற்றத்திற்காக நாவல்களையும் ஆயுதமாக்குங்கள்.  சுமக்க வேண்டியதை சுமக்கவும் சமைக்க வேண்டியதை சமைக்கவும் இதுதான் உரிய நேரம். இப்போதும் தவறவிட்டுவிட்டால் வரலாற்றில் நாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவோம்.

[மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநில மாநாட்டையொட்டி தீக்கதிர் வெளியிட்ட மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரை]

- சு.பொ. அகத்தியலிங்கம் -


 




 







பொய்களோடுதான்...

Posted by அகத்தீ




உண்மைக்கு மூத்தது பொய்
உரசிப் பார்
உண்மை விளங்கும்.

ஆதி மனிதனின்
கண்களால்
உலகத்தைப் பார்
அறியாமை-உன்
இமைகளை மூடும்

சிந்திக்கத் தொடங்கிய
நாட்களில்
தேடத்தொடங்கினாய்
உண்மைகளை
அறிந்த உண்மைகளை விட
அறியாத உண்மைகளே அதிகம்
அன்றைக்கு..

கால ஓட்டத்தில்
கண்டுபிடிப்புகளின் வேகத்தில்
காணாமல்போன பொய்களை
கணக்கெடுத்துப் பார்
பொய்களை உண்மைகளாக
பூஜித்த காலம்
கண்முன் விரியும்

பொய் சொல்லக் கூடாதென
போதித்தவனும்
சந்தேகப்படாதே என்றே
அறிவின் வாசலைச் சாத்தினான்
அது ஏன் என்று
சந்தேகப்பட்டால்
அவன் சொன்னபொய்கள்
அனந்தமாய் விரியும்

ஆட்சியாளர்களின்
புள்ளிவிவரப்பொய்
ஆன்மீகவாதிகளின்
போதனைப் பொய்
சுரண்டும் கூட்டம்
சொல்வதெல்லாம் பொய்
ஏகாதிபத்தியத்தின்
எல்லையற்ற பொய்

நைந்த வாழ்க்கை
நாளும் சொல்லும்
அனுபவ மெய்யோடு
அணுவும் பொருந்தா
பொய்களோடுதான்
நாட்கள் நகர்கிறது.

நேற்றைய பொய்கள்
இன்றையப் பொய்கள்
நாளையப் பொய்கள்
நினைவுத்திரையில்
ஓடவிட்டுப் பார்
ஊடகப் பொய்களின்
முன்னே
அனைத்தும்
தோற்றுப் போகும்.

உண்மையைத் தேடி
கேள்விச் சவுக்கைச் சுழற்று
உளமுற்ற தீயாய்
மார்க்சியம் சுடரும்


சு. பொ. அகத்தியலிங்கம்






காதோடு

Posted by அகத்தீ

தோழனே
மனது வலிக்கிறது

பிழைக்கத்தெரியாதவன் என
உள் மனம் இடிக்கிறது

ஊருக்குள்ளும் உறவுக்குள்ளும்
அப்படித்தான் சொல்கிறார்கள்


பதவியும் பவிசும்
இல்லை என்பதால்
ஏமாளி என்றே
பட்டம் கட்டுகிறார்கள்

பணமும் வசதியுமே
வாழ்க்கை என
ஞானம் பிறந்ததா?
கூடவே இருப்பவரும்
குத்திக் கேட்கிறார்கள்

யாருக்கும்
நான் சொல்லும்
சமாதானம்
பிடிக்கவில்லை

ஆனாலும்,
ஒன்றை
ஊரறியச் சொல்வேன்

உழைக்கும் மக்களுக்காய்  வாழ்வது
ஏமாளித்தனமென்றால்
எஞ்சியகாலமும்
ஏமாளியாகவே
இருந்துவிட்டுப் போகிறேன்..

தோழனே
உன் காதில்
உண்மையைச் சொல்கிறேன்
தினம்படும்
அவஸ்தையில்
ஏமாளியாக வாழ்வதில்
மனதும் வாழ்க்கையும்
வலிக்கத்தான் செய்கிறது

சுபொ

[இரண்டு வாரங்களாக முட்டிமோதும் பொருளாதார நெருக்கடியின் அனுபவக் கவிதை]

பிப்ரவரி 14 - காதலர்தினம்; காதல் ஒருபோதும் பொறுப்பற்றதாக இருப்பதில்லை

Posted by அகத்தீ Labels:

பிப்ரவரி 14 - காதலர்தினம்
காதல் ஒருபோதும்
பொறுப்பற்றதாக இருப்பதில்லை

அன்புள்ள தாத்தூ!
கடைசியில் உன்னை ஒருமையில் விளிக்க அனுமதி கொடு. இதுவரை நாம், ஒருவரையொருவர் நீங்கள் என்று பன்மையில் அழைத்து வந்தோமே, அதனால் சொல்லுகிறேன்.


தாத்தூ இந்தக் காலத்தில் சொந்த விவகாரங்கள் சில வேளைகளில் பொது நலனுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் ஒரேயடியாக அப்படிச் சொல்லி விடவும் முடியாது. அப்படி செய்வது தேவையும் இல்லை. ஏனெனில் தனிப் பட்ட முறையில் என்னை திருப்திப்படுத் திக் கொள்ளாமல் பொதுநலத்துக்காக தேவையான வகையில் போராட என் னால் முடியாது. சொந்த நலத்தை நிறை வேற்றிக்கொள்வதும் பொதுநலத்தைப் போராடி பெறுவதும் அறிவார்ந்த விதத் தில் ஒருங்கிசைவுடன் இணைக்கப்பட     வேண்டும்..................................................



தாத்தூ! நிறைய எழுதுவது எனக்குப் பிடிக்காது. ஆனால் இப்போதோ உன்னுடன் முடிவின்றி பேசிக்கொண்டே இருக்க ஆசையாய் இருக்கிறது. என்ன செய்வது? இந்த நாட்களில் எனக்கு என்னையே அடையாளம் தெரிய வில்லை. நான் சிந்தனை செய்வதும் கனவு காண்பதும் உன்னைப் பற்றித் தான். சாவைப் பற்றி நான் நினைப்பதே இல்லை. நம் அன்புக்குரியவர் இருக்கி றார் என்பது தெரிந்தபின் சாவது அவ் வளவு பயங்கரமாய் இல்லை. ஆனால் இவ்வாறு இல்லாவிட்டால் உள்ளத்தில் வெறுமையை உணர்ந்திருப்பேன்.......
..............................................................................................



தாத்தூ! உனக்கும் எனக்கும் இடையே சமத்துவம் ஒருபோதும் இருக்கவில்லை. நான் போதனை ஆசிரியன் போலவும் நீ மாணவி போல வும் எப்போதும் இருந்து வந்தோம். அட இந்தப் பேச்சு போதும்! தாத்தூ என் உணர்வுப் பெட்டகத்திலும் எனது உலகக் கண்ணோட்டத்திலும் மாற்றம் வேண்டும் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் என் காதலி! என் நண்பனின் இடத்தையும் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். என் கருத்துப்படி இது எல்லாவற்றிலும் முக்கியமானது. நீயே என் காதலி! நீயே என் நண்பன்!


அன்புள்ள தாத்தூ! இதைப் பெத் ரோகிராட் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியில் இருந்தபடி எழுதுகிறேன். நாளையே நான் சுட்டுக் கொல்லப்பட லாம். எனக்கு சிறிதும் அச்சமில்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன்.


அன்புடன்
உல்லுபீ புய்னாக்ஸ்கி

இந்தக் கடிதம் எழுதிய சில நாட்களில் உல்லுபீ எதிரிகளால் கொல்லப்பட்டார். சோவியத் நாட்டைப் பாதுகாப்பதற்காக போர்க்களம் சென்ற உல்லுபீ, தன் காத லிக்கு எழுதிய கடிதங்கள் புரட்சியில் இளை ஞர்கள் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள் ளது. அந்தக் கடிதங்களில் ஒரு இடத்தில் உல்லுபீ குறிப்பிடுவான்,காதல் ஒரு போதும் பொறுப்பற்றதாக இருக்க முடி யாது. ஆம் இந்தக் காதலர் தினத்தில் நாம் சொல்ல விரும்பும் செய்தி அதுதான்.

காதல் உலக இயற்கை. காதலையும் வீரத்தையும் ஒதுக்கிவிட்டால், வாழ்க்கை யில் பொருளில்லை. தமிழர் பண்பாட்டின் குறியீடாக காதலையும் வீரத்தையும்தான் போற்றுவர். தமிழர் இலக்கியங்களில் காதல் எப்போதும் இரண்டறக் கலந்தே இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான்.


வசந்தவிழா என்கிற பெயரில் சித்திரை மாதம் முழு நிலவன்று ஆட்டமும் பாட்டுமுமாய் காதலைக் கொண்டாடிய பாரம்பரியத்திற்கு உரியவர்கள் நாம். ஆனால் சாதி வெறியும், மத வெறியும் கோடாரியாய் காதலைப் பிளக்க கதைக ளில் காதல் வாழ்ந்தது. ஊரில் சேரியில் காதலர் சாய்க்கப்பட்டனர்.


பாரதியும், பாரதிதாசனும், பட்டுக்கோட் டையும் தமிழ்ஒளியும் காதலைப் போற்றி னர். ஆதலினால் காதல் செய்வீர் என பாரதி அறைகூவலே விட்டான். ஏனெனில் காதலினால் சாதி போகும். காதலினால் மதவெறி போகும். காதலினால் பகை போகும். காதலினால் மானுடம் உய்யும்.


இந்தக் காதல் உலகம் முழுமைக்கா னது. பிப்ரவரி 14ஐ உலகம் முழுவதும் காதலர் தினமாகக் கொண்டாடுகின்றனர். இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கதை இருக்கிறது. எது சரியென்பதை கூற முடியாது. ஆயினும் பொதுவாக எல் லோரும் நம்பும் செய்தி ஒன்று உண்டு.

கி.பி.270ஆம் ஆண்டு ரோமை இரண் டாம் கிளாடியஸ் ஆண்டு வந்தார். அவர் யுத்தப் பிரியர். யுத்தத்துக்கு இளைஞர்கள் தேவை என்பதால் திருமணத்திற்குத் தடை விதித்தார். இதை எதிர்த்து பாதிரியார் வேலன்டைன். காதலர்களுக்கு ரகசியத் திருமணம் செய்து வைத்தார். இதை அறிந்த மன்னர் அவருக்கு பிப்ரவரி 14 அன்று மரண தண்டனையை நிறைவேற்றி னார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 காதலர்கள் கொண்டாடும் தின மானது. தண்டனை கருவியாய் இருந்த சிலுவை ஏசுவை தாங்கிய பின், வணக்கத் திற்குரிய புனிதச் சின்னமாய் மாறியதைப் போல, வேலன்டைன் பாதிரியாரின் உயிர்த் தியாகம் காதலுக்கு உயிர் கொடுத்தது


வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாய் வெவ்வேறு நாட்களில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் கடந்த 20ஆண்டுகளில் இந்த நாளுக்கு வந்திருக்கிற மவுசு இதற்கு முன் எப்போதும் இல்லை. ஏன்?


எந்தப் பண்டிகை ஆனாலும், விழா ஆனாலும் அதன் பின் ஒரு வர்த்தக நோக் கம் இணையும்போதுதான் அது வேகம் பெறுகிறது. இது தீபாவளிக்கும் பொருந்தும். வேலன்டைன் தினத்துக்கும் பொருந்தும். வாழ்த்து அட்டைகள், ரோஜாப்பூ, பரிசுப் பொருள்கள் என இந்த நாளில் விற்பனை பெருமளவு நடக்கிறது. இதனால் பெருமளவு விளம்பரம் செய்யப்படுகிறது. காதலும் வியா பாரிகளின் கைச்சரக்காக மாற்றப்படுகிறது. இந்த வியாபாரக் காதலை எதிர்ப்பார்களா னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்து மதவெறியர்கள் மட்டுமல்ல எல்லா மத வெறி யர்களும் காதலர் தினத்தை கண்ணை மூடி எதிர்க்கிறார்கள். பண்பாட்டு சீரழிவு என்று கூப்பாடு போடுகிறார்கள்.


நாம் அவர்களைக் கேட்கிறோம். நீங்கள் எதிர்ப்பது காதலையா? காதலர் தினத் தையா? காதலை மனித குலத்திலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது. பிரிக்கவும் கூடாது. இந்த பிற்போக்காளர்கள் மதம், சாதி, வர்ணம், குலம், கோத்திரம், சடங்குகள், சம்பிரதாயங்கள், வரதட்சணை போன்ற வற்றை பாதுகாக்கத் துடிக்கிறார்கள். பெண் ணடிமைத் தனத்தை பாதுகாக்க விழைகி றார்கள். ஆதலால்  காதல் திருமணம் பெரு கினால்,  தங்களின் நோக்கம் பாழ்பட்டுவிடு மெனத் துடிக்கிறார்கள். கேட்டால் நாங்கள் காமவெறியை எதிர்ப்பதாக - ஆபாசத்தை எதிர்ப்பதாக மேல்பூச்சு பூசுகிறார்கள். உண்மை அதுவல்ல. சமத்துவத்தை அவர் கள் சாய்க்க விரும்புகிறார்கள் என்பதே நிஜம்


அதே சமயம் அவர்களுக்கும் காதலர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கும் சேர்த்தே ஒன்று சொல்லிக்கொள்வோம். காதலும் காமமும் ஒன்றல்ல. காமம் மட்டுமே காதல் அல்ல. தமிழ் சினிமாவில் காட்டப் படுவதெல்லாம்- ஊடகங்களில் சித்தரிக்கப் படுவதெல்லாம் காதலல்ல. காதலென்பது ஒருவரையொருவர் உள்ளன்போடு புரிந்து கொள்வது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது. இணைந்து வாழ்வது. இந்தக் காதலில் குரோதம் கிடையாது. அன்பு மட்டுமே எப்போதும் பொங்கி வழியும். இந் தக் காதல் பொறுப்பற்றதாக ஒருபோதும் இருக்க முடியாது - அது காதலாக இருக்கு மானால்.  தன்னைச் சுற்றி நடப்பவற்றை கண்டும் காணாமல் ஒருபோதும் இருக்க முடியாது. வாழ்க்கையை சமூகத்தை அறி வியலாய் புரிந்துகொள்ளவும்; வெள்ள அன் பால் அணைத்துக்கொள்ளவும் யாரால் முடிகிறதோ அவர்கள் மட்டுமே உண்மை யான காதலர்கள். காதலின் பொருள் அர்ப்பணிப்பு. காதலின் பொருள் சமத்துவம். காதலின் பொருள் அமைதி. காதலின் பொருள் முன்னேற்றம்.
ஆகவேதான் புரட்சியாளர்கள் காதலைப் போற்றினார்கள். மரணத்தின் வாயிலிலும் காதலை கைத்தலம் பற்றினார்கள்.  பகத் சிங்கூட குறிப்பிட்ட சூழலால்தான் தான் காதலிக்கவில்லை என்றும், ஆனால் தான் எப்போதும் காதலின் எதிரி அல்ல என்றும் பகிரங்கமாகவே கூறினார்.
கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் தோழர் என்.சங்கரய்யா - நவமணி, ஆர். உமாநாத் - பாப்பா, கே. ரமணி - சியாமளா, என். வரத ராஜன் - ஜெகதா, பிரகாஷ்காரத் - பிருந்தா என காதல் திருமணம், சாதி மறுப்புத் திரு மணம் செய்துகொண்டவர்கள் பட்டியல் நீளும். இப்போதும் அந்த பாரம்பரியம் தொடர்கிறது.


சாதியற்ற, மதவெறியற்ற, ஆணாதிக்கம் இல்லாத, மூட நம்பிக்கைகளில்லாத, அறி வும் அன்பும் ஆட்சி செலுத்துகிற பொறுப்பு மிக்க காதலுக்கு நல்வரவு கூறுவோம். காலமெல்லாம் காதல் வாழ்க!

சு..பொ. அகதித்தியலிங்கம்