தோளில் சுமக்க வேண்டிய நாவல்கள்

Posted by அகத்தீ Labels:



தோளில் சுமக்க வேண்டிய நாவல்கள்

த்து மாதம் சுமந்து பெற்ற வலியும்-பேறுகாலத்தில் பட்டவலியும்-உதிரத்தைக் கொடுத்து வளர்த்த வலியும் பிள்ளைகள் மீது தாய் வெறித்தனமாக பாசம் கொள்ளச் செய்கிறது. இந்த வலிகளை தன் வலியாக உணர்ந்த தந்தையின் பாசமும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. பிரசவ வலியைவிட கொடுமையான வலி வேறு எதுவும் இல்லை என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். இப்போதெல்லாம் குழந்தை பிரசவத்தின்போது கணவர் அருகிலிருந்து பார்க்கச்செய்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் இது வழக்கமாகிவிட்டது. நமது நாட்டிலும் இந்த வழக்கம் மெல்ல பயிற்றுவிக்கப்படுகின்றது. பெற்றவளுக்குத்தானே தெரியும் பிள்ளை அருமை என்பதை  மாற்றி  பெற்றோர்களுக்குத்தான் தெரியும் பிள்ளை அருமை என உணர்த்த சமூகம் பெருமுயற்சி எடுக்கிறது.


பிள்ளைகளுக்கு மட்டுமல்ல ஒரு நிறுவனத்தை-இயக்கத்தை-விடுதலையை- உரிமைகளை பெற்றிட; சிந்திய வியர்வையை,ரத்தத்தை,பட்டபாட்டினை அறியாத-உள்வாங்காத தலைமுறையால் அதனை பாதுகாக்க இயலுமா?வரலாற்றை கற்கவேண்டிய தேவை ஒருபுறம். அதன் உயிர்த்துடிப்பை உள்வாங்க வேண்டிய தேவை மறுபுறம்.முன்னதை வரலாற்று நூல்கள் அளிக்கும்.பின்னதை நாவல்,சிறுகதைகள் போன்ற படைப்பிலக்கியங்கள் அளிக்கும்.கம்யூனிஸ்ட் இயக்கத் தியாகத் தலைமுறையின் கடைசிச் சுவடும் காலநகர்வில் கரைந்து கொண்டிருக்கிறது.பொல்லாத உலகமயம் நம்மை சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது.இனி முன்நகர்தலுக்கான உயிர்ச்சூட்டை நேற்றைய தலைமுறையிடமிருந்து நாம் பருகியாக வேண்டும்.ஆம்.நமது வரலாற்றை படிக்கவேண்டும் நமது தியாகச் செங்குருதியை சுவாசிக்கவேண்டும்.


முதலாவதாக நமது வரலாறு முழுமையாக எழுதப்பட்டுவிட்டதா? அகில இந்திய அளவில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு 1920-33 ஆண்டு வரை முதல் பாகமாக தொகுக்கப்பட்டுள்ளது. தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதுபோக அருணன் எழுதிய இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் தமிழக வரலாறும் பிணைந்துள்ளது. அகில இந்திய மாநில தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளில் பல செய்திகள் கிடைக்கின்றன. என். ராமகிருஷ்ணன் எழுதிய தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு 1964 வரையிலுமான வரலாற்றைக் குறித்து நம்பகமான முதல் தகவல் அறிக்கையாக நம்முன் உள்ளது.


கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு என்பது தியாகிகளின் வரலாறா? சம்பவங்களின் தொகுப்பா? தத்துவ மோதல்களின் சித்தரிப்பா? உள்கட்சி சண்டைகளின் விவரிப்பா? அன்றைய கால அரசியல் - பொருளாதார - சமூகப் பின்னணியோடு கட்சி மேற்கொண்ட முயற்சிகளின் தொகுப்பா? இப்படி பல கேள்விகள் எழும். ஒரு புத்தகத்தில் இவை அனைத்தும் கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லை என்றால் பல புத்தகங்கள் தேவைப்படும். ஏனெனில் வரலாற்றை ஒற்றைக் கோணத்தில் மட்டும் புரிந்து கொள்ள இயலாது - புரிந்து கொள்ளவும் கூடாது. என். ராமகிருஷ்ணனின் வரலாற்றுப் பதிவும் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளும் இதற்கான ஆரம்ப ஆதாரங்களை திரட்டித் தந்திருக்கிறது. ஒரு தனி மனிதரின் முயற்சி என்ற வகையில் இதனை இருகை தட்டி வரவேற்போம். போற்றுவோம்.  அதே சமயம் தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை எல்லாக் கோணங்களிலும் புரிந்தகொள்ள ஏதுவாக புதிதாக எழுத வேண்டும். அது பல பாகங்களாக பல ஆயிரம் பக்கங்களாக வரக்கூடும். இதை ஒரு தனி மனிதர் செய்ய இயலாது. ஒரு குழுவாக முயற்சித்தால் முடியாதது இல்லை. அவசியம் செய்தாக வேண்டும். அடுத்த தலைமுறைக்கு - கடந்த தலைமுறையின் தியாகத்தை   உழைப்பை சரியாக உணர்த்தாமல் அடுத்த கட்ட பயணம் சாத்தியமில்லை அல்லவா?


இதுஒரு புறம் இருக்கட்டும். வரலாற்றின் உள்துடிப்பை தியாகத்தின் உயிர்மூச்சை படிக்கிற வாசகன் குருதியில் கலந்து நாடி நரம்புகளை முறுக்கேறச் செய்கிற வல்லமை படைப்பிலக்கியங்களுக்கு உண்டு. மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல் புரட்சியின் உந்துவிசை என்றால் மிகையல்ல. நான் இந்த நாவலை முதன்முதலில் நான் வாசித்த அனுபவம் இன்றும் என்னுள் பசுமையாக இருக்கிறது.


ஒருநாள் காலை வேலைக்குச் செல்வதற்காக சோற்றுமூட்டையுடன் குரோம்பேட்டையில் மின்சார ரயிலில் ஏறினேன். நாவலைப் படிக்கத் துவங்கினேன். என்னை மறந்தேன். அந்த ரயில் எத்தனை முறை கடற்கரைக்கும் தாம்பரத்திற்கும் சென்று வந்தது என்று கூட எனக்குத் தெரியாது. பசித்தபோது சாப்பிட்டேன். வேலைக்கு போகவில்லை. படித்து முடித்துவிட்டு இரவுதான் ரயிலை விட்டு இறங்கினேன். இந்த நாவலின் கதாநாயகன் பாவேல் என்னைப் புரட்டிப்போட்டு விட்டான். எத்தனை பேரை இவன் இப்படி வேதியியல் மாற்றம் செய்தானோ? நான் அறியேன்.


அதுபோல் கையூர் தியாகிகளின் வீரவரலாற்றைப் பேசும் நினைவுகள் அழிவதில்லை (மொழி பெயர்ப்பு - பி.ஆர். பரமேஸ்வரன்) என் நெஞ்சை விட்டு இன்றளவும் நீங்கவில்லை. 1946ல் நடந்த கப்பற்படை எழுச்சியின் பின்புலத்தில் யஸ்பால் எழுதிய காம்ரேட் நாவலின் கீதாவை யார்தான் மறக்க இயலும்? இப்படி பல நாவல்கள் கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட் உணர்வை ஊட்டுவதில் ஆற்றிய பங்கை அசைபோட்டு பார்க்கவேண்டும். மேலே குறிப்பிட்ட நாவல்கள் மொழிபெயர்ப்பாக வந்தவை.


தமிழில் சுயமாக எழுதப்பட்ட இத்தகைய நாவல்களை சற்று நினைவுத்திரையில் ஓடவிட்டு பார்க்கிறேன். பெரிய பட்டியல் இருக்கிறது. ஒன்று இரண்டை தொட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. பஞ்சாலைப் போராட்ட வாழ்வைப் படம்பிடித்த தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும்; தேயிலைத் தோட்டத்தில் அட்டைக் கடிகளுக்கு மத்தியில் வதைப்பட்ட தொழிலாளர்களின்  வாழ்க்கை அவலத்தையும் - கொடுமையை எதிர்த்து அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் சங்கம் சேர்ந்த வரலாற்றையும் ரத்தமும் சதையுமாய் பேசும் டி. செல்வராஜின் தேநீர்; மலைமக்களின் வாழ்க்கையை எழுச்சியை உயிர்க்காவியமாய் ஆக்கியிருக்கும் கு. சின்னப்ப பாரதியின் சங்கம்; சின்னியம்பாளையம் தியாகிகளின் வீரக்கதையை சொல்லும் ராஜாமணியின் சங்கமம் ; இந்த வரிசையில் தொண்டு நிறுவனங்களோடு செயல்பட கற்றுக்கொடுக்கும் தனுஷ்கோடியின் தோழன் இப்படி ஒவ்வொன்றும் நம் இதயத்தில் நுழைந்து மூளையைக் குடைந்து ரத்த நாளங்களை சூடேற்றும்.


இந்த வரிசையில் கு. சின்னப்ப பாரதியின் தாகம், சர்க்கரை, டி. செல்வராஜின் மலரும் சருகும், ச. தமிழ்செல்வனின் ஜிந்தாபாத் உட்பட பல உண்டு. மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கே. முத்தையா எழுதிய விளைநிலம், உலைக்களம். போன்ற நாவல்கள் வெறும் கதையல்ல. கம்யூனிஸ்ட் இயக்கம் தமிழகத்தில் வேர் கொண்டபோது சந்தித்த அடக்குமுறைகளை போராட்டங்களை ஜீவத்துடிப்போடு நம்மிடம் பேசும்.  சுபாஷ் சந்திர போஸ் எழுதிய சாம்பவான் ஓடை மற்றும், சிவராமன் போன்ற நாவல்களும் இதே பணியைச் செய்கின்றன. (நினைவிலிருந்து எழுதியதால் பல நூல்களின் பெயர்கள் விடுபட்டிருக்கக்கூடும். அதையும் இக்கட்டுரை வாசிப்போர் சேர்த்துக் கொள்ளலாம்)


கடைசியாக வெளிவந்த டி. செல்வராஜின் தோல் நாவல், ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் அவசியம் படிக்க வேண்டிய தோளில் சுமக்கவேண்டிய நாவல். திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தொழிலாளிகளை அணிதிரட்டிய வரலாற்றை - அதன் கதாநாயகனாய் களத்தில் நின்ற எ. பாலசுப்பிரமணியம், மதனகோபால், எஸ்.கே. தங்கராஜ் உட்பட தலைவர்களின் வாழ்க்கையை - தியாகத்தை, தீரத்தை, ஒடுக்கப்பட்ட மக்களின் அர்ப்பணிப்பு மிக்க போர்க்குணத்தை இந்த நாவல் நம் இதயத்தில் ரத்தத்தால் எழுதுகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு நான் என்னை மறந்து படித்த நாவல் இது.


இவை மட்டுமல்ல. டால்ஸ்டாய் எழுதிய  அன்னா கரீனா மற்றும் போரும் வாழ்வும்,வாண்ட வசலிவஸ்கா  எழுதிய வானவில்,குவான் தின் கோ எழுதிய உன் அடிச்சுவட்டில் நானும், அலெக்ஸ் ஹெலே  எழுதிய ஏழு தலைமுறைகள், சி.ஆர். ரவீந்திரன்  எழுதிய பிணம் தின்னிகள், மைக்கேல் ஷோலோகோ எழுதிய டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது, ஒஸ்திரவொஸ்கி எழுதிய வீரம் விளைந்தது, சூ.ஈ-போ எழுதிய சூறாவளி இப்படி பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த நாவல்கள் தமிழர்களின் நாவல் ரசனையையே பல மடங்கு உயர்த்திய நாவல்கள். இவற்றையெல்லாம் படித்தவர்கள் மரணத்தின் வாயில் போகும்போதும் செங்கொடியின் மதிப்பைப் போற்றுவார்கள்.


கம்யூனிச எதிர்ப்பு விஷம் கக்கும் ரா.சு. நல்லபெருமாளின்போராட்டங்கள், பாலகுமாரனின் மெர்க்குரி பூக்கள், கண்ணதாசனின் ரத்த புஷ்பங்கள் போன்ற பல நாவல்களும் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய விலங்கு பண்ணை, பாஸ்டர்நாக் எழுதிய டாக்டர் ஷிவாகோ, ஷோல் ஷெனிட்சன் எழுதிய ஒரு நாவல் உட்பட பல கம்யூனிச எதிர்ப்பு வைரஸை தொடர்ந்து பரப்பிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் தமிழ்நாட்டில் ஜெயமோகன் இந்த திருப்பணியில் முன்நிற்கிறார். பல கம்யூனிச எதிர்ப்பு நாவல்களின் விஷத்தொகுப்பாக அவர் எழுதிய பின் தொடரும் நிழலின் குரல்கள் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுகின்றன. நமது வர்க்க எதிரிகள் கம்யூனிஸ்டுகளை அவதூறு செய்யவும், கொச்சைப்படுத்தவும், வெறுப்பை விதைக்கவும் படைப்பிலக்கிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளபோது நாம் சும்மாயிருக்கலாமா? நாம் நிராயுதபாணிகள் அல்ல தான்! ஆனாலும் வார்த்த ஆயுதங்கள் போதுமா? போதாது. மேலும் மேலும் புதிது புதிதாய் வார்க்க வேண்டும்.


யாங்மோ எழுதிய இளமையின் கீதம் என்ற நாவலை மயிலை பாலு மொழிபெயர்த்திருந்தார். அதன் வெளியீட்டு விழாவில் பேசிய மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் என். சங்கரய்யா சீன மாணவர் இயக்க வரலாற்றை உயிரோடு இந்த நாவலில் நாம் காண்கிறோம். நம் விடுதலைப் போராட்டத்தில் வீறுகொண்டெழுந்த மாணவர் இயக்க வரலாற்றை இதுபோல் யாரும் எழுதவில்லையே என்று வேதனைப்பட்டதோடு முற்போக்கு எழுத்தாளர்கள் இதனை முன் மாதிரியாகக் கொண்டு இதுபோல் வரலாற்று நாவல்கள் படைக்க முன்வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அது சரியானது. அனுபவம் என்ன? வெண்மணியின் வீரஞ்செறிந்த வரலாற்றை கொச்சைப் படுத்தி இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல் குருதிப்புனல் வெளிவந்து பல வருடங்களுக்கு பிறகு சோலை சுந்தரபெருமாளின் செந்நெல் வெளிவந்தது. இது மட்டும் போதுமா? வெண்மணியின் நெருப்பில் இருந்து கங்கெடுத்து நூறு நாவல்கள் பூத்திருக்க வேண்டாமா? பொன்மலை தியாகிகளின் தன்னலமற்ற தியாகம் நாவலாய் மலர்ந்திருக்க வேண்டாமா? வாச்சாத்தி கொடூரமும்  நியாயத்துக்காக நடந்த போராட்டமும் அதன் வெற்றியும் அற்புதமான நாவல் களமல்லவா? இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது துணிச்சலாய் எல்லையோரத்தில் ரயிலை இயக்கி பெருந்தொண்டாற்றிய தமிழக ரயில்வே தொழிலாளர்கள் நினைவலைகள் பல நாவல்களின் உலைக்களம் அல்லவா? ஏன் மிகச் சமீபத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய தியாகி லீலாவதி இன்னும் தமிழ் நாவலின் கதாநாயகியாகவில்லையே? அவரை மையமாக வைத்து ஒரு ஹிந்தி திரைப்படம்கூட தயாராகிவிட்டது. லீலாவதியும், தூக்குமேடை பாலுவும், களப்பால் குப்புவும் இன்னபிற தியாகிகளும் நமது இலக்கிய நாயகர்களாய் உலா வருவது எப்போது?


நாம் சுமக்க வேண்டிய நாவல்கள் மேலே சுட்டியதுபோல் நிறைய உண்டு. நாம் சமைக்க வேண்டிய நாவல்களும் நிறைய உண்டு. படைப்பாளிகளுக்கு உத்தரவு போட்டு நாவலை உருவாக்க முடியாதுதான். இதயத்தில் ஊறி எண்ணத்தில் நிறைந்து எழுத்தில் வரவேண்டியவையன்றோ படைப்புகள்! ஆம்! அதே நேரத்தில் படைப்பாளிகளே எங்கள் தியாகிகளின் உதிரத்தை சுமந்து வரும் நாவல்கள் எங்களுக்கு நீங்கள் தரும் ஆயுதங்கள் என்பதை மறவாதீர்கள். சமூக மாற்றத்திற்காக நாவல்களையும் ஆயுதமாக்குங்கள்.  சுமக்க வேண்டியதை சுமக்கவும் சமைக்க வேண்டியதை சமைக்கவும் இதுதான் உரிய நேரம். இப்போதும் தவறவிட்டுவிட்டால் வரலாற்றில் நாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவோம்.

[மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநில மாநாட்டையொட்டி தீக்கதிர் வெளியிட்ட மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரை]

- சு.பொ. அகத்தியலிங்கம் -


 




 







2 comments :

  1. veligalukkuappaal

    சரிதான்! இது படைப்பாளிகளுக்கான சவால் அல்ல, உரிமையோடு ‘என்ன சும்மா இருக்கீங்க?’ என்று நெம்பி விட்டு களத்தில் இறக்கும் அன்புக்கட்டளையே! படைக்க வேண்டியவர்கள், படைக்கும் திறம் மிக்கவர்கள் இனி களத்தில் இறங்குவார்கள் என நம்புவோம்!...இக்பால்

  1. hariharan

    வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்தீர்கள், நானும் நீங்கள் குறிப்பிட்டுள்ள சில நாவல்களை வாசித்தேன். `தாய்` நாவலை வாசிக்கும்போது எனக்கு பெரம்பூர் பின்னி ஆலை தான் நினைவில் வரும், அதன் உயரமான மதிகள் காரணமா? அல்லது கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகில் இருப்பதாலா? தெரியவில்லை, அந்த அலுவலத்திற்குள் நுழையவே எவ்வளவு பயமாக இருந்தது. நான் ஒரு நூலக வாசகனாகவே வந்தேன். வானவில் பதிப்பகம் கடைவிரிக்கும் கூட்டங்களுக்குச் செல்வேன். சென்னையை விட்டு நான் பிரியும் போது நான் வைத்திருந்த நூல்களை அந்த நூலகத்திற்கு நினைவாக தந்தேன்.

    புதுமைப்பித்தன் எழுதிய பொன்னகரம் கதையை வாசிக்கும் போது அந்த பெரம்பூர் பின்னி ஆலையிலிருந்து ர்யில்வே லைனைக் கிராஸ் செய்யும் சிறிய சப்வே அருகில் உள்ள குடிசைகள் தான் ஞாபக்திற்கு வரும்.

Post a Comment