தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்து …

Posted by அகத்தீ Labels:

 

தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்து …

 

[ அவசரகாலம் தொட்டு என்னோடு பயணித்த - பயணித்துக் கொண்டிக்குக்கிற ஒவ்வொரு தோழருக்கும்…]

 

கரங்கோர்த்து பயணித்த

என் இனிய தோழா !

இப்போது

நீ

வயது முதிர்வால்

வீட்டில் முடங்கி இருக்கலாம் …

வாழ்க்கைச் சூழலால்

முன்போல் இயங்க முடியாதிருக்கலாம்…

ஏதேனும் மனக் கசப்பில்

ஒதுங்கி இருக்கலாம்…

ஒரு வேளை விடை பெற்றிருக்கலாம்….

 

 

நானும் முன்போல் இல்லை

இப்போதெல்லாம்

தொடர்பு எல்லைக்கு வெளியேதான்.

என் எழுத்தும்

முகநூலும் சமூக வலைதளமுமே

உறவை சொல்லிக் கொண்டிருக்கிறது

அதுவும் எவ்வளவு நாளோ !

 

 

நாம் ஓர் உயர் லட்சியத்திற்காக

போராடிய நாட்கள்

அமைப்பில் திரண்ட நாட்கள்

நம் நினைவடுக்குகளில்

ஆழமாய் வேர்விட்டிருக்கிறது !

நீயும் நானும் எங்கிருந்தாலும்…

நமக்குள் இடைவெளி

எவ்வளவு இருந்தாலும்….

கடைசி மூச்சடங்கும் வரை

செங்கொடியை

நெஞ்சில் சுமந்திருப்போம் !

வேறென்ன  வேண்டும் நமக்கு ?

 

சுபொஅ.

10/04/25.

வர்ஜீனியா.

 

 


thozhar s kumaradas

Posted by அகத்தீ Labels:

 





தோழர் எஸ் கே டி என அன்போடு எல்லோராலும் அழைக்கப்படும் எஸ் .குமாரதாஸ் அவர்கள் எண்பதாவது வயதில் அடியெடுத்து வைப்பதையொட்டி அவரின் பிறந்த நாள் அழைப்பு [தோழர் பாரதி செல்வா விடுத்த அழைப்பு ] கிடைக்கப்பெற்றேன் .மட்டில்லா மகிழ்ச்சி .

நான் கட்டாயம் பங்கேற்றிருக்க வேண்டிய நிகழ்வு . தற்போது அமெரிக்காவில் வர்ஜீனியாவில் மகன் வீட்டில் முகாமிட்டிருப்பதால் வரயியலாத நிலை உள்ளது . என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

எனக்கும் குமாரதாஸுக்கும் இடையே ஆன உறவுக்கும் , எனக்கும் சிபிஎம் கட்சிக்குமான உறவுக்கும் கிட்டத்தட்ட சம வயது . அவசரகாலத்திற்கு முந்தைய வருடங்களில் முகிழ்த்த உறவு .என்னைக் கட்சியில் துணைக்குழு உறுப்பினராக சேர்த்தவன் . அப்போது அவன் தான் கிளைச் செயலாளர் . கட்சி உறுப்பினராகியதும் அந்தக் கிளையில்தான். என் முதல் கட்சிச் செயலாளர் அவன் தான் .அவன் என்னைவிட ஏழு வயது மூத்தவன் .ஆயினும் இன்றுவரை வாடா போடா என அழைத்துக் கொள்ளும் அந்நியோன்யம் தொடர்கிறது .

கோஷம் போடவும் , உண்டியல் குலுக்கவும் , பிரசுரம் விற்கவும் ,கொடி பிடிக்கவும் இவன்தான் என் குரு

பழவந்தங்கல் ,ஆலந்தூர் ,கிண்டி ,ஆதம்பாகம் ,மீனம்பாக்கம் வட்டாரத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்க்க அவன் அரும்பாடு பட்டவன் .அவன் நிர்வகித்த மார்க்ஸ் மன்றம் [ பரங்கி மலை ரயில் நிலையம் அருகில் ] எம் பாடிவீடானது . பழவந்தங்கல் எம் ஜி ஆர் நகர் என் வீடும் , பறங்கிமலையில் உள்ள குமாரதாஸ் வீடும் எம் சந்திப்பு மையமானது . புத்தகக் காதலன். இன்குலாப் கவிதை புத்தகம் முதன் முதல் அவன்தான் எனக்குத் தந்தான் . அவனிடம் இருந்து நான் பல புத்தகங்களைச் சுட்டதுண்டு .கேட்டால் சீக்கிரம் தரமாட்டான். அவசரகாலத்தில் முதன் முதல் அவன் புத்தக சேகரிப்பு பெட்டியைப் பார்த்த போது அதுமாதிரி நானும் செய்ய வேண்டும் என ஆசை கொண்டேன்.

மாதர் சங்கத்தை பழவந்தங்கலில் உருவாக்க அவன் பட்ட பாட்டை அருகிருந்து பார்த்தவன் . போராட்ட களத்தில் முகிழ்த்த காதலில் வனஜாவை கைப்பிடித்தவன் . வனஜா இன்று கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் . தன் இணையரின் வளர்ச்சியில் பெரிதும் மகிழ்ந்து துணை நிற்பவன் .அதுமட்டுமல்ல தன் கிளையில் / பழவந்தங்கலில் இருந்த நான் , உ.ரா.வ , து.ஜானகிராமன், சேகர் ,ராஜன் ,விஜயா ஜானகிராமன் என ஒவ்வொருவர் வளர்ச்சியிலும் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டவன் . தன்னோடு இருப்பவர்கள் வளர்ச்சியில் மனநிறைவு கொள்கிறவன் .

சிபிஎம் கட்சியில் பார்ப்பனர்கள் உறுப்பினராக தலைவராக நிறைய உண்டு . தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் , எம் .ஆர் . வெங்கட்ராமன் ,உ.ரா .வரதராஜன் ,மைதிலிசிவராமன் ,எல் ஐ சி கே.என்.ஜி ,ஏ.கே.வீரராகவன் [ டெலிகிராப் / தீக்கதிர்] போன்ற பலர் பூணுலை மட்டுமல்ல பார்ப்பணியத்தையும் முற்றாகத் தூக்கி எறிந்தவர்கள் ; சாதிய சனாதன தடம் அற்றவர்கள் .அந்த வழியில் குமாரதாஸும் அடங்குவான் . “இவனை பார்பனர் என்று சொன்னால்கூட யாரும் நம்பமாட்டார்கள் .” என்று அடிக்கடி ராஜன் [ தற்போது பி.சி அலுவலக ஊழியர் ] கூறுவார் . அந்த அளவு சாதிய மனோநிலையை முற்றும் துறந்தவன் . ஒடுக்கப்பட்ட மக்களோடு இரண்டறக் கலந்தவன் . பல்லாவரம் குவாரி போராட்டமும் ,தோல்பதனிடும் தொழிலாளர்கள் போராட்டமும் ,கல்குட்டை மக்களின் போராட்டமும் இவனின் இயல்பைப் பறை சாற்றும். அடிப்படையில் இவன் ஒரு கூலித்தொழிலாளியாய் வாழ்க்கையைத் துவக்கியவன்தான்.

பல்லாவரம் குவாரித் தொழிலாளர் போராட்டம் ஒன்று போதுமே அவனின் உறுதியையும் மனிதத்தையும் போற்ற ; அப்போராட்டத்தில் அவனோடு நானும் இருந்தேன் என்பது என் மகிழ்ச்சி .அப்போராட்டத்தில் நான் எழுதிய பாடல் சிகரம் ஏட்டிலும் வெளியானது .

அவன் சில நேரங்களில் வருத்தமும் மனத்தாங்கலுமாய் புலம்புவான் . நானும் சின்னையாவும் உரிமையுடன் கடுமையாகத் திட்டுவோம் .அவன் புலம்பல் கட்சி வளர்ச்சியில் அக்கறை கொண்டது என்பதையும் அறிவோம். வயதுக்கும் உடல்நிலைக்கும் மீறி அவன் உழைப்பதை கொஞ்சம் குறைக்கச் சொல்லி வற்புறுத்துவோம் .கேட்க மாட்டான்.

விடாப்பிடியான தொழிலாளிவர்க்கப் போராளி. எண்பது வயதிலும் மார்க்சிஸ்ட் கட்சி மீது மாளாக் காதல் கொண்டவன் .இன்றும் கட்சிக்காக தன்னால் இயன்ற பணிகளை மட்டுமல்ல சற்று அதிகமாகவே செய்கிறவன் . அவனது கட்சி விசுவாசம் அளவிடற்கரியது .

குமாரதாஸ் – வனஜா இணையர்கள் கட்சியின் பொக்கிஷம் .அக்குடும்பமும்தான் .

குமாரதாஸை அலைபேசியில் நேரில் எப்படி வாழ்த்துவனோ அப்படியே உரிமையோடு இப்போதும் வாழ்த்துகிறேன் !

” வாழ்க பல்லாண்டுடா ! வயது எண்பதிலேயும் ஆக்டீவா இருக்கே சந்தோஷப்படு ! உன் உழைப்பு வீண்போகாதுடா ! நேரில் வர இயலவில்லை மன்னிச்சிடு ! வாழ்க வனஜா குமாரதாஸ் ஜோடி !”

சுபொஅ.
09/04/25.வர்ஜீனியா .

குறிப்பு : நான் புகைப்பட ஆர்வலன் அல்லன் .எந்த புகைப்பட சேகரிப்பும் என்னிடம் இல்லை . முகநூலில் தேடி இரண்டு படங்கள் பதிந்துள்ளேன்.




நேரச் சிக்கல் ….

Posted by அகத்தீ Labels:

 




நேரச் சிக்கல் ….

 

எங்கும் வாழ்க்கை

ஒரே செக்குமாட்டுத்தனம்தான்.

அன்றாடம் என்ன செய்வது என்பதை

அவரவர் வாழ்க்கை வட்டம் தீர்மானித்துவிடுகிறது.

அந்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றவே

நேரம் காலம் போதவில்லை

 

இயற்கையோடு மல்லுக்கட்டும் மனிதனால்

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதையும்

ஒரு வாரத்துக்கு எழு நாட்கள் என்பதையும்

சற்று அதிகரித்து அமைக்கவே முடியாதா ?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரும்

நேர மேலாண்மையில்

திணறித்தான் போகிறார்கள் !

கணவன் மனைவி

இரண்டே பிள்ளைகள் என

திட்டமிட்ட குடும்பமாய் இருந்தாலும் …

 

வார இறுதிகூட வரமாகவில்லை

துவைக்க சுத்தம் செய்ய

அடுத்த வாரத்திற்கு தயார் செய்ய

ஓடிப்போகிறது

வந்த தடம் தெரியாமல் சனி ஞாயிறு !

 

துவைக்க பாத்திரம் கழுவ

வீடு பெருக்க சமைக்க

வீட்டில் இருந்தபடியே

பொருட்களை வாங்க

நவீன அறிவியல் கை கொடுத்தாலும்

சள்ளை பிடித்த வீட்டு வேலை ஓய்ந்தபாடில்லை !

கணவனும் மனைவியும் பகிர்ந்து செய்தாலும்…

குழந்தை வளர்ப்பில் இருவரும் பங்கேற்றாலும்

 

மாட்டிக்கொண்ட பொறிக்குள்

ஓடி ஓடி களைக்கும் எளியைப் போல

வாழ்க்கை இயந்திரத்தில் சிக்கிய மனிதஎலி

ஓடி ஓடி ஓடி ஓடி …. வாடி வாடி வாடி வாடி

காலமும் கடந்து போய் … காலன் கை முடிவதோ

வாழ்க்கையின் இலக்கணம் ?

 

இயற்கையை ரசிக்கவோ

அன்பினில் திழைக்கவோ

மானுடம் போற்றவோ

கவலையை மிதிக்கவோ

கனவினில் மிதக்கவோ

நேரம் காலம் வாய்த்திட

வரம் யார் தருவார் ?

வாழ்க்கை உன் கையில்தான்…..

 

சுபொஅ.

08/04/25,

வர்ஜீனியா

 

[ இங்கு பொதுவாய் எல்லோரும் பேசிக்கொள்ளும் வாழ்க்கையின் ”நேரச் சிக்கல்”  என்னை இப்படி எழுத வைத்துவிட்டது .]


துரோகத்தின் வழிதான்

Posted by அகத்தீ Labels:

 

வரலாறு நெடுக

துரோகத்தின் வழிதான்

வெற்றிக்கனி கைமாறுகிறது

அவர்களின் பெயர்

எட்டப்பன் ,விபீடனன் ,

எடப்பாடி ,சந்திரபாபு நாயுடு,

நிதீஷ்குமார் இப்படி

 எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

குடிஉரிமைச் சட்டம் , வஃபு சட்ட திருத்தம்

எது வேண்டுமானாலும் இருக்கலாம்..

எதிரிகளை எதிர்கொள்வதற்கு

முதல் நிபந்தனையே

துரோகத்தைக் கிள்ளி எறிவதுதான்.

 

சுபொஅ.

03/04/25.

வல்லரசு

Posted by அகத்தீ Labels:



வல்லரசு 

ராமர் கோயில்
சீத்தா கோயில்
அனுமார் கோயில்
கும்பமேளா
இந்தியா வல்லரசாகிறது !
AI , சூப்பர் கம்ப்யூட்டர்
என பிலீம் காட்டுகிறது சீனா !
வேதத்தில் இல்லாதது
எதுவும் எமக்குத் தேவை இல்லை !
இன்னும் கட்ட வேண்டிய கோயில்கள்
பட்டியலை எடு !
பாரத் மாத்தாகி ஜே !
ஜெய்ஸ்ரீ ராம் !
சுபொஅ.
12/03/25 .

தோல்வி மகிழ்ச்சி

Posted by அகத்தீ Labels:

 

தோல்வி மகிழ்ச்சி

நேற்றும் தோற்றேன்
இன்றும் தோற்கிறேன்
நாளையும் தோற்பேன்
பேத்தியிடம்
தோற்கும் விளையாட்டு
சலிப்பதே இல்லை.
சுபொஅ.

நம் வாழ்க்கையைப் போல ...

Posted by அகத்தீ Labels:

 


நம் வாழ்க்கையைப் போல ...

இலைகளை மொத்தமாய்
உதிர்த்து நிற்கிறது
மரம்
பசுமை
துளியும் இல்லை
ஆயினும்
இன்னும் சில
இலைகளும் பூவும்
காய்ந்து சருகாய்
ஒட்டி இருக்கிறதே மரத்தில்
வசந்தத்தின் நம்பிக்கையில்
நம் வாழ்க்கையைப் போல ...
சுபொஅ.
18/03/25