வாலிபர் சங்கத்தை அழுத்தமாக ஆவணப்படுத்தும் நாவல் …

Posted by அகத்தீ Labels:

 



ஏப்ரல் 23 : உலக புத்தக தினத்தை நோக்கி…

 

வாலிபர் சங்கத்தை அழுத்தமாக

ஆவணப்படுத்தும் நாவல் …

 

 

 “…. குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் சாதியப் பெருமிதம் தலை தூக்கி வருவதும் ,சாதியின் பின்னால் உழைக்கும் மக்களை அணிதிரட்டலும் வேகமெடுக்கும் சூழலில் சக்தி சூர்யா ‘நரவேட்டை’ என்ற நாவலை முன் வைக்கிறார் . விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டத்தில் தொண்ணூறுகளில் கதை நடக்கிறது.” என்கிறார் அ.கரீம் முன்னுரையில் .

 

 “ ….. மற்றபடி ,எனது பால்ய காலம் தொட்டு ,என் உள்ளத்தில் உருண்டு கிடந்த சம்பவங்களைத்தான் ,புனைவு கொண்டு வரைந்துள்ளேன்.” என்கிறார் முன்னுரையில் சக்தி சூர்யா. அது உண்மையே !

 

முயல் வேட்டையில் தொடங்கி தொன்மக் கதையாடல்கள் , வாழ்நிலை ,காதல் என தொடர்ந்து மனித நரவேட்டையில் ஆணவக் கொலையாக முடிகிறது நாவல் . இடையில் ஊரில் நடக்கும் சாதிக் கலவரமும் , அதைத் தொடர்ந்து இடது சாரிகளின் காத்திரமான தலையீடும் , குறிப்பாக இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தின் முன்னெடுப்பும் மிக கவனமாக அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது .

 

“ கஞ்சிக்கு கஷ்டம்னா கடவுளைக் கடிச்சு திங்க முடியுமா ?” எனக் கேட்கிற ஒகிலித் தாத்தா வழி தொன்மக் கதைகளும் வாழ்க்கைப் பாடுகளும் நூல் நெடுக விரிகிறது .

 

முயல் வேட்டையில் அறிமுகமாகும் முருகன் பள்ளிக்கூடம் படிக்கும் போதே இடது சாரி இயக்கங்கள் தொடர்பில் மெல்ல மெல்ல எழுந்து நிமிர்வது நாவலின் ஒரு முடிச்சு . கண்ணன் பொன்னி சாதிகடந்த காதலும் கல்யாணமும் ஆணவக் கொலையும் இன்னொரு முடிச்சு . இதில் கண்ணன் பொன்னி காதல் கூட வலியோடுதான் தயங்கி தயங்கித்தான் சொல்லப்படுகிறது . சாதி வெறி ஆணவக் கொலைக்கு தள்ளுவதை  நெஞ்சம் பதைக்கச் சொல்லுகிறார் சக்தி சூர்யா.

 

இவற்றுக்கிடையே   ஊரின் சில நிகழ்வுகள் மூலம் கிராமத்தில் இறுகிப்போயிருக்கும் சாதிய முரண்கள் , தற்கொலையாகிப் போகும் கொலைகள் ,ஆணாதிக்கக் கொலைகள் , மூடத்தனங்கள் ,கிராமிய பெண் தெய்வங்களின் கதைகள்  என தான் வாழ்ந்த ஊரின் செய்திகளை அள்ளிக்கொட்டுகிறார் சக்தி சூர்யா . முதல் நாவல் என்பதால் அனைத்தையும் சொல்லிவிட எண்ணுவது இயல்புதானே !

 

இந்நாவலில் ஓர் அத்தியாயத்தில் கமுதி விலக்கருகே முத்துமாரியம்மன் கோயிலில் ஓர் அதிசம் நடப்பதாக வருகிறது . “…….. வெள்ளாமைகூடச் செய்ய முடியாமல் கண்ணுக்கெட்டிய தூரம் தரிசாகக் கிடக்கும் செவல் காட்டில் கைமண் தோண்டினால் தண்ணீர் வருகிறது அந்தத் தண்ணீரும் இனிக்கிறது..” என்ற செய்தி நம்ப முடியாமல் சிரமப்பட்டாலும் கூடிய ஜனம் நேரில் பார்த்து முத்துமாரியின் சித்து விளையாட்டு  என்று கொண்டாடுகிறது .அந்தக் காடே பரப்பாகி கடை ,கண்ணி என விழாக்கோலம் பூண்டு விடுகிறது .

 

சில அத்தியாயங்களுக்குப் பின் இந்த புதிர் அவிழ்க்கப்படுகிறது , ஆராய்ச்சியாளர்கள் அது கடலைப் பாறை என்பதால் மேல்மட்டத்தில் தேங்கிய நீர்தான் எனச் சொல்கின்றனர் .விரைவில் அதுவும் வற்றிவிடுகிறது .ஊரும் கோயிலும் களை இழந்து விடுகிறது என்பதை சொல்லிச் செல்கிறார் நாவலாசிரியர் .ஆனால் அத்தோடு நிற்காமல் ஒகிலித் தாத்தா மூலம் சொல்கிறார் ,”…சில சாமிகளுக்கும் ஆயுசு கொஞ்ச காலம்தான் போலிருக்கு.” இதுதான் கிராமத்து உளவியல் .

 

அத்தியாயங்களின் தலைப்பை இலக்கியங்களில் இருந்து எடுத்த நயம் மிக்க வரிகள் அலங்கரிக்கின்றன . இதனை ரசிப்போரும் இருப்பர் ,முரணென ஒதுக்குவோரும் இருப்பர் .

 

“எத்தனை நூற்றாண்டுகள் இந்த சாதி இழிவை சுமக்கிறது ? நமது முன்னோர்கள் நேர்த்திக் கடனுக்கு வேண்டி இருக்க மாட்டார்களா ? இந்த துடியான சாமிகள் நினைத்திருந்தால் பெரிய சாதிக்காரர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து இருக்காதா ?”

 

இப்படி ஆங்காங்கு சிந்தனை பொறிகள் இந்நாவலின் நல்ல கூறு .

 

 “தென் மாவட்டங்களில் ஆதிக்க சாதியினரால் உண்டாக்கப்பட்ட கலவரத்தில் ,இடதுசாரி இயக்கத்தின் வாலிபர் சங்கம் எவ்விதம் களம் இறங்கி அமைதிக்கு வழி வகுத்தது என்பதை இதுவரை யாரும் இவ்வளவு அழுத்தமாக ஆவணப்படுத்தியது இல்லை.” என்கிற புலியூர் முருகேசன் வாக்குமூலம் மெய்யே .அதுவே இந்நாவலின் சிறப்பு .

 

நாவலை வாங்கி வாசியுங்கள் !

 

நரவேட்டை , [ புதினம்]  ஆசிரியர் : சக்தி சூர்யா ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,

E mail : bharathiputhakalayam@gmail.com  / www.thamizhbooks.com

பக்கங்கள் : 280  , விலை : ரூ.280 /

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

22/4/2024.

 

 

 

 

 


0 comments :

Post a Comment