சங்க இலக்கியத்தின் வழி தமிழர் பண்பாட்டு வேரைக் கொண்டாடி...

Posted by அகத்தீ Labels:

சங்க இலக்கியத்தின் வழி

தமிழர் பண்பாட்டு வேரைக்கொண்டாடி…..

 

 


 

 சங்கச் சுரங்கம் – முதலாம் பத்து – கடவுள் ஆயினும் ஆக “ எனும் நூலை வாசிக்கத் துவங்கிய நொடியிலிருந்து ஏற்பட்ட வியப்பும் மகிழ்ச்சியும் அளவில்லை .ஆர் .பாலகிருஷ்ணனின் ஆழ்ந்த தேடலும் புலமையும் இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் புன்னகைக்கிறது .

 

எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் அலுவலகத்தில் ஓர் மாலையில் சமுத்திரம் ,சிகரம் செந்தில்நாதன் ,தயானந்தன் பிரான்ஸிஸ் , நான் ,ஆர் .பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்த முதல் நாள் நினைவுக்கு வருகிறது ; அப்போது சிந்துவெளி நாகரிகத்தில் திராவிட வேர் குறித்து ஊர் பெயர்களூடே அவர் விவரித்த காட்சி மனத்திரையில் ஆழப்பதிந்துள்ளது .

 

இந்நூல் வழக்கமான சங்க இலக்கிய விவரிப்போ , நயந்துரையோ அல்ல அதற்கும் மேல் மானுட பண்பாட்டில் தமிழரின் உயரிய பங்களிப்பை இன்றைய காலத் தேவையூடே நுணுகி அலசி காட்சிப் படுத்தியுள்ள களஞ்சியம். பத்து தொடர் உரையின் தொகுப்பு இந்நூல் .

 

 “…… …… …… ….. …. ….. …. …. …. ….. …..

….. ……. …… …… ……. ….. ….. ….. ….. ….. ….

பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை

ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே

மாரி பொய்ப்பினும் ,வாரி குன்றினும்

இயற்கை அல்லன் செயற்கையில் தோன்றினும்

காவலர்  பழிக்கும்இக் கண்கள் ஞாலம்

அதுநற்கு அறிந்தனை யாயின் ,நீயும்

நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது

பகடுபறம் தருநர் பாரம் ஓம்பிக்

குடிபுறம் தருகுவை யாயின்நின்

அடிபுறம் தாங்குவர் அடங்காதோரே”

 

இந்தப் பாடலை முதல் உரையில் சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்கு கொண்டு வரும் போது நூலாசிரியர் சொல்கிறார் , “ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சாதாரணப் புலவர் மன்னனைப் பார்த்து ஓர் அறிவுரை சொல்லியிருக்கிறார் . அதனை ஆவணப்படுத்தியுள்ளனர் .இப்போதைய சூழலுக்கு கற்பனை செய்து பாருங்கள் .ஓர் இலக்கியவாதியோ அல்லது ஊடகவியலாளரோ இடித்துச் சொல்வதற்கான வாய்ப்பு உள்ளதா ?”

 

முழுப்பாடலையும் சுட்டிவிட்டு பொருளைச் சொல்லுகிறார் ,” …. …இவ்வாறு நீ வெற்றி பெறுவதற்கு நீ கொண்டு செல்லும் படை மட்டும் காரணமல்ல , உன் நாட்டில் உழுகின்ற விவசாயிகளின் நெல்லினால் விளைந்த பயனும்தான் காரணம் . விவசாயிகளின் கலப்பை பயிரை மட்டுமல்ல ,உனது வெற்றியையும் கொடுக்கிறது . இவ்வாண்டில் மழை வரவில்லை என்றாலும் வளம் குன்றினாலும் இயற்கை பிரச்சனைகள் அல்லாது செயற்கைப் பிரச்சனைகள் வந்தாலும் மக்கள் காவலரைத்தான் குறை சொல்லுவார்கள் . அதாவது மன்னன் மீதுதான் பழிபோடுவார்கள் . அதனால் நீ விவசாயிகள்தான் உனது அரசு ,நாடு என்ற அடிப்படையைப் புரிந்துகொண்டு அவர்களைக் காத்து ,அவர்களுக்கு ஆதரவாய் இருந்தாலே போதும் மற்றவை எல்லாம் இதில் அடங்கிவிடும் .”

 

முதல் உரையில் இடம் பெறும் இந்த சித்தரிப்பே நூலின் செல்திசையை நமக்கு சுட்டிவிடுகிறது . ஒவ்வொரு உரைக்கும் எடுத்தாண்டுள்ள தலைப்பை கூர்ந்து நோக்கினாலே நூலின் ஆழமும் அகலமும் விளங்கும் .

 

1.சங்கச் சுரங்கம் அறிமுகவுரை , 2.பசிப்பிணி மருத்துவன் , 3. பிறர்கென முயலுநர் , 4.பருத்திப் பெண்டிர் ,  5.கடவுள் ஆயினும் ஆக , 6.கல்லா இளைஞர் , 7.முதுவோர்க்கு முகிழ்த்த கை ,8.இமிழ் பனிக்கடல் ,9.சேண் நடும் புரிசை ,10 .இடுக ஒன்றோ ! சுடுக ஒன்றோ ! என்கிற பத்து உரையும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்த விவசாயம் , பொதுநலம் , நெசவு , உழைக்கும் பெண்கள் , தோளில் கை போடும் நம் சாமி ,கல்வி ,கல்வி அறிவின்மை , முதியோர் குறித்த பார்வை , சுற்றுச் சூழல் , செங்கல் ,வீடு , மரணம் என நிறையப் பேசுகின்றன .

 

ஒவ்வொன்றையும் படித்து முடித்த பின் தமிழ் சமூகம் குறித்த பெருமிதத்தோடு ஒவ்வொருவரும் தாம் தமிழனாகப் பிறந்த பேறை எண்ணி இறும்பூதெய்தாமல் இருக்க முடியுமா ?

 

ஒவ்வோர் உரை குறித்தும் தனித்தனியே நிறைய எழுதலாம் . நூலறிமுகத்தின் எல்லை கருதி பத்து உரை குறித்து பத்து செய்திகளும்  கேள்விகளுமாய் மட்டுமே எழுதப் போகிறேன்

 

1] “மண்ணில் விளைந்து வாய்வழி வளர்ந்த மரபுகளின் ஆவணம்,” சங்க இலக்கியம் எனக்கூறும் நூலாசிரியர் ; சங்க இலக்கியத்தில்  “மீள் நினைவுகள் இருக்கின்றன,” என்கிறார் . மிகச் சரிதான் . நீண்ட இலக்கிய பரப்பினூடே நம் பண்பாட்டு அரசியலை நிறுவும் நுட்பமான முயற்சி பாராட்டுக் குரியது,தோராயமான கால எல்லையும் ,மருதத்தில் அரசுருவாக்கம் நிகழ்ந்த படிநிலையும் சேர்க்கப்பட்டிருக்கலாமோ ?

 

2] பசிப்பிணி குறித்த தமிழ்ச் சமூகத்தின் அழுத்தமான பார்வையும் கனவும் எண்ணும் தோறும் ஆச்சரியம் கூடுகிறது . அதனை வலுவாகவே உரையில் நூலாசிரியர் பதிவும் செய்திருக்கிறார் .  ‘இரந்தும் உயிர் வாழும்’ சூழலும் இருந்திருக்கிறது ,  ‘கைமாறு கருதா ஈதல்’ குணமும் இருந்திருக்கிறது என இருபுறத்தையும் காட்சிப் படுத்திய  நூலாசிரியர் மத்திய அரசின் தானியக் கிடங்கின் பூட்டை உடைத்து அழிபசி போக்க தான் தன் அதிகாரத்தை பயன்படுத்தியது சங்க இலக்கியம் தந்த ஊக்கம் என்கிறார் . இப்பகுதியில் மணிமேகலையின் அட்சயபாத்திரம் குறித்து வலுவாகச் சொல்லியிருக்கலாமோ ? பாரதி வரை பயணிக்கும்போது மணிமேகலையும் பேசலாம்தானே ? தமிழ் மண்ணிலும் கற்பனா சோஷலிச வேர் இருந்ததை போகிற போக்கில் சொல்லி இருக்கலாமோ ?  [ 49 ம் பக்கம் பாரதியார் பாடல் வரியை வள்ளலார் வரியாகச் சுட்டிய பிழையை அடுத்த பதிப்பில் நேர் செய்க ]

 

3] அமிழ்தமே கிடைப்பினும் பகுத்துண்ணும் பண்பாட்டு பெருமை உரக்கப் பேசப்பட வேண்டிய செய்தியே . “ தமக்கென முயலா நோன்தாள் பிறர்கென முயலுநர் உண்மையானே,” என்கிற மானுடம் போற்றும் வாழ்நெறிக்கு ஈடில்லை . இது நமக்கு வழித்துணை என நூலாசிரியர் முடிவுக்கு வருவது முற்றிலும் நியாயந்தான்.

 

4] நெசவு , துணி வணிகம் ,உழைக்கும் பெண்கள் என விரிந்த பரப்பில் ஆற்றிய குறுகிய உரையாயினும் ஆழந்த ஆய்வுக்கு களம் காட்டும் முன்னெடுப்பாகும் . யாரேனும் செய்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது ; தொடர்ந்து செய்வதும் தேவையே .

 

5]  “ பெருங்கோயில்களில் இத்தகைய சாமி ஆடுதல் நிகழ்வு ஏன் நடைபெறுவதில்லை என்ற கேள்வியினைக் கேட்டால் , அதற்கு பதில் ,ஏனெனில் பெருங்கோயில்களில் உள்ள சாமியை உங்களுக்குத் தெரியாது ;உங்களைச் சாமிக்கும் தெரியாது .அதன் ஸ்தல புராணங்களில் யார்யாரோ இருக்கிறார்கள். அதில் சாதாரண மக்கள் இல்லை.” எனக் கூறும் நூலாசிரியர் , “ நாட்டார் தெய்வங்களை மக்கள் தங்களில் ஒருவரைப்போல் விளித்து கேள்வி கேட்கும் நடை முறைக் காணப்படுகிறது .” என்கிறார் .முருகன் வழிபாடு வெறியாட்டு குறித்து வலுவாகச் சொல்கிறார் . பரிபாடல் காலத்தில்தான் சுப்பிரமணியனும் தெய்வயானையும் முருகனோடு வலிந்து திணிக்கப்பட்டு நம் மூத்தகுடி வள்ளிக் குறத்தி சக்காளத்தி ஆக்கப்படும் கொடுமை நடக்கிறது .இந்த சமஸ்கிருதமயமாக்கல் அல்லது பார்ப்பணிய மயமாக்கல் குறித்து உரையில் சொல்லப்படிருப்பினும் நா.வானமாமலை சுட்டிக் காட்டியதுபோல் இன்னும் கூர்மையாகச் சொல்லப்பட்டிருக்கலாமோ ? குறிஞ்சி நிலம் போல் ஐவகை நிலத்திலும் நம் மண்ணோடும் மனதோடும் நிறைந்த சாமிகள் வேறு ; அதுபோல் நம் தாய் தெய்வங்கள் வேறு .இது குறித்து தனிநூலே ஆசிரியர் எழுதலாமே ? செய்வீர்களா ?

 

6]  “தொல்தமிழர் கல்விக் கொள்கை : அரசன் வெளியிட்ட அறிக்கை” என புறநானூற்றின் 183 வது பாடலை , “ உற்றுழி உதவியும்…. அவன் கண் படுமே,” எனும் பாடல் வரியைச் சுட்டுகிறார் .கல்வி ,கல்லாமை பற்றி நிறைய செய்திகளை இவ்வுரையில் அடுக்குகிறார் . படித்தவனே போற்றப்படுவான் என வரைந்து காட்டுகிறார் . கீழடியில் கிடைத்த எழுத்து பொறித்த பானையை சுட்டி கல்வியில் ஓங்கிய பழந்தமிழர் என பெருமிதம் கொள்கிறார் .அதே நேரம் கல்லாமை இருந்ததையும் சொல்கிறார் .  இக்கட்டுரை தமிழரை சுயபெருமிதம் கொள்ளத் தூண்டும் .அது தப்பில்லை .ஆயின் , கல்வியிலிருந்து சமூகத்தின் பெரும் பகுதியினரை விலக்கி வைக்கும் அநீதி எப்படி அரங்கேறியது என்பதையும் இவ்வுரைப் பரப்புக்குள் கொண்டுவந்திருக்க வேண்டாமா ?

 

7] முதியோருக்கான கொள்கை அறிக்கை பற்றி இன்றைக்குப் பேசுகிறோம் . அன்றைக்கே முதியோரை வணங்கி துணைநின்ற முதுவோர்க்கு முகிழ்த்த கை இருந்ததையும் முதியோர் குறித்த  தமிழ் சமூகத்தின் நுண்ணிய பார்வையையும் விரிவாகச் சுட்டுகிறது .பயனில் மூப்பையும் சொல்லத் தவறவில்லை .இன்றைக்கு முதியோர் குறித்த பார்வையும் முதியோர் இல்லம் குறித்த ஒருங்கிணைந்த பார்வையும் தேவை அல்லவா ? விவாதிக்க களம் அமைக்கும் உரை .

 

8] “ கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமம்” என்கிற சொற்றொடரை வைத்து மீன் தூங்குமா என கேள்வி எழுப்பி , தூங்கும் என விடையும் தந்துள்ளார் நூலாசிரியர் .கடல் என்பது பெரிதும் நெய்தல் நிலத்தோடு தொடர்புடையதுதான் எனினும் பிற நில மக்களுக்கும் கடல் தொடர்புடையதாய் இருப்பதை , பரதவர் வாழ்வை , கடலும் சுற்றுச் சூழலும் ,கடலும் இயற்கைப் பேரிடரும் என கடலுக்குள் மூழ்கி பல செய்திகளை சங்க இலக்கியத் துணையோடு நூலாசிரியர் தருகிறார் . நெய்தல் நிலம் சார்ந்த ‘ இரங்கலும் இரங்கல் நிமித்தமும்,’ குறித்து பரக்கப் பேசுகிறது . புவிவெப்பமாதல் குறித்து பேசும் காலகட்டத்தில் இம்மீள் பார்வை மிகத் தேவையான ஒன்று .

 

9] “ சிந்துவெளிச் செங்கல் ,சங்க இலக்கியச் சுடுமண் ,கீழடியின் செங்கல் சுவர் என்ற தொடர் நிகழவினைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இவ்வுரையினுடைய முக்கிய விசயமாகும் .” என நூலாசிரியர் சொல்வது மட்டுமல்ல அத்திக்கில் நம்மையும் நகர்த்தியுள்ளார் . நாம்   உரக்கப் பேச வேண்டிய விசயமல்லவா இது ? அதற்கு விசைதருகிறது இவ்வுரை .

 

10] “ …. பொருள் நிலையாமை ,யாக்கை நிலையாமை ,வாழ்க்கையினுடைய நிலையாமை இதெல்லாவற்றையும் பேசி அதனுடைய உள்ளீடாக இருக்கும் வாழ்க்கையினை வாழச் சொல்லி வற்புறுத்துவதுதான் சங்க இலக்கியத்தின் குறிக்கோள் “ இவ்வாறு மரணம் குறித்த சங்க இலக்கிய பார்வையை விவரிக்கிறார் நூலாசிரியர் . ‘செய்ப எல்லாம் செய்தனன்’ அதாவது ஒருவன் வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வதையே வாழ்க்கை எனக் கொண்டாடும் பண்பாட்டு சித்தாந்தம் தமிழருடையது .ஆம்.சாக்குருவி வேதாந்தம் அல்ல , அனுபவித்து வாழும் நெறியே தமிழர் பெருமை .

 

 “ அடிப்படையில் பாலா சார் எந்தத் தத்துவத்தையும் சார்ந்து பார்க்கிறவர் இல்லை .திறந்த மனதோடு எல்லாவற்றையும் பார்ப்பதுதான் அவருடைய தத்துவம் .பன்மியம் என்பதுதான் அவருடைய தத்துவமாக உள்ளது . அதுதான் சங்க தத்துவம்கூட .” என தமிழ்ச்செல்வனின் வரையறை சரியானதுதான் .

 

இந்நூல் கொரானா கடுங்காலத்தில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் ,களம் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய இணையவழி பத்து தொடர் உரைகளின் தொகுப்பு .  “முதல் பத்து”  என்பது “ டாப் டென் “ என்கிற பொருளிலோ , இது முதல் பத்து உரை இன்னும் தொடரும் எனும் பொருளிலோ இருக்கலாம் .எதுவாயினும் வேறல்ல .சரியே !

 

சிந்துவெளி நாகரிகம் தொட்டு இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிட பண்பாட்டின் கூறாக சங்க இலக்கியத்தை பார்ப்பதும் , தமிழர் பண்பாட்டை அதன் அரசியல் வெப்பத்தோடு இந்நூல் பேசுகிறது .இந்நூலை ஒரு முறைக்கு இருமுறை வாசித்து உள்வாங்குவது மிக அவசியம். இந்தியாவின் பன்மைத்துவத்தை மறுக்கும் பாசிசம் கவ்வும் வேளையில் இந்நூல் புதிய சாளரத்தைத் திறக்கிறது .

 

இந்த நூல் சுட்டும் நியாயமான பெருமிதத்தோடு ; தமிழ்ச் சமூகம் வர்ணமாக கூறு போடப்பட்டதையும் வர்க்கமாக பிளவுண்டு நிற்பதையும் இணைத்து புரிந்து பண்பாட்டை மேலும் முன்னெடுக்க இந்நூலும் ஆயுதமாகட்டும் !

 

சங்கச் சுரங்கம் – முதலாம் பத்து – கடவுள் ஆயினும் ஆக ,

நூலாசிரியர் : ஆர்.பாலகிருஷ்ணன் ,

பக்கங்கள் : 264 , விலை : ரூ.270/

வெளியீடு :பாரதி புத்தகாலயம் ,

நூல் பெற : 044 24332424 / 24332924 / 24356935

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

 

 

பொறியில் சிக்கிய எலியென

Posted by அகத்தீ Labels:

 

எங்கும் ஒரே புழுக்கம்

வெக்கை தாள முடியவில்லை

காற்று மருந்துக்கும் இல்லை

மூச்சுத் திணறுகிறது

கதவு ஜன்னல் என

ஒவ்வொன்றாய் சாத்துகிறார்கள்

ஆங்கார சிரிப்பொலி அச்சுறுத்துகிறது

பொறியில் சிக்கிய எலியென

கொண்டாட்டித் தீர்க்கிறார்கள்

கடவுளும் கார்ப்பரேட் வசமாகிவிட்டார்

நமக்கு நாமே துணை

நாம் பலர் அவர் சிலர் !

இனியும் கதவைத் தட்டிக்கொண்டிருக்க

முடியாது… உடைத்தெறி !

 

சுபொஅ.

18/11/2021.

நெய்தலின் கேள்விகள்

Posted by அகத்தீ Labels:

 சென்னை பெருநகரமாகாமல்

ஐநூறு ஆண்டுகளுக்கு 
முந்தைய நெய்தல் நில 
பாக்கங்களும் பட்டணங்களுமாய்
மட்டுமே இருந்திருந்தால் 
இந்த புயல்மழையில்
யாரேனும் பேசியிருப்போமா ?
கடலோரக் கிராமங்களை
கடல் வாரி முழுங்கினும்
பேச வாய் இருக்குமோ ?
பார்க்க கண் இருக்குமோ ?
நெய்தலின் துயரை 
பேசுவோர் யாரிங்கு
காலங்காலமாய் காட்சி இதுவே!

சென்னையின் வளர்ச்சியிலும் 
நெருக்கடியிலும் துயரத்திலும் 
பங்குதாரரான  மக்களே ! நீங்கள்
பஞ்சம் பிழைக்க வந்தவரோ !
இம்மாநிலத்தோரோ ! அல்லாதோரோ !
துறைமுகம் உருவாக்கப்பட்டு பின்
தொழில் நகராகவும் தலைநகராகவும்
வர்த்தக நகராகவும் இல்லாவிடில்
வந்திருப்பீரோ ! வந்திருப்பீரோ !
நெஞ்சைத் தொட்டுச் சொல்வீர் !

சென்னையின் துயரம் ஒற்றை நாளில்
ஓரிருவரால் வந்ததாமோ ?
யார் யார் பங்கு எவ்வளவு என
காய்தல் உவத்தலின்றி ஆயப்புகின்
குற்றவாளிக் கூண்டில்தான் 
ஒவ்வொருவரும் நின்றாக வேண்டும் !
சம்மதமோ ஒவ்வொருவருக்கும் …
குறைந்த பட்சம் வெள்ளைக்காரன்
தொடங்கி இன்று வரைக்கும்
ஒவ்வொரு ஆட்சிக்கும் 
ஒவ்வொரு அடிவைப்புக்கும்
பிரமாண்ட வளர்ச்சியிலும்
பிரச்சனை புதைசகதியிலும்
பங்குண்டே ! மறுப்பீரோ !

இனி திரும்பிச் செல்லல் என்பது
ஒரு போதும் நடக்க முடியாது
அறிவு –அனுபவம் –நடைமுறை
அனைத்தும் கலந்து
ஆட்சி –வல்லுநர் –மக்கள்
கூட்டிணைவில் காணவேண்டும் 
இனியொரு நல்வழி ! புதுவழி !
காலம் சொல்லும் பாடம் கற்றவழி
நடக்குமா ? நடக்க விடுவாரோ ?

சுபொஅ.
13/12/2021.
---


மார்க்ஸ் – பெரியார் – அம்பேத்கர் ஒற்றுமையும் முரண்பாடும்

Posted by அகத்தீ Labels:

 


 “மார்க்ஸ் – பெரியார் – அம்பேத்கர் ஒற்றுமையும் முரண்பாடும்” என்கிற நூலை மூத்த தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதி இருக்கிறார் . ஏற்கனவே இம்மூவரின் வாழ்க்கை வரலாற்றை நயம்பட எழுதியவர் . மூவர் மீது மிகுந்த மரியாதையும் ஆழந்த ஈடுபாடும் கொண்ட ராமகிருஷ்ணன் காய்தல் உவத்தலின்றி அலுசும் இயல்பினர் .

 

இந்நூலில் மூவரின் வாழ்வையும் பங்களிப்பையும் தனித்தனியே சுருக்கமாகத் தொகுத்தளித்துவிட்டு ;இன்றைக்கு மூவரின் தேவையும் வலியுறுத்துகிறார் .

 

தற்போது ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்தும் - குறுக்குசால் ஓட்டும் பேர்வழிகள் மிகுந்துவிட்டனர் . இவர்களின் நோக்கமும் செயலும் இறுதியில் பாசிச சக்திகளுக்கு உதவும் .ஆகவே மார்க்ஸ் பெரியார் அம்பேத்கர் மூவரையும் ஆயுதமாக்க வேண்டிய காலத்தின் கட்டளையை இந்நூல் பேசுகிறது .அத்துடன் கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய சமூகப் போராட்டங்களின் வரலாற்று குறிப்புகளை பட்டியலிடுகிறது.

 

“மார்கஸ் – பெரியார் –அம்பேத்கர் ஆகிய மூவரின் கருத்துகளையும் ஒப்பீடு செய்யும்பொழுது உலகம் முழுவதும் அடிப்படையான சமுதாய மாற்றத்திற்காக நிற்கும் மார்க்சியமும் ,பெரியாரின் கடவுள் மறுப்பு கண்ணோட்டமும் ,சுயமரியாதையும் ,அதேபோன்று அம்பேத்கரின் சமூகநீதி என்ற லட்சியமும் இணைந்து இந்தியாவின் அவசர அவசியத் தேவை என்பது மட்டுமல்ல .அது காலத்தின் கட்டாயமும் ஆகும் .” என்கிறார் நூலாசிரியர் என்.ராமகிருஷ்ணன் .

 

களத்தில் நிற்கும் தோழர்கள் வாசிக்க வேண்டிய நூல் .மேலும் மேலும் இவர்களைப் பற்றி அறிய மேலும் மேலும் வாசிக்கத் தூண்டும் நூலும்கூட .அந்தத் தேடலே இன்றையத் தேவையாகும்.

 

நூல் தேவைக்கு தொடர்பு கொள்க : 9486927364  ,044 24356935 / 24332924.


நான் என்ன தவறு செய்தேன் ?

Posted by அகத்தீ Labels:

   

மழை கேட்டது

நான் என்ன தவறு செய்தேன் ?

 

கடல் கேட்டது

நான் என்ன தவறு செய்தேன் ?

 

காற்று கேட்டது

நான் என்ன தவறு செய்தேன் ?

 

சூரியன் கேட்டது

நான் என்ன தவறு செய்தேன் ?

 

நிலம் கேட்டது

நான் என்ன தவறு செய்தேன் ?

 

பால்வெளி கேட்டது

நான் என்ன தவறு செய்தேன் ?

 

பிரபஞ்சம் கேட்டது

நான் என்ன தவறு செய்தேன் ?

 

உங்கள் கேள்விகள்

மிகமிக சரிதான் .

நான் என்ன தவறு செய்தேன் என

மனிதகுலம் அகத்தாய்வு செய்யாதவரை

உங்கள் கேள்விக்கு பதிலேது ?

 

சுபொஅ.

10/11/2021.

நமக்குள் பிறந்துவிடக்கூடிய ஹிட்லர்கள்….

Posted by அகத்தீ Labels:

 





நமக்குள் பிறந்துவிடக்கூடிய ஹிட்லர்கள்….
சு.பொ.அகத்தியலிங்கம்.

“ வெளியே இருந்து வந்த வெள்ளையனை ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்று துரத்தலாம் .நமக்குள்ளிருந்து ,நம் நடுவிலேயே பிறக்கும் ஹிட்லர்களை விரட்டுவது எப்படி ?”

இப்படி கேள்வி கேட்கிறாள் கதையின் நாயகி ஹ்யானா.

நேமிசந்த்ரா எழுதிய கன்னட புதினம் ‘யாத் வஷேம்’ கே.நல்லதம்பியின் தமிழாக்கத்தில் வந்துள்ள இப்புதினம் சென்ற ஆண்டே வந்த போதும் ஏதெதோ காரணங்களால் மிகத்தாமதமாக இப்போதுதான் வாசித்தேன் . தாமதமானாலும் இப்போதாவது வாசித்தேனே என்கிற மனநிறைவு .

வெறுப்பு அரசியலின் கோர நர்த்தனமும் அதன் சமூக உளவியலும் வரலாற்று வன்மும் கதைப்போக்கில் நெஞ்சில் இரத்தத்தாலும் கண்ணீராலும் இப்புதினம் நெடுக வரையப்படுகிறது .

பெங்களூர் கோரிப்பாளயம் யூதக் கல்லறை முதல் இஸ்ரேலுலுள்ள யாத் வஷேம் நினைவுக் கல்லறை வரை விரிந்து பரந்த புதினம் இது .ஹிட்லராலும் அவர் கூட்டாளிகளாலும் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களின் நினைவுக் கல்லறைதான் யாத்வஷேம்.

கதை மிக எளிதானது . ஹிட்லரின் அடக்குமுறையால் நாட்டைவிட்டு ஓடிய ஓர் விஞ்ஞானி .ஓடும் போதே ஹ்யான என்கிற பத்துவயது மகளைத் தவிர குடும்பத்தில் உள்ள அனைவரையும் பிரிகிறார் . அவர்கள் தப்பித்தார்களா பிழைத்தார்களா என்பதுகூட அவருக்கு தெரிய முடியவில்லை .தப்பிய அவரும் அவர் மகளும் பெங்களூரில் சாம்ராஜ்பேட்டையில் குடியேறுகின்றனர் . பக்கத்துவீட்டில் உள்ள ஒக்காலிகர் குடும்பத்தோடு ஹ்யான பழகுகிறாள் . தந்தையும் இறந்துவிட அக்குடும்பமே இப்பெண்ணையும் அரவணைக்கிறது ஹ்யான வாழ்க்கைச் சூழலில் அனிதாவாகிறாள் .அவள் நெஞ்சுக்குள் ஹிட்லரால் விரட்டப்பட்ட கொடிய நினைவும் ; தன் அம்மா ,அக்கா ,தம்பி ,தங்கை என்ன ஆனார்கள் என்கிற கவலையும் நீறுபூத்த நெருப்பாக நெஞ்சில் கனந்துகொண்டே இருக்கிறது .

அனிதா தனக்கு அடைக்கலம் கொடுத்த குடும்பத்தில் விவேக்கை திருமணமும் செய்து விஷால் என்கிற மகனையும் பெறுகிறாள் .எழுபது வயதில் ஐரோப்பா ,அமெரிக்கா ,இஸ்ரேல் என பயணம் செய்து அக்காவைச் சந்தித்து அக்காவைத் தவிர எல்லோரும் இறந்துவிட்டதை அறிகின்றார். பயணம் மூலமும் இஸ்ரேலில் வசிக்கும் அக்கா மூலமும் ஹிட்லரின் வெறுப்பு அரசியலின் கொடூர முகத்தை இரத்தமும் சதையுமாய் படம் பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர் .

இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் , இங்கே மசூதி இடிப்பு குஜராத் கலவரம் எல்லாம் கலந்து வெறுப்பு அரசியலுக்கு எதிராய் இந்நூல் உரக்கப் பேசுகிறது . விஷால் குஜராத் கலவரத்தில் அனாதை ஆக்கப்பட்ட முஸ்லீம் பெண் சபீதாவைத் திருமணம் செய்வதோடு நாவல் முடிகிறது .

நாவல் நெடுக பேசப்படும் செய்திகள் கனமானவை . இந்திய சமூகத்தில் பல மதம் ,பல மொழி ,பல சாதி ,பல இனம் இவைகளுக்கு இடையே நிலவும் நல்லிணக்கமும் முரணும் பேசப்படுகிறது . சாதியத்தின் இறுக்கமும் அதிலிருந்து வெளிவர தம்மையும் பிராமணச் சடங்கு சம்பிரதாயத்தில் வலிந்துதிணித்து மேல்நிலையாக்கும் சூத்திர மனோநிலையும் இந்நூலில் பேசப்படுகிறது .குறிப்பாக ஒக்காலிகர் வாழ்வியலோடு பேசப்படுகிறது . மறுபக்கம் பிராமணியம் இதை உதாசீனம் செய்வதும் கதைபோக்கில் சொல்லப்படுகிறது .

வெறுப்பரசியலால் பாதிக்கப்பட்டு நாடுநாடாக அலைந்து இஸ்ரேல் நாடாக்கி குடியேறிய யூதர்களிடம் அதே வெறுப்பரசியல் ஓங்கி பாலஸ்தீனத்தை ஒழிக்க முயல்வதை இந்நூல் பதிவு செய்கிறது .

புத்தரும் காந்தியும் போதித்த அஹிம்சையை நல்லிணக்கத்தை தொலைத்துவிட்டு முஸ்லீம் வெறுப்பு அரசியல் மேலோங்குவதை நெஞ்சம் பதைக்க இந்நூல் பேசுகிறது .

“சாதி இல்லாத ,பீதி இல்லாத நாட்டைக் கருணைசெய் ஆண்டவனே ! நொந்த இந்த மண்ணுக்கு அமைதியைக் கொடு” என எழுதி இஸ்ரேலில் அழுகைச் சுவரின் விரிசலில் சொருகி ஹ்யான பிரார்த்தனை செய்யும்போது நாத்திகனான நானும் என் நாட்டை எண்ணி உடன் பிரார்த்தனை செய்த உணர்வு ஏற்பட்டது .

எல்லா மதங்களிலும் உள்ள அன்பு முகத்தை ஹ்யானா உரக்கப் பேசுகிற போதே கேட்கிறாள் ,” எல்லா மதங்களிலும் புராண புனிதக் கதைகளிலும் கறுப்பு அத்தியாயம் உண்டு .அந்த இருட்டு சுழற்சியில் சிக்கிக் கொண்டால் வெளிச்சத்தின் பக்கம் கையை எப்படி நீட்ட முடியும்?”

ஹ்யானயின் அரவணைப்பு அம்மா படித்தவளல்ல ஆனால் அவளின் சில மதிப்பீடுகள் மனிதத்தில் ஊறியவை .” எப்படியோ பாண்டவர்கள் வென்றார்கள் அல்லவா ?’ என்ற கேள்விக்கு அந்த அம்மா சொன்னார் ,” போரில் யாராவது வென்றதுண்டா மகளே ? பாண்டவர்கள் என்னத்தை வென்றார்கள், விதவைகள் ,அநாதைப் பிள்ளைகள் நிறைந்த நாடுதான் மிச்சம் . தங்கள் சொந்த பந்தங்கள் பிள்ளைகள நண்பர்களை இழந்து என்ன சுகம் கண்டார்கள் ?” .இதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது எல்லாவற்றையும் பெண்கள் ,ஒடுக்கப்பட்டோர் இதயத்தோடு மறுவாசிப்பு செய்தால் எல்லா புனிதமும் நூற்றாண்டு அழுகலாய் நாறும்தானே !

அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு ஆண்டுக் கண்க்காய் உட்கார்ந்திருக்கும் ஓர் பெண்ணின் பதாகை இப்படிச் சொல்கிறது ,” உங்கள் நாட்டைக் காதலியுங்கள் ! உங்கள் அரசாங்கத்தைச் சந்தேகப்படுங்கள் ! தைரியமாக இருங்கள் ,உண்மையை எதிர்கொள்ளுங்கள் . கும்பல் கொலையை வெறுங்கள் [ மக்கள் கொலை என நூலில் மொழியாக்கம் செய்திருப்பது பிழையெனக் கருதுகிறேன்] .அதற்கு ஓர் நாள் நீங்களும் பலியாகலாம்!”

இவையே இந்நூலின் செய்தியாகவும் உள்ளது .நூல் இறுதியில் நூலாசிரியர் சொல்லும் இக்கதையைப் பிரசவித்த வலி ஒவ்வொரு எழுத்தாளரும் அறிய வேண்டிய செய்தி .ஏரோநாட்டிக் எஞ்சினியர் என்கிற முறையில் உலகெங்கும் சுற்ற ஆசிரியருக்கு கிடைத்த நல்வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காதுதான் ;ஆயின் இவ்வாய்ப்பு கிடைத்த எத்தனைபேர் இப்படி சமூகம் பயனுற செய்கிறார்கள் ?
சிறந்த மொழியாக்கத்துக்கு பாராட்டுக்கள் !

நூலாசிரியர் சொல்வதுபோல , “ இன்று ஹிட்லர் எங்கே வேண்டுமென்றாலும் பிறக்கலாம் .அமெரிக்காவில் ,ஜெர்மனியில் ,இஸ்ரேலில் அஹிம்சையே உயர்ந்த தர்மம் என முழங்கும் இந்தியாவில் கூட , நம் நடுவில் எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம் ,நமக்குள் பிறந்துவிடக்கூடிய ஹிட்லரைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையது எனும் நம்பிக்கையின் பின்னணியில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது .”

அதே நம்பிக்கையுடன் இந்நூலை எல்லோரும் வாசிப்பீர் !
இந்நூல் உம் மனசாட்சியைக் குடையும் .கேள்வி கேட்கும் !
அமைதிக்காக நல்லிணக்கத்துக்காகப் போராடத்தூண்டும் !!

யாத் வஷேம் ,[புதினம்]
ஆசிரியர் நேமிசந்த்ரா,
தமிழாக்கம் : கே.நல்லதம்பி ,
எதிர் வெளியீடு ,
தொலைபேசி : 04259 226012 ,9942511302.

பழங்கதை பேசுவதுபோல்

Posted by அகத்தீ Labels:

 பழங்கதை பேசுவதுபோல் புவிக்கதை...




பழங்கதை பேசுவதுபோல் புவிக்கதையை பேசும் புத்தகமே நிர்மல் எழுதிய ‘நிலமும் பொழுதும்’. இந்த பூமிக்கோளம் எப்படி எப்போது உருவானது என்பது குறித்த அறிவியலின் வளர்ச்சி வரலாற்றோடு புவியியல் வரலாற்றைச் சொல்லும் நூல். வாசிக்க வேண்டிய புத்தகமே ! நிர்மலின் இரண்டாவது புத்தகம் இது . ‘காணாமல்போன தேசங்கள்’ இவரின் முதல் புத்தகம் . வேதியல் படித்தவர் .சுற்றுச்சூழல் வல்லுநர்.

 

“ நம்மைத் தாங்கும் பூமியை வழிபடுவதைக் காட்டிலும் அதை இன்னும் தீவிரமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.” என்கிற நூலாசிரியரின் பார்வை மிகச் சரியானதே .ஆதியில் பல்வேறு நாடுகளில் மதங்களில் சொல்லப்பட்ட , பூமியை கடவுள் படைத்த பதினோரு கதைகளைச் சொல்லும் போதே இதனை எப்படி மறுக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுகிறது .தொடர்ந்து புவியில் அறிவியலாய் வளர்ந்த வரலாற்று செய்திகளூடே பழைய கதையாடல்கள் மெல்ல உதிர்வதை சொல்லிவிடுகிறார் .

 

தோழர் எஸ் ஏ பெருமாள் வகுப்பை கேட்பதுபோல் பொதுவாக உணர்ந்தேன் . தன் பரந்த வாசிப்பு மூலம் துல்லியமான தகவல்களைத் தேடித் தொகுக்கவும் முனைந்திருக்கிறார் நிர்மல் . எளிமையாகச் சொல்ல வேண்டும் என்கிற எத்தனம் நூல்நெடுக பார்க்கலாம்.

 

இந்த பூமியின் வயது 460 கோடி ஆண்டுகள் என மொட்டையாகச் சொல்லாமல் அதனை எவ்வாறு கண்டடைந்தோம் என்கிற அறியலின் அடிப்படையையும் சொல்கிறார் . அது நம் பார்வையை விசாலமாக்கும் .

 

 “என்னடா உங்க அறிவியல் ? நேற்றுச் சொன்னதை இன்று மறுக்கும் “ என ஆன்மீகவாதிகள் கிண்டலடிப்பது உண்டு . புவியைப் பற்றிய ஒவ்வொரு கண்டுபிடிப்பும் முந்தைய தவறுகளைக் களைந்து உண்மையை நோக்கி பயணிப்பதை படிப்படியாக இந்நூலில் சொல்லிச் செல்கிறார் .

 

ஆனமீகம் வறட்டுத் தனமாய் தன் பழைய கோட்பாட்டை கிளிப்பிள்ளைபோல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிறுத்துவ பாதிரிகள் சிலர் ஆய்வில் இறங்கியதையும் ,தங்கள் மதக் கோட்பாட்டை நிரூபிக்க இறங்கி உண்மையை நெருங்கியதையும் சொல்கிறார் .

 

எப்படி புதிய கண்டுபிடிப்புகள் புதிய பார்வையைக் கொண்டு வந்தன என்பதையும் சுட்டுகிறார் .தான் மேலோட்டமாகச் சொல்லுவதாகச் சொன்னாலும் இந்நூலில் நிறைய தகவல்கள் அடுக்கி இருக்கிறார் .

 

இந்த புவிக்கோளம் ஐந்து பேரழிவுகளைத் தாண்டி வந்திருப்பதையும் இன்னொரு பேரழிவை விரைவு படுத்துவதும் அல்லது தடுத்து நிறுத்துவதும் மனிதர்கள் கையில்தான் இருக்கிறது .இது ‘மனிதர்களின் ஆளுமைக்காலம்’ என்கிறார் நூலாசிரியர் .

 

ஆசிரியரின் தமிழ் மண் மீதான பற்று நூல்நெடுக வெளிப்படுகிறது . அதில் உண்மையும் உண்டு ; மிகையும் உண்டு . அறிவியலால் மட்டுமே பேரழிவைத் தடுக்க முடியாது என்கிற நூலாசிரியர் மதங்களும் கோட்பாடுகளும் இந்த உண்மையைப் புரிந்து வழிகாட்டுவதன் மூலமே சாத்தியமாகும் என கடைசியில் திடுதிப்பென எவ்வாறு  முடிவுக்கு வந்தார் ? கேள்வி எழுகிறது .

 

நிலமும் பொழுதும்

ஆசிரியர் : நிர்மல்

எழுத்து பிரசுரம்.

பக்கங்கள் : 212 . விலை : ரூ.260 /

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

5/11/2021.