நமக்குள் பிறந்துவிடக்கூடிய ஹிட்லர்கள்….

Posted by அகத்தீ Labels:

 

நமக்குள் பிறந்துவிடக்கூடிய ஹிட்லர்கள்….
சு.பொ.அகத்தியலிங்கம்.

“ வெளியே இருந்து வந்த வெள்ளையனை ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்று துரத்தலாம் .நமக்குள்ளிருந்து ,நம் நடுவிலேயே பிறக்கும் ஹிட்லர்களை விரட்டுவது எப்படி ?”

இப்படி கேள்வி கேட்கிறாள் கதையின் நாயகி ஹ்யானா.

நேமிசந்த்ரா எழுதிய கன்னட புதினம் ‘யாத் வஷேம்’ கே.நல்லதம்பியின் தமிழாக்கத்தில் வந்துள்ள இப்புதினம் சென்ற ஆண்டே வந்த போதும் ஏதெதோ காரணங்களால் மிகத்தாமதமாக இப்போதுதான் வாசித்தேன் . தாமதமானாலும் இப்போதாவது வாசித்தேனே என்கிற மனநிறைவு .

வெறுப்பு அரசியலின் கோர நர்த்தனமும் அதன் சமூக உளவியலும் வரலாற்று வன்மும் கதைப்போக்கில் நெஞ்சில் இரத்தத்தாலும் கண்ணீராலும் இப்புதினம் நெடுக வரையப்படுகிறது .

பெங்களூர் கோரிப்பாளயம் யூதக் கல்லறை முதல் இஸ்ரேலுலுள்ள யாத் வஷேம் நினைவுக் கல்லறை வரை விரிந்து பரந்த புதினம் இது .ஹிட்லராலும் அவர் கூட்டாளிகளாலும் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களின் நினைவுக் கல்லறைதான் யாத்வஷேம்.

கதை மிக எளிதானது . ஹிட்லரின் அடக்குமுறையால் நாட்டைவிட்டு ஓடிய ஓர் விஞ்ஞானி .ஓடும் போதே ஹ்யான என்கிற பத்துவயது மகளைத் தவிர குடும்பத்தில் உள்ள அனைவரையும் பிரிகிறார் . அவர்கள் தப்பித்தார்களா பிழைத்தார்களா என்பதுகூட அவருக்கு தெரிய முடியவில்லை .தப்பிய அவரும் அவர் மகளும் பெங்களூரில் சாம்ராஜ்பேட்டையில் குடியேறுகின்றனர் . பக்கத்துவீட்டில் உள்ள ஒக்காலிகர் குடும்பத்தோடு ஹ்யான பழகுகிறாள் . தந்தையும் இறந்துவிட அக்குடும்பமே இப்பெண்ணையும் அரவணைக்கிறது ஹ்யான வாழ்க்கைச் சூழலில் அனிதாவாகிறாள் .அவள் நெஞ்சுக்குள் ஹிட்லரால் விரட்டப்பட்ட கொடிய நினைவும் ; தன் அம்மா ,அக்கா ,தம்பி ,தங்கை என்ன ஆனார்கள் என்கிற கவலையும் நீறுபூத்த நெருப்பாக நெஞ்சில் கனந்துகொண்டே இருக்கிறது .

அனிதா தனக்கு அடைக்கலம் கொடுத்த குடும்பத்தில் விவேக்கை திருமணமும் செய்து விஷால் என்கிற மகனையும் பெறுகிறாள் .எழுபது வயதில் ஐரோப்பா ,அமெரிக்கா ,இஸ்ரேல் என பயணம் செய்து அக்காவைச் சந்தித்து அக்காவைத் தவிர எல்லோரும் இறந்துவிட்டதை அறிகின்றார். பயணம் மூலமும் இஸ்ரேலில் வசிக்கும் அக்கா மூலமும் ஹிட்லரின் வெறுப்பு அரசியலின் கொடூர முகத்தை இரத்தமும் சதையுமாய் படம் பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர் .

இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் , இங்கே மசூதி இடிப்பு குஜராத் கலவரம் எல்லாம் கலந்து வெறுப்பு அரசியலுக்கு எதிராய் இந்நூல் உரக்கப் பேசுகிறது . விஷால் குஜராத் கலவரத்தில் அனாதை ஆக்கப்பட்ட முஸ்லீம் பெண் சபீதாவைத் திருமணம் செய்வதோடு நாவல் முடிகிறது .

நாவல் நெடுக பேசப்படும் செய்திகள் கனமானவை . இந்திய சமூகத்தில் பல மதம் ,பல மொழி ,பல சாதி ,பல இனம் இவைகளுக்கு இடையே நிலவும் நல்லிணக்கமும் முரணும் பேசப்படுகிறது . சாதியத்தின் இறுக்கமும் அதிலிருந்து வெளிவர தம்மையும் பிராமணச் சடங்கு சம்பிரதாயத்தில் வலிந்துதிணித்து மேல்நிலையாக்கும் சூத்திர மனோநிலையும் இந்நூலில் பேசப்படுகிறது .குறிப்பாக ஒக்காலிகர் வாழ்வியலோடு பேசப்படுகிறது . மறுபக்கம் பிராமணியம் இதை உதாசீனம் செய்வதும் கதைபோக்கில் சொல்லப்படுகிறது .

வெறுப்பரசியலால் பாதிக்கப்பட்டு நாடுநாடாக அலைந்து இஸ்ரேல் நாடாக்கி குடியேறிய யூதர்களிடம் அதே வெறுப்பரசியல் ஓங்கி பாலஸ்தீனத்தை ஒழிக்க முயல்வதை இந்நூல் பதிவு செய்கிறது .

புத்தரும் காந்தியும் போதித்த அஹிம்சையை நல்லிணக்கத்தை தொலைத்துவிட்டு முஸ்லீம் வெறுப்பு அரசியல் மேலோங்குவதை நெஞ்சம் பதைக்க இந்நூல் பேசுகிறது .

“சாதி இல்லாத ,பீதி இல்லாத நாட்டைக் கருணைசெய் ஆண்டவனே ! நொந்த இந்த மண்ணுக்கு அமைதியைக் கொடு” என எழுதி இஸ்ரேலில் அழுகைச் சுவரின் விரிசலில் சொருகி ஹ்யான பிரார்த்தனை செய்யும்போது நாத்திகனான நானும் என் நாட்டை எண்ணி உடன் பிரார்த்தனை செய்த உணர்வு ஏற்பட்டது .

எல்லா மதங்களிலும் உள்ள அன்பு முகத்தை ஹ்யானா உரக்கப் பேசுகிற போதே கேட்கிறாள் ,” எல்லா மதங்களிலும் புராண புனிதக் கதைகளிலும் கறுப்பு அத்தியாயம் உண்டு .அந்த இருட்டு சுழற்சியில் சிக்கிக் கொண்டால் வெளிச்சத்தின் பக்கம் கையை எப்படி நீட்ட முடியும்?”

ஹ்யானயின் அரவணைப்பு அம்மா படித்தவளல்ல ஆனால் அவளின் சில மதிப்பீடுகள் மனிதத்தில் ஊறியவை .” எப்படியோ பாண்டவர்கள் வென்றார்கள் அல்லவா ?’ என்ற கேள்விக்கு அந்த அம்மா சொன்னார் ,” போரில் யாராவது வென்றதுண்டா மகளே ? பாண்டவர்கள் என்னத்தை வென்றார்கள், விதவைகள் ,அநாதைப் பிள்ளைகள் நிறைந்த நாடுதான் மிச்சம் . தங்கள் சொந்த பந்தங்கள் பிள்ளைகள நண்பர்களை இழந்து என்ன சுகம் கண்டார்கள் ?” .இதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது எல்லாவற்றையும் பெண்கள் ,ஒடுக்கப்பட்டோர் இதயத்தோடு மறுவாசிப்பு செய்தால் எல்லா புனிதமும் நூற்றாண்டு அழுகலாய் நாறும்தானே !

அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு ஆண்டுக் கண்க்காய் உட்கார்ந்திருக்கும் ஓர் பெண்ணின் பதாகை இப்படிச் சொல்கிறது ,” உங்கள் நாட்டைக் காதலியுங்கள் ! உங்கள் அரசாங்கத்தைச் சந்தேகப்படுங்கள் ! தைரியமாக இருங்கள் ,உண்மையை எதிர்கொள்ளுங்கள் . கும்பல் கொலையை வெறுங்கள் [ மக்கள் கொலை என நூலில் மொழியாக்கம் செய்திருப்பது பிழையெனக் கருதுகிறேன்] .அதற்கு ஓர் நாள் நீங்களும் பலியாகலாம்!”

இவையே இந்நூலின் செய்தியாகவும் உள்ளது .நூல் இறுதியில் நூலாசிரியர் சொல்லும் இக்கதையைப் பிரசவித்த வலி ஒவ்வொரு எழுத்தாளரும் அறிய வேண்டிய செய்தி .ஏரோநாட்டிக் எஞ்சினியர் என்கிற முறையில் உலகெங்கும் சுற்ற ஆசிரியருக்கு கிடைத்த நல்வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காதுதான் ;ஆயின் இவ்வாய்ப்பு கிடைத்த எத்தனைபேர் இப்படி சமூகம் பயனுற செய்கிறார்கள் ?
சிறந்த மொழியாக்கத்துக்கு பாராட்டுக்கள் !

நூலாசிரியர் சொல்வதுபோல , “ இன்று ஹிட்லர் எங்கே வேண்டுமென்றாலும் பிறக்கலாம் .அமெரிக்காவில் ,ஜெர்மனியில் ,இஸ்ரேலில் அஹிம்சையே உயர்ந்த தர்மம் என முழங்கும் இந்தியாவில் கூட , நம் நடுவில் எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம் ,நமக்குள் பிறந்துவிடக்கூடிய ஹிட்லரைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையது எனும் நம்பிக்கையின் பின்னணியில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது .”

அதே நம்பிக்கையுடன் இந்நூலை எல்லோரும் வாசிப்பீர் !
இந்நூல் உம் மனசாட்சியைக் குடையும் .கேள்வி கேட்கும் !
அமைதிக்காக நல்லிணக்கத்துக்காகப் போராடத்தூண்டும் !!

யாத் வஷேம் ,[புதினம்]
ஆசிரியர் நேமிசந்த்ரா,
தமிழாக்கம் : கே.நல்லதம்பி ,
எதிர் வெளியீடு ,
தொலைபேசி : 04259 226012 ,9942511302.

0 comments :

Post a Comment