ஜனவரி 30 .

Posted by அகத்தீ Labels:

 


ஜனவரி 30 .

 

மகாத்மா !

உன் நவகாளி யாத்திரை

முடியவில்லை !

 

கோட்சேக்களும்

சாவர்க்கர்களும்

அதிகார பீடத்தில் !

 

மானுட அன்பும்

மதநல்லிணக்கமும்

பலிபீடத்தில் !

 

தரித்திர நாரயணர்கள்

சாக்கடைப் புழுக்களாய்

அதிகாரத்தின் காலடியில் !

 

உன் ராமர் அன்பானவர்

இன்றைய ராமர் அதிகார

முகமூடியாகிப் போனார் !

 

அதிகாரப் பொய்களிடையே

பாமர உண்மையைத்

தேடிக்கொண்டிருக்கிறோம் !

 

கோட்சே முதல்

பிரதான் ராம் சேவக் வரை

தொழுத கையுள் …. ???

 

மகாத்மா ! போராட

எங்களுக்கு

ஆன்ம பலம் தா !

 

சுபொஅ.

30/1/24.

 

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.

 [ குறள் : 828.]

பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

[கலைஞர் உரை ]

 

 


புனைவுகளால் புதைக்க முடியாத உண்மைகள்

Posted by அகத்தீ Labels:

 





புனைவுகளால் புதைக்க முடியாத உண்மைகள்

 

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராகவும் ஆட்சிகளுக்கு எதிராகவும் உலகெங்கும் புனையப்பட்ட கதைகள் நிறைய உண்டு . நான் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [மார்க்சிஸ்டுகள் ]க்குள் வந்த ஆரம்ப நாட்களில் கட்சியின் மீது வீசப்பட்ட குற்றச்சாட்டு களையும் அவதூறுகளையும்  கண்டு முதலில் அதிர்ச்சி அடைந்தேன் . அப்போது இப்படிப்பட்ட நூல்களைப் படிக்காதே என சில தலைவர்கள் சொன்னார்கள் .

 

தோழர் து.ஜானகிராமனும் ,உ.ரா.வரதராஜனும் எதை வேண்டுமானாலும் படி . விவாதிப்போம் என வாசல் திறந்தனர் . விலங்குப் பண்ணை போன்ற நாவல்கள் தொடங்கி நிறைய கம்யூனிச எதிர்ப்பு நூல்களை வாசித்தேன் . முதலில் கொஞ்சம் அது சொல்வது சரியாக இருக்கும் என நம்பினேன் . படிக்க படிக்க அவற்றின் நம்பகத்தன்மையை என் மூளையே கேள்வி கேட்கத் துவங்கியது . நான் எப்போதும் கம்யூனிச நூல்களை மட்டுமல்ல ; எதிர்ப்பு நூல்களையும் வாசிக்கத் தவறுவதில்லை . ஜெயமோகனின் ”பின் தொடரும் நிழலின் கதைகள்”எனும் கம்யூனிச எதிர்ப்பு நாவலை முழுதாகப் படித்து விமர்சனமும் எழுதினேன் . நான் எங்கெங்கோ படித்த கம்யூனிச எதிர்ப்பு நாவல்களின் கலவையாக ஜெயமோகன் சாமர்த்தியமாக காப்பி அடித்து உள்ளூர் சாயம் பூசியிருப்பதையும் கண்டேன்.

 

சரி ! மரிச்ஜாப்பிக்கு வருவோம் .லயோலா கல்லூரியில் நடந்த ஓர் உரையாடலில் கிறுஸ்துதாஸ் காந்தி மூலம் முதலில் கேள்விப்பட்டதும் அதிர்ந்தேன் . தோழர் ஹன்னன் முல்லாவிடம் விவரம் கேட்டேன் .அவர் விளக்கம் சொன்னார் . மேலும் தேடினேன் .வீ.பா.கணேஷனிடம் பேசினேன் . அவரும் சில செய்திகளைச் சொன்னார் . புனிதப் பாண்டியரும் அதிதீவிர புனித புரட்சியாளர்களும் தொடர்ந்து பேசியவற்றை வாசித்தேன். நான் முன்பத்தியில் குறிப்பிட்ட புனைவுகள் புளுகுகள் நினைவுக்கு வந்தன , மேலும் என்னுள்  பெருங்கேள்வி எழுந்தது .

 

’விமோச்சன சமரம்’ நடத்தி பொய்களை ஊர்வலம் விட்டு கேரளாவில் தோழர் இ எம் எஸ் ஆட்சியைக் கவிழ்த்த காங்கிரஸ் கட்சி , ஜோதிபாசு ஆட்சியில் மின்வெட்டை சாக்காக்கி உஷா உதுப்பை பாடவிட்டு பிரச்சனையை ஊதி பெரிதாக்கிய ஊடகங்கள் , மேற்கு வங்கத்தில் முப்பதாயிரம் பேரைக் கொன்று ஒரு தீவில் புதைத்தால் அதனை ஆளும் வர்க்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா ? இந்தியா முழுவதும் பற்றி எரியும் பிரச்சனை ஆக்கி இருக்காதா ? கம்யூனிச எதிர்ப்பில் உயிர் வாழும் ஊடகங்கள் மவுனம் காக்குமா ? ஏதோ ஈரைப் பேனாக்கி ,பேனை பெருமாளாக்குகிறார்கள் என்று யூகித்தேன் .என் யூகம் சரியென இந்நூல் காத்திரமாக நிறுவி இருக்கிறது .

 

முதலில் நாம சூத்திரர்கள் யார் , தேசப் பிரிவினையின் போது வந்து குவிந்த அகதிகள் நிலமை என்ன , அதிலும் மேற்கு இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் ஒரே அணுகுமுறையா ; போன்ற கேள்விகள் முக்கியமானவை .

 

நாம சூத்திரர்கள் என்பவர்கள் சண்டாளர்கள் என அழைக்கப்பட்ட தலித் சமூகப் பிரிவிலிருந்து தங்களைத் தாங்களே மேல்நிலையாக்கம் செய்துகொண்டவர்கள் . 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் மத்வரின் துவைத கோட்பாட்டை பின்பற்றி அரிச்சந்திரதாகூர் எனும் மகானைப் பின் தொடர்ந்து  தங்களை நாமசூத்திரா என அழைத்து தனி வைணவ பிரிவாக நிறுவிக் கொண்டவர்கள். இந்து மதத்தின் இதர பிரிவுகளில் இருந்து ஒதுங்கி நின்றனர் .விவசாயம் ,மீன்பிடித்தல் ,படகோட்டுதல் இவர்கள் தொழில் .கிழக்கு பாகிஸ்தானை யொட்டி குவியலாக வாழ்ந்தனர் . விடுதலைப் போரில் பிரிட்டிஷாரை ஆதரித்தனர் . கிழக்கு பாகிஸ்தானில் அவர்கள் ஆட்சியாளர் பக்கம் நின்ற போதும் சமூக இழிவும் பொருளாதார நசிவும் துரத்தியதால் மேற்கு வங்கம் நோக்கி அகதிகளாக இடம் பெயர்ந்தனர் . மேலும் அறிய , புலம் வெளியிட்ட அப்பணசாமி மொழியாக்கத்தில் சேகர் பந்தோபாத்யாயா எழுதிய  “நாமசூத்திரர்கள் இயக்கம்” எனும் சிறிய நூலை வாய்ப்பிருந்தால் வாசிக்கவும்.

 

தேசப் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் நோக்கி வந்த அகதிகளுக்கு ஒன்றிய அரசு  பெருமளவு நிதி ஒதுக்கி  எல்லா உதவிகளும் செய்து வாழ்வுரிமை அளித்தது .ஆனால் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து மேற்கு வங்கம் மற்றும் அண்டை மாநிலங்கள் நோக்கி வந்தவர்களை சரியாக கையாளாமல் போதிய நிதியும் ஒதுக்காமல்  அலட்சியப் படுத்தியது . அதன் வலியும் ரணமும் இன்னும் கிழக்கு இந்தியாவில் உறுத்திக் கொண்டே இருக்கிறது . மரிச்ஜாப்பியும் அதன் ஒரு பகுதியே . இலங்கை ,பர்மா தமிழ் அகதிகளுக்கு இங்கும் அதே நிலை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?ஒன்றிய அரசு திட்டமிட்ட குடியுரிமைச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் ஒதுக்கப்பட்டதை மறுக்க முடியுமா ?

 

நாம சூத்திரர் என்ற தலித் சாதியினருக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறை அல்ல மரிச்ஜாப்பி ; அது முழுக்க முழுக்க அகதிகள் வாழ்வுரிமை பிரச்சனை . அவர்கள் தண்டகாருணயத்தில் வாழ ஒன்றிய அரசு ஏற்பாடு செய்தது .அங்கு அடிப்படை வசதிகள் இன்மை பெரும் பிரச்சனையே . அதனை முன்நிறுத்தி தீர்வு நோக்கி போராடியவர்கள் இடதுசாரிகளே ! [ விபரம் நூலில் ]செவிமடுக்க மறுத்தது ஒன்றிய ஆட்சியாளர்களே ! அகதிகளின் ஒரு பிரிவினரை சில அதிதீவிரவாதிகள் தூண்டி விட்டு சுந்தரவனம் எனும் மேற்கு வங்க அலையாட்டிக் காடுகளில் , குடியிருப்பு வசதி வாய்ப்பற்ற தீவில் , தடுக்கப்பட்ட வனப்பகுதியில் மரிச்ஜாப்பி எனும் தீவில் குடியேற்றி தனித்துவைக்க முயன்றனர் .பிரச்சனையின் மையம் இதுவே .

 

 “அங்கு பிரச்சனையே இல்லை , எல்லாம் கட்டுக்கதை” என மொத்தமாக படுதா போட்டு மூடுவதல்ல இந்நூல் . மாறாக ஒவ்வொரு படியாக அங்கு ஏற்பட்ட பிரச்சனை ,அதனை தீர்க்க இடதுசாரி அரசு ஜோதிபாசு அரசு நிதானமாக மேற்கொண்ட முயற்சிகள் , ஓன்றிய ஆட்சியும் ஜனதாதளமும் காங்கிரஸூம் ஆடிய இரட்டை வேடம் ,சில தன்னார்வ அமைப்புகள் உள்நோக்கோடு காய்நகர்த்தியது என அனைத்தும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது . புனைவுகளால் புதைக்க முடியாத உண்மையை இந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது .

 

துப்பாக்கி சூட்டில் இறந்தவர் எண்ணிக்கையை 2 ,6 ,12 ,38 ,மூவாயிரம் ,பத்தாயிரம் ,முப்பதாயிரம் என கற்னையாய் ஆதரமின்றி ஊதி ஊதிப் பெருக்கிய கதையை இந்நூல் நன்கு தோலுரிக்கிறது . அவதூறு எழுத ஆதாரம் தேவை இல்லை  வெறும் கற்பனை வளம் போதும் என்பதே கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வழிமுறை . புலிகள் மனித உண்ணியாக மாறவே மரிச்ஜாப்பிதான் காரணம் என்று சொல்லும் அளவுக்கு அவர்களின் கற்பனை நீண்டது .

 

சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தண்டகாருண்யத்தில் அகதிகளாக இருந்தனர் . அதில் கால்பகுதியினர் கூட தீவிரவாதிகள் சொல்கேட்டு மரிச்ஜாப்பி செல்லவில்லை என்பதே உண்மை .சென்றவர்களும் அது தாங்கள் வாழ ஏற்ற இடமில்லை என விரைவில் தெளிந்தனர் . அருகிலுள்ள ஊர்களில் வாழும் தம் சொந்த சாதியினரை நம்பியே சென்றனர் .அதுவும் பெரிதும் கைகொடுக்கவில்லை . சமூக விரோத செயல்கள் மூலம் சிலர் பணம் பண்ண முயன்றனர் .பெரும்பாலோர் இதில் வெறுப்புற்றனர் . மீண்டும் தண்டகாருண்யம் சென்றனர் . போலீஸ் எங்கேயும் எப்போதும் அடக்குமுறைக் கருவிதான் . ஆயினும் ஜோதிபாசு ஆட்சி அவர்களின் கைகளைக் கட்டிப்போட்டு அகதிகளை பரிவுடன் அணுகி உண்மையை உரைக்க முயன்றதை இந்நூல் சொல்கிறது .

 

ஜலாய்சு என்பவர் தன் கட்டுரையில் மரிச்ஜாப்பியில் பள்ளிகள் , சுகாதார நிறுவனங்கள் என ஏற்பட்ட வளர்ச்சியை அங்கு குடியேறியவர்கள் செய்ததாக எழுதினார் .நேரடி சாட்சியான  கமலா பாசு அதற்கு நேர் எதிராக எழுதி உள்ளார் . மரிச்ஜாப்பி நேரடி அனுபவம் பெற்றவர் அல்லாதவர் இருவருமே கற்பனையையே விரித்திருக்கின்றனர் . நோக்கம் கம்யூனிச எதிர்ப்பு ஒன்றே .

 

மரிச்ஜாப்பி பற்றி ஊளையிட்டோர் திரும்பிச் சென்ற அகதிகள் நிலை என்ன ஆனது என சொன்னார்களா ? கவலைப்பட்டார்களா ? அவர்களின் கண்ணீர் நாடகம் அகதிகளுக்காக அல்ல ; மாறாக கம்யூனிச எதிர்ப்பு அரசியலுக்காகவே என்பதை இந்நூல் அழுத்தமாக பதிவு செய்கிறது . முக்கியமாக மரிச்ஜாப்பி பற்றி எதிர்மறையாய் எழுதிய கட்டுரை விவரங்களை குறிப்பிட்டே இந்நூல் எழுதுகிறது ஏனெனில் உண்மையைச் சொல்ல முக்காடு தேவை இல்லை அல்லவா ?

 

வழக்கமாக நூல் அறிமுகத்திலிருந்து மேற்கோள் தருவேன் . இங்கு தரவில்லை .சாறு மட்டுமே பிழிந்துள்ளேன் காரணம் ஒற்றை மேற்கோளை வைத்துக் கொண்டு கயிறு திரிப்போர் சூழ்ந்துள்ள உலகில் உண்மையை உள்ளபடி அறிய முழுதாய் படிக்கத் தூண்டுவதுதான். நூல் நெடுக வரிசைப்படுத்தப்பட்டுள்ள சம்பவங்களின் பின்புலமும் நோக்கமும் சரியாக உள்வாங்கப்பட நூலை முழுதாய் வாசியுங்கள் .

 

இந்நூலை எழுதிய ஹரிலால் நாத் அவர்களுக்கும் ,நன்கு மொழியாக்கம் செய்த ஞா.சத்தீஸ்வரன் அவர்களுக்கும் , முன்முயற்சி எடுத்த  தமிழ் மார்க்ஸ் குழுவுக்கும் , உண்மையே உன் விலை என்ன எனக் கேள்வி எழுப்பும் வீ.பா.கணேஷன் அவர்களுக்கும் என் பாராட்டுகள் .

 

மரிச்ஜாப்பி : உண்மையில்  என்ன நடந்தது ?

ஆசிரியர் : ஹரிலால் நாத் , தமிழில் : ஞா. சத்தீஸ்வரன் ,

பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949

பக்கங்கள் : 328 , விலை : ரூ.330/

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

26/01/2024.

 

 

 


“பாலஸ்தீனர்களிடம் பரிசோதிக்கப்பட்டு , காஷ்மீரிகளிடம் பயன் படுத்தப்பட்டவை “

Posted by அகத்தீ Labels:

 

 

“பாலஸ்தீனர்களிடம் பரிசோதிக்கப்பட்டு ,

காஷ்மீரிகளிடம் பயன் படுத்தப்பட்டவை “

 


 “இந்திய நிலப்பரப்பில் ஏற்கெனவே வணங்கப்பட்டு வந்த லட்சக்கணக்கான கடவுள்களை அப்படியே சுருக்கி எல்லோரையும் ராமராகவோ கிருஷ்ணராகவோ மாற்றி அவர்கள் இருவரையும் தாண்டி வேறு கடவுள்கள் எவருமே இந்திய நிலப்பரப்பில் இல்லை என்று நம்பவைக்கும் திட்டமும் இதில் அடங்கும்.”

என்கிற அனுஸ்தாப் பாசு என்பவரின் மேற்கோளை இந்நூலில் நான்படித்த போது ; கடந்த சில நாட்களாக மோடி முன்னின்று  நடத்தும்  “ராம் புரோமோஷன் ஷோக்கள்” நினைவுக்கு வந்தன .

 

இந்நூல் ராமர் கோயில் சார்ந்ததல்ல . ஆனால் அதைப் பேசாமல் இந்துத்துவ அரசியலை பேச முடியாதே .காஷ்மீரில் நடப்பதற்கும் பாலஸ்தீனத்தில் நடப்பதற்குமான அரசியல் –பொருளாதார- நச்சு சித்தாந்தத் தொடர்பு குறித்ததே இந்நூல் . தெரிந்த செய்திகளையும் தெரியாத செய்திகளையும் இணைத்து புதிய கோணத்தில் இரண்டு பாசிச சக்திகளைத் தோலுரிக்கும் ஓர் அரிய நூல் . அவசியம் படித்தே ஆக வேண்டிய நூல்.

 

நியூயார்க்கில் இருந்து இயங்கிவரும் ‘ மிடில் ஈஸ்ட் ஐ’ என்கிற இதழில் பணிபுரியும் பத்திரிகையாளர் ஆசாத் எஸ்ஸா எழுதியுள்ள காத்திரமான நூல் ,” கைவிடப்பட்ட காஷ்மீரும் பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும் [ கைகோர்த் திருக்கும் இந்திய – இஸ்திரேலிய புதுக்கூட்டணி]”.அன்புத் தோழன் இ.பா.சிந்தன் தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் .

 

“இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமான உறவினால் இன்றைக்கு உலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் ,அது சர்வதேச சமூகத்துக்கு எந்தளவு கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் ஆதாரங்களைக் கொண்டு நம்மைச் சிந்திக்க வைக்கிறார் ஆசாத்.”என்கிறார் முன்னுரையில் பாலஸ்தீன பத்திரிகையாளர் லினா அல்சாஃபின்.

 

 “ஒரு நாட்டின் உள்நாட்டுக் கொள்கையும் வெளிநாட்டுக் கொள்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.” என்பது நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த காலத்தில் அரசியல் வகுப்புகளில் சொல்லிக் கொடுத்த பாலபாடம். இந்த புத்தகம் அதனை நூறு சதம் மெய்யென்று சொல்லுகிறது .

 

இப்புத்தகம் ஐந்து பெரும் அத்தியாயங்களைக் கொண்டது . முதல் அத்தியாயம் ,“இந்தியாவும் பாலஸ்தீனமும் : பிரிவினையைச் சந்தித்த இரு நாடுகளின் கதை .” . இஸ்ரேலை ஆதிக்க வெறி கொண்ட நாடாகவும் ,இந்தியாவை அமைதியின் தூதுவனாகவும் பொதுபுத்தியில் ஊறவைக்கப்பட்டுள்ள கரடுதட்டிப்போன கருத்தியலை இந்நூல் சல்லிசல்லியாக நொறுக்குகிறது .விடுதலைப் போரட்ட காலத்தில் காந்தி ,நேரு எடுத்த பாலஸ்தீன ஆதரவு நிலைபாட்டிலிருந்து படிப்படியாக சரிந்து இராஜீவ் காலத்தில் இந்தியாவை நவீனமயமாக்குவதற்கு என்ற சாக்கில் இஸ்ரேலுடன் அரசுமுறை உறவினைக் கொண்டு சென்றார். இது ராமர் கோவிலை திறந்துவிட்டு இந்து எழுச்சிக்கு உதவியதுபோலவே இஸ்ரேல் விவகாரத்திலும் இந்துத்துவவாதிகளுக்கு வாசல் திறந்துவிட்டது . சோவியத் யூனியன் தகர்விற்கு பின் உருவான தாராளமய தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைக்கும் இதற்கும் நெருங்கிய பிணைப்புண்டு .

 

இரண்டாவது அத்தியாயம் , “ இராணுவம் ,அரசு மற்றும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் தொழிற்கூட்டு” .தலைப்பே உள்ளடக்கத்தைச் சொல்லும். “ அரசும் ,அரசியலும் ,இராணுவமும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களும் ஒன்றாகக் கூட்டுச் சேர்ந்து இயங்கும் ஒரு வியாபார முறையைத்தான் இஸ்ரேல் உருவாக்கி இருக்கிறது .இப்படியான வியாபார முறையில் மிகச் சமீபத்தில் இந்தியா சிக்கி இருக்கிறது .இது வெறும் ஆரம்பம்தான்.” என்பதுதான் இந்த அத்தியாயத்தின் சாரம் .ஆனால் இந்த இடத்தை வந்தடைந்த சூழலை ,அரசியல் பொருளாதார சீரழிவை, இந்துத்துவா தலையெடுத்து விஸ்வரூபமெடுத்த பின்னணியை தக்க விவரங்களோடு விவரிக்கிறது . “ இது வெறும் ஆரம்பம்தான்” என்கிற இந்த அத்தியாயத்தின் இறுதி வாக்கியம் கடும் எச்சரிக்கை மணியாகும்.

 

மூன்றாவது அத்தியாயம் “ இந்துத்துவமும் சியோனிசமும் : நெருங்கிய உறவின் கதை “ இது இருபெரும் அழிவு சித்தாந்தங்களின் தோற்றமும் வளர்ச்சியும் ஒருங்கிணைப்பும் குறித்துப் பேசுகிறது . இந்துத்துவா சக்திகளும் இந்திய தேசிய காங்கிரசும் இப்பிரச்சனையில் ஒன்றுதான் என மட்டையடியாக தள்ளிவிடவில்லை .அதே சமயம் இரண்டு அமைப்புகளின் தலைமையும் ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. காங்கிரசுக்குள்ளும் இந்துத்துவ தன்மை சிறிது அளவிலேனும் இருந்தது .இருக்கிறது . , இந்தத் தெளிவான புரிதலோடு இந்நூலாசிரியர் பயணிக்கிறார் . இஸ்ரேலை முன்வைத்து முஸ்லீம்களை எதிர்க்கும் மையப்புள்ளியில் கிறுத்துவமும் யூதமும் இணைந்து சியோனிசமானதைபோல் ,முஸ்லீம் எதிர்ப்பு புள்ளியில் இந்துத்துவா வளர்க்கப்பட்ட கதையை சொல்கிறார் . நாமும் அப்படி புரிந்து  பயணித்தால்தான் சரியான முடிவை எட்ட இயலும். 1947 ல் இந்தியா என்கிற தேசத்தின் முகமாக என்னென்ன கொள்கைகள் இருந்தனவோ அவை எல்லாம் அப்படியே தலைகீழாக 1980 களில் மாற்றம் அடையத் தொடங்கின . அதன் அரசியல் பொருளாதார வேரினை இந்த அத்தியாயம் புட்டு புட்டு வைக்கிறது .

 

 “அமெரிக்க வாழ் இந்தியர்களும் இஸ்ரேலியர்களும் “ என்பது நான்காவது அத்தியாயம். அமெரிக்க வாழ் இந்தியர்களும் அங்கு வாழும் இஸ்ரேலியர்களும் எப்படி தங்கள் நலனுக்காக பரஸ்பரம் நெருங்கி வந்தனர் . தாராளமய பொருளாதாரத்துக்கு பின்னர் அமெரிக்கா செல்லுவோர் எண்ணிக்கை உயர்ந்தது .இதுவும் இவர்களுக்கு சாதகமானது .அதில் முக்கியமான செய்தி என்ன வெனில் மேல்சாதியினரே நல்ல வருவாய் ஈட்டும் பொறுப்புகளில் அமர்ந்தனர் ,ஆகவே இந்துத்துவாவின் ஏஜெண்டுகளாக மாறிவிட்டனர் . அவர்கள் செய்த மூன்று முக்கிய வேலையாக இந்நூல் சுட்டுவது என்னவெனில் ; 1]உயர் சாதி அல்லாத இந்துக்கள் ,முஸ்லீம்கள் ,கிறுத்துவர்கள் ,தலித்துகள் ,இதரர்கள்  என பெரும்பகுதியான இந்தியர்களின் நலன்கள் தூக்கி எறியப்பட்டு ,மேல்சாதியினர் நலன் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியர் நலன் என முன்னிறுத்தப்பட்டது .2] முஸ்லீம்களால் யூதர்கள் மோசமாக பாதிக்கப்பட்டதுபோல் இந்துகளும் பாதிக்கப்பட்டவர்கள் என ஒரு பொய்மை தோற்றத்தை உருவாக்குவது . 3] மேல்சாதியினர் அங்குள்ள பெருமுதலாளிகளோடு இணைந்து முதலாளி ஆவது .  மேலும் வெறுப்பு அரசியலை கட்டமைக்க பேச்சுகளை உண்மைகளை சிதைத்து திரித்து பிரச்சாரம் செய்ய ,அதற்கு நவீன ஊடகங்களை பயன்படுத்தல் என எல்லாவற்றையும் இஸ்ரேலிடம் இருந்து இந்துத்துவர்கள் கற்க அதன்படி செயல்பட வெளிநாடு தளமானது . இந்துத்துவ கருத்தியலை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல சந்தேகப்படுபவர்களையும் கேள்வி கேட்பவர்களை எல்லா வகையிலும் அழித்து ஒழிப்பது இவர்களின் வேலைத் திட்டமானது . இந்த அத்தியாயத்தை வாசிக்க வாசிக்க நெஞ்சு பதறுகிறது .

 

 “இப்போது இந்தியாவில் இந்து ஆட்சியை உருவாக்க நினைக்கிற மோடி அரசு ,இஸ்ரேலிடமிருந்து  ஏராளமான பாடங்களைக் கற்றுக்கொண்டு அவற்றை தன் முதன்மையான எதிரிகளான முஸ்லீம்கள் மேல் அமல்படுத்திவருகிறது .” இதில் காஷ்மீரும் பாலஸ்தீனமும் பாதிக்கப்பட்டுள்ளது .அது எப்படி ? அதன் வேர் என்ன ?  காஷ்மீர் எப்படி இஸ்ரேல் வழியில் சீர்குலைக்கப்பட்டு பணக்கார முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது என்பதை “காஷ்மீரும் பாலஸ்தீனமும்  : இரண்டு ஆக்கிரமிப்பு நிலங்களின் கதை “ என்கிற ஐந்தாவது அத்தியாயம் நிறுவுகிறது .

 

காவி பாசிசம் ,க்குரோனி கார்ப்பரேட் கேப்டலிசம் , காஷ்மீர் சிதைப்பு ,பாசிச மோடி ஆட்சி .இஸ்ரேல் உறவு , ஆயுத உற்பத்தி வியாபாரிகளின் லாபவெறி எல்லாம் ஒரே சேர இந்நூலில் பேசப்படுவதே இதன் ஆழமான பார்வைக்கு சான்று .

 

இந்நூலின் கடைசி அத்தியாயத்தில் இறுதியில் ஒரு செய்தி உள்ளது .பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் பயன் படுத்தும் ஆளில்லா விமானத் தயாரிப்பிற்கான நான்கு தொழிற்சாலைகள் இங்கிலாந்தில் உள்ளன .அங்கு பாலஸ்தீனத்தை ஆதரித்து யுத்தத்தை எதிர்ப்போர் ஆர்ப்பாட்டம் செய்தனர் . அந்த கம்பெனி கட்டிடத்தில் கிராஃபிட்டி என்னும் சுவர் ஓவியம் வரைந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர் . அதில் எழுதப்பட்ட ஓர் வாசகம் ;

 

“பாலஸ்தீனர்களிடம் பரிசோதிக்கப்பட்டு ,காஷ்மீரிகளிடம் பயன் படுத்தப்பட்டவை “

 

இந்த நூலை ஒரு முறைக்கு இருமுறை வாசித்து உள்வாங்குவது நமது இன்றைய அரசியல் சமூக பண்பாட்டுப் போராட்டத்தை சரியான திசையில் முன்னெடுக்க ஆயுதமாகும்.

 

இந்நூலை பிசிறு தட்டாமல் தமிழாக்கம் செய்த என் தோழன் இ.பா.சிந்தன் பாராட்டுக்குரியவர் .எம் ஞானப் பிள்ளை என உச்சிமோந்து பாராட்டுகிறேன். எம் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை தொடர் ஓட்டமாக  முன்னிலும் வீரியமாக முன்னெடுக்க எம் வாரிசுகள் வந்துவிட்டனர் என்கிற முழு மனநிறைவோடு வாழ்த்துகிறேன்.

 

கைவிடப்பட்ட காஷ்மீரும் பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும்

[ கைகோர்த்திருக்கும் இந்திய – இஸ்திரேலிய புதுக்கூட்டணி]

ஆசிரியர் : ஆசாத் எஸ்ஸா ,தமிழில் : இ.பா.சிந்தன்,

வெளியீடு : எதிர் வெளியீடு ,தொடர்புக்கு : 04259 226012 / 9942511302 ,

Email :  ethirveliyeedu@gmail.com  பக்கங்கள் : 296 , விலை : ரூ.399 /

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

20/01/2024.

 

 

 

 


 

 

காலநிலை மாற்றம் !

Posted by அகத்தீ Labels:

 


காலநிலை மாற்றம் !

 

பிரம்ம முகூர்த்தத்தில்

அயர்ந்துறங்க வேண்டிய

நாய்கள் ஊளையிட்டு

சண்டை இடுவது ஏன் ?

 

காலையில் கூவும் சேவல்

மாலையில் மதியத்தில்

நினைத்த நேரத்தில் எல்லாம்

கூவுவது ஏன் ?

 

மாலையானதும் கூடு நோக்கி

பறக்கும் பறவைகள்

நள்ளிரவிலும் ஜன்னலில் அமர்ந்து

குளிரில் நடுங்குவது ஏன் ?

 

நள்ளிரவிலும்

காதை செவிடாக்கும்

சத்ததுடன் மோட்டர் பைக்கை

ஓட்டிச் செல்வது ஏன் ?

 

வீடுகளில் இரவு நேரம்

துவங்கும் சண்டைகள்

வார்த்தைப் போர்கள்

விடிய விடிய நீளுவது ஏன் ?

 

இரவும் பகலும் தூக்கம் வராததால்

சும்மா கிடக்கும்

முதியவருக்கு இதை எல்லாம்

யோசிக்கத் தோன்றுகிறதோ ?

 

சுபொஅ.

19/01/2025.


பழங்கறியும் கட்லெட்டும்

Posted by அகத்தீ Labels:

 

பழங்கறியும் கட்லெட்டும்

 

நான் சிறுவனாக இருந்த போது பொங்கலன்றும் மாட்டுப்பொங்கலனறும் வீட்டில் தடபுடல்தான். சர்க்கரைப் பொங்கல்,பொங்கல்,வடை , கரும்பு ,பழங்கள் ,கற்கண்டு, பனங்கிழங்கு என நாங்கள் மூழ்கிவிடுவோம் . சோறு ,காய்கறிக்கூட்டு ,அவியல் ,பச்சடி ,பொரியல் ,சாம்பார்.ரசம் எல்லாம் மீந்துவிடும் . எல்லாம் நாஞ்சில் நாட்டு பக்குவம்.

 

மறுநாள் காணும் பொங்கலன்று , மீதமான அனைத்தையும் போட்டு சுண்டவைத்து தருவார்கள் .அதனை பழங்கறி அல்லது சுண்டக்கறி என்போம். பழைய சாதத்தில் கட்டித் தயிர்விட்டு பிசைந்து பழங்கறி சேர்த்து அம்மாவோ /ஆச்சியோ உருட்டித் தரும் போது சுற்றி இருந்து உண்ணும் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான் . ஆச்சி எனில் கூடவே கதையும் கிடைக்கும். அதன் ருசியே தனி . வழக்கத்தைவிட அதிக உருண்டைகள் உள்ளே சென்றுவிடும் அந்த ருசி இனி எந்த ஜென்மத்திலும் கிடைக்காது .

 

[ தீபாவளியின் போதும் வேறு  பண்டிகைகளின் போதும் இதுபோல் நடக்கும்]

 

சரி ! வெறொன்றை பார்ப்போம். நான் ஐடிஐ [சிடிஐ]படிக்கிற காலம் .நான் ,உத்தண்டராமன் ,ஜெயராஜ் ,மிலான், சைதை நண்பர் சிவராஜ் எல்லோருக்கும் கட்லெட்டை எப்படியாவது ஒரு நாள் ருசி பார்த்துவிட வேண்டும் என்கிற ஆவல் . அதற்கு ஒரு திட்டம் போட்டோம். கிட்டத்தட்ட ஐந்தாண்டு திட்டம் மாதிரிதான் .காசு வேண்டுமே !

 

ஒரு நாள் எல்லோரும் சைதாப்பேட்டையில் இருந்து நடந்து தி.நகர் போனோம். அங்கு ஒரு ஹோட்டலில் [சரஸ்வதி பவன் நின நினைவு ] நுழைந்தோம் . கட்லெட் விலைக் கேட்டு உறுதி செய்துகொண்டோம் .ஆளுக்கொரு கட்லெட் சாப்பிட காசு இருந்தது . கட்லெட் விலை அப்போது ஆறு காசு [ஒரு அணா] என நினைவு. ஐந்து கட்லெட் வாங்கி ஆளுக்கு ஒன்றாய் ஐவரும் சாப்பிட்டோம் .டீ /காபி குடிக்க காசு கிடையாது .தண்ணீர் குடித்தோம்.

 

 “ நம்ம வீட்ல பழங்கறி செய்வோம்ல அதுமாதிரி ஹோட்ல மிச்சம் வர்றத எல்லாம் சேர்த்து செய்தால் அது கட்லெட்.. ஆனாலும் நம்ம பழங்கறியை அடிச்சிக்க முடியாது ” என உத்தண்டராமன் ஜோக் அடிக்க . ஆமாம் போட்டு சிரித்தோம் . எங்க ஞானமும் அப்போது அம்புடுத்தான். அப்புறம் ரொம்ப காலம் கட்லெட் பக்கம் நாங்க திரும்பிப் பார்க்கவே இல்லை.

 

பின்னர்  கட்லெட் சாப்பிட வாய்ப்புகள்  அமைந்த போதும் ; என்னை அது பெரிதாய் ஈர்க்கவே இல்லை . ஏனோ தெரியவில்லை . ஆயின் என்றோ சாப்பிட்ட பழங்கறி சுவை இன்னும் நாக்கில் ஒட்டிக்கொண்டிருக்கிறதே என்ன செய்ய ?

 

சுபொஅ.

16/01/2024.

எலிப்பொறி வடைசாமி'

Posted by அகத்தீ Labels:

 

இடிப்புசாமி
பிறன்மனை புகுந்திட
பெருஞ்சாமி இவரென
சிம்மாசனசாமி
உத்தரவு போட
ஆமாம்சாமி
தலையாட்டிசாமி
பொம்மலாட்டசாமி
கூலிக்கு மாரடிக்கும் சாமி
எல்லோரும்
கும்பிடுறோம்சாமின்னு
சொல்ல
கூழுச்சாமி வேலைச்சாமி
ஜனச்சாமி நியாயச்சாமி
மனுஷச்சாமி எல்லோரும்
'எலிப்பொறி வடைசாமி'ன்னு
வாய்பொத்தி சிரிக்காங்க
ஏன்சாமி ?
சொல்லுங்க குலசாமி!
சுபொஅ.

பொங்கலும் புத்தாண்டும் மீட்டுக தமிழ்யாழை !

Posted by அகத்தீ Labels:

 





பொங்கலும் புத்தாண்டும் மீட்டுக தமிழ்யாழை !

 

 

 

 சிந்துவெளி அகழ்வினலே நீ சிரித்தாய் -அதை

சங்கத் தமிழ் ஆழத்திலே எதிரொலித்தோம்

கீழடி வைகை பொருணை வழி படித்தோம்

வாழும் பண்பாட்டின் நாடித்துடிப் பறிந்தோம்

 

 வள்ளுவனின் முப்பாலில் உயிர் தரித்தோம்

வையத் தமிழ்மொழி வாழக் கவிபடித்தோம்

யாவரும் கேளிரெனபாரெங்கும் முரசடித்தோம்

 பசிப்பிணி அறுகவெனபகிர்தல் அறமுரைத்தோம்

 

 சுழன்றும் ஏர்பின்னது உலகு என்றோம்அங்கே

உழவினார் கைமடங்கின் துறவுமில்லை என்றோம்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்றோம்

அல்லவைதேய அறம்பெருக நல்லவை செய்வோம்!

 

உணவென படுவது நிலத்தொடு நீரே என்றோம்

உலகம் உய்யும் வாழ்வியல் ரகசியம் சொன்னோம்

பொங்கலும் புத்தாண்டும் மீட்டுக தமிழ்யாழை !

மீட்டுக தமிழ்ப்பண்ணை ! மீட்டுக தமிழர் வாழ்வை !

 

தை தமிழர் புத்தாண்டு வாழ்த்துகள்!

இனிய பொங்கல் வாழ்த்துகள்!

வளம் கொழிக்க உழவர் திருநாள் வாழ்த்துகள் !

தமிழர் பெருமிதம் திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள் !

மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள் !

காணும் பொங்கல் வாழ்த்துகள் !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

[15/01/2024.] தை முதல் நாள் ,திருவள்ளுவராண்டு 2055.


பழமைச் சிந்தனையை எரியூட்டுக !

Posted by அகத்தீ Labels:

 


உன் கொள்ளுத் தாத்தா பாட்டி போன்றா நீ வாழ்கிறாய் ? இல்லவே இல்லை ! அதனினும் மேம்பட்ட வாழ்வுதான் உன்னுடையது.

அடங்கிப் போயா இதனை நீ பெற்றாய் ? இல்லவே இல்லை .

உன் கொள்ளுத் தாத்தாவை உன் தாத்தா மீறினார் ,

உன் தாத்தாவை உன் அப்பா மீறினார் ,

உன் அப்பாவை நீ மீறினாய் ,

உன்னை உன் வாரிசுகள் மீறுகிறார்கள் ,

நாளை அவர்களை அவர்களின் வாரிசுகள் மீறுவார்கள் .

இதுதான் வாழ்க்கை .

 

எல்லாம் மாறும் . மாறதது எதுவுமில்லை.

மாறாத பண்பாடோ ,பழக்க வழக்கமோ ,உணவோ ,உடையோ ,நாகரீகமோ ,கல்வியோ , அறிவோ ,மருத்துவமோ , மனோநிலையோ ,புனைவோ ,கனவோ எதுவுமில்லை .எல்லாம் மாறும் .

அடக்குமுறை ,பாசிசம் ,ஜனநாயகம் , நியாயங்கள், ஒடுக்குமுறை ,சிம்மாசனங்கள் எல்லாம் மாறும் .ஆம் எல்லாம் மாறும் !

தகர்க்க முடியாத சிம்மாசனங்களும் கொடுங்கோல்களும் எங்கும் இல்லை .

 

தேவையற்ற பஞ்சாங்கப் பழமைச் சிந்தனையை எரியூட்டுக !

புத்தம் புதிய சிந்தனைக்கு உரம் போடுக !

தொடரும் மனிதகுல வரலாற்றுச் சங்கிலியில் நீயும் ஒரு கண்ணி ! அவ்வளவுதான்….

 

போகியோ போகி !

 

சுபொஅ.

13/01/2024.

அன்பான கடவுளே

Posted by அகத்தீ Labels:

 


 “மாட்டுக்கறியை தடை செய்தால் எனக்கென்ன நான் மாட்டுக்கறி சாப்பிடமாட்டேன்.”

 “பன்றிக்கறியை தடை செய்தால் எனக்கென்ன நான் பன்றிக்கறி சாப்பிடமாட்டேன் .”

 “கருவாட்டை தடை செய்தால் எனக்கென்ன அதன் வாசமே எனக்குப் பிடிக்காது.”

 “முட்டையை தடைசெய்தால் எனக்கென்ன நான் முட்டையையை விரும்புவதில்லை.”

 “ஆட்டுக்கறி , கோழிக்கறி தடை செய்தால் எனக்கென்ன நான் சாப்பிடப் போவதில்லை.”

 “மீனைத் தடைசெய்தால் எனக்கென்ன மீன் நாற்றமே எனக்குப் பிடிக்காது”

 “வெங்காயம் வெள்ளைப் பூண்டை தவிர்த்தால் எனக்கென்ன எனக்கு அது வேண்டாம்.”

“பனங்கிழங்கு ,சேப்பங்கிழங்கு ,கருணைக் கிழங்கு சாப்பிடமாட்டேன் பெருமாளுக்கு ஆகாது.”

 “சனி ,ஞாயிறு ,திங்கள் ,செவ்வாய் ,புதன் ,வியாழன் ,வெள்ளி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாமிக்கு உரியது அன்று புலால் சாப்பிடமாட்டேன்.”

 “வருடம் முழுவதும் பகவானுக்கு உரியது அன்ன ஆகாரமின்றி அமைதியில் இருப்பேன்.”

“அவ்வப்போது மாட்டு மூத்திரம் ,மாட்டுச்சாணி மட்டும் சாப்பிடுவேன்...”

 “உண்மையான இந்து வேறு எப்படி இருக்க முடியும் ?”

போய்யா! உன் மதமும் புண்ணாக்கும்… நான் மனிதனாக இருந்துவிட்டுப் போகிறேன் ; என் உணவு என் உரிமை .”

என் உணவில் ஓர் கவளம் சாப்பிடும் அன்பான கடவுளே எனக்குத் தேவை . இருந்தால் முகவரி தாருங்கள் !அன்னபூரணி !”

சுபொஅ.
12/01/2024.


பார்க்க வேண்டிய அன்னபூரணி !

Posted by அகத்தீ Labels:

 




பார்க்க வேண்டிய அன்னபூரணி !

 அன்னபூரணி” என்கிற தலைப்பை பார்த்ததும் ஒரு சாமி படமாக இருக்குமோ என எண்ணினேன் . அது அப்படி இல்லை என அறிந்தேன் .ஆயினும் படம் பார்க்கவில்லை .நயனதாரா மீதும் படத்தின் மீதும் இந்துவெறியர்கள் சேறு வாரி இறைப்பதையும் வழக்குப் போடுவதையும் பார்த்தபின் நேற்று [ 08/01/2024] நெட்ஃளிக்ஸில்  படம் பார்த்தேன். ஒரு ஐய்யங்கார் ஆத்துப்பெண் சிறந்த செப்பாக [ CHEF ] மாறுவதற்கான போராட்டம் ; தோள் கொடுக்கும் ஒரு முஸ்லீம் நண்பன்,உணவு அரசியல் ; சினிமா மசாலாவோடு பெண் வெற்றி பெறுவதைக் காட்டுவது சிறப்பு . சில காட்சிகள் மெகா சிரியல் ஒன்றை நினைவூட்டினாலும், எல்லோரும் பார்க்க வேண்டிய படம்தான் . மதவெறியர் வயிறு எரியட்டும் !

 

ஒரு வரிக் கதையாகச் சொல்வதெனில்  “சேஷம் மைக்கில் ஃபாத்திமா”

கால்பந்தாட்ட வர்ணணையாளராக விரும்பும் ஒரு முஸ்லிம் பெண்ணின் கதை. சுவாரசியமான மலையாளப் படம். அன்னபூரணி செப்பாக விரும்பும் சனாதன ஐய்யங்கார் ஆத்துப் பெண்ணின் கதை . இரண்டும் பழமைவாதத்தை உடைக்கும் படம்தான் . ஆனால் அன்னபூரணிக்கு மட்டும் எதிர்ப்பு ஏன் ? ஐயங்கார் ஆத்துப்பெண் அசைவம் சமைப்பதை சுவைப்பதைக் காட்டுவதுதானோ ?

 

 

படம் பார்த்து முடிவு சொல்லுங்கள் !

 

 

சுபொஅ.

09/01/2024.