நூல் நெடுக கண்ணீரின் வெப்பம்

Posted by அகத்தீ Labels:

நூல் நெடுக கண்ணீரின் வெப்பம்




 

புத்தகத்தின் தலைப்பு கவர்ச்சிகரமானது. மிகவும் ஈர்ப்புத்தன்மை கொண்டது. நூல் நெடுக கண்ணீரின் வெப்பம் தகித்துக் கொண்டே இருக்கும். ஏழை, ஒடுக்கப்பட்ட இந்தியாவைக் சித்தரிக்கும் நூல். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். இருபது வருடங்களுக்கு முன் கார்ப்பரேட் ஊடகங்களுக்கும் இதயத்தில் துளி ஈரம் இருந்திருப்பதன் சாட்சி இந்நூல். மொத்தமும் மரத்துப்போனது இன்றைய கார்ப்பரேட் ஊடகங்கள்.

ஏன் எங்களுக்கு மட்டுமே எப்பொழுதும் இப்படி நடக்கிறது? என்று அவர் கேட்கிறார். அவர்கள் தலித்துகளாகவும் பழங்குடிகளாக இருப்பதும்…………”

மூங்கில்களுடனான அவர்களின் உறவு, இயற்கையைப் புரிந்துவைத்திருப்பதைவிட மேலானது, அது இயற்கையின் மீதான காதலால் விளைந்தது.”

கிராமங்களில் காயடிக்கப்படாத உள்ளூர் பொலிக்காளை ஒன்றுகூட இல்லை.”

அதாவது மூன்று நிமிடங்களுக்கு ஒரு குழந்தை வயிற்றுப் போக்கால் சாகிறது, இது பிளேக் நோயால் செத்தவர்களைவிட முப்பதினாயிரம் மடங்கு அதிகம்.”



டாக்டர் என்று குறிக்கப்பட்ட ஓர் பலகை இருந்தால் போதும், பட்னாவில் வெறும் 765 / செலவில் மருத்துவராக வழி இதுதான் …”

இங்கே வாழும் மக்களுக்கு நாங்கள் இந்தியர் என்று கருதுவதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா ?”

இங்கு மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ?”

அதே நேரத்தில் எங்கள் காடுகள் காணாமல் போகின்றன, நிலங்கள் குறைந்துகொண்டே வருகின்றன, எங்கள் வேதனை மட்டும் கூடிக்கொண்டே இருக்கிறது .”

ஏழைகள் வறட்சி நிவாரணத்தை மூன்றாவது அறுவடை என்கிறார்கள்; அது உள்ளூர் பண்க்காரர்களுக்கே நல்ல மகசூலைக் கொடுக்கும்.”

இப்படி சொல்ல ஆரம்பித்தால் முடிவே இருக்காது .நூல் நெடுக நெஞ்சை ரணமாக்கும் செய்திகள். மத்திய பிரதேசம், பீஹார், ஒரிசா, தமிழ்நாடு மாநிலங்களில் கொட்டா, ஜாபுவா, காலஹந்தி, கோராபுத், மல்காங்கிரி, நவபட்டா, பாலமு, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களின் உள்கிராமங்களில் தலித் மற்றும் பழங்குடியினர் படும்பாட்டை சாய்நாத் தொடர்ந்து செய்திக் கட்டுரை ஆக்கியுள்ளார். அவற்றின் தொகுப்பே இந்நூல்.

கல்வி, சுகாதாரம், பஞ்சம், வறட்சி, குடிநீர், மனித உரிமை மறுப்பு என பல கோணங்களில் ஆட்சிகளின் படுதோல்வியைஅறிவிப்புக்கும் அமலாக்கத்திற்கும் உள்ள இடைவெளியைஅதிகார வர்க்கமும் சுயநலக்கூட்டமும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டோரை ஏய்ப்பதை வஞ்சிப்பதை, ஜாதிச் சான்றிதழ் குளறுபடிக் கொடுமைகளை இக்கட்டுரைகள் தோலுரிக்கின்றன.



இதுவரை ஆங்கில ஊடகங்களில் வெளிச்சம் படாமல் இருந்த கிராமப்புறம் நோக்கி திரும்பியது பாராட்டுக்குரியதே . இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் வெளிவந்த மாதம் ,வருடம் இவற்றை ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் குறிப்பிட்டிருந்தால் இந்த ஆவணம் மேலும் துல்லியதாக இருந்திருக்கும். இந்த அடிப்படை எப்படி தொகுத்தவருக்கு தோன்றாமல் போயிற்று ?

எனக்கு ஒரு அனுபவம் உண்டு . தஞ்சையில் வறட்சி ஏற்பட்ட போது ஒரு உண்மை கண்டறியும் குழு சென்று வந்து விளக்கியது. அப்போது அதில் ஒரு பேராசிரியர் எலிக்கறி சாப்பிடுவதை அருவருப்போரும் சாதி மேட்டிமை கண்ணோட்டத்திலும் விவரித்தபோது எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. மேட்டுக்குடி பார்வை என ஏளனம் செய்தேன். இது போன்ற பார்வையை நூலாசிரியரும் ஓரிடத்தில் கேலி செய்கிறார் . மகிழ்ச்சி .ஆயினும் இந்நூலிலும் அது அறவே இல்லை என்று சொல்லிவிட முடியவில்லையே !

கவலை, கண்ணீர், அனுதாபம், பரிதாப உணர்வு என இந்நூல் பல உணர்வுகளைத் தட்டி எழுப்புகிறது .அதைத்தாண்டி கோவம், ரெளத்திரம் என உணர்வுகளைத் தட்டி எழுப்பி இருந்தால் அவ்வேடு இக்கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரித்திருக்காது. பாதியில் நின்று போயிருக்கும்!.

காலங்கடந்தேனும் இந்நூலை தமிழில் கொண்டுவர முயற்சி எடுத்த பாரதி புத்தகாலயத்திற்கும், நல்ல தமிழில் தந்த ஆர் செம்மலருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

 

ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்
ஆசிரியர் : பி.சாய்நாத், தமிழில் : ஆர்.செம்மலர்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ தெரு, தேனாம்பேட்டை, சென்னை -600 018.
தொலை பேசி : 044 24332424, 24332924, 24356935
பக்கங்கள் : 560,
விலை : ரூ.550/
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/oru-nalla-varatchiyai-ellorum-nesikirarkal/

 

சுபொஅ.