நீங்கள் பலர்; அவர்கள் சிலர்

Posted by அகத்தீ Labels:



புரட்சிப் பெருநதி – 21 



நீங்கள் பலர்; அவர்கள் சிலர்

சு.பொ.அகத்தியலிங்கம்





குழந்தைகளை 
வேலைவாங்குவதை 
தடை செய்து சட்டம் 
பிறப்பிக்கப்பட்டது’

“நீங்கள் பலர்; அவர்கள் சிலர்”  [you are many ; they are few] இந்த பொருட்செறிவான கவிதைவரிக்கு சொந்தக்காரர் யார்? எச்சூழலில் பிறந்தது? 

இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் பீட்டர் ஃபீல்ட் எனுமிடத்தில்1819 ஆகஸ்ட் 16 திங்கட் கிழமை வாட்டும் குளிரிலும் மழையிலும் அறுபதாயிரம் நெசவாளர்கள் அணிதிரண்டனர். கடும் பஞ்சம், வாட்டும் வறுமை, கடுமையான பணி நெருக்கடி, கூலி தொடர்ந்து குறைக்கப்படுவது எல்லாம் அவர்களைப் போராட நிர்ப்பந்தித்தது. ஹென்றி ஹண்ட் தலைமை ஏற்றார். ஆட்சியாளர் கடும் அடக்குமுறையை ஏவினார். துப்பாக்கிச் சூடு நடந்தது. 15 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனை “பீட்டர் லூ படுகொலை” என வரலாறு பதிவு செய்துள்ளது. இதனைக் கண்டித்து...


“உறக்கம் கலைந்த சிங்கங்களைப் போல 
வெல்ல முடியாத எண்ணிக்கையில் எழுக!
நீங்கள் உறங்கிய பொழுது
உங்கள் மீது மாட்டிய சங்கிலிகளை
பனித்துளியைப் போல பூமியில் உதிர்த்திடுங்கள்
நீங்கள் பலர்; அவர்கள் சிலர்”

“அராஜகத்தின் மூடி” என்ற தலைப்பில் கவிஞர் ஷெல்லி எழுதிய கவிதை பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்த படுகொலை பலரின் மனச்சாட்சியை உசுப்பியது.

1819 இல் ஒன்பது வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைவாங்குவதை தடை செய்து சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஒன்பது வயதைத் தாண்டிய குழந்தைகளை வாரத்துக்கு 72 மணி நேரத்துக்கு மேல் வேலைவாங்கக் கூடாது எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. 1825 இல் தொழிற் சங்கம் அமைக்கும் உரிமையும், வேலை நிறுத்த உரிமையும் வழங்கப்பட்டது. ஆனால் 1834 ல் சங்கம் அமைக்க விவசாயத் தொழிலாளர்கள் முயற்சித்த போது கைது செய்யப்பட்டு நாட்டைவிட்டே வெளியேற்றப்பட்டனர்.

“எங்கள் ஆட்சி ஏற்படும் பொழுதில்
உங்கள் ஆட்டம் முடிந்துவிடும்
அப்பொழுது பழைய உலகிற்கோர்
பிரேதப் போர்வையை நாங்கள் நெய்வோம்
அதோ கேள்! கலகம் குமுறுகிறது!” 

என்கிற பாடலை உரக்க பாடியபடியே பிரான்ஸில் லியோன்சின் நகரில் 1831இல் நவம்பர் 21 முதல் 23 வரை பட்டு நெசவில் ஈடுபட்ட தறி உரிமையாளர்களும் நெசவாளர்களும் வீதியில் இறங்கிப் போராடினர். போராட்டம் கடுமையாக நசுக்கப்பட்டது. மீண்டும் 1834இல் போராட்டம் துவங்கியது. ஏப்ரல் 9 முதல் 15 வரை நடைபெற்ற இப்போராட்டம் மேலும் பல நகரங்களுக்குப் பரவியது. பிரான்ஸில் பாட்டாளிவர்க்கம் விழித்தெழத் துவங்கிய நிகழ்வாக மார்க்ஸ் இதனைப் பார்த்தார்.

ஜெர்மனியின் பகுதியான பிரஷ்யாவில் சைலீஷிய நகரில் 1844 இல் நெசவாளர் போராட்டம் பெரும் கலகமாகவே உருவெடுத்தது. ஜெர்மானிய மகாகவியும் மார்க்ஸால் பாட்டாளி வர்க்க கவிஞனெனப் பாராட்டப் பட்டவருமான ஹென்றி ஹெய்னே நெசவாளர் போராட்டத்தையொட்டி யாத்த கவிதை; தொழிலாளர் ஊர்வலங்களில் பாடப்படலாயின.

“கிறீச்சிடும் தறியில் நாடா பறக்கிறது
இரவெல்லாம் பகலெல்லாம்
உன் விதியை நொந்து கொண்டிருக்கிறோம்
உன் சவத்துணியை நெய்து கொண்டிருக்கிறோம்.

ஓ! கிழட்டு ஜெர்மனியே!
உனக்கொரு சாபத்தை நெய்து கொண்டிருக்கிறோம்
உனக்கொரு சாவை நெய்து கொண்டிருக்கிறோம்
நாங்கள் நெய்து கொண்டிருக்கிறோம்” 

என இறுதியில் முடியும் அப்பாடல் பாட்டாளிவர்க்கப் போராட்டத்தில் எரியீட்டியாய் மாறிப் போனது .அந்த கவிதையில் ஓரிடத்தில் சொல்லுவார்;

“குளிர் பனியில் கொடும் பசியில்
மரித்துக் கொண்டிருந்த போது
நாங்கள் கதறி அழைத்தோமே
அந்தக் கடவுளைச் சபிக்கிறோம்
வீணாக அவரை நம்பினோம்;
பிரார்த்தித்தோம்; கெஞ்சினோம்;
எங்களைஏமாற்றினார்; துன்புறுத்தினார்” 

வெறும் உணர்ச்சியில் பிறந்தது மட்டுமா இவ்வரிகள்; ஆழ்ந்த சிந்தனைச் சுடருமல்லவா? இப்படி எல்லாம் எழுதினால் அரசு வாளாவிருக்குமா? ஹெய்னே என்ற பேரை உச்சரிக்கவே தடை போட்டது. “நானே வாள் ; நானே நெருப்பு” எனப் பிரகடனம் செய்தவர் ஹெய்னே. இளவயது மார்க்ஸை இவ்வரிகள் ஈர்த்தது. அவர் தன்னையும் அப்படியே கருதி எழுதலானார்; செயல்படலானார்.

இவர் மட்டுமா? அல்ல இன்னும் பல கவிஞர்களுண்டு

“அந்த நூறு பேரும்
ஹாஸ்வெல் நகரைச் சேர்ந்தவர்கள்
ஒரே நாளில்
ஒரே நேரத்தில்
ஒரே மாதிரி இறந்தார்கள்…” 

எனத் துவங்கும் கவிதையில் சுரங்க விபத்தைப் பாடினார் ஜார்ஜ் வொர்த். இவர் மார்க்ஸின் சமகாலத்தவர். இவரை முதல் பாட்டாளி வர்க்க கவிஞரென்பார் மார்க்ஸ்.விடுதலை என்ற சொல்லை உச்சரித்தாலே அரசு வெகுண்ட காலத்தில்;

“விடுதலைக்காக கொலை செய்யப்பட்ட கல்லறைகளில்
விடுதலை வளராத கல்லறை எதுவுமில்லை
இந்த விதைகளெல்லாம்மீண்டும் 
விதைகளை உருவாக்கும்
காற்று தொலை தூரம் சுமந்து போய்
மீண்டும் விதைக்கும்
மழையும் பனியும் போஷித்து வளர்க்கும்.”

“ஓ!விடுதலையே
மற்றவர்கள் உன்னிடம் நம்பிக்கை இழந்தாலும்
என்றென்றைக்கும் நான் மட்டும்
நம்பிக்கை இழக்கப் போவதில்லை” 

எனப்பாடினார் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன்.லூதர்வாத மரபைச் சார்ந்த புஸ்குதென் என்பவர் கவிஞர் கதேவை விமர்சித்து எழுதும் போது “ கவிஞருடைய நூல் ஒழுக்கக்குறைவுடையது” என எழுதினார்; அங்கத நடையில் காரல் மார்க்ஸ் அதற்குப் பதில் சொன்னார்;

“கதே என்றால் சீமாட்டிகளுக்கு பயம்
முதிய மகளிர் படிப்பது சரியல்ல 
அவர் இயற்கையைக் கற்றார்
சண்டை இதுதான் – ஆனால்
மத போதனையுடன் ஏன் முடிக்கவில்லை?
அவர் லூதர் கோட்பாட்டை
மனப்பாடம் செய்திருக்க வேண்டும்.
அதைக் கொண்டு கவிதை புனைந்திருக்க வேண்டும்.
அவரிடம் அழகான ,சில சமயங்களில்
விசித்திரமான சிந்தனைகள் இருந்தன;
‘எல்லாம் கடவுள் அருள்
’என்று முடிக்கத் தவறினார்.”

மறுமலர்ச்சி காலகட்டம், அறிவொளி கால கட்டம் என அழைக்கப்பட்ட இக்காலகட்டத்தில் மேலே சுட்டிய கவிஞர்களோடு, கீட்ஸ், பைரன், புஷ்கின், விக்டர் ஹ்யூகோ, பால்சாக், வொர்ட்ஸ் வொர்த், ஷில்லர் போன்ற படைப்பாளிகள் சமூக பிரக்ஞையோடு மக்களைத் தட்டி எழுப்புவதில் உரிய பங்கு வகித்தனர். இவர்களின் சமூக, தத்துவ, அரசியல் பார்வையில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் மக்களை விழிப்படையச் செய்வதில் ஏதாவது ஒரு வகையில் பங்காற்றியவர்களெனில் மிகையல்ல.

இக்காலகட்டம் பல்வேறு தத்துவ ஞானிகளை மட்டுமல்ல; அறிவியல் அறிஞர்களின் புரட்சிகர கண்டுபிடிப்புகளுக்கும் உரியகாலமாயிருந்தது. இக்காலத்தின் அறிவு வெளிச்சத்தின் மீதே விடுதலைப் போர்களும் புரட்சிகளும் கருக்கொண்டன எனில் அது மிகையல்ல.

 (புரட்சி தொடரும்…)

நன்றி : தீக்கதிர் , 27/3/2017

கவிதை தினமாமே

Posted by அகத்தீ Labels:


கவிதை தினத்தில் ....


எலிகளின் வழக்கை பூனையிடம் ஒப்படைத்துவிடலாம்
பூனை மிருதுவானது அதிராமல் நடக்கும்
பூனையின் மீசை பார்க்க அழகா இருக்கும்
மியாவ் என அது கத்துவது இனிமையானது
எலிகளின் வழக்கை பூனையிடம் ஒப்படைத்துவிடலாம்

மான்களின் பாதுகாப்பை புலிகளிடமே விட்டுவிடலாம்
புலிகள் கம்பீரமானவை நடந்தால் பூமி அதிரும்
புலிகளின் உறுமல் எதிரியை நடுங்க வைக்கும்
புலிகளின் ராஜ்யத்தில் எதிரிகள் நுழைய முடியாது
மான்களின் பாதுகாப்பை புலிகளிடமே விட்டுவிடலாம்

ஆட்டு மந்தை காவலுக்கு நரிதானே பொருத்தமானது
நரிகளின் கண்கள் எப்போதும் ஆட்டு மந்தை மீதே இருக்கும்
நரிகள் ஊளையிட்டால் ஊர்முழுதும் நடுங்கும்
நரிகளுக்கு இருட்டெனில் இரட்டிப்பு கொண்டாட்டம்
ஆட்டு மந்தை காவலுக்கு நரிதானே பொருத்தமானது


[ கவிதையை முடிக்கும் முன்னே என்னைச் சுற்றி ஒரு விலங்குக் கூட்டம் . உறுமுகின்றது . “ கவிதை தினத்தில் ஒரு கவிதை எழுதியது தப்பா ?” என முனகினேன் . “ என்னது தப்பான்னா கேட்கிற … நாங்க வன்புணர்வு  செய்தோமா ? இனவிருத்தி காலமின்றி பிற நாட்களில் காமத்தை சுமந்தலைந்தோமா ? பசிக்காத போது வேட்டையாடினோமா ? தேவைக்கு மேல் சேர்த்தோமா ? சாதி ,மத வெறி கொண்டலைந்தோமா ? ஆணவக் கொலை செய்தோமா ? நாங்கள் உங்களைவிட மேலானவர்கள் … உங்களோடு எங்களை ஒப்பிட்டு இழிவு செய்யாதீர் ! …” திடுக்கிட்டு விழித்தேன் . ச்சே இவ்வளவு நேரம் கனவு கண்டிருக்கிறேன் ]
- சு.பொ.அகத்தியலிங்கம்









மிரள வைத்த கையெழுத்துகள்

Posted by அகத்தீ Labels:


புரட்சிப் பெருநதி – 20


மிரள வைத்த கையெழுத்துகள்


சு.பொ.அகத்தியலிங்கம்

உலகம் முழுவதிலும் உண்மையில் வெகுஜனத் தன்மை கொண்ட
விரிவாகத் திரட்டப்பட்ட அரசியல் ரீதியாகத் துல்லியமாக
வடிவமைக்கப்பட்ட முதல் இயக்கமாக
விளங்குவது சாசன இயக்கமே என்றார் லெனின்.





அறுபது லட்சம் பேர் கையெழுத்துடன் ஆறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறினர். இல்லை 19 லட்சம் கையெழுத்துகள் மட்டுமே உள்ளன என ஆட்சியாளர் சாதித்தனர்; அதிலும் பெரும்பகுதி போலியானவை என்றனர். தாங்கள் அதனை சரிபார்த்துவிட்டதாகவும் கூறினர்.

13 பேர் 17 மணி நேரத்தில் 60 லட்சம் கையெழுத்தையும் சரிபார்த்துவிட்டதாகக் கூறுவதை எப்படி நம்ப முடியும் ? தொழிலாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கருதி மாற்றுப் பெயரில் கையெழுத்திட்டதை எப்படி போலியென சொல்லலாம் ? இது போராட்டக்காரர் வாதம் .எப்படியும் 30 லட்சம் பேர் அதனை ஆதரித்தனர் என்பது ஆய்வாளர் கருத்து.
எண்ணிக்கை இருக்கட்டும் ஒவ்வொருவராய் நூறு பேரிடம் விளக்கம் சொல்லி கையெழுத்து வாங்குவதே பெரும் சிரமம் . அன்றைக்கே பல லட்சம் கையெழுத்து வாங்கினர் என்பது சாதாரண விஷயமல்ல ;அதனால்தான் ஆட்சியாளர்கள் மிரண்டனர்.

19 ஆவது நூற்றாண்டில் பிரிட்டனில் நடைபெற்ற மிகப்பெரிய மக்கள் இயக்கமான சாசன இயக்கத்தின் மனுவே அது. 1838 தொடங்கி பிரிட்டனைக் குலுக்கிய – மூன்றுமுறை அரசை பதற்றமடையச் செய்த இயக்கமாகும். 1936 இல் லண்டன் உழைக்கும் மக்கள் கழகம் நிறுவப்பட்டது . அதன் தொடர்ச்சியாக வில்லியம் லவீட் முயற்சியால் ஆறு கோரிக்கைகளடங்கிய மகாசாசனம் உருவானது.

21 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை ,ரகசிய வாக்கெடுப்பு, சொத்துள்ளவரே போட்டியிட முடியும் என்கிற கட்டுப்பாடு நீக்கம், நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஊதியம், சமமான தொகுதிப் பிரிவினை, ஆண்டுதோறும் தேர்தல் என்ற முக்கிய ஆறு கோரிக்கைகள் கொண்ட மகாசாசனத்தை முன்மொழிந்து 1838 ஆம் ஆண்டு பர்மிங்காமிலுள்ள நியூஹாலில் கூட்டப்பட்டக் கூட்டத்தில் பல அமைப்புகள் இணைந்தன . சாசன இயக்கம் உருவானது . “ ஜனநாயகம் அல்லது மரணம்” என்கிற முழக்கம் எங்கும் உரக்க ஒலித்தது. “கத்தியும் முள்கரண்டியும் ரொட்டியும் வெண்ணையும் போன்றது இக்கோரிக்கைகள்” என்பார் ஜோசப் ரெய்னர் ஸ்டீபன்.

1836 இல் இந்த இயக்கம் சார்ந்தவர்களால் வெளிக்கொணரப்பட்ட “நார்த்தன் ஸ்டார்” என்ற ஏடு ஆளும் வர்க்க ஏடான டைம்ஸுக்கு சமமானது. ஆலை வாயில்களில், உணவகங்களில் படிப்பறிவற்ற தொழிலாளர்களுக்கு இந்த ஏட்டை உரக்க வாசித்துக் காட்டும் புதிய கலாச்சாரம் எங்கும் வேகமாய் பரவியது. கோரிக்கை சாசனத்தில் ஆர்வமுடன் உழைப்பாளிகள் கையொப்பமிட்டனர். சாசன இயக்கக் கூட்டங்களில் பல்லாயிரவர் திரண்டனர். ஆட்சியாளர் மிரண்டனர்.  1839 இல் ஜான் ஃபிராஸ்ட் நாடு கடத்தப்பட்டார் .ரோபர்ட் பெடயிக் மூன்றாண்டு கடும் தண்டனைக்கு ஆளானார் .1840 ஜனவரியில் 22க்கும் மேற்பட்ட சாசனவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் .

1840 க்குள் கிட்டத்தட்ட சாசன இயக்கத் தலைவர்கள், முன்னணி ஊழியர்கள் பெரும்பகுதியினர் கைது செய்யப்பட்டுவிட்டனர் . ஆட்சியாளர்கள் சாசனத்தின் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததுடன் கேலியும் கிண்டலும் செய்தனர் . இதனால் கலகங்களும் வேலைநிறுத்தமும் எங்கும் பரவியது. 1842 இல் லங்காஷயரில் வேலைநிறுத்தம் வெடித்தது. ஒவ்வொரு ஆலையாக தொழிலாளர் கூட்டமாகச் சென்று உலைகளை நிறுத்தி வேலை நிறுத்தத்தை முன்னெடுத்தனர். தொழிற்சாலை பகுதிகளுக்கு ராணுவத்தை அனுப்பும் அளவு நிலைமை கடுமையானது. அடக்குமுறை தாண்டவமாடியது. சாசன இயக்கத்தில் கருத்து மோதல் முன்னுக்கு வந்தது . ஒரு சாரார் முதலாளித்துவ தாராளவாதிகளுடன் சேர்ந்து நீண்டகால கிளர்ச்சிக்குத் தயாராக வலியுறுத்தினர் . இவர்கள் தார்மீகக் கட்சி எனப்பட்டனர் . லவீட் இதன் தலைமை ஏற்றார் .தீர்மானகரமான ஆயுதமாக ஒட்டுமொத்த எழுச்சிமிக்க வேலைநிறுத்தத்தை முன்வைத்தோர் பெளதீக சக்திக் கட்சி எனப் பட்டனர். ஒ கொன்னர் இதன் தலைமை ஏற்றார். இந்த முரண்பாடு இயக்கத்தை சற்று சுணங்க வைத்தது.

எனினும் பிரிட்டனில் ஏற்பட்ட தொழில் மந்தம் , அயர்லாந்து பஞ்சம், பிரெஞ்சு நாட்டு எழுச்சிகள் இவற்றால் சாசன இயக்கம் மீண்டும் எழுந்தது. 1847 இல் கிட்டத்தட்ட உச்சியைத் தொட்டது. புதிய கோரிக்கை சாசனத்தை தயாரித்து பல லட்சம் கையெழுத்தோடு நாடாளுமன்றம் நோக்கி அணிவகுத்தனர் .30 லட்சம் கையெழுத்துகள் பெற்றிருந்தனர் . நாற்பதாயிரம் பேர் உறுப்பினராக இருந்தனர். எழுச்சி கனன்றது. பியர்கஸ் ஒ கொன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது உற்சாகத்தை அளித்தது .1848 ஏப்ரல் 10 ஆம் நாள் தெற்கு லண்டனில் கென்னிங்டன்னில் ஒரு சிறப்பு மாநாடு கூடியது .ஒரு லட்சம் பேர் திரண்டனர் .மக்களின் கோபம் தகித்தது .அரசு லண்டனை இராணுவ முகாமாகவே மாற்றிவிட்டது .

உச்சகட்டத்தில் வீழ்ச்சி தொடங்கியது. ஒன்றுபட்ட முதலாளித்துவ சக்திகளின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாததாலும் ; தொழிலாளி வர்க்க அமைப்பாக சரியாக கெட்டிப்படாததாலும் ;பல குழுக்களாக இணைந்த சாசன இயக்கத்தில் கருத்து மோதல் வலுவடைந்ததும் தோல்விக்கு காரணமாயின.  சாசன இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜேம்ஸ் பிராண்டேரீ ஒ பிரியன் மெய்யான புத்திசாதுர்யத்துடன் வர்க்கப் போராட்டம் குறித்தும், முதலாளித்துவ அரசின் வர்க்க குணாம்சம் பற்றியும் புரிதலை வளர்த்தெடுக்க பெரிதும் முயன்றார். “வலுவின்மைகள் தெளிவாகத் தென்பட்ட போதிலும் சாசன இயக்கம் இங்கிலாந்தின் ஒட்டு மொத்த பாட்டாளிவர்க்கத்தையும் தட்டி எழுப்புவதில் வெற்றி பெற்றது மட்டுமல்லாது ,உலகப்பாட்டாளி வர்க்கத்திற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அதன் திசைவழியில் அளவிடற்கரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது” என்கிறார் ‘சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கம்’ நூலில் சுகுமால் சென் .

“ஆங்கில ஆலைத் தொழிலாளர்கள் இங்கிலாந்துக்கு மட்டுமல்ல நவீன பாட்டாளி வர்க்கத்திற்கே சாதனை நாயகர்கள்” என்பார் காரல் மார்க்ஸ். போராட்டம் முறியடிக்கப்பட்டாலும் கோரிக்கைகள் வென்றன என்பது ஒரு வரலாற்று நம்பிக்கையாகும் .ஆறு கோரிக்கைகளில் கிட்டத்தட்ட அனைத்துமே சட்டப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துவிட்டது. அதுமட்டுமின்றி சாசனவாதிகளும், பொருளாதாரவாதிகளும் வலியுறுத்திய 10 மணி நேர வேலைநாள் என்பது பெண்களுக்கும் குழந்தைத் தொழிலாளிகளுக்கும் என வரம்புகட்டிய முறையிலேனும் அமலுக்கு வந்தது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
உலகம் முழுவதிலும் உண்மையில் வெகுஜனத் தன்மை கொண்ட – விரிவாகத் திரட்டப்பட்ட – அரசியல் ரீதியாகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட முதல் இயக்கமாக விளங்குவது சாசன இயக்கமே என்றார் லெனின்.

“சமூகமும் ஆட்சியாளர்களும் இதனை உணர்ந்து சரி செய்யத் தவறினால்; உழைப்பாளர் பிரச்சனை இன்றைய சமூகத்தில் பெரும் பிரச்சனையாக வெடிக்கும்” என பிரெஞ்சுக் கவிஞரும் வரலாற்றாளருமான லமார்ட்டீன் எச்சரித்தார். ஐரோப்பா விரைவில் அந்நிலையைக் கண்டது.
நன்றி : தீக்கதிர் 20/3/2017


கள அனுபவத்தோடு மூட இருளகற்றும் அறிவு ஒளி !

Posted by அகத்தீ Labels:




கள அனுபவத்தோடு
மூட இருளகற்றும் அறிவு ஒளி !

சு.பொ.அகத்தியலிங்கம்






தமிழுக்குத் தாமதமாக வரினும் சரியான நேரத்தில் மிகத் தேவையான ஆயுதமாய் வந்து சேர்ந்துள்ளது இந்நூல் பேய், பிசாசு , சோதிடம் இல்லாத ஏடுகள் இல்லை (விதிவிலக்குகள் தவிர) ; ஊடகம் இல்லை என்கிற சூழலில் ; அறிவியல் கண்டு பிடிப்புகளைப் பயன்படுத்தி மூடநம்பிக்கைகளை வலுப்படுத்தும் அரசியல் சமூகச் சூழலில்; அவற்றினை அம்பலப்படுத்தும் இந்நூலை வெளியிட்ட அலைகள் பதிப்பகத்துக்குப் பாராட்டுகள் .

இரண்டு நூலிலும் சேர்த்து மொத்தம் 200 கட்டுரைகள் உள்ளன . இவற்றில் இப்பிரச்சனை குறித்து பொதுவாய்ப் பேசும் கட்டுரைகளைவிட கள அனுபவம் சார்ந்த கட்டுரைகளே அதிகம் .

நான் பேயைக் கண்டு பயப்படமாட்டேன் என வெற்று ஆரவாரம் செய்யாமல் , “ ஆன மறுதை’ என்ற பிசாசை கோவூர் கண்டு சொன்னது சுவையான அனுபவம் . அவரும் அவர் மனைவியும் நள்ளிரவில் அந்த இடத்தைக் கடக்கும் போது ; “அய்யோ !யானை! யானை!” என குஞ்சம்மை குரல் கொடுக்க ; அக்காட்டில் யானை கிடையாது என்பதால் அது “ ஆனை மறுதை” என்கிற பிசாசாகத்தான் இருக்க வேண்டும் அல்லவா?.ஒரு நிமிடம் நிற்கவைத்தது . அப்புறம்தான் வழிதவறி வந்த ஒரு காரை அங்கே பார்க்க செய்துவிட்டு அதன் டிரைவர் குறட்டைவிட்டுத் தூங்குவதைக் கண்டனர் .அப்படியானால் சற்று மிரண்டது ஏன் ? அதற்கு விளக்கம் சொல்கிறார்;

“எனக்கும் குஞ்சம்மைக்கும் பேய் பிசாசில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ; அந்த மரத்தில் அவை வாழ்கின்றன என பலமுறைக் கேட்டு – அது எங்கள் உள் மனதில் பதிந்து கிடந்தது – ஓட்டுநரின் குறட்டை ஒலி கேட்டதும் மனதில் உண்டான அச்சத்தில் உள்மனதில் தேங்கிக் கிடந்த கதைகளுக்கு உருவம் உண்டானது . முதலில் அங்கே பார்த்த குஞ்சம்மைக்கு அது யானையாகவே தென்பட்டது .அவருக்கு சிறுவயதில் அச்சத்தைப் பிறப்பித்த உயிரினமாக அது இருந்திருக்கக்கூடும் . யானை என்று அவர் சொன்னதும் என் மனதிலும் யானையின் உருவம் எழுந்து வந்தது.” என உண்மையின் தெறிப்போடு அவர் சொல்கிறார் .

அவர் செல்லும் இடங்களில் மூடநம்பிக்கை/ உங்கள் முட்டாள்தனம் என இகழாமல் ஏன் ஏன் ? எப்படி ?எதனால் ? என அலசி ஆராய்ந்து கண்டு விளக்கினார் . அதுதான் கோவூரின் தனித்தன்மை .இன்னொரு கள அனுபவம் :

“ நான் உனக்கு நல்ல பாடம் புகட்டியே தீருவேன் .நீ என்னுடைய மனைவியைக் கெடுத்துவிட்டாய் ! உன்னையும் உன் குழந்தையையும் கொல்வேன்…” என லீலாவதி கூப்பாடு போட்டாள் . அவள் கணவர் மரணமடைந்து விட்டார் என இராணுவத் தலைமையகத்திலிருந்து தகவல் வந்த சிறிது நேரத்திலேயே கூப்பாடு .
மனைவியை இறந்த கணவனின் ஆவி பிடித்துக் கொண்டதாக ஊரே நம்பியது . கோவூர் தலையிடுகிறார் ; வேறொரு ஆணோடு அவளுக்கு இருந்த முறையற்ற உணர்வின் குற்ற உணர்ச்சியும் ; இறந்தவர் ஆவிக்கு எல்லாம் தெரியும் என்கிற தவறான நம்பிக்கையும் அவரை இப்படி பேய்பிடித்தவராக்கியது எனக் கண்டறிந்து சொல்லி மனநல சிகிச்சை மூலம் குணமாக்கினார் . இதில் உச்சப் பட்ச திருப்பம் என்னவெனில் செத்ததாக தகவல் வந்தது பிழையென இராணுவம் செய்தி அனுப்ப ; விரைவில் அவரும் திரும்பி வந்தார் .

இலங்கையில் ஒரு மலையாள மந்திரவாதி சில தந்திரங்களைச் செய்தும் , வள்ளத்தோள் கவிதையை மந்திரம் போல் உச்சரித்தும் ஏமாற்றி நாடகமாடியதை ;எல்லா மொழியும் பேசுவேன் எனச் சொன்ன ஒரு டாக்டர் சும்மா எதையோ உளறிவிட்டு அந்த மொழி இந்த மொழி என கதைத்த மனப்பிறழ்வை ; புனிதம் என்று சொல்லப்படுகிற கட்டுக்கதைகளை கோவூர் அவர் பாணியில் கட்டுடைத்து காட்டுகிறார்.

ஏவல், பில்லி சூனியம், சோதிடம், தெய்வீக அனுபவம் எதைப் பற்றி டாக்டர் கோவூர் பேசினாலும் அதனை எள்ளி நகையாடாமல் நிரூபியுங்கள் எனச் சொல்வதும்; பாதிக்கப்பட்டவரை ஏளனமாகப் பார்க்காமல் நோயாளியாய் கரிசனத்தோடு அணுகித் தீர்ப்பதும்; அதன் மூலம் மூடநம்பிக்கை இருளகற்றுவதும் குறிப்பிடத்தக்கது. மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரத்தை வறட்டுத்தனமாக அல்லாமல் நடைமுறை அனுபவங்களோடு சொல்லுவதும் செய்து காட்டுவதும் மிக நுட்பமானது .

“தங்களுடைய உடலையும் உடமைகளையும் நான் சோதனையிட்ட பிறகு , அற்புதமோ, தெய்வீகமோ ஆன சக்தியால் நீறு ,தங்கநகைகள், சிலைகள், பழங்கள், ஆகிவற்றில் எதையேனும் உருவாக்கிக் காட்டினால் அந்த விஷயத்துக்காக ரூ.75,000 வரை எந்தத் தொகையும் பந்தயம் வைக்கத் தயாராக இருக்கிறேன் என்பதை அறிவிப்பதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்…..”என சாய்பாபா , பன்றிமலை சாமி, ஹடயோகி எஸ் எஸ் ராவ் உள்ளிட்ட பலருக்கும் கோவூர் சவால்விட்டதும்; அவர்கள் நழுவியதும் சுவாரஸ்யமானது மட்டுமல்ல ;பித்தலாட்டத்தை வெளிக்கொணர்வதாகவும் அமைந்தது .

சாய்பாபாவுக்கு மட்டுமல்ல யூரிக்கெல்லர் என்கிற இஸ்ரேல் நாட்டு அவதார சாமியாருக்கும் கோவூர் சவால் விட்டார் “ மூடி முத்திரையிடப்பட்ட ஓர் உறையினுள் இருக்கும் கரன்சி நோட்டின் வரிசை எண்ணை அவரால் சொல்ல முடியுமெனில் 16,000 டாலர் பரிசு தருவதாக கடிதம் அனுப்பினார் . ஏற்கவில்லை ஏனெனில் தெய்வீக ஆற்றல் என அப்பாவிகளை ஏமாற்ற முடியும் ; கோவூரைப்போல் நுணுகிப் பார்ப்போரை ஏமாற்ற இயலுமா ? சாய்பாபாவுக்கும் சரி – கெல்லருக்கும் சரி விஞ்ஞானம் அறிந்த சிலரே பக்தர்களாய் இருந்தது எப்படி ஏன்பதையும் வெளிப்படுத்துகிறார் .அவர்கள் ஏஜெண்டுகளே என நிரூபிக்கிறார் .

முஸ்லிம்கள் நடத்தும் ராத்தீப் சடங்கில் வாளை வயிற்றில் குத்திய பின்பும் காயம் ஏற்படாமலிருக்கும் நுட்பத்தை எடுத்துக் காட்டுகிறார் .

டாக்டர் கோவூர் இந்து, கிறித்துவம் , முஸ்லிம் உள்ளிட்ட எந்த மத புராணக்குப்பைகளையும் ஏற்காமல் கேள்விக்கு உட்படுத்துவது இந்நூலில் இன்னொரு சிறப்பு.

“உலகம் நாகரிகம் அடையாத கட்டத்தில் வாழ்ந்த பண்டைய மனிதனின் சட்டத்தொகுப்புகளும் சன்மார்க்க ஆச்சாரங்களும் மரபுகளும் அடங்கிய பைபிள் ,தற்கால மனிதர் பின்பற்றக் கூடியது அல்ல. பத்து கட்டளைகளையோ சில மொழிகளையோ ஆங்காங்கே எடுத்துக்காட்டுகிறவர்கள்கூட வேண்டுமென்றே தன்னலத்தோடு பலவற்றை மறைத்து விடுகிறார்கள் .பைபிளை நடுநிலையோடு படித்தால் பக்குவமற்ற மனங்களை வழிதவற வைக்கின்ற மதநூல்தான் அது என்பது புலனாகும்.” என்பதோடு அதற்கான சான்றாதாரங்களையும் அடுக்குகிறார் .

டாக்டர் கோவூர் கேரளத்தில் கிறித்துவக் குடும்பத்தில் பிறந்தவர். கொல்கத்தா சென்று தாவரவியல் படித்தார். அங்குதான் அவருக்கு பகுத்தறிவு முளைவிட்டது. குஞ்ஞம்மையை திருமணம் செய்தார் .ஆசிரியப் பணி நிமித்தம் இலங்கை சென்றார் . அங்கு மனோதத்துவம் பால் நாட்டம் கொண்டார் .`ஹிப்னாட்டிசம் பயிற்சி பெற்றார் . பில்லிசூனியம் ,பேய் இவை குறித்து ஆய்வு செய்தார் . பகுத்தறிவாளராக இருப்பினும் கல்லூரி பணி காரணமாய் பகிரங்கமாய் செயலாற்றவில்லை .1959 ல் ஓய்வு பெற்றது தொடங்கி 1978 ல் மரணமடைகிறவரை தெய்வீக ஆற்றல் மறுப்பு பிரச்சாரத்தை முழுநேரமும் செய்தார் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம் மகாராஷ்டிரம் ,கர்நாடகம் , மத்தியபிரதேசம், ஒடிசா என விரிவாகப் பயணம் செய்தார்.

அவர் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அன்றாடம் எழுகிற பிரச்சனைகள், சவால்கள் இவற்றிற்கு அவர் முகம் கொடுத்து எழுதிய கட்டுரைகளே இவை . ஆகவே தொடர்ச்சி இருக்காது .தாவித்தாவிச் செல்லும் . ஆயினும் ஒவ்வொன்றும் ஒரு செய்தியை உரக்கச் சொல்லும் ;ஒரு மூட இருட்டை ஓட்டும் . மலையாளத்திலிருந்து த.அமலா தமிழாக்கி தந்துள்ளார் .வாரிகா, மாதிகா ,தொவில் ,காற்றாடியார் இப்படி ஏராளமான மலையாள அல்லது இலங்கைச் சொற்கள் கையாளப்பட்டுள்ளன. பதிப்பாசிரியர் அதில் கவனம் செலுத்தியிருக்கலாம் . இந்த நூலை தமிழாக்கம் செய்த அமலாவை எப்படிப் பாராட்டினும் தகும் .

அறிவியல் ,தர்க்கம் , மனோதத்துவம் , துப்பறிதல் என பன்முக பரிமாணங்களோடு மூடநம்பிக்கைகளைத் தகர்க்க கோவூர் எடுத்த முயற்சியை மேலும் வளர்த்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டளையாகும் ; அதற்கு இந்நூல் அடித்தளம் அமைக்கட்டும்!

1, புரோகிதம் – சோதிடம் –மாந்திரிகப் பித்தலாட்டங்கள்
பக் : 408 , விலை : ரூ. 300 /

2, கடவுள் மதக் கட்டுக்கதைகளும் காசு பறிக்கும் சாமியார்களும்
பக் : 432 , விலை : ரூ.325 /

ஆசிரியர் : டாக்டர் கோவூர் ,
தமிழாக்கம் : த.அமலா ,

வெளியீடு :அலைகள் வெளியீட்டகம்,
5/ 1 ஏ , இரண்டாவது தெரு , நடேசன் நகர் ,
இராமாவரம் , சென்னை – 600 089.

நன்றி : தீக்கதிர் ,புத்தகமேசை, 19/3/2017



‘சாமானியன்’ பெயரில் மட்டுமல்ல...

Posted by அகத்தீ Labels:


புரட்சிப் பெருநதி – 19


‘சாமானியன்’ பெயரில் மட்டுமல்ல...



தன் முயற்சிகள் எல்லாம் பயனற்றுப் போவதையும்
தன் படைப்புகளுக்கு தொடர்ந்து
தடை விதிக்கப்படுவதையும் தாங்கிக்கொள்ள முடியாமல்
துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.

"சித்தாந்த ரீதியான ஜெர்மன் நாட்டின் சோஷலிசம் ஒரு போதும் அவர்களை மறக்காது; மாறாக அந்த மூவரின் தோள் மீதுதான் அது நிற்கிறது…" என ஏங்கெல்ஸ் புகழாரம் சூட்டிய மூவருள் செயிண்ட் – சைமன் முதலில் இருப்பார். ஃபோரியரும், ஓவனும் அடுத்து வருவர்.

1760 இல் பாரீஸில் ஒரு தளபதிக்கு முதல் மகனாய் - செல்வச் செழிப்போடு பிறந்தவர் கிளாட் – ஹென்றி – டி செயிண்ட் சைமன். பள்ளிப் பருவத்திலேயே மேதைகளின் தொடர்பைப் பெற்றவர். ஜீ அலெம்பர்ட்டின் தொடர்பு அவருள் மறுமலர்ச்சி விதையைத் தூவியது, பதிமூன்று வயதில் கடவுள் மறுப்பு பேசினார். தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற மறுத்தார். அதிர்ச்சி அடைந்த தந்தை சிறை வைத்தார். திருந்துவார் என நினைத்தார். ஆனால், சிறைக்காவலரை கத்தியால் குத்திவிட்டு தப்பித்தார்.

17 வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். விரைவில் இளநிலை அதிகாரியானார். அமெரிக்கா சென்று ஜார்ஜ் வாஷிங்டனோடு விடுதலைப் போரில் பங்கேற்றார்.அதற்காக பாராட்டும் விருதும் பெற்றார். ஆனால் பிரிட்டிஷ் அரசு மன்னிக்கத் தயாரில்லை. சைமன் நாடு திரும்பும் வழியில் கைது செய்து ஜமைக்காவில் காவலில் வைத்தது. 1784 இல் தான் நாடு திரும்ப முடிந்தது.

ராணுவத்தில் பணியாற்றிய சைமன்; 1789 ஆம் ஆண்டு புரட்சிக் கனல் மூண்டதும் அதனை ஆதரிக்கத் தொடங்கினார் . பிரெஞ்சு மொழியில் விவசாயிகளை ‘சாமானியன்’ எனும் பொருள் தரும் ‘பான் ஹோம்’ எனக் குறிப்பிடுவர். சைமன் தனக்கு பான் ஹோம் என பெயர் சூட்டிக் கொண்டது அலங்காரத்துக்கல்ல; அவரது உள்ளம் சாமனியர் நோக்கியே நகர்ந்தது.

தான் கனவு கண்டது போல் புரட்சிக்கு பின்னர் நாட்டு நிலை இல்லை என்பதால் -தன் பாணியில் தன் கனவுக்கு உயிர் கொடுக்க முயன்றார்.ஸ்பெயின் நாட்டு நண்பர் பாரன் ரிட்டர்னுடன் இணைந்து திருச்சபை, பிரபுக்கள் நிலத்தை வாங்கி ஏழை விவசாயிகளுக்கு மிகக்குறைந்த விலையில் விற்றார் .

மறுபுறம் புரட்சியின் ஒரு பிரிவினரான ஜாக்கோபின்களின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்தார். கைது செய்யப்பட்டு காற்றும் வெளிச்சமும் இல்லாத லக்ஸம்பர்க் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டார். 1794 இல் தான் விடுவிக்கப்பட்டார்.வியாபாரக் கூட்டாளி ரிட்டர்ன் எடுத்த முடிவால் சைமன் பெரிதும் நட்டப்பட்டார்.

அவருக்கு திருமணம் நடந்தது; அதுவும் மனமுறிவில் முடிந்தது. சொந்த வாழ்விலும் பொதுவாழ்விலும் நம்பிக்கை நொறுங்கிப் போனது."மனித சமுதாயத்தின் ரணங்களைக் குணமாக்க புரட்சி அல்ல; விஞ்ஞானமே வழி" என அவரது சிந்தனை விரிந்தது.

ஐரோப்பா முழுவதும் பயணித்தார். பல விஞ்ஞானிகளோடு உரையாடினார். தெளிவற்ற கற்பனாவாதத் திட்டங்களாலான - "ஜெனிவாவில் வசிக்கும் ஒருவர் சமகாலத்தவருக்கு எழுதிய கடிதம்" என்கிற தன் முதல் படைப்பை 1803 இல் வெளியிட்டார்.கையிலிருந்த பணம் கரைந்ததால் அடகுக் கடையில் குமஸ்தா வேலை செய்து கொண்டே இரவில் விஞ்ஞானம் சார்ந்து கட்டுரைகள் எழுதினார். பழைய நண்பர் டியார்ட்டின் உதவியோடு "19 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானப் படைப்புகளுக்கு ஓர் அறிமுகம்" எனும் நூலை வெளியிட்டார். டியார்ட்டின் திடீரென இறந்துவிட -செல்வத்தில் பிறந்தவர் தன்னுடைய உடையை விற்று ரொட்டி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.முழுமையான ஈர்ப்பாற்றல் ,மனிதனுக்கான விஞ்ஞானம் ,இயந்திரத் தொழில் அமைப்பு என பல கட்டுரைகள் எழுதினார்.

"இன்றைய துன்ப துயரங்களுக்குக் காரணம் நிலப்பிரபுத்துவ அமைப்பிலிருந்து இயந்திர விஞ்ஞான அமைப்புக்கு மாறுவதில் உள்ளது .புதிய அமைப்பு தோன்றும்வரை இது தொடரும்" என்றார். இவரின் "அறிமுகம்" நூல் இதனை விவரித்தது. அறிமுகத்தின் இரண்டாம் பாகத்தில் பிரெஞ்சுப் புரட்சி முற்றுப் பெறாமல் இருப்பதையும்; அதன் காரணங்களையும் இயல்பாக அலசினார். தொடர்ந்து "மனிதாபிமானிகளுக்கு எழுதிய கடிதம்" உள்ளிட்டவை புதிய அமைப்பு உருவாக வேண்டிய தேவையைச் சொல்லியது.

ரஷ்ய டிசம்பரிஸ்ட் இயக்கத்தை சார்ந்த லியூன் உடன் ஏற்பட்ட தொடர்பு சைமனிடம் பெரும் மாற்றத்தை விளைவித்தது. சமூகத்தை புனரமைக்கச் செய்யும் முயற்சிகள் எல்லாம் பயனற்றுப் போவதையும் தன் படைப்புகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுவதையும் தாங்கிக்கொள்ள முடியாமல் 1823 இல் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றார். ஒரு கண் பார்வையை இழந்தார். மீண்டு எழுந்தார்.

"தொழிலதிபர்களுக்கான குறிப்புரை", "இலக்கிய தத்துவத் தொழில் பேருரைகள்" நூல்களை 1823-24 ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட பின் 1825 இல் நிலைத்த புகழுக்குரிய "புதிய கிறுத்துவம்" நூலைப் படைத்தார். முற்றுப் பெறா அந்நூலில் முதலாளித்துவ சமுதாயத்தை புலன் விசாரணை செய்தார். அனைத்துத் தீமைகளுக்கும் காரணம் எதுவென கேள்வி எழுப்பினார். புரட்சியை தீர்வாகக் காண மறுத்தார். பண ஆதிக்கம், சுரண்டல், போலித்தனம், ஏமாற்று ஆகியவற்றைக் கொண்ட சமூக அமைப்புக்கு மாற்றாக ஒரு கற்பனை சமூகத்தை வரைந்து காட்டினார். வேலை செய்வது அனைவருக்கும் கட்டாயக் கடமையாக்கப்பட்ட சமூகம்; அதில் தொழிலாளிகள், கைவினைஞர்கள், முதலாளிகள் எல்லோரும் இருப்பர். பணம் படைத்தோர் மக்கள் சேவகர்களாக விளங்குவர். புதிய தொழில்மய ஆட்சியில் மக்கள் நலன் பேண விஞ்ஞானிகள், தொழிலாளர்கள் ஒரு புறமும், முதலாளிகள் இன்னொரு புறமுமாய் ஒத்திசைவோடு செயல்படுவர்.கிறுத்துவத்தின் மனிதாபிமான கூறுகளோடு திருச்சபை ஒழுங்குபடுத்தும் கருவியாக்க முனைந்தார் .

1825 இல் சைமன் இறந்த பிறகே அவரது சிந்தனை தீவிரமாக பரவியது. குறிப்பாக 1826 -28-30 ஆம் ஆண்டுகளின் செயிண்ட் சைமனிஸ்ட் என்றழைக்கப்பட்ட அறிவுஜீவிகளும் போராளிகளும் பிரெஞ்சு சமூகத்தில் மட்டுமின்றி ஐரோப்பா முழுவதும் குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்தனர் .அவரது கற்பனாவாத சோஷலிசத்தில் பல பித்துக்குளித்தனங்கள் இருப்பினும் அவர் தலைசிறந்த சிந்தனாவாதி என ஏங்கெல்ஸ் கொண்டாடினார்.
பிரெஞ்சு கற்பனாவாத சோஷலிசம் மார்க்சியத்தின் தோற்றுவாய்களில் ஒன்றென லெனின் எடுத்துக்காட்டினார் ; புதிய சமூகத்தைப் படைக்கும் சமூக சக்தி எதுவென்பதை அடையாளம் காணத் தவறியது அதன் முக்கிய பலவீனமென்றார். மரணத்தை தழுவதற்கு சில நொடிகள் முன்னால்கூட தனது லட்சிய சமுதாயம் கைக்கூடும் என் சைமன் நம்பினார் "நாளை நமதே" என்பதே அவரின் கடைசி வார்த்தையாகும்.புரட்சி தொடரும்…
- சு.பொ.அகத்தியலிங்கம்
நன்றி : தீக்கதிர் , 13 /3/2017



ஆராதிக்கப்படும் பொய்

Posted by அகத்தீ Labels:



ஆராதிக்கப்படும் பொய்




உண்மை பொய் என தினம் தினம்
நிறைய பேசிச் சலித்துவிட்டோம்
உண்மையில் உண்மையைத் தேடுபவரா நீங்கள்
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் !

புராணப் பொய்களை நம்புகிறீர்கள்! கும்பிடுகிறீர்கள்!
சோதிடம் ,ஜாதகம், வாஸ்து என
பொய்யில் கட்டப்பட்ட அனைத்தையும்
ஆராதித்து கொண்டாடுகிறீர்கள் !

விளம்பரப் பொய்களில் வெறிகொண்டு வீழ்கிறீர்கள்
அரிதாரப் பொய்களில் மனதை இழக்கிறீர்கள் !
சாதி,மதப் பொய்களுக்காய் சண்டையிட்டு மாய்கிறீர் !
கல்யாணத்துக்காய் சொன்ன கணக்கில்லா பொய்கள் !

நிதானமாய் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்
வாழ்க்கை நெடுக பொய்களுக்கே ஒப்புக்கொடுக்கிறீர்கள்!
திடீரென்று மெய்மட்டுமே பேசும் தலைவர் வேண்டுமென்றால்
எப்படி கிடைப்பார் ? எங்கு கிடைப்பார் ?

‘இஸ்க்ரா’விலிருந்து விலகினார் லெனின்!

Posted by அகத்தீ Labels:





புரட்சிப் பெருநதி – 18

இஸ்க்ராவிலிருந்து விலகினார் லெனின்!
மார்க்சிய ஞானம் முழுமையாக இல்லாத
நான் முழு நேர ஊழியராக ஆக முடியுமா?’
என பப்ரோவ்ஸ்கயா கேட்க
லெனின் சொன்னார்.



ஓரடி முன்னே போனால் ஈரடி பின்னே போக வேண்டியிருக்கிறது. இவ்வாறு தனி மனித வாழ்விலும் நடக்கிறது; தேசங்களின் வரலாற்றிலும் நடக்கிறது; கட்சியின் வளர்ச்சியிலும் நடக்கிறது. எனினும் புரட்சிகர சமூக ஜனநாயகவாதிகளின் கொள்கைகளும், பாட்டாளி வர்க்க ஸ்தாபனமும், கட்சி கட்டுப்பாடும் முழுவெற்றி அடையும் என்பதில் ஒரு கணம் சந்தேகம் கொண்டாலும் அது மிக மோசமான கோழைத்தனமாக இருக்கும். பின்னடைவுகள் இருந்தாலும் தொடர்ந்து போராட வேண்டும்.” இந்த வரிகளை வலியின்றி எழுதியிருக்க முடியுமோ ? லெனின் எழுத நேர்ந்த சூழலே தனி.

ரகசிய உள்ளறை அடங்கிய பெட்டிகளிலும், புத்தகங்களின் அட்டைகளாகவும், மேல் கோட்டுகளின் ரகசிய உள் ஜேப்பிலும் மறைத்து இஸ்க்ரா ரஷ்யாவுக்குள் கொண்டுவரப்பட்டது. பத்திரிகை நல்ல வரவேற்பைப் பெற்றது. கசங்கி பிய்ந்து போகும்வரை மாறிமாறி பலரால் படிக்கப்பட்டன தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குள் நிலவும் சித்தாந்த ரீதியான சீர்குலைவுகளை அம்பலப்படுத்தவும்; புரட்சிகரத் தத்துவத்தை முன்னெடுக்கவும்  ‘இஸ்க்ராஆயுதமானது.

கட்சியின் இரண்டாவது மாநாட்டில் விவாதிக்க வேண்டியவை குறித்த தயாரிப்பிலும்கட்சித் திட்டத்தை  உருவாக்குவதிலும்; கட்சி ஸ்தாபனத்துக்கு சரியான வடிவம் கொடுப்பதிலும் இஸ்க்ரா ஆற்றிய பணி அதிகம். வரலாற்றாசிரியர் யூ.க்ளிமோவ் கூறுகிறார் , “இஸ்க்ராவை விநியோகம் செய்தவர்கள்அந்தப் பத்திரிகைக்குத் தேவையான தகவல்களை அளித்தனர் .அவர்களே சுற்றுக்கும் விட்டனர் . எதிர்காலத்தில் கட்சியின் மையமாக விளங்கிய முழுநேர புரட்சியாளர்களின் முக்கிய அங்கமாக விளங்கியோரும் அவர்களே.” ரஷ்யாவில் முதலாளித்துவம் வளரவில்லை என்பபோருக்கு பதிலடியாகரஷ்யாவின் முதலாளித்துவ வளர்ச்சிஎன்ற நூல் கிராமப்புற விவசாயிகளை திரட்ட, “கிராமப்புற ஏழைகளுக்காகஎனும் நூல்என லெனின் எழுதிய ஒவ்வொன்றும் குறிப்பான பணியைச் செய்தது.

லெனின் எழுதியஎன்ன செய்ய வேண்டும்?” புத்தகம் வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின்னரே கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் கூடியது. அதற்குள் இந்நூல் பரவலாக கொண்டு செல்லப்பட்டு பெரும் தாக்கத்தை உருவாக்கிவிட்டது. “பொருளாதாரவாதிஎன்ற வார்த்தையே வெறுக்கத்தக்கதாய் மாறிப்போனது; சந்தர்ப்பவாதப் போக்குகளெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. ரஷ்ய சமூகஜனநாயக கட்சியின் 2 ஆவது மாநாடு 1903 ஜூலை 17 இல் பிரெஸ்செல்ஸில் கூடியது. போலீஸ் மோப்பம் பிடித்ததால் இடம் பாதியில் மாற்றப்பட்டு ஆகஸ்ட் 10 இல் லண்டனில் முடிவுற்றது.

மாநாட்டில் இஸ்க்ராவின் கை ஓங்கியிருப்பினும் ஆதரித்தவர்களில் பலர் லெனின் போதித்ததை உள்வாங்கியவராக இல்லை. இஸ்க்ரா முன் மொழிந்த திட்டத்தை மாநாடு ஏற்றாலும்; ஸ்தாபனம் குறித்த பார்வையில் சறுக்கல் ஏற்பட்டது.”கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்டு, கட்சியின் ஏதாவது ஒரு அமைப்பில் பங்கு கொண்டு, தன் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை நிதியாகவும் அளிப்பவரே கட்சி உறுப்பினராவர்என்பது லெனின் வாதம். “தனிப்பட்ட உதவி செய்தாலே போதும்என்பது மார்ட்டோவ் வாதம் . மாநாடு மார்ட்டோ சொன்னதை ஏற்றுக் கொண்டது. மாநாட்டில் லெனின் ஆதரவாளர்கள் பெரும்பான்மையாக இருந்ததால் போல்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர். ரஷ்ய மொழியில் அதற்கு பெரும்பான்மை என்று பொருள். எதிர்ப்பாளர்கள் சிறுபான்மை எனும் பொருள்படும் மென்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர்.

தோல்வியை மென்ஷ்விக்குகள் ஏற்கவில்லை. இஸ்க்ராவின் ஆசிரியராக தேர்வு செய்யப்பட்ட மார்ட்டோவ் ஒத்துழைக்கவில்லை. பிளக்கனோவும் லெனினும் 46 முதல் 51 வரையிலான இதழ்களைக் கொண்டுவந்தனர். பிளக்கனோவ் சந்தர்ப்பவாத நிலை எடுத்தார். மாநாடு நிராகரித்த பழைய ஆசிரியர் குழு உறுப்பினர்களை நியமித்தார். சுருங்கச் சொன்னால் இஸ்க்ராவை மென்ஷ்விக்குகள் கைப்பற்றினர். “ஆசிரியர் குழுவில் லெனின் இல்லைஎன அறிவித்துவிடுமாறு 1903 நவம்பர் முதல் நாள் லெனின் கடிதம் எழுதிவிட்டு இஸ்க்ராவுடன் தன் உறவை முறித்துக் கொண்டார். இஸ்க்ரா மென்ஷ்விக்குகள் பத்திரிகையானது.

இஸ்க்ராவிலிருந்து வெளியேறியபின் லெனினுக்கு பதில் சொல்லும் விதத்தில்செய்யக் கூடாதது என்ன?” என கட்டுரையை வெளியிட்டார் பிளக்கனோவ் . “என்ன செய்ய வேண்டும்?” நூலுக்கு பதில் என்பதால் தலைப்பும் இப்படி சூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் தமது கருத்தை தோழர்களுக்கு எப்படியாவது தெரிவித்துவிட வேண்டும் என லெனின் துடித்தார். 1904 பிப்ரவரி முதல் மே வரை கடுமையாக உழைத்து உருவாக்கிய நூலேஓரடி முன்னே! ஈரடி பின்னே”. 180 பக்கங்கள் கொண்ட இந்நூலில் கட்சிக்குள் நடக்கும் உள்கட்சிப் போராட்டத்தில் தமது தரப்பு நியாயத்தைசித்தாந்த, ஸ்தாபனக் கூறுகளை நுட்பமாக எழுதினார். ஜெனீவாவில் நூல் வெளியிடப்பட்டது.

கட்சியின் மத்தியக் குழு இந்நூலை நிராகரித்தது. இதன் விநியோகத்தைத் தடுக்க பிளக்கனோவ் கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் இந்நூல் மிக வேகமாகப் பரவியது. லெனின் வாதத்தில் உண்மை ஒளிர்வதை கட்சி அணியில் பெரும்பான்மையோர் உணர்ந்து உள்வாங்கினர். லெனின் வெளிநாட்டில் சோம்பிக் கிடக்கவில்லை. நிக்கோலாய் பவுமான், லித்வீன், பப்ரோவ்ஸ்கயா என நம்பகமான தோழர்களுக்கு பல பொறுப்புகளைக் கொடுத்து பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்.

மார்க்சிய ஞானம் முழுமையாக இல்லாத நான், முழு நேர ஊழியராக ஆக முடியுமா?” என பப்ரோவ்ஸ்கயா கேட்க லெனின் சொன்னார், “முழுநேரப் புரட்சியாளர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் உரிமை தன்னலங் கருதாது கட்சிக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட எவரொருவருக்கும் உண்டு. எவருடைய கட்சி வாழ்க்கையும் சொந்த வாழ்க்கையும் ஒன்றாக இணைந்து விடுகிறதோ அவருக்கு அந்த உரிமை உண்டு. புரட்சியாளர்களின் வட்டத்தை தலைவர்களின் சிறுபரிவாரமாகச் சுருக்கிவிடக்கூடாது. பொதுமக்களுடன் நேரடித் தொடர்புடைய சோர்வற்ற நிரந்தரப் பணியாளர்கள் தேவை.

கட்சியை வெறுமனே அறிவு ஜீவிகள் கட்சியாக பார்க்கும் ஊனப்பார்வையை லெனின் எதிர்த்தார். அறிவுஜீவிகளின் தேவையை மறுக்கவில்லை. மேலே பதில் சொன்னாரே அத்தகைய ஊழியர்களின் அணிவகுப்பாக பார்த்தார். மார்க்சிய வரலாற்றில்ஓரடி முன்னே, ஈரடி பின்னேவலுவான ஸ்தாபனத்தைக் கட்டியமைக்க பாதை போட்டது; மூன்றாவது மாநாட்டை நோக்கி தன் பார்வையை செயல்பாட்டைத் திருப்பலானார்.


புரட்சி தொடரும்

நன்றி ! தீக்கதிர்  6 /3/2017