கவிதை தினமாமே

Posted by அகத்தீ Labels:


கவிதை தினத்தில் ....


எலிகளின் வழக்கை பூனையிடம் ஒப்படைத்துவிடலாம்
பூனை மிருதுவானது அதிராமல் நடக்கும்
பூனையின் மீசை பார்க்க அழகா இருக்கும்
மியாவ் என அது கத்துவது இனிமையானது
எலிகளின் வழக்கை பூனையிடம் ஒப்படைத்துவிடலாம்

மான்களின் பாதுகாப்பை புலிகளிடமே விட்டுவிடலாம்
புலிகள் கம்பீரமானவை நடந்தால் பூமி அதிரும்
புலிகளின் உறுமல் எதிரியை நடுங்க வைக்கும்
புலிகளின் ராஜ்யத்தில் எதிரிகள் நுழைய முடியாது
மான்களின் பாதுகாப்பை புலிகளிடமே விட்டுவிடலாம்

ஆட்டு மந்தை காவலுக்கு நரிதானே பொருத்தமானது
நரிகளின் கண்கள் எப்போதும் ஆட்டு மந்தை மீதே இருக்கும்
நரிகள் ஊளையிட்டால் ஊர்முழுதும் நடுங்கும்
நரிகளுக்கு இருட்டெனில் இரட்டிப்பு கொண்டாட்டம்
ஆட்டு மந்தை காவலுக்கு நரிதானே பொருத்தமானது


[ கவிதையை முடிக்கும் முன்னே என்னைச் சுற்றி ஒரு விலங்குக் கூட்டம் . உறுமுகின்றது . “ கவிதை தினத்தில் ஒரு கவிதை எழுதியது தப்பா ?” என முனகினேன் . “ என்னது தப்பான்னா கேட்கிற … நாங்க வன்புணர்வு  செய்தோமா ? இனவிருத்தி காலமின்றி பிற நாட்களில் காமத்தை சுமந்தலைந்தோமா ? பசிக்காத போது வேட்டையாடினோமா ? தேவைக்கு மேல் சேர்த்தோமா ? சாதி ,மத வெறி கொண்டலைந்தோமா ? ஆணவக் கொலை செய்தோமா ? நாங்கள் உங்களைவிட மேலானவர்கள் … உங்களோடு எங்களை ஒப்பிட்டு இழிவு செய்யாதீர் ! …” திடுக்கிட்டு விழித்தேன் . ச்சே இவ்வளவு நேரம் கனவு கண்டிருக்கிறேன் ]
- சு.பொ.அகத்தியலிங்கம்









0 comments :

Post a Comment