சிலையை ரசித்தோம்... ஆனால்... ?

Posted by அகத்தீ Labels:





சிலையை ரசித்தோம்... ஆனால்... ?
சு. பொ. அகத்தியலிங்கம்
கோயிலுக்கு ஆத்திகர்களும் போவார்கள். நாத்திகர்களும் போவார்கள். ஆத்திகர்கள் அங்குள்ள சாமி சிலைகளை பக்தி சிரத்தையோடு கும்பிடுவார்கள். ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள். நாத்திகர்கள் புராணங்களைக் கிண்டல் அடிப்பார்கள், வேறு சிலர் அங்குள்ள சிற்பங்களை கலைக்கண்ணோடு பார்த்து ரசிப்பார்கள். வெளிநாட்டிலிருந்து கூட சுற்றுலாப் பயணிகள் வந்து கோயில் சிற்பங்களில் அழகில் சொக்கி நிற்பதை நாம் கண்டிருக்கிறோம்.  ஆனால் எப்போதாவது ஒவ்வொரு சிற்பத்திற்கும் பின்னால் ஒரு பெரிய சமூக கண்ணோட்டம் ஒளிந்து கொண்டிருப்பதை யோசித்து பார்த்திருக்கிறோமா ? அதிலும், பொதுவாக பெண் சிற்பங்கள் எப்படி செதுக்கப்படுகிறது? ஆணின் எந்த பக்கம் வைக்கப்படுகிறது? எவ்வளவு உயரத்தில் வைக்கப்படுகிறது? என்பதை எல்லாம் நாம் கூர்ந்து பார்த்ததில்லை. முனைவர் பெ. நிர்மலா ஒவ்வொரு சிற்பத்தையும் கூர்ந்து பார்த்திருக்கிறார். ஆழ்ந்து பயின்றிருக்கிறார்.  பெண் சிற்பங்களுக்கு பின்னால் ஆணாதிக்க சிந்தனை வலுவாக இருப்பதை; புராணக்கட்டுக்கதைகள் மூலம் பெண் அடிமைத்தனம் வலுவாக வேருன்றப்பட்டிருப்பதை; மூடநம்பிக்கைகள் விரவப்பட்டிருப்பதை ஆசிரியர் அலசி நமக்கு எடுத்து காட்டுகிற போது அதிர்ச்சி ஏற்படுகிறது.
  "மநு கூறும் ஆதிக்க மரபினரின் குறியீடுகளே  கோயில்கள். இக்கோயில்களை உருவாக்கிய ஆதிக்க சக்திகள் இயற்கை மரபு மற்றும் உலோகாயத மரபுகளை அழித்து , அந்த இடத்தில் வைதீக மரபை, கட்டமைத்தார்கள். இதற்கான காட்சி வழித்தரவுகளே கோயில்கள். இக்கோயில்கள் சார்ந்த கலை ஆய்வுள் முன்னேடுக்கப்படும் அளவுக்கு அவற்றிலிருக்கும் கருத்துநிலை சார் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதில்லை. சிற்பங்களின் கலை நுணுக்கம் குறித்து பேசும், வல்லுநர்கள், அவற்றிலிருக்கும் பெண் அடிமை கருத்துநிலை குறித்து அக்கறை கொள்வதில்லை; ஏனெனில் இவ்வகையான கலை வல்லுநர்கள் அடிப்படையில் ஆணாதிக்க மன நிலையினராகவே உள்ளனர். சிற்பக்கலையின் அழகியல் என்பது பெண்களை கட்மைப்பதில் செய்திருக்கும் தில்லு முல்லுகளை வக்கரங்களை அதிகாரங்களை இனங்காண்பதில்லை. சிற்பங்களின் கோணங்களில் சொக்கிப்போகும் வல்லுநர்பெருமக்கள் பெண் தொடர்பான கேவலங்களை அவை காட்சிப்படுத்தப்படுவதைக் கவனத்தில் எடுத்தார்களா என்பது சந்தேகம். நிர்மலாவின் இந்நூல் மேல் குறித்த அவலங்களை மிகவும் நுணுக்கமாக அம்பலப்படுத்தும் பணியை செய்கிறது. ஆணாதிக்க மரபில் உறுவான இன்னொரு காமசூத்திரங்களாகவே கோயில் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருப்பதை இந்நூல் விரிவாகப் பேசுகிறது"என்று முன்னுரையில் அரசு கூறுவது மிகையல்ல.
பொதுவாக பெண் சிற்பங்கள் எல்லாம் இடது பக்கமாகவே அமைக்கப்படுவது ஏன்? சில சிற்பங்களில் வலது பக்கமாகவும் அமைந்தது எதனால்? வெளிப்பார்வைக்கு மிக எளிதாக தோன்றும் இக்கேள்வி இந்து மதத்தில் பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கிற அடிமை நிலையின் வெளிப்பாடே என்பதை தக்க சான்றாதாரங்களுடன் நிர்மலா நிறுவுகிறார்.
 பெண் ஆணுக்கு அடங்கிய மனைவியாக - மதம் பாராட்டும் பத்தினியாக பெண்ணை காட்டுகிற போது இடது பக்கம்  பெண்ணை நிறுத்துவதும், ஆணுக்கு அடங்காமல் திமிறுகிற பெண்ணை அல்லது எதிர்த்து போராடுகிற பெண்ணை அல்லது காமநுகர்ச்சியை சித்தரிக்கும் வேளையில் பெண்களை வலது பக்கம் சித்தரிக்கிறார்கள் என்பது இந்நூலில் வலுவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல மேல் கீழ் என சிற்பங்களை செதுக்குவதும், இவ்வாறு உயர்வு தாழ்வு அடிப்படையில் தான் என்பதையும்; துய்மை புனிதம் என்பன போன்ற எதிர் நிலை கருத்தாக்கங்களும் ஆணாதிக்க மனோநிலையின் அடிப்படையில் சிற்பங்களை செதுக்குவதிலும் எப்படி எல்லாம் பிரதிபலிக்கிறது என்பதையும் இந்நூல் நெத்தியடியாக உரைக்கிறது. 
சிற்பங்களைப் பற்றி கூறுகிற போது  அதனோடு இணைந்த பல்வேறு புராணகதைகளின் வக்கிரமான ஆதிக்க மனோபாவத்தை மிக நுட்பமாக நிர்மலா நூல் நெடுக அம்பலப்படுத்தி கொண்டே செல்கிறார்.  சிலை செய்கிற கல்லைத் தெர்ந்தெடுக்கிற போது கூட மணியோசை போன்ற நாதம் என்றால் அக்கல்லில் ஆண்சிலை வடிப்பதையும் தாளம் போன்ற ஓசையிருந்தால் அதில் பெண் சிலை வடிப்பதையும்; இவர் சுட்டிக்காட்டுகிற போது அதிர்ச்சி ஏற்படுகிறது . சமூகத்திற்குள் ஊடுருவியிருக்கிற ஆதிக்க கருத்தோட்டத்தின் குரூரம் பளிச் என புலப்படுகிறது.  அதேபோல ஆணாதிக்கத்தை எதிர்த்த பெண் தொன்மங்களையும் , பெண் கடவுள்களையும் அது தொடர்பான சிற்பங்களையும் எடுத்துக் காட்டி சமூகத்திற்குள் பெண் விடுதலை சாம்பல் பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருப்பதை தக்க உதாரணங்களோடும் புராண கதைககளோடும் சொல்லி சென்றிருப்பது பாராட்டுக்குரியது. சூரிய சந்திர பற்றி கருத்தோட்டம் கூட எப்படி ஆண் பெண்ணாக கையாலப்பட்டிருப்பது என்பதை -  ராசிகள் வர்னாசரம அடிப்படையில்  பிரிக்கப்பட்டிருப்பது என்பதை அந்த கருத்துக்கேற்பவே செதுக்குகிற சிற்பங்களும் அதற்குரிய இடம் வழங்கப்படகிறது என்பதை, பெண்களை வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் அடக்கியே வைத்திருக்கிற சமூக இழிவு சிற்பக்கலையிலும் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை  இந்நூலில் பரவலாக எடுத்துக் காட்டுகிறார். 
வரதராஜ பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், உலகளந்த பெருமாள் கோயில், முத்தேஸ்வரர் கோயில், மதங்கேஸ்வரர் கோயில், கைலாச நாதர்கோயில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், ஐராவதேஸ்வரர் கோயில் என பத்து கோயில் சிற்பங்களை எடுத்துக் கொண்டு இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். அதே சமயம் இந்த சிற்பங்களுக்குள் மட்டும் நின்று விடாமல் பொதுவாக பெண் பற்றிய பார்வை இந்திய சமூகத்தில் குறிப்பாக இந்து வர்ணாஸ்சரம அமைப்பில் எவ்வளவு கீழானதாக இருந்தது என்பதை சிற்பங்கள் மூலம் ஆணித்தரமாக நிறுவுகிறார்.

இந்நூலினுடைய மொழி நடை மிகவும் நுட்பமானது.   மொழி பிறந்தது பெண் கடவுளர்களிடமிருந்து  என்று பொதுவாக கதைகள் புனையப்பட்டதை ; வாழ்க்கை அனுபவத்தில் தாய்வழியாகவே குழந்தை பேசக்கற்று கொள்கிறது என்பதை; சொல்லுவதோடு நின்றுவிடாமல்; தற்போது சொல்லாடல் (மொழி) பெண்ணின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. ஆண்களின் கட்டுப்பாட்டிற்குள் சிக்குண்டு கிடக்கிறது என்பதை நிர்மலா உதாரணங்களோடு எடுத்து காட்டுகிறார்.  ஆணுக்கும் , பெண்ணுக்கும் இறுதியான பண்புகளை ஏற்றிச் சித்தரிக்கும போக்கு அறிவியல் சார்ந்ததாக இல்லை என்பதை ஏங்கெல்ஸ் மேற்கோளோடு எடுத்து காட்டுகிறார்.   இந்த நூல் ஒருவகையில், சிற்பக்கலையில் ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்துகிறது. இன்னொரு வகையில் நமது புராண மரபில் வேரோடி இருக்கிற ஆணாதிக்கம் மற்றும் சாதி ஆதிக்கம் இவற்றின் கோர முகத்தை இந்நூல் அம்பலப்படுத்துகிறது. நூலை படித்து முடித்த பிறகு சிற்பம் ஓவியம் எதைப் பார்த்தாலும் அதற்குள் பொதிந்து கிடக்கும் கருத்தாதிக்கத்தைப் பற்றி  கொஞ்சநேரமாவது மனதிற்குள் ஒரு உறுத்தல் ஏற்படத்தான்  செய்யும். 
தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம்
முனைவர். பெ. நிர்மலா
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்
97/55, என்.எஸ். கிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம் , சென்னை - 600 024
பக்: 408 விலை ரூ. 280/-

1 comments :

  1. Rathnavel Natarajan

    விரிவான பதிவு; படித்தேன். நன்றி.

Post a Comment