பொண்ணு கறுப்பு : மேலே இருபத்தைந்து சவரன்
போட்டுக் கொடுங்க...
சு.பொ. அகத்தியலிங்கம்
[திருமணம்
குறித்து ஆறுகட்டுரைகளுக்குத் திட்டமிட்டு எழுதிவருகிறேன்.இது நான்காவது கட்டுரை.12-08-2012 , 30-09-2012 மற்றும் 4-12-2012 தேதிகளில் முந்தைய கட்டுரைகளின் பதிவைக்
காண்க.]
“எதுக்குமா பெர்மிஷன்,” எனக் கேட்ட சூப்பர்வைசரிடம்
”என்னை இண்ணிக்கு பெண் பார்க்க வராங்களாம்.”
என கூனிக்குறுகி சொல்ல,
“..ம்... இந்த முறையாவது வரண் குதிரட்டும்” என
வாழ்த்துச் சொல்லி அனுமதி
கொடுத்தார் அவர்.
இது ஏழாவது
முறை. இன்னும் எத்தனை முறை முன்பின்
தெரியாதவங்க முன்பு காட்சிப் பொருளாய்
நிற்க வேண்டுமோ ? காபி கொடுத்து
காலில் விழ வேண்டுமோ? நளினியின் உள்ளத்தில்
கொந்தளித்த கேள்வி இது.
பெரும்பாலான பெண்களுக்கு இந்த தண்டனை
உண்டு. இதன் உள் வலியை பெண்களே
அறிவர்.
இது போல் மாப்பிள்ளை பார்க்கும் படலம்
எங்காவது உள்ளதா? இல்லையே. ஏன்?
ஒரு மாறுதலுக்காக பெண்வீட்டாரும் பெண்ணும்
மாப்பிள்ளை வீட்டிற்குச்
சென்று பார்த்தால் எப்படி இருக்கும்?
இந்தக் கேள்வியே பலருக்குக்
கசக்கும். ஒரு ஹோட்டலிலோ பூங்காவிலோ இருவரும்
எதிரெதிரே அமர்ந்து தேநீர்
அருந்தியபடியோ நொறுக்குத் தீனியை சுவைத்தபடியோ
இயல்பாக உரையாடி ஒரு
முடிவுக்குவரும் காலம் எப்போது வருமோ?
அது இருக்கட்டும். ஒரு பெண்ணை எப்படி முடிவு செய்கிறார்கள்?அது மிக
முக்கியமானது.
எனக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் வீட்டில்
ஒரு நாள் உரையாடிக்
கொண்டிருந்த போது அவர் மனைவி சொன்னார், “மூத்தவளுக்கு வயசாகிட்டுப்
போகுது. சீக்கிரம் கட்டிக் கொடுத்துடணும்.
இளையவளும் காத்திருக்கா..
இவருக்கு கொஞ்சமாவது பொறுப்பிருக்கா சொல்லுங்கண்ணே...”
எனச் சீற....
“இரு.. இரு.. சும்மா இரையாதே.. அததுக்கு
நேரம் வரவேண்டாமா,” -என நண்பர்
பதில் சொல்ல வாதம் தடித்தது. ஒரு வழியாய்
சமாதானம் சொல்லி அங்கிருந்து
நகர்வதற்குள் பெரும்பாடாகிவிட்டது.
பெரியவள்எம்.ஏ., பி.எட். பள்ளி ஆசிரியை.
இப்போது பிரச்சனையே இதுதான்.
இவள் படிப்புக்கும் வேலைக்கும் ஈடாக வரண்
தேடினால் நிறைய வரதட்சணை
கேட்கிறார்களாம். சாதி, உபசாதி, ஜாதகம் எல்லாம் பொருந்தினாலும் உடன்பாடு
வராமல் இழுத்தடிக்கிறது. காரணம் இவள்
கறுப்பாக இருப்பதால் அதுக்காக
மேலும் இருபத்தைந்து சவரன் போடணுமாம்.
அழகு சற்றுக் குறைவாம் அதற்கு
மேலும் நகை போடணுமாம். ஆக தங்கமும் ரொக்கமும்தான்
பெண்ணை முடிவு
செய்கிறது.. எத்தனை நாள் தங்கமும் ரொக்கமும்
பெண்ணை முடிவு செய்ய
அனுமதிக்கப் போகிறோம்?
ஒரு நாள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்
ஐ.டி. இளைஞர்கள் எத்தகைய பெண்களை
விரும்புகிறார்கள் என்கிற விவாதம் நடந்தது.
படிப்புக்கும் தொழில்நுட்ப
அறிவுக்கும் சம்பந்தமே இல்லாமல் அந்த
இளைஞர்கள் பேசினார்கள். கிராமத்துப்
பெண்தான் வேண்டுமாம். குடும்பத்துக்கு
ஏற்ற குத்துவிளக்காய்
இருக்கவேண்டுமாம். அதிர்ந்து பேசக்கூடாதாம்.
அடக்க ஒடுக்கமாய்
இருக்கவேண்டுமாம். அதாவது இவர்களுக்கு
ஒரு அடிமை வேணும். அதற்கு
ஆயிரத்தெட்டு வார்தை ஜாலங்கள்.
பெண் பார்க்கும்போது மூக்கும் முழியும்
லட்சணமாய் சிவப்பாய் அழகாய்
ஒல்லியாய் அடக்கமாய் என்ற சில பழகிப்போன
அளவுகோல்கள் சரியான இணையைத்
தேர்ந்தெடுக்க ஒருபோதும் உதவாது.
அம்மாவைத் தண்ணீர்துறையில் பார்த்தால்
போதும் பெண்ணை வீட்டில்
பார்க்கவேண்டாம் என்று கூறுவதுண்டு. காரணம்
தண்ணீரைச் சிக்கனமாகச் செலவு
செய்யும் குடும்பம் ஊதாரியாக இருக்காது
என்பது மண்சார்ந்த நம்பிக்கை.
அப்படியே ஏற்க இயலாது எனினும் சிக்கனம்,
எளிமை இரண்டும் வாழ்வின்
முக்கியக்கூறுகள். மகிழ்ச்சியின் சாவிகள்.
இதை கைவரப் பெற்றவர்களாய்
மணமக்கள் இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு
சரிதான்.
“பசிக்குபனம்பழத்தைத் தின்றுவிட்டு பித்தத்துக்கு
வைத்தியம் பார்ப்பது போல”
என்றொரு சொலவடை கிராமத்தில் உண்டு. தங்கத்துக்கும்
ரொக்கத்துக்கும்
விலைபோய்விட்டு காலத்துக்கும் பொண்டாட்டி
சரியில்லை எனப்
புலம்பித்திரிகிற பலர் வாழ்க்கையை பார்க்க
முடிகிறது. ஏன்?
என் நண்பர் ஒருவர் தன் மகனுக்கு பெண்
தேடினார். அவருக்கும் எனக்கும்
அறிமுகமான இன்னொரு நண்பரின் மகளைப் பார்க்கலாமே
என பேச்சுவாக்கில்
சொன்னேன். சரி என்றவர், ஒரு நாள் ஹோட்டலில்
மதிய உணவுக்கு அழைத்தார்.
பெண்ணும் , பையணும் ஒரு மேசையில் உணவருந்துமாறு
ஏற்பாடு செய்து விட்டு
நாங்கள் தனியாக உணவருந்தினோம். அவர்கள்
பேசினர். தொலை பேசி எண்ணைப்
பரிமாறிக் கொண்டனர். பின்னர் சில நாட்கள்
உரையாடினர். அதன் பின் இருவரும்
சம்மதம் தெரிவித்தனர். வரண் உறுதியாகாமல்
கை நனைக்க மாட்டோம் சாப்பிட
மாட்டோம் என்கிற விதியெல்லாம் ஓரங்கட்டப்பட்டது.
இதில் இரு வீட்டிலும்
உள்ள பெண்களுக்கு கூட முதலில் தயக்கம்
இருந்தது. அனால் பெண்ணும்,
பையனும் புரிந்து கொண்டு திருமணம் செய்தனர்.
வெற்றிகரமாக வாழ்கின்றனர்.
ஆணும் பெண்ணும் மனம்விட்டுப் பேசி ஒருவரை
ஒருவர் புரிந்து கொண்டு; குறை
நிறைகளோடு பரஸ்பரம் ஏற்றுக்கொள்கிற சூழல்
இங்கு இல்லை; அல்லது அது
மறுக்கப்படுகிறது; அல்லது அது தவறானது
என்கிற கருத்து நம் சமூகத்தை
ஆட்டிவைக்கிறது.
எனவேதான். பெண்ணைக் கட்டிக்
கொடுப்பது என்ற வார்த்தை
பயன்பாடு நிலவுகிறது. அதாவது இட்லியை,
சர்க்கரையை, இன்னபிற பண்டங்களை
பொட்டலம் கட்டிக் கொடுப்பது போல் பொட்டலம் கட்டி வாங்குவதுபோல்
பெண்ணையும் ஒரு பண்டமாகக் கருதுகிறச்
ஆணாதிக்கச் சிந்தனையின் விளைவாகவே
பெண்னைக் கட்டிக்கொடுக்கும் சமூகமாக நாம்
நெடுங்காலமாக இறுகிக்
கிடக்கிறோம். இதனை உடைத்தெறியாமல் மகிழ்ச்சியான
இணையர்களைத் தேர்வு செய்ய
முடியாது.
கன்னிகாதானம் என்ற வழக்கம்
இதைவிடக் கொடுமையானது. ஆடா? மாடா?
சோறா? துணியா? பெண்ணை தானமாகக் கேட்டிட?
-இவ்வாறு கேட்பதும் பெறுவதும்
ஆதிக்க வெறியன்றி வேறென்ன? இப்படியான
சமூக பொதுப்புத்தியினூடே
பெண்பார்த்தலில் பிழைகள் நேர்கின்றன.
பெண்ணைத் தெரிவு செய்ய எந்த அளவுகோலைக்
கைக்கொள்வது? அந்தப் பெண்
வாழ்க்கையின் சவால்களை எதிர் கொள்கிற
ஆற்றல் உள்ளவளா? பெண்விடுதலையைச்
சரியாகப் புரிந்து கொண்டவளா? இன்றைய சமூகச்
சூழல்களை ஒரளவேணும்
உணர்ந்தவளா ? இவையே முதல் அளவுகோலாக இருக்கமுடியும். பெண் விடுதலையை
சரியாகப் புரிந்து கொள்வதென்பது யாது?
எப்படி ? பிறிதொரு சமயம்
பார்ப்போம்.
இரண்டாவதாக, ஆணுக்கு சுயதிறன், சுயநம்பிக்கை,
சுயவிருப்பம், சுயமுயற்சி,
சுயசிந்தனை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு
பெண்ணுக்கும் முக்கியம். பெண்ணின்
சுயமுயற்சியை அகராதித் தனமாகவும், சுயநம்பிக்கையை
திமிராகவும்,
சுயசிந்தனையை மண்டைக்கனமாகவும் பார்க்கும்
போக்கு கூடவேகூடாது. சுயதிறனை
வெளிப்படுத்த வாய்ப்பும் சூழலும், சுயவிருப்பத்தை வெளிப்படுத்துவதை
தப்பாக எடுத்துக் கொள்ளாத நிலையும் தேவைப்படுகிறது.
மூன்றாவதாக, பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை
எக்காரணத்தைக் கொண்டும்
கைவிட்டுவிடாத பார்வையும் அணுகுமுறையும்
அவசியம்.
அடுத்து, ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு
கல்யாணத்தை முடித்திடு என்பதைப்
போல ஆபத்தான, சிக்கலான உபதேசம் வேறில்லை.
பொய்யான சித்தரிப்புகளோடு
கல்யாணத்தை முடித்துவிடலாம்தான். கெட்டிக்காரரின்
பொய்யும் புரட்டும்
எட்டு நாளிலே தக்கு முக்கு திக்கு தாளமாகிவிடும்.
பெண்வீட்டார் சொல்கிற
பொய் பெரும் பிரச்சனையாகிவிடும். பெண்ணை
வாழவெட்டி என்ற கொடுஞ்சொல்லோடு
முடக்கிவிடும்.
மாப்பிள்ளை வீட்டார் சொல்லும்
பொய்கள் அம்பலப்பட்டாலும்
பெண்ணுக்கு வேறு வழி ஏது? தலையெழுத்தே
என சகித்துகொண்டு காலம் தள்ள
சமூகம் கட்டாயப்படுத்திவிடும்.
ஆகவே முடிந்தவரை
யதார்த்தத்தை உணர்ந்துஉணரவைத்து - உள்ளதை உள்ளபடி அங்கீகரித்து
- மணம் செய்வதே நன்று. ஆனால்இது சொல்வதற்கு மிக எளிது. செயலில் காட்டிட
அசாத்திய துணிச்சலும்
தன்னம்பிக்கையும் வேண்டும். ஆனால் இதற்கு
மாற்று இல்லை. ஆயிரம்சொல்லுங்கள் விவாகரத்துகள் இப்போதுதானே
அதிகரித்திருக்கிறது என்கிறவெடிகுண்டுக் கேள்வி எங்கும் எறியப்படுகிறது.
ஆம். உண்மை. உண்மையைத் தவிரவேறில்லை. ஆனால் அந்த உண்மையைப் புரிந்து
கொள்வதிலும் எதிர்கொள்வதிலும்நாம் ஒரு நாடகம் ஆடுகிறோம். நம்முள் இருக்கிற
ஆணாதிக்கச் சிந்தனை
அப்படிச் செய்விக்கிறது. ஆணாதிக்கச் சிந்தனை
ஆணுக்கு மட்டுமல்லபெண்ணுக்கும் இருக்கிறது! ஆம். அதை ஊட்டித்தானே
வளர்ந்திருக்கிறோம்.வளர்க்கப்பட்டிருக்கிறோம்.
கணவன் எப்படிப்பட்ட அயோக்கியனாக இருப்பினும்
பொறியில் சிக்கிய எலியாய்
உழல்வதே பெண்களின் தலைவிதி என்பதை ஏற்க
மறுத்து - ஒத்துவராதபோது தூக்கி
எறிய இன்றையப் பெண்கள் முன்வருவது நல்லதுதானே.இப்போது
அந்த உணர்வு
மேலோங்கி வருவது கண்டு மிரள்வது பொருளற்றது.
மாறாக ஆண்சமூகம் இன்னும்
திருந்த வில்லையே என வருந்துவதும் திருந்த
வழிகாண்பதும்தாம் மாற்று.
பெருகும் விவாகரத்துகளை இப்படித்தான்
புரிந்துகொள்ள வேண்டும். எல்லா
இடத்திலும் இது அப்படியே பொருந்தாமல்
போகக்கூடும். ஆயினும் யார் தவறு
செய்யினும் சேர்ந்துவாழ முடியாதபோது கவுரவமாய்ப்
பிரிந்து வாழ்வது
ஆரோக்கியமானதுதானே? அதுகண்டு ஏன் கலங்க
வேண்டும் ?
இதில் மிகுந்த வலிதருவது எது தெரியமா
? பெண்ணின் ஒழுக்கம் சார்ந்து
வீசப்படும் கணைகள்தாம். கதைகட்ட ஒருவன்
பிறந்துவிட்டால் கண்ணகி
வாழ்விலும் களங்கம் உண்டு என்கிற கண்ணதாசன் பாடல்வரிகளை ஒருபோதும்
மறந்துவிடக்கூடாது.
சமூகத்தின் அவதூறுக்கும் பழிச்சொல்லுக்கும்
அஞ்சுவதாலும், புகலிடம் எது
எப்படி என்கிற பெண்களின் எதிர்காலக் கலக்கத்தின்
காரணமாகவும்தான்
இன்றைக்கும் கணிசமான குடும்ப உறவு உடையாமல்
நூலிழையில் தொங்கிக்
கொண்டிருக்கிறது. தாலியின் புனிதம் இந்த
சமூகநிர்ப்பந்தத்தில்தான்
ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
வாழ்க்கைக்கு குறைந்தபட்ச உத்திரவாதமும்
பழிச்சொல் எழாது என்கிற சூழலும்
ஏற்படுமானால் கணிசமான பெண்கள் நாளையே
விவாகரத்து கோரி வழக்குமன்றம்
சென்றுவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை.
சமூகநுகத்தடிதான் வலுக்கட்டாயமாகப் பலரைப்
பிணத்து வைத்துள்ளது.படிப்பும்
சொந்தக்கால் பொருளாதார நிலையும் உள்ள
இந்தக்காலப் பெண்கள் இந்த
நுகத்தடியைத் தூக்கி எறிய முன்வருவதைக்
கண்டு கலங்குவதைவிட
குடும்பவாழ்வில் சமத்துத்வதையும் ஜனநாயகத்தையும்
நோக்கி மெல்ல மெல்ல
ஆனால் உறுதியாகப் பயணிப்பதே சரியானது.
நியாயமானது. அது எப்படி என்பதையும்
இனி பகிரங்கமாகப் பேசியாக வேண்டும். பேசுவோம்.
வேறுவழி இல்லை.
0 comments :
Post a Comment