சின்மயி-கார்த்திக் சிதம்பரம் சமூக வலைதளங்கள் : கருத்துச் சுதந்திரமும் காக்கிச் சட்டையும்

Posted by அகத்தீ Labels:
 

 

சின்மயி-கார்த்திக் சிதம்பரம் சமூக வலைதளங்கள் :

 கருத்துச் சுதந்திரமும் காக்கிச் சட்டையும்
சு.பொ.அகத்தியலிங்கம்


பாடகி சின்மயியை பாலியல் ரீதியாக இழிவுபடுத்தும் பதிவுகளை முகநூல், டுவிட் டர் போன்ற சமூக வலைதளங்களில் உலவ விட்டதாக சின்மயி கொடுத்த புகார் அடிப் படையில் ராஜன் சரவணபெருமாள் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிலர் விசார ணைக்கு உட்படுத்தப்பட்டனர். இது போல் கார்த்திக் சிதம்பரத்தை விமர்சித்து பதிவிட்ட ரவி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து கருத்து சுதந்திரம் குறித்த விவாதங்கள் முன்னுக்கு வந்துள்ளன. பல கேள்விகள் எழுந்துள்ளன.

முதல் கேள்வி, ஒரு கருத்தைச் சொல்ல ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் கைது செய்வது எந்தவகையில் நியாயம்?

இரண்டாவது கேள்வி, பொதுவெளியில் செயல்பட முன்வரும் பெண்களின் கருத்து களை கருத்துரீதியாக எதிர்கொள்வதற்கு பதில் - அதற்கும் அப்பால் சென்று பாலியல் ரீதியாக இழிவுபடுத்திப் பதிவிடுவது எப்படி நியாயமாகும்?

இரண்டும் தவறென்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்.ஆனால் விவாதங்கள் வேறு பல தளங்களுக்கும் சென்றுவிட்டன. அது குறித்தெல்லாம் இனியும் பேசாமல் இருக்க முடியாது. 

        "ஆபாசம் என்பது பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் மட்டும்தான் என்று உங்களுக்கு யார்  சொல்லித் தந்தது? கோடிக் கணக்கான மக்களின் உணர்வுகளை காயப் படுத்துவது, அவர்களின் வரலாற்றுத் துயரங் களை அவமதிப்பது எல்லாம் ஆபாசமா காதா?"   என்று மனுஷ்ய புத்திரன் எழுப்பும் கேள்வியையும்   ; 
 " இணையம் தொடர்பான இந்தச் சட்டம் அரசியல் சாசனம் அளித் துள்ள கருத்துரிமைகளையும் தனி மனித உரிமைகளையும் பறிக்கிறது என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்தச் சட்டத்தின் படி ஒருவரை எரிச்சலூட்டும்படி எழுதினாலே கைது செய்ய முடியும். " என அவர் கோபப்படுவதையும் அவ்வளவு சுலப மாகப் புறக்கணித்து விடமுடியாது.

மறுபுறம், "புகார் கொடுப்பதன் மூலம் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்கப் படுகிறது என்பது சின்மயி எதிர்ப்பாளர் களின் இன்னொரு விவாதம். ஒரு பெண்ணை இப்படித் தாக்கி அவளை வாய் மூட வைப்ப தும், சமூக வலைத் தளத்திலிருந்து ஓடவைப் பதும் மட்டும் கருத்துச் சுதந்திரப் பறிப்பு இல்லையா?" என அ. மார்க்ஸ் எழுப்பி யுள்ள கேள்வியும் இன்னொரு கோணத்தில் யோசிக்கச் சொல்கிறது.

அதேபோல் கவிஞர். மீனாகந்தசாமி உட்பட பத்தொன்பது பெண்கள், தங்களை சமூகவலைதளங்களில் பாலியல் ரீதியாக இழிவு செய்யப்படுவதாக கொடுத்த புகார் கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, சின்மயி, கார்த்திக் சிதம்பரம் விவகாரங்களில் மட்டும் தீவிர நடவடிக்கை எடுப்பது ஏன் என்கிற அரசியல் கேள்வியும் எழுகிறது.

பெரியாரிஸ்ட் தமிழச்சி தீவிரமாக பெரி யார், அம்பேத்கர் கருத்துகள் சார்ந்து செயல் பட்டபோது - அந்த சகோதரியின் புகைப் படத்தையே மார்பிங் செய்து ஆபாசமாக சமூகவலைத் தளத்தில் உலவவிட்டபோது; கலங்காமல் களத்தில் நின்று அதை எதிர் கொண்ட தமிழச்சியின் துணிச்சலைப் பாராட்ட வார்த்தைகளில்லை. ஆனால் புதிதாக பொதுவெளிக்கு வருபவர்களிடம் அதே துணிச்சலை எதிர்பார்க்க முடியுமா?

கனிமொழி, சோனியா, மாயாவதி, மம்தா, சுஷ்மா சுவராஜ், ஜெயலலிதா இவர்களின் கொள்கைகளை எதிர்ப்பதை யாரும் குறை சொல்லவில்லை. ஆனால் பெண் என்கிற கோணத்தில் இழிவு செய்து பதிவிடும் வக் கிரத்தை அனுமதிக்க முடியுமா? நிச்சயம் அனு மதிக்க முடியாது. அனுமதிக்கக் கூடாது. கருத்தை கருத்தால் எவ்வளவு உக்கிரமாக வேண்டுமானாலும் எதிர்க்கலாம். ஆனால் தனிமனிதத் தாக்குதலில் இறங்குவது அநாகரிகமானது. அராஜகமானது. தமிழக அரசியலில் அது பழகிப்போனதோ!அல்லது மரத்துப் போனதோ? யாமறியோம்! இப்போது மோடி பெண்களை இழிவு செய்வதில் முன் நிற்கிறார். மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பெண்களை இழிவுபடுத்தும் சொற் களைத் துப்பிவிட்டு பிறகு மன்னிப்புகேட்டது அண்மைச் செய்தி.

குழாயடிச் சண்டையின் போது ஆணோ பெண்ணோ யாராயினும் எதிரியின் அம் மாவை, அக்காவை சம்மந்தாசம்பந்தமின்றி இழுத்து வார்த்தைகளால் வன்புணர்ச்சி செய்வது அன்றாடக் காட்சி.எதிர்க்க வேண்டி யவர் பெண்ணாக இருப்பின் அவரைநோக்கி விடும் முதல் அம்பு அவரது ஒழுக்கம் குறித்த தாகவே இருக்கிறது. ஆண் மட்டுமல்ல பெண் ணும் அப்படித்தான் செய்கிறாள். சமூக வலைத் தளத்தில் இயங்கும் ஜென்டில்மேன் களும் இதே தரமென்றால் புரையோடிப் போயிருக்கிற ஆணாதிக்க வக்கிரத்தை கழுவ எந்த டிடர்ஜெண்ட் சோப்பை உப யோகிக்க வேண்டுமோ?

இன்னொருபுறம் மீனவர்கள் குறித்தும், மீன் சாப்பிடுபவர்கள் குறித்தும்,இட ஒதுக் கீடு குறித்தும் மிகவும் இழிவாகவும் அறிவிய லுக்குப் புறம்பாகவும் சின்மயி பேசியதை ஏற்கவே இயலாது. இது குறித்து புகார் செய் தால் காவல்துறை மவுனம் காப்பதேன்? 

சின்மயி மட்டுமல்ல புலால் மறுப்பை [சைவம், அசைவம் என்று சொல்வதே தவறு. புலால் பழக்கம்,  புலால் மறுப்பு என்றுதானே வள்ளுவர் முதல் வள்ளலார் வரை கூறிச் சென்றுள்ளனர் ]புலால்மறுப்பை என்று பிரச்சாரம் செய்துவரும் பீட்டா அமைப்பினர், தொடர்ந்து புலால் சாப்பிடுவோரை இழிவு செய்கின்றனர். அண்மையில் அனுபமா வர்மா நிர்வாணமாக எடைத்தராசில் தொங் கியபடி போஸ்கொடுத்து சொன்னது என்ன தெரியுமா? இறைச்சி சாப்பிடுபவர்கள் பிணத் தைச் சாப்பிடுவதற்கு ஒப்பாவார்கள். இது எப்படிச் சரியாகும்? பெரும்பான்மையான புலால் சாப்பிடுபவர்களை இழிவு செய்ய இவர்களுக்கு யார் உரிமை தந்தது? இதனை எதிர்த்தாக வேண்டும்.

அதேபோல் இடஒதுக்கீடு குறித்து மாறு பட்ட கருத்து வைத்திருப்பது தனிப்பட்ட உரிமை. இடஒதுக்கீடு சலுகையோ, பிச் சையோ அல்ல. காலங்காலமாக மறுக்கப் பட்ட உரிமைப்பங்கு ஆகும். அதைப் பெறுவ திலோ தருவதிலோ என்ன இழிவு இருக் கிறது? மேல்சாதி ஆதிக்க வெறியோடு அதை இழிவு செய்வதை எப்படி ஏற்கமுடி யும்? சின்மயிகளை இங்கு நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.

  “முன்தணிக்கை சாத்தியமில்லாத இந்த ஊடகத்தில் பங்கு பெறும் நமக்கு அதிகப் பொறுப்புணர்ச்சி வேண்டும். என்ன வேண்டு மானாலும் அவதூறுகளை அள்ளி வீசுவது, பொய்க் குற்றச்சாட்டுகளைக் கக்குவது, பெண்களாயின் அவர்களின் ஒழுக்கத்தைப் பொது வெளியில் கேள்விக்குள்ளாக்குவது, இவற்றை எப்படி நியாயப்படுத்த இயலும்” என அ.மார்க்ஸ் சுட்டிக்காட்டுவது கவனத்திற் குரியது.

இதை எல்லாம் சுட்டிக்காட்டுகிறபோதே ஒன்றை உரக்கச் சொல்லியாக வேண்டும் ; கருத்துச் சுதந்திரத்தை நசுக்குகிற விதத்தில் காவல் துறையை ஏவுவதை ஒருபோதும் எச் சூழலிலும் அனுமதிக்கவே முடியாது. கூடாது. மறுபுறம், ஊடகங்களுக்கு சுயகட்டுப்பாடு, சுயதணிக்கை தேவை என்று நீதிபதி மார் கண்டேயே கட்ஜூ சொல்வது போல சமூக வலைத் தளங்களில் செயல்படுவோருக்கும் தேவை. தேவை. தேவை.

3 comments :

  1. Ragztar
    This comment has been removed by the author.
  1. vimalavidya

    THIS NATION IS again MOVING TOWARDS Emergency...No doubt....These are few trailers of the original picture...

  1. ULAGAMYAAVAIYUM (உலகம்யாவையும்)

    மிக நன்றாக அலசி இருக்கிறீர்கள் தோழரே. வாத விவாதத்தை நகர்த்திச் செல்ல வேண்டிய நாகரிகத்திற்கு உங்கள் கட்டுரை உதவும்.

Post a Comment