வேளாண் சிக்கல்களின்.. சாதிக்சிக்கல்களின்.. : வேர்

Posted by அகத்தீ Labels:



வேளாண் சிக்கல்களின்.. 
சாதிக்சிக்கல்களின்.. : வேர்
 தமிழக வரலாற்றில் வேளாண்குடிகள் எப்படி இருந்தனர் என்கிற ஒரு கறுப்பு வெள்ளைச் சித்திரத்தை இந்நூல் அளிக்கிறது. பொற்காலம் எப்போதும் இருந்ததில்லை என்கிற உறுத்தும் உண்மையை ஸ்கேன் ரிப்போர்ட்டாக இந்த ஆய்வு தந்துள்ளது.முது நிலை ஆய்வுக்காக எழுதப்பட்ட ஆங்கில ஆய்வுகட்டுரையினை தமிழில் இப்போது வெளியிட்டுள்ளனர். எட்டு அத்தியாயங்களாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
முதல் அத்தியாயத்தில் காலனி ஆதிக்கத்துக்கு முந்தைய வேளாண் சமூகம் குறித்து ஒரு பின்புலத்தை வடித்துள்ளார். சோழப்பேரரசாயினும் விஜயநகர சாம்ராஜ்யமாயினும்  பிரம்மதேயம் என்கிற பெயரில் பிராமணர்களுக்கும், தேவதானம் என்கிற பெயரில் கோவில்களுக்கும் அதன் மூலம் பிராமணர்கள், வேளாளர்கள் என மேல்சாதியினருக்கும் நிலம் தானமாக வழங்கப்பட்ட செய்தியைச் சொல்கிறார். நிலத்தில் நேரில் இறங்கி பயிரிடாத பிராமணர்களின் நிலத்தை வாரக்குத்தகையில் இடைப்பட்ட சாதியினர் பயிரிட்டதை எடுத்துக்காட்டுகிறார். வேளாண்மை செழிக்க மன்னர்கள் காலத்தில் நீர்நிலைகளை மேம்படுத்தியதையும் மறுபுறம் தேவையான உழைப்பு சக்தியை திரட்டி உறுதிப்படுத்தியதையும்  கூறுகிறார். அதுவே பள்ளர், பறையர் என அடிமைத்தனம் சாதிய வடிவில் கெட்டிப்படுத்தப்பட்டதையும் ; அதன் பொருட்டு அச்சாதியினர் நிலம் வாங்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே நடத்தப்பட்டதையும் அழுத்தமாக இந்நூல் பதிவு செய்துள்ளது.இடைப்பட்ட சாதியினர் வைத்திருந்த துண்டு துக்காணி நிலத்தையும் பிடுங்கி பிராமணர்களுக்கு தானம் வழங்கினான் ராஜராஜ சோழன். இவ்வாறு குடிநீக்கம் செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்த அத்தியாயத்தையும் இதனைத் தொடர்ந்து வரும் அத்தியாயங்களையும்படிக்கும் போது மூன்று உண்மைகள் புலப்படுகின்றன.
ஒன்று. நிலவுடைமையாளர்கள் யாரும் ஒரு துண்டு நிலங்கூட உழைத்துசம்பாதித்ததில்லை. அவர்கள் நிலம் அனைத்தும் தானமாகப் பெற்றதும் அபகரித்ததும்தான். இரண்டு,தமிழகத்தில் அடிமைத்தனம் இருந்தது. அது பள்ளர்,பறையர் என சாதியாய் கெட்டிப்படுத்தப்பட்டது. மூன்று, வரிக்கொடுமைக்கு எதிராக தொடர்ந்து விவசாயிகள் கலகங்கள் செய்துள்ளனர்.அரசன் அதிகாரத்தை கேள்வி கேட்க சிவன் கோவில் சுவரையே இடித்துள்ளனர்.
காலனிய ஆட்சியின் தொடக்க காலம் -  கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் விவசாயிகள்  ஆதாயம் அடந்தனர். புதிய பகுதிகளுக்கு வேளாண்மை விரிவாக்கம் பெற்றது. பணப்பயிர் செய்வதில் ஈடுபட்ட இடைத்தட்டு சாதியினறில் சிலர் நிலப்பிரபுகள் ஆயினர்.ஆட்சி அதிகாரம் பிரிட்டீஸ் ராணியின் நேரடிக்கட்டுப்பாட்டில் போன பிறகு  தொழிற்புரட்சி காலத்திற்கு பின் இந்திய விவசாயி பேரிழப்புக்கு எப்படியெல்லாம் ஆளானான் என்கிற விபரம் இந்நூலில் நுட்பமாய் பதியப்பட்டுள்ளது.
மிராசுகள், ஜமீந்தார்கள்,கிராமக்குத்தகை என சுரண்டல் நடந்த வரலாற்றை ஆசிரியர் விவரிப்பதோடு;  பிரிட்டீஸ் ஆட்சியின் கொடுமையை  சாதி ஆதிக்கத்தை காப்பாற்ற பிரிட்டீஸ் ஆட்சியும் எப்படியெல்லாம் உதவியது என்பன உட்பட முக்கிய தகவல்களை நூலாசிரியர் விவரித்துள்ளார். விவசாய வரிக்கொடுமை தாளாமல் விவசாயிகள் கலகத்தில் ஈடுபட்டதையும் செய்தியாகத் தருகிறார். 1810-ல் தங்கனிக்கோட்டையில் விவசாயிகள் திரண்டு போராடியுள்ளனர்.ஒருவேளை இதுவே விவசாய சங்க ஸ்தாபன அமைப்பதற்கு முன்னோடியாகி இருக்குமோ?
நமது நாட்டில் ரயில் போக்குவரத்து வசதி தேவை என முதலில் குரல் எழுப்பியது நாமல்ல. மான்செஸ்டர் தொழில் கழகம் எனும் செய்தியைப் படிக்கும் போது; உலகவங்கி ஆலோசனை அடிப்படையில் நாற்கர சாலைகள்  இப்போது அமைப்பது நினைவுக்கு வருகிறது. முதலாளித்துவம் தன் வளர்ச்சிக்காக கட்டமைப்பு வசிதிகளை மேம்படுத்தும் என்பதும் அதற்குரிய சுமை மக்கள் மீதே விழும் எனபதும் நன்கு புலனாகிறது.
1863 பிரிட்டீஸ் ஆட்சி கொணர்ந்த தரிசுநில மீட்பு திட்டத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தில் வன்னியர்கள் சிறுநில உடமையானார்கள் என்பதையும்- புதிய பகுதிகளுக்கு பணப்பயிர் விவசாயத்தை விஸ்தரித்த போது கள்ளர்,உடையார்,கவுண்டர், என பல இடைத்தட்டு சாதிகளில் ஒரு சிறு பகுதியினர் மெல்லமெல்ல சிறு அல்லது பெரு விவசாயி ஆயினர். ஆனால் அடிமைகளாகவே நடத்தப்பட பள்ளர்.பறையர் சாதியினருக்கு நிலம் வாங்கும் உரிமை பிரிட்டீஸ் ஆட்சிகாலத்திலும் வரை வழங்கப்படவில்லை என்பதையும் நூலாசிரியர் நிறுவுகிறார்.
பிடிட்டனில் அடிமைத்தனம் ஒழிக்கப்படபின்னும் இங்கு நீடித்ததை பல பாதிரியார்கள் எதிர்த்தனர். விளைவு இங்கு அடிமைகள் குறித்து ஆய்வு செய்ய ஆணையிட்டது. பிராமண அதிகாரிகளும் இதர ஆதிக்க சக்திகளும் கிராமங்களுக்குச் செல்லாமலே இங்கு அடிமைகள் இல்லை என்று அறிக்கை கொடுத்ததை படிக்கும் போது எப்போதும் நம் அனுபவம் அப்படித்தானோ என எண்ணத் தோன்றுகிறது. 
 “ஆரம்பகால காலனிய ஆட்சியில் மத்திய காலத்திலிருந்து தொடர்ந்து பாரம்பரிய நிலவுடைமையாளர்களான   (நிலம் தானமா பெறப்பட்டதும் அபகரித்ததுமே என்பதை இந்நூலின் பிற பக்கங்களில் சொலியுள்ளார்)  பிராமணர்கள், வேளாளர்கள் செல்வாக்குத்தான் ஓங்கி இருந்தது.அவர்களைக் குறிப்பாக நெல் விளையும் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் அதிகம் காணலாம். காலப்போக்கில் இராணுவ சாதியினர்களான கள்ளர், படையாட்சி ஆகியோரில் ஒரு சிலரும்  நாயக்கர்கள் ஆட்சியில் ரெட்டி ,நாயுடு போன்ற வேளாண் சாதியினரும் நிலவுடைமையாளர்கள் ஆயினர். இவற்றோடு 18- ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஹைதை அலிப் போரின் விளைவாக தஞ்சை மாவட்டத்தில் ஒரு சில பெரும் நிலப்பிரபுக்கள் மூப்பனார், வாண்டையார் சாதியில் தோன்றினர். அவர்களுடைய நிலவுடைமை ஆங்கில ஆட்சியிலும் தொடர்ந்து வந்தது என்பதை இதற்கு முன்பே கூறியிருக்கிறோம். இச்சாதிய கட்டமைப்பில் நிலமற்ற சூத்திரர்களில் வாரம்தாரர்களாகவும், விவசாயக் கூலிகளாகவும் இருந்தனர். ஆனால் பள்ளர், பறையர் போன்ற அடிமை சாதியினர் நிலமற்றவர்களாக இருப்பதுடன் விவசாயக் கூலிகளாகவும் இருந்தனர்.” இப்படி நிலவுடைமைக்கும் சாதிகளுக்கும் இடையிலான உறவை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது.
மன்னர் காலந்தொட்டு இன்றுவரை இடைத்தட்டு சாதிகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் மோதிக்கொள்வதின் பொருளாதார வேர் இந்நூலில் நன்கு கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. ஆம் கடுமையான விவசாய வேலைகளைச் செய்ய தேவையான உழைப்பு சக்தியை நிரந்தரமாக வைத்துக்கொள்ள அடிமைத்தனம் சாதிய முறையில் தீண்டாமை வடிவில் இங்கு எல்லாகாலத்திலும் கெட்டிப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்துள்ள வரலாற்றை புரிவது தீண்டமையை எதிர்த்துப் போராட மேலும் வலு சேர்க்கும்.
தாதுவருடப் பஞ்சத்தைக் குறித்த புள்ளிவிவரங்கள் தந்ததுடன் நில்லாது நாட்டுப்புறப் பாடலின் சிலவரிகளை மேற்கோள் காட்டி இருப்பது மிகப் பொருத்தம்,  “உண்ணும் கலங்களை விற்பாரும்/உடைமைகளை எல்லாம் விற்பாரும்/பெண்டு பிள்ளைகளை விற்பாரும்..” இப்படி நீளும் பட்டியலில் தாலி,கலப்பை ,தவிடு,உரல்,உலக்கை எல்லாம் வரும். பஞ்சத்தின் கோரம் கண்முன் விரியும்.
தாதுவருடப் பஞ்சம், பிரிட்டீஸாரின் வரி வசூல் கொடுமை, அதனை எதிர்த்த கலகங்கள், விவசாய நெருக்கடியை பயன்படுத்தி கந்துவட்டிக்கொடுமை உருவாகி வளர்ந்தகதை.இப்படி இந்நுல் தரும் செய்திப்பரப்பு அதிகம். தென்மாவட்டங்களில் சிறுநில விவசாயிகள் பெருநிலப்பிரபுக்களிடம் 18 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வட்டிக்கு கடன் வாங்கினர் இவ்வாறு ஆசிரியர் சொல்வது உறுத்தினாலும் ஆச்சரியமாக இல்லை,ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரையில் ஒடுக்கப்பட்ட சாதியினராக இருந்த பள்ளர்கள் , சக்கிலியர் கூட தங்கள் சேமிப்பை இவற்றில் ஈடுபடுத்தினர் என்று கூறப்படுகிறது.என்கிறபோது வியப்பாக உள்ளது. நம்புவது சிரமமாக உள்ளது.ஆனால் ஸ்டேட் அட்லஸ் 1905 பக். 33 என ஆதாரம் தருகிறபோது நம்பாமல் இருப்பது எப்படி?

நவீனகல்வியும் எப்படி பிராமணர்கள் மற்றும் மேல்சாதியினருக்கே ஏணியானது என்பதையும்  திராவிட இயக்கம் உருவாக அது விதையாக்கப்பட்ட தகவலும் சிந்தனைக்குரியது. நவீன தொழில் வளர்ச்சியில் நகரம் நோக்கி நகர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அவலமும் பதிவாகியுள்ளது.
இன்று திராவிட இயக்கத்தின் மீதுள்ள கோபத்தில் பிராமணர்கள் எப்போதும் நேர்மையாளர்கள் என்பது போல சில அரைகுறை ஆய்வாளர்கள் விடும் சரடுகளை இந்நூல் முறியடிக்கிறது. நிலங்களை பிரம்மதானம், தேவதானம் என்கிற பெயரில் தானமாக அதாவது இலவசமாகப் பெற்றும் பிறர் உழைப்பை சுரண்டியும் வியர்வை சிந்தாமல் புல்லுருவியாய் வளந்தவர்களே பிராமணர்களும் இதர மேல்சாதியினரும்.
இன்னொரு முக்கிய செய்தியை இந்நூல் கோடிட்டுக் காட்டுகிறது ; சோழர் காலம், விஜயநகர காலம், பிரிட்டீஸ் காலம் என ஒவ்வொன்றிலும் நீர்பாசனத்தை மேம்படுத்த செய்யப்பட்ட முயற்சிகள் நம்மை வியக்க வைக்கின்றன. இப்போது நாம் செய்கிற தவறு உறைக்கிறது.
மேலும் விடுதலைக்கு முன்னும் பின்னுமாய் தஞ்சை மாவட்டத்தில் வெடித்தெழுந்த இடதுசாரி விவசாய இயக்கம் குறித்த பல செய்திகள் இடம் பெற்றுள்ளன எனினும் அது போதுமான அளவில் இல்லை. களப்பிரர் காலம் இருண்டகாலம் , சைவத்தின் தோற்றம் போன்றவை குறித்து நூலாசிரியர் தரும் தகவல்கள் ஏற்க இயலாததாகவே உள்ளன. சமூகப் பொருளாதார நோக்கில் புதிய வெளிச்சக் கீற்றுகளை இந்த ஆய்வு தரினும்- பண்பாட்டு கோணத்திலும் மீள் ஆய்வு செய்திருப்பின் பயன் பன்மடங்கு அதிகரித்திருக்கும். அதே வேளையில் தமிழ் சமூகச் சிக்கல்களை சரியாக உள் வாங்கவும் முகங்கொடுக்கவும் பல காத்திரமான செய்திகளும் தகவல்களும் இந்நூலில் நிறைய விரவிக்கிடக்கிறது. சமூக அக்கறையுள்ளோர் ஒவ்வொருவரும் கண்டிப்பாக இந்நூலை வாசிப்பது நல்லது. விமர்சிப்பது நல்லது.

தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும்
ஒரு சமூகப் பொருளியல் பார்வை 1801-1947
ஆசிரியர் : பேரா.சி.கே. காளிமுத்து,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,421, அண்ணா சாலை,
தேனாம் பேட்டை,சென்னை - 600 018.
பக்: 248, விலை : ரூ.160/-
- சு.பொ.அகத்தியலிங்கம்.

3 comments :

  1. Unknown
    This comment has been removed by the author.
  1. Unknown

    தமிழ் சமூகத்தையையும் அதன் வரலாறை சரியாக புரிந்து கொள்ள அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.. இந்த அரிய படைப்பிற்க்காக நூலாசிரியருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..

  1. Unknown

    ஆனால் இந்த நூலில் வெகு அருகில் வந்த பின்பும்.. பஞ்சமி நிலம் குறித்து எந்த குறிப்பும் இல்லாதது ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது..

Post a Comment