’Gen Z’ தலைமுறையைப் புரிந்திட முயல்வோம்….

Posted by அகத்தீ Labels:

 


’Gen Z’ தலைமுறையைப் புரிந்திட முயல்வோம்….

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

“ ஓடுகிற பாம்பைப் பிடிக்கிற வயது “ , ”இளங் கன்று பயமறியாது”, ”விடலைப் புள்ள வெள்ளாமை வீடுவந்து சேராது”, “ அடியாத மாடு படியாது” , “ களை பிடுங்காப் பயிர் கால் பயிர் “போன்ற  பழமொழிகளும் சொலவடைகளும்  மட்டுமே இன்றைய ‘பதின்ம வயதினரை’  அல்லது ‘விடலைப் பருவத்தினரை’ [ teenager] உள்வாங்கப் போதுமானதாக இல்லை.  

 

த.வெ.க வின் வருகையைத் தொடர்ந்தும் ,  இந்தோநேசியா ,பிலிப்பைன்ஸ் ,நேப்பாள் உட்பட பலநாடுகளில் நடந்த  ஜென் ச்சி [ Gen Z ] தலைமுறையினரின் திடீர் போராட்டங்களைத்   தொடர்ந்தும்  ,உலகின் பலநாடுகளில் நடக்கும் போராட்டங்கள் சார்ந்தும் ‘பதின்ம வயது’ இளைஞர்கள் குறித்த விவாதம் சூடுபிடித்திருக்கிறது .

 

ஜென் ச்சி [ Gen Z ] குறித்து விவாதம் எழுந்துள்ளது . ’Z’ எனபதை ’இசட்’ என்று உச்சரிக்கும்  பழைய தலைமுறைக்கும் ’ச்சி’ என உச்சரிக்கும் இறைய தலைமுறைக்குமான புரிதலே வேறு வேறுதான் .

 

பிற நாடுகளில் ஜென் ச்சி என்ற சொல்லும் அது தொடர்பான செய்திகளும் மிக அதிகமாகி உள்ளன . இணைய தளம் முழுவதும் இதுகுறித்த செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன .தமிழ்ச் சமூகம் இப்போதுதான் ’ஜென் ச்சீ’ பற்றி யோசிக்கத் துவங்கி இருக்கிறது .

 

எம் தமிழ்சமூகம் அப்போதே பேதை [1-8] , பெதும்பை [9-11] , மங்கை [12-14] , மடந்தை [15-19],அரிவை [20-25 ],தெரிவை [26-29] ,பேரிளம் பெண் [ 30 க்கு மேல் ] என  பெண்களுக்கான ஏழு பருவங்களையும் ;  பாலகன் ,விடலை ,காளை ,மீளி ,மறவேன் , திறவேன் ,முது மக்கள் என  ஆண்களுக்கான ஏழு பருவங்களையும்  வகுத்த நாகரீகத்தின் சொந்தக்காரர்கள் தமிழர்கள் என சொல்லித் திரிவது இன்றைய தேவைக்கு போதுமானதல்ல . 

 

பெண்ணுக்கு 30 க்குள் ஆறுபருவத்தை பிரித்தும், 30க்கு மேல் ஒரே கணக்கில் சேர்த்ததும் அன்றைய வாழ்நாள் [Life expectancy] மிகமிகக் குறைவு என்பதோடும் , ஆணுக்குப் பெண் இழைப்பு எனகிற கருத்தோட்டம் காரணமாகவும் இருக்கலாம் . ஆனால் ஆணுக்கு ஏழு பருவத்தையும் எழுபது வயதுவரை பகுத்தனர் என்று இப்போது பொழிப்புரை பதவுரை எழுதுவது  அன்றைய வாழ்நாளோடு[ Life expectancy ]ஒப்பிடும் போது ஏற்கத்தக்கதல்ல .

 

மநு தர்மமோ இன்னும் மோசம் நாலு வர்ணமாக்கி அதில் ஏற்ற தாழ்வாக்கி சமூக அநீதியோடு ஆண் பெண் பருவத்தை  பகுத்து விட்டது .  அன்றைய வாழ்நாளும் [Life expectancy ] மிகமிகக் குறைவே. எக்காலத்துக்கும் மநு அநீதி தொடரவே கூடாது .

 

ஆனால் இன்றைய சூழல் சார்ந்து புதிய தலைமுறை வேறுவிதமாக ஜென் கணக்கைச் சொல்லுகிறது . ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்புவரைகூட ஒரு தலைமுறை என்பது 30 ஆண்டுகளுக்கு மேல் எனக் கணக்கிடப்பட்டது . இப்போதைய கணக்கீடோ 15 ஆண்டுகளுக்குள் தலைமுறை  மாறி விடுகிறது ; ஏனெனில் மின்னல் வேக மாற்றங்கள் நிகழும் நூற்றாண்டு அல்லவா ?

 

எந்த வயதினரை எந்தெந்த சொல் இப்போது அடையாளப்படுத்துகிறது என்று பார்த்தால் ; மேலே சொன்னது விளங்கும் .

 

Boomer uncle பூமர் அங்கிள்  என்பவர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1946 ம் ஆண்டுக்கும் 1964 ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்களாம் . சற்றொப்ப 60 – 80 வயதினர்  ‘பழமையில் ஊறிய மட்டைகள்’ எனச் சொல்லாமல் சொல்லுகின்றனர் .

 

Gen X ஜென் எக்ஸ் தலைமுறை என்பவர்கள் 1965 -1980 ஆண்டுகளில் பிறந்தவர்களாம் . எந்த சலசலப்பும் இல்லாமல் சிவனேன்னு வாழ்ந்து முடிபவர்களாம்… உடனே அவர்களெல்லாம் சைவர்கள் என ரீல் விட வேண்டாம்… சற்றொப்ப 45 – 60 வயதினர் .

 

Gen Y ஜென் ஒய் தலைமுறை  என்பவர்கள் 1981- 96 காலகட்டத்தில் பிறந்தவர்களாம் . 90 கிட்ஸ் என்றும் அழைப்பார்களாம் . இரு நூற்றாண்டு மாற்றங்களைக் கண்டவர்களாம் …. சற்றொப்ப 28 -45 வயதினர் .

 

 Gen Z ஜென் இசட்  தலைமுறை என்பவர்கள்  1997 -2012 இல் பிறந்தவர்களாம் ; சற்றொப்ப 13 -28 வயதினர் .இவர்கள் தமக்கு முன்வந்த எல்லோரையும் பூமர்கள் எனச் சொல்லித் திரிபவர்கள் … கிட்டத்தட்ட உலகமய தாராளமய டிஜிட்டல் உலகத்தில் பிறந்தவர்கள் …

 

ஏடிஎம்மில் கார்டை சொருகினால் பணம் வருவதுபோல் . ’போண் பே’ போல் எல்லாம் சட்டுப்புட்டுன்னு நடக்கணும்னு நினைக்கிற தலைமுறை .. ரீலுக்கும் ரியலுக்கும் வித்தியாசம் தெரிய முயலாதவர்களாம் … டிஜிட்டல் தகவல்கள் கொட்டி வைக்கப்பட்ட குடுவை … அதை அலசி உண்மையறிய தேவை பொறுமை … அது இல்லாத தலைமுறை … அனுபவம் கற்றுக்கொடுக்கும் …

 

2012 – 2025 வரை பிறந்தவர்கள் ஜென் ஆல்பாவாவாம் . இனி 2025 முதல் 2039 வரை பிறப்பவர்கள் ஜென் பீட்டாவாம் … இப்படியே கணக்கு நீள்கிறது .

 

மார்க்ஸ் சொன்னது போல் உணர்வுகள் வாழ்நிலையைத் தீர்மானிக்க வில்லை ; மாறாக சமூக வாழ்நிலைதான் உணர்வுகளைத் தீர்மானிக்கிறது . இந்தப் புரிதலோடு அணுகினால் எல்லாம் விளங்கும்.

 

1997 முதல் 2012 வரை பிறந்த அனைவரையும் ஜென் Z இந்த வகைப்படுத்தலில் அடக்குகின்றனர் . அதாவது 13 வயது முதல் 28 வயது வரை என்றாகிறது .  வெறுமே வறட்டுத்தனமா இந்த வயது எல்லையை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியுமா ? வேறு ஏதேனும் வரையறை வேண்டாமா ?

 

As the first true digital natives, Gen Z has grown up in a world where the internet, smartphones, and social media have always been present.  இணையம், ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் நிறைந்த  உலகில் வளர்ந்த உண்மையான முதல் டிஜிட்டல் தலைமுறை என்று சொல்லலாம்..

 

இவர்களால் கைபேசி இல்லாமல் ஒரு நொடிகூட வாழமுடியாது என்று சொல்லத்தக்கவர்கள் . எதுவாயினும் உடனே கூகுள் / ஏஐ / என  எங்காவது நுழைந்து துருவித் தகவல்களைக் கொட்டிவிடுகின்றனர் .ஆனால் அதை அலசிப் பார்க்காமல் அப்படியே நம்பத் தொடங்கி விடுகின்றனர் .பரப்பத் தொடங்கிவிடுகின்றனர் . இவர்கள் .

 

ஆங்கிலக் கட்டுரைகளில் இவர்கள் குறித்து  பல கோணங்கள் வெளிப்படுகின்றன . ஒரு பருந்துப் பார்வையோடு அவற்றைத் தொகுத்துப் பார்த்தால் ;

 

·       வாழ்க்கையில் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறத் துடிப்பவர்கள்.விரல் நுனியில் எல்லா தகவல்களையும் வைத்திருப்பவர்கள் .

·       கிடைத்த வேலையில் நிரந்தரமாக உறைந்து கிடக்காமல் மாறி மாறி      புதியன நோக்கி பறக்க எத்தணிக்கிறவர்கள் .வேலைசெய்யும் நிறுவனத்தில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தாவிக்கொண்டே இருப்பவர்கள்.

·       பதற்றமும் பெரும் கோபமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்

·       சீக்கிரம் பணக்காரனாகத் துடிக்கிறார்கள் / ஷேர் மார்கெட் , ஆண் லைன் சூதாட்டம் இவற்றில் நுழைகிறார்கள்

·       காதல் ,குடும்பம் இவற்றில் ஈடுபட்டாலும் அவசர முடிவுகளால் ; புரிதல் குறைபாடுகளாலும் அலைகழிக்கப்படுகிறார்கள்

·       பொழுது போக்கு ,போதை இவற்றில் மிகுதியாக நாட்டம் உள்ளவர்களாக உள்ளனர்

·       அரசியலில் சீக்கிரம் தலைமைப் பொறுப்பை எதிர்பார்க்கிறார்கள் ; எங்கே சீக்கிரம் ஒரு பதவி பெற முடியுமோ அங்கு ஓடுகிறார்கள்

·       உலகம் சுற்றுவதில் நாட்டம் மிக்கவர்களாக உள்ளனர்

·       கொழுப்பு மற்றும் துரித உணவில் மூழகி உடல் பருமனாகிக் கொண்டிருக்கிறார்கள்

·       சுற்றுச்சூழல் குறித்து மேலோட்டமாகப் பேசிச் செல்கின்றனர்

·       பல்துருவ உலகில்  நிச்சயமற்ற எதிர்கால பயத்தில் இவர்களின் சமத்துவப் பார்வைத் தடுமாறுகிறது ; வெறுப்பு அரசியலால் மிகக் குறுகிய வட்டத்துக்குள் சுழல்கின்றது

·       சமூக ஊடகங்களில் தீவிரம் காட்டுகின்றனர் ; கிட்டத்தட்ட 24 X 7 மூழ்கிக்கிடக்கின்றனர்.

·       தங்களை ஊடக வெளிச்சத்தில் நிலை நிறுத்த முனைகிறார்கள்

·       பொழுதுபோக்கிலும்  விளையாட்டிலும் கூட பணம் பண்ணத் துடிக்கிறார்கள் ; இழக்கிறார்கள்.

·       செயற்கை நுண்ணறிவை மிகுதியாக நம்புகிறார்கள்

·       ரீலுக்கும் ரியலுக்கும் [ reel vs real ] இடையிலான வேறுபாட்டை பலவேளைகளில் மறந்து விடுகின்றனர் .

 

இப்படி பொதுவாக வாசிக்கப்படுகிற ’குற்றப் பத்திரிகை’ சொல்வது  ’முழுவதும் உண்மையில்லை’ ; அதே நேரத்தில் ’உண்மையில்லாமலுமில்லை’ . இளைஞர்கள் வாழும் வளரும் சூழல் ,அரசியல் ,சமூக ,பொருளாதார , குடும்ப , கல்வி ,பண்பாட்டுப் பின் புலத்தில் நாட்டுக்கு நாடு வேறுபாடு உண்டு ; ஆயினும் உலகமய யுகத்தில் டிஜிட்டல் காலகட்டத்தில் நுகர்வுவெறியும் சுயநலமும் உச்சத்தில் இருப்பதால் அதன் தாக்கமும் கடுமையாகவே இருக்கின்றன.

 

இந்த தலைமுறையின் உணர்ச்சியைக் கொம்பு சீவிவிட்டு ; அவர்களின் சமூக கோபத்தை சீக்கிரமாக பற்றவைத்து வழிதவற வைப்பதில் திட்டமிட்ட முயற்சிகள் உள்ளன .  உலகின் பலநாடுகளில் நடந்த ஜென் z புரட்சிகளில் இதனைக் காணலாம் .

 

இந்தப் போராட்டங்களில் ,

1] இந்த இளைஞர்கள் தங்கள் போராட்ட எதிர்ப்பின் சின்னமாக ஒன் பீஸ் (one piece) என்ற அனிமேஷன் (animation) தொடரில் வரும் ‘ஜாலி ரோஜர்’ கொடியை பரவலாக ஏந்தி இருப்பது ஏன் ?

2] தங்கள் நாட்டு தேசியக் கொடிக்கு நிகராக  மண்டை ஓடும் எலும்பும் பொறித்த கடற்கொள்ளையர்களின் சின்னம் தாங்கிய ஜாலி ரோஜர் கொடியை உயர்த்தும் அளவுக்கு அவர்களை உந்தியது எது ?

 

தமிழ் மார்கஸ் இணைய இதழில் சேது சிவன் எழுதிய , ” அனிமேஷன் -  அரசியல் - Gen Z ” என்ற கட்டுரையில் சொல்கிறார் ,

அனிமேஷன் கதாபாத்திரங்களின் ஹீரோயிசத்துடன் வெளிப்படுகிற சம்பவங்கள் சில சமயங்களில் எங்கள் சொந்த வாழ்க்கைக்கும் வழி காட்டுகிறது என ரசிகர்கள் சொல்கிறார்கள். அதாவது அக்கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இழப்புகள், போராட்டங்கள் தங்கள் வாழ்க்கையுடன் ஒத்துப்போவதாகவும் போராட்டங்களை எதிர்கொள்ளவும், துக்கத்தைச் சமாளிக்கவும், பொறுமையுடன் சில விஷயங்களைச் எதிர்கொண்டு வெற்றி பெறவும் கற்றுக்கொடுக்கின்றன.

துயரங்களை எதிர்த்து கதாபாத்திரங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்வதைப் பார்க்கும் போது எங்களுக்கும் தைரியம் கிடைக்கிறது. அதிகாரத்தின் தவறுகளுக்கு எதிராக கேள்விகளை எழுப்பத் தூண்டுகிறது என ரசிகர்கள் கூறுகிறார்கள்.” மேலும் அவர் சுட்டுகிறார் .

 

 “இன்றைய ஜென் Z தலைமுறையினரிடம் அனிமேஷன் தொடர்கள் பார்க்கும் பழக்கம் அதிகமாகவே உள்ளது ….  ’ஒன் பீஸ்’ கார்ட்டூன் தொடரில் லூஃபியும் அவனது குழுவும் ஒருபோதும் கொடுங்கோலர்களுடன் சமரசம் செய்வதில்லை. அவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடுகிறார்கள். அப்பாவி மக்களைப் பாதுகாக்கிறார்கள். ஊழல் நிறைந்த அதிகாரிகளுக்கு எதிராகப் போராடி அவர்களை வீழ்த்துகிறார்கள். திறமையற்ற தலைவர்கள், வாரிசு அரசியல் அமைப்புகள் மற்றும் நிறைவேறாத வாக்குறுதிகளால் தங்கள் எதிர்காலம் அழிக்கப்படுவதை உணரும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு அந்த கதாபாத்திரத்தை தங்கள் விடுதலைக்கான ஹீரோவாக ஏற்றுகொள்ள போதுமானதாக உள்ளது என கூறுகிறார்கள்.”

 

ஆயின் இது புது யுத்தி போல் தெரிந்தாலும் கொஞ்சம் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போம் . 1970 களில் வியட்நாம் யுத்தமும் வெற்றியும் புதிய நம்பிக்கைகளை இளைஞர்களிடையே விதைத்தன .இப்பின்னணியில் இதணை முறியடிக்க  அக்கால கட்டத்தில் வந்த ஜேம்ஸ் பாண்டு படங்கள் கிட்டத்தட்ட எல்லாமும் , காமிக் கதைகள் பெரும்பாலும் அமெரிக்க அதிபரை சூப்பர் ஹீரோவாகவும் சோவியத் யூனியனை கம்யூனிஸ்டுகளை வில்லன்களாகவும் கொடூரர்களாவும் சித்தரித்து ஒரு மாயக் கருத்தை இளைஞர்கள் மூளையில் திணிக்க முயன்றன .

 

இளைஞர்களிடையே ஹிப்பி நாகரீகம் என்ற ஒன்றினை சுதந்திர சிந்தனையாகப் பரப்பின .  போதை ,காமம் ,வன்முறை [Drug Sex Violence ] என்கிற மூன்று சூத்திரங்களுக்குள் இளைய தலைமுறையத் திருப்பிவிட்டு புரட்சிகர  [ Revolution ] சிந்தனைப் பக்கம் தலைவைத்தும் படுக்காமல் இருத்திவைக்க  முயன்றன .இவை அனைத்தும் அமெரிக்க சிஐஏவின் திட்டத்தோடும் பண ,அதிகார பலத்தோடும் நடந்தேறியது .

 

சோவியத் யூனியன் தகர்வுக்குப் பிறகு ’இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்கிற பூச்சாண்டியை உருவாக்கியது ; அதையும் மீறி இளைஞர்களிடையே முற்போக்கு எண்ணமும் சமூக கோபமும் முன்னுக்கு வரும் போது அவற்றை இந்த ’ஜென் ச்சீ புரட்சிகள்’ மூலம் மடை மாற்ற அதே ஏகாதிபத்தியம் மெனக்கெடுகின்றது .

 

அதாவது கார்ப்பரேட் கொள்ளைக்கு எந்த இடைஞ்சலும்  ஏற்படாமல் ;  லஞ்சம் ஊழல்  ,ஆட்சியாளர் அதிகாரம் போதை ,ஆணவம் ,ஆடம்பரம் , என்கிற மேலோட்டமான அரசியலை முன்வைத்து சமூக கோபத்தை மடை மாற்றுவதற்கு இந்த ஜென் ச்சீ போராட்டங்கள் உதவும் என கணக்கிட்டு  நல்ல விளம்பரம் செய்து உசுப்புகின்றனர் . இதன் மூலம் ஆட்சி மாற்றம் என்பது வெறும் ஆள் மாற்றமே.

 

தெளிவான சித்தாந்த வழிகாட்டல் இல்லாமலும் ; கட்டுப்பாடான அமைப்பாகத் திரளாமலும்  ; அதற்கொப்ப பொறுப்பான தலைமை இல்லாமலும் ;சீரிய நோக்கம் இல்லாமலும் ; பெரும் தியாகங்கள் இல்லாமலும் நடத்தப்படுகிற திடீர் கலவரங்கள் அப்போதைக்கு வெற்றியாக தோற்றம் காட்டினும் ; தொலை நோக்கில் பெரும் பின்னடைவே . இந்த கிளர்ச்சிக்குப் பின் சமூக கோபம் இயல்பாக வடிந்துவிடுவதாலும் ஒரு விரக்தி சூழந்துவிடுவதாலும்  மீண்டும் அது  போராட்ட நெருப்பு மூண்டெழ வெகு காலம் பிடிக்கும் . சுரண்டல் ஆட்சி தொடரவும் புரட்சியை முடிந்தவரை தள்ளிப்போடவும் தாமதப்படுத்தவும்  முடியும் என்பதுதான் இந்த ஜென் ச்சி போராடங்களில் ஆளும் வர்க்கங்களின் திருப்தி .

 

நம் நாட்டிலும் அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு போராட்டம் மோசமான பாசிச ஆட்சிக்கே படிக்கட்டானது என்பதே அனுபவம் . ’பாசிசம் ,பாயாசம்’ என பஞ்ச் வசனங்கள் பேசுவதுகூட பாசிச அபாயத்தை குறைத்து பார்க்கவும் மெல்ல அவர்கள் வலையில் விழவைக்கவுமான தந்திரமே !

 

எல்லாம் சரி ! இந்த இளைய தலைமுறையை மீட்பது எப்படி ?

 

’தற்குறி’, ‘ பொறுப்பில்லாத பசங்க’ என தூற்றுவதை நிறுத்துங்கள் . தோளில் கைப் போடுங்கள் . அவர்களின் ஆசை ,காதல் ,விருப்பு ,வெறுப்பு இவற்றை புரிந்து உரையாடுங்கள் .

இளைஞர்கள் மீது நம்பிக்கை வையுங்கள் . “ மாணவன் வேலை படிப்பது மட்டுமே ; அரசியலை பெரியோரிடம் விட்டுவிடுங்கள்” பொன்ற தவறான ஆலோசனைகளைத் தூக்கி எறியுங்கள் .

ஆர் எஸ் எஸ்  இயக்கம் மாணவர்கள் ,குழந்தைகள் எல்லோருக்கும் தனித்தனி அஜெண்டா வைத்து சாகா மூலம் நஞ்சை விதைக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம் .

 

ஆக ,  “இளைமையில் பயிர் செய்” என்பது நம் தாரக மந்திரம் ஆகட்டும் . பள்ளி ,கல்லூரி எங்கும் மாணவர் பேரவை தேர்தல் வேண்டும் . அங்கிருந்து தொடங்குவோம் .

குடும்பத்தில் உரையாடல் குறைந்து அலைபேசியில் மூழகும் சூழல் தற்குறித்தனத்தின் தோற்றுவாய் என்பதறிந்து குடும்பத்தில் ஜனநாயகத்துக்கான வெளியையும் உரையாடலையும் தொடங்க வேண்டும் .

 

“ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கவும் ; பாடுகிற மாட்டை பாடிக் கறக்கவுமான” வித்தையைக் இடது சாரி அமைப்புகள் கற்க வேண்டும் .

 

பக்த்சிங் துவங்கிய நவஜாவன் பாரத் சபாவின் நூற்றாண்டு இது . ‘இளம் தோழர்களே !’ என அழைக்கும் நவஜவான் பாரத் சபாவின் முதல் அறைகூவல் பகத்சிங் ,பகவதி சரண் வோரா இருவர் பெயரால் 1926 இல்  வெளியான போது அதன் முதல் பத்தியே இதனை தெளிவு படுத்தும் ;

 

 இளம் தோழர்களே !

நம் நாடு மிகவும் குழப்பமான சூழலை எதிர்கொண்டிருக்கிறது . விரக்தியும் அவநம்பிக்கையும் எங்கும் சூழ்ந்துள்ளது . மிகப் பெரும் தலைவர்களும் நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள் . மக்களும் தலைவர்கள் மீதான நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் .  நாட்டு விடுதலைக்காக உருப்படியான திட்டமோ , உற்சாகமோ , போராட்டமோ இல்லை . எங்கும் பெரும் குழப்பமே நிலவுகிறது . ஒரு நாட்டை தட்டி எழுப்பும் போராட்ட வரலாறுகளில் குழப்பமும் தவிர்க்க முடியாததே !இந்த சிக்கலான காலகட்டத்தில்  ஊழியர்களின் மன உறுதி சோதனைக்குள்ளாகிறது ! விழுமியங்கள் மறுகட்டமைக்கப்படுகிறது ! சரியான செயல்திட்டம் கருக்கொள்கிறது ! புதிய எழுச்சி முளைவிடுகிறது ! போராட்டம் தொடங்கிவிட்டால் புதிய எழுச்சி ! புதிய நம்பிக்கை ! மேலும் புதிய எழுச்சி ! மேலும் புதிய நம்பிக்கை !”

 

ஆம் .இப்போதும் குழப்பமான சூழலில் நம்பிக்கையோடு எழ முடியும் .எழ வேண்டும் . பார்வை புதிதாகுக ! பயணம் எழுச்சி ஆகுக !

மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிதாகும் வகையில் தம்மின்தம் மக்கள் அறிவுடைமை ஓங்கக ! சமூக விழிப்புணர்வு மேலெழும்புக !

 

நன்றி : காக்கைச் சிறகினிலே மார்ச் 2026 .

 

 

 


0 comments :

Post a Comment