ஓர் அனுபவம் – ஓர் வாசிப்பு …..

Posted by அகத்தீ Labels:

 





 

ஓர் அனுபவம் – ஓர் வாசிப்பு …..

 

முதலில் அனுபவம் …

 

தமிழ்நாட்டைச் சார்ந்த ஓய்வு பெற்ற ஓர் போக்குவரத்துத் தொழிலாளியோடு ஒரு நாள் பெங்களூரில் நடை பயிற்சி போய்க் கொண்டிருந்தேன் . வழியில் அம்பேத்கர் படம் தாங்கிய ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் , “  என்ன சாதிச்சிட்டதுக்காக இப்ப தெருவெல்லாம் நட்டு வைச்சிருக்காங்க …” என ஆரம்பித்து வசை பாடினார் . எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது . நான் கொடுத்த விளக்கங்கள் எதையும் அவர் ஏற்கத் தயார் இல்லை . ஆதிக்க சாதி மனோநிலையில் அவர் உறைந்து போயிருந்தார் .

 

அடுத்து வாசிப்பு ….

 

 எட்டாம் வகுப்பு ‘அ’ பிரிவில் ஓர் தமிழாசிரியர்.” ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய சிறுகதை . அழகிய பெரியவன் எழுதிய கதை . அண்மையில் வாசித்தேன் . வகுப்பில் அம்பேத்கர் பாடத்தையே வாசிக்க விரும்பாமல் தட்டிக் கழித்த ஒரு தமிழாசிரியர் கதை அது . ஆனால் மாணவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளால் திணறுகிறார் . தெளிவு பெறுகிறார் .

 

“ அம்பேத்கருடைய பாடத்தை நான் இப்ப நடத்தப் போறேன்! இந்தப் புத்தகத்தை எனக்குப் படிக்கக் கொடுத்தவன் என்னுடைய நண்பன் சிவராஜ் . ஒரு முறை இதே மாதிரி வகுப்பறையில எனக்குப் பிறந்த நாள் கொண்டாடிய போது காட்டுப் பழங்களைக் கொடுத்தான் …. பதிலுக்கு நான் அவனுக்கு என்ன கொடுத்தேன்னு நினைவில்ல ! இன்னும் கொஞ்ச தூரம்தான் நகர்ந்து நகர்ந்து வந்துவிட்டோம் ! இன்னும் கொஞ்ச தூரம் நகர்ந்து நகர்ந்து போவோம்! ஒண்ணாவே போவோம் ! இன்னும் கொஞ்ச தூரம்தான்.”

 

இக்கதை நாட்டு நடப்பை நமக்குச் சொல்லித் தந்துவிட்டது . ஆம் ‘அ’ கூட அறியாமல் இன்னும் வெறுப்புப் பள்ளத்தில் வீழ்ந்து கிடப்போரிடம் அம்பேத்கரைக் கொண்டு சேர்ப்போம் .

 

16 சிறுகதைகள் . அனைத்தும் தலித் சிறுகதைகள் . புதியவர்கள் எழுதிய 8 கதைகள் . அனுபவம் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய எட்டு கதைகள் . புதுசோ பழசோ வலிகள்தான் இக்கதைகளில் நிரம்பி வழிகிறது. தலித் வாழ்க்கை அதுதானே . வாசிக்க வேண்டிய நூல் .

 

இன்று ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாள் .

 

நவீன தலித் சிறுகதைகள் , தொகுப்பு : ப்ரதிபா ஜெயச்சந்திரன் , பாரதி புத்தகாலயம் , www.thamizhbooks.com ,பக்கங்கள் :176 , விலை : ரூ.180 /

 

சுபொஅ.

14 /06 /26 .





0 comments :

Post a Comment