’கமலாலயன் : இலக்கிய பெரினா விருது 2016 – சிறப்பு வெளியீடு’ வாசித்தேன் . 133 பக்கங்களில் கமலாலயன் பற்றி ஓர் பருந்துப் பார்வை அறிமுகம் எனில் மிகையல்ல .
சிறுகதை ,நாவல் ,மொழிபெயர்ப்பு ,கட்டுரை என பல முனைகளின் அவர் அளித்தப் பங்களிப்பை இந்நூல் பட்டியலிடுகிறது . பாவண்ணன் , உதயஷங்கர் இருவரின் கட்டுரைகளும் கமலாலயனின் காத்திரமானப் பங்களிப்பைச் சொல்கிறது .
கமலாலயனின் ‘ நகரப் பருந்துகள்’ எனும் குறுநாவல் இந்நூலுக்கு அழகு சேர்ப்பதோடு கமலாலயனின் சமூக அக்கறையையும் கூர்த்த பார்வையையும் பறை சாற்றுகின்றன . வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் செய்யும் அட்டகாசம் ; அதற்கு துணைபோய் அரசு பேருந்துகளை பழிவாங்கும் காவல்துறையும் நிர்வாகமும் இன்றும் தொடர் கதை . வேலூரில் இது தொடர்பாக நடந்த போராட்டத்தை ரத்தமும் சதையுமாய் பதிவு செய்கிறது இந்நாவல் . மனித உயிரைவிட லாபம்தான் உயிர்நாடியாகிப்போன சமூக அவலத்தின் சாட்சி . இன்னும் சொல்லப் போனால் 1990 களில் நடந்த ஓர் நிகழ்வை உள்ளது உள்ளபடி துல்லியமாய் பதிவு செய்துள்ளது .இதுவும் வரலாறு அன்றி வேறென்ன ?
முதுமையின் வலியைச் சொல்லும் ‘ ஓய்ந்தவர்கள்’ சிறுகதையும் , வாழ்க்கை துயரையும் கடவுள் நம்பிக்கையும் சேர்த்து பகடி செய்யும் ஓர் நுட்பமான சிறுகதையும் இதில் இடம் பெற்றுள்ளன .
இக்கதைகள் ஏற்கெனவே வெளிவந்தவைதான் . இங்கு இவரின் ஆற்றலை படம்பிடித்துக் காட்ட தரப்பட்டுள்ளது .
இத்துடன் இவரின் பன்முகத்தைக் காட்டும் நான்கு கட்டுரைகளும் ஓர் நேர்முகமும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன .இவையாவும் இவர் விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பதற்கு சாட்சியாகிறது .
வாலிபர் சங்கத்தில் தொடங்கிய எங்கள் தோழமை இன்றுவரை அதே உயிர்ப்புடன் தொடர்கிறது . தோழரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.
தேநீர் பதிப்பக வெளியீடு .விலை : ரூ140 / தொடர்புக்கு 9080909600.
சுபொஅ.

0 comments :
Post a Comment