விளக்கு பூஜையும் தியாக ஜோதியும்

Posted by அகத்தீ









விளக்கு பூஜையும் தியாக ஜோதியும்

- சு.பொ.அகத்தியலிங்கம் .




·          விளக்கு பூஜை செய்தால் அது மூடநம்பிக்கை என்பவர்கள்  தங்கள் மாநாடுகளையொட்டி ஜோதி ஓட்டம் மேற்கொள்வதும் தியாக ஜோதி 
·         ஏற்றுவதும் எதற்காக விளக்குவீர்களா ?

·         கடவுளுக்கு சிலை வணக்கம் உருவ வணக்கம் கூடாதென்றால் தலைவர்களுக்கு சிலை வைப்பதும் பிறந்தநாள் இறந்த நாளன்று அதற்கு மாலை சூட்டி மலர் தூவி வணங்கி நிற்பது ஏன் ? அது சரியா?

·          உலகம் முழுவதும் பலவிதமான நம்பிக்கைகளும் சடங்குகளும் உள்ளன; அப்படியிருக்க நமது பாரம்பரிய சடங்குகளை மட்டும் கேலி பேசலாமா? ஏதோ மக்கள் மனத் திருப்திக்காகச் செய்கிறார்கள் செய்துவிட்டுப் போகட்டுமே உங்களுக்கு என்ன நட்டம் ?

·          ஒருவர் விபத்தில் பாதிக்கப்பட்டோ நோயுற்றோ இருக்கும் போது நலம் விசாரிக்கச் செல்வது இயல்பு; அப்போது ஆறுதல் சொல்ல ஆன்மிகச் சொற்கள் உதவுதல் போல் உங்கள் அறிவியற்சொற்கள் துணைக்கு வருவதில்லையே!  ஆறுதலளிப்பது ஆன்மீகமே என்பதை இப்போதாவது ஒப்புக் கொள்வீர்களா ?

·         ஓருவர் இறக்கிறபோது அவரவர் மத வழக்கப்படி இறுதி நிகழ்வு நடத்துவது தவறா? அது அவரவர் உரிமை அன்றோ! எல்லா மதத்திலும் ஏதோ ஒருவகையில் திவசம் அல்லது நினைவுகூரல் உள்ளதே; இதெல்லாம் ஒரு மனித உணர்வு சம்பந்தப்பட்ட சடங்கல்லவா இதனையும் முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்கள் எதிர்த்துத்தான் ஆகவேண்டுமா ?


-இப்படி கிடுக்கிப்பிடி கேள்விகளை வீசினார் நண்பர். தோழர்கள் இது போல் சந்திக்கும் அநேகக் கேள்விகள் உண்டு.  நண்பருக்குச் சொன்ன பதில்களை இங்கே பகிர்ந்துகொள்ளலாம்.


விளக்கு பூiஜை செய்தால் அது மூடநம்பிக்கை என்பவர்கள்  தங்கள் மாநாடுகளையொட்டி ஜோதி ஓட்டம் மேற்கொள்வதும் தியாக ஜோதி ஏற்றுவதும் எதற்காக விளக்குவீர்களா ?


சிக்கிமுக்கிக் கல்லைக் கொண்டு நெருப்பை உருவாக்கியவன் அந்தநெருப்பை பாதுகாக்கவும் போராடினான் . முயன்றான் . இருட்டை விரட்ட, விலங்குகளை அச்சுறுத்த, சமைக்க நெருப்பு தேவையாயிற்று. ஆகவே நெருப்பைப் பாதுகாப்பதும் போற்றுவதும் முக்கியப் பணியாயிற்று. நெருப்பை வணங்குவதும் இதன் தொடர்ச்சியே. இன்று நெருப்பை தீப்பெட்டியில் பாதுகாக்க முடிகிறது. இரவைப் பகலாக்கும் மின்விளக்குகள் வந்துவிட்டன. ஆயினும் நெருப்பு வணக்கம் தொடர்கிறது. பின்னர் வந்த மதங்கள் தொல்குடியின் நெருப்பு வழிப்பாட்டை எதோ ஒருவகையில் தங்களுடையதாக சுவீகரித்துக் கொண்டன. ஆயினும் மரபின் தொடர்ச்சியாக வீடுகளில்; குடும்ப விழாக்களில் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுவது, ஊதுபத்தி கொளுத்துவது என ஒரு பண்பாட்டுக் கூறாகத் தொடர்கிறது.இதனை தவறென்று மல்லுக்கட்டத் தேவையில்லை. அது அவரவர் விருப்பம். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.


அதே நேரம் இன்று இந்துத்துவ அமைப்புகள் மதவெறியை விசிறிவிட மூடபக்தியை உசுப்பிவிட விளக்கு பூஜையை ஒரு கருவியாக்குகின்றன. பெண்களுக்கான பண்பாட்டுவெளி குறைவாக இருக்கும் சூழலில் பெண்களை இதில் மதவெறியர்கள் அணிதிரட்டுவது சுலபமாகிறது. மாற்று பண்பாட்டு நடவடிக்கைகளுக்குத் திட்டமிடுவதும் அதில் பெண்கள் பங்கேற்க உற்சாகமூட்டுவதுமே ஒரே வழி.


 தியாகிகள் ஜோதியும் விளக்கு பூiஜையும் ஒன்றல்ல. இண்டிலும்  நெருப்பு உள்ளது என்பது மட்டுமே ஒற்றுமை. தியாகிகளை பூஜைசெய்து இறந்தவர் அருளுக்கு வேண்டி நிற்பதல்ல தியாக ஜோதி . ஒரு லட்சியத்துக்காகத் தன்னை ஆகுதி செய்யவும் தயாராக இருக்கிறோம் எனப் பிரகடனப்படுத்தவே. லட்சியத்துக்காக மரணத்தைத் தழுவியவர்களை நினைவூட்டி அக்னிக் குஞ்சை நெஞ்சில் ஏந்தும் தியாக ஜோதி இடம் பெறுகிறது .அதுவும் தொடர் ஓட்டமாகக் கொண்டு செல்வது தலைமுறை தலைமுறையாக தியாக உணர்வை கைமாற்றும் தொடர்ச்சியின் குறியீடு. ஆக , தியாகிகள் ஜோதி ஏந்துவது செயலுக்கு உந்தித்தள்ள உத்வேகம் ஊட்டவே. விளக்கு பூஜையோ மனிதச்  செயலை நம்பாமல் கடவுளின் அருளுக்கு வேண்டுவதென, இல்லாத ஒன்றிடம் சரணடையச் செய்தல். ஆக விளக்கு பூஜை செயலுக்குத் தடை; தியாக ஜோதி செயலுக்கு நெம்புகோல்.


கடவுளுக்கு சிலைவணக்கம் உருவவணக்கம் கூடாதென்றால் தலைவர்களுக்கு சிலை வைப்பதும் பிறந்தநாள் இறந்தநாளன்று அதற்கு மாலை சூட்டி மலர் தூவி வணங்கி நிற்பது ஏன்? அது சரியா?


முந்தைய கேள்வியின் தொடர்ச்சிதான் இதுவும்.  இஸ்லாம் தவிர வேறு எல்லா மதங்களிலும் ஏதோ ஒரு வகை உருவ வழிபாடு தொடரவே செய்கிறது. இஸ்லாம் திசை நோக்கி தொழச்சொல்லுகிறது. எது எப்படியிருப்பினும் அனைத்து மதங்களும் மக்கள் தங்கள் துன்பதுயரங்களிலிருந்து விடுபட கடவுளைச் சரணாகதி அடையச் சொல்கிறது. கேள்விகேட்காமல் பணியச் சொல்லுகிறது . முழுக்க முழுக்க கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு பிம்பத்தை அல்லது ஒரு கற்பனையைச் சார்ந்ததே அவை .ஆகவே மதம் சார்ந்த உருவ வழிபாடு, சிலை வழிபாடு, திசை வழிபாடு எல்லாம் சாராம்சத்தில் ஒன்றே.


தலைவர்களுக்கு அல்லது அறிஞர்களுக்கு அல்லது சான்றோர்களுக்கு சிலை எடுப்பது அல்லது படம் திறப்பது  அல்லது நினைவகம் அமைப்பது கற்பனையின் மீது எழுப்பப்படுவது  அல்ல; அவர்கள் வாழ்ந்து மறைந்ததற்கும்  சாதனைகள்  புரிந்ததற்கும் சமூகம் சார்ந்து சிந்தனைகளை விதைத்ததற்கும் சாட்சியங்கள் உண்டு. வரலாறு உண்டு. அதனை அடுத்த தலைமுறைக்கு நினைவுகூரவும், அதனிலும் முன்னோக்கிச் செல்ல உந்தித்தள்ளவும் இந்த சிலை / படம் / நினைவகம் பயன்படும் என நம்பிச் செய்யபடுகிறது. உலகெங்கிலும் இதுவே நடைமுறை. இது சிறந்த பண்பாட்டுக் கூறும் ஆகும். உருவ வழிபாட்டை ஏற்காத நாடுகளிலும் இத்தகையவர்களை நினைவுகூர ஏதேனும் ஒருவகை ஏற்பாடு உள்ளது.
ஆயினும் வரலாற்றை மறந்து வெறும் திவசம் போல் நினைவுகூரத் தொடங்கினால்  எதிர்வினையாகிவிடும். இந்தியாவில், தமிழகத்தில் அத்தகைய போக்கு மேலொங்கி வருவது கவலையளிக்கிறது. வரலாற்றுச் சின்னங்களான பெருமக்கள் சிலைகள்கூட வழிபாட்டுப் பொருளாகவும், கலவரக் காரணியாகவும், சாதிய மோதலின் குவிமையமாகவும்  மாற்றப்பட்டும்போது அது ஒரு பண்பாட்டுச் சிதைவே!  பண்பாட்டு மேன்மையை ஓங்கச் செய்யவும், அல்லாதன வற்றை ஒதுக்கவும் நாம் விழிப்புணர்வு பெற வேண்டும் .


உலகம் முழுவதும் பலவிதமான நம்பிக்கைகளும் சடங்குகளும் உள் ளன ; அப்படியிருக்க நமது பாரம்பரிய சடங்குகளை மட்டும் கேலி பேசலாமா? ஏதோ மக்கள் மனத் திருப்திக்காகச் செய்கிறார்கள் செய்துவிட்டுப் போகட்டுமே !உங்களுக்கு என்ன நட்டம் ?


சடங்குகள்  எல்லா நாட்டிலும் எல்லா விதமான மக்களிடமும் உண்டு. சாதி, மதம், இனம், குலம், மொழி, பிரதேசம், ஊர், தொழில், இயற்கைச் சூழல் சார்ந்து எண்ணற்ற சடங்குகள் உலகெங்கும் உள்ளன ஆனால் அவை பல திறத்தன. தொல்குடி மக்களிடம் தொடங்கிய சடங்குகளின் எச்சம் முதல் காலவெளியில் சேர்ந்த சடங்குகளும் ஆக நிறைய உண்டு.

சடங்குகள் என்றாலேபோலச்செய்தல்என்றே சமூக அறிஞர்கள் கூறுவர்.  உதாரணமாக மாதவிடாய்க்கும் கருத்தரித்தலுக்கும் உள்ள தொடர்பைக் கண்ட தொல்மனிதன்   பயிரிடும் முன் நிலத்தில் சிவப்பான திரவத்தையோ பொடியையோ தூவினான் . இப்படிப்பட்ட வளப்பச்சடங்குகள்  பல உண்டு . சில ஆப்பிரிக்க நாடுகளில் வயதுக்கு வந்த பெண்களின் பிறப்புறுப்பை தைத்துவிடும் சடங்கு உண்டு. திருமணம் நிச்சயமானதும் மீண்டும் இன்னொரு சடங்கு மூலம் திறக்கப்படும்.  இது எவ்வளவு கொடுமையானது யோசித்துப் பாருங்கள்.  பெண்ணடிமைத்தனத்தில் குரூர வடிவமன்றோ! நம் நாட்டில் சில பிரிவினரிடையே கணவனை இழந்த பெண்ணுக்கு மொட்டையடிக்கும் சடங்கு உண்டு. இதுவும் ஆணாதிக்கச் சடங்கல்லவா?இப்படிபெரும்பாலான சடங்குகள் பெண்ணடிமைத்தனத்தை நிலை நிறுத்துவன; ஆதிக்க சக்திக்கு அடிபணியச் செய்வன; கேள்விகேட்காமல் பணியச் சொல்வன; அறிவியல் பார்வைக்கு எதிரான அத்தகைய சடங்குகளை அந்தந்த நாட்டில் - அந்தந்த மதத்தில் - அந்தந்த இனத்தில் - அந்தந்த ஊரில் உள்ளவர்களே அடையாளம் கண்டு எதிர்க்க முடியும். சமூகமுன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இல்லாத சடங்குகளை யாரும் வலிந்து எதிர்க்கப் போவதில்லை. அது பண்பாட்டுக் கூறாகிவிடும்.


மக்களின் மனத் திருப்தி என்பது அவசியமே. மகிழ்ச்சியோடு வாழ்வதன்றோ இறுதி இலக்கு . ஆனால்  எல்லா சடங்குகளும் வெறும் மனத் திருப்திக்காக மட்டுமா செய்யப்படுகிறது .குழந்தைக்கு காதுகுத்தி மொட்டை போடுகிறார்கள்.. சரி ! அதை மனத் திருப்திக்காகச் செய்கிறார்கள் என விட்டுவிட்டலாம். ஆனால் பூப்புனித நீராட்டு என்பது பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடல்லவா அதைப் போற்றலாமா?  கணவனை இழந்தவரின் பூவையும் பொட்டையும் வலுக்கட்டாயமாகப் பறிக்கும் சடங்கு யார் திருப்திக்காக?சந்திரகிரஹணம் ,  சூரிய கிரஹணம் எப்படி நிகழ்கிறது என்பதை அறிந்த பின்னும் பழைய சடங்குகள் தேவையா?

சமூகத்தின் பொது புத்தியை வளர்தெடுப்பது முற்போக்காளர் கடமைதானே! பாரம்பரியம் என்பதற்காக தவறானவற்றை கொண்டாடவும் கூடாது; பழசு என்பதாலேயே நிராகரிக்கவும் தேவை இல்லை. பண்பாட்டின்   உயிர்ப்பை அறுக்காமலேயே உற்று நோக்கி இங்கே நாமறிந்த சடங்குகளில் கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளுவதே அறிவார்ந்த செயலாக இருக்கமுடியும்..



ஒருவர் விபத்தில் பாதிக்கப்பட்டோ நோயுற்றோ இருக்கும் போது நலம் விசாரிக்கச் செல்வது இயல்பு ; அப்போது ஆறுதல் சொல்ல ஆன்மிகச் சொற்கள் உதவுதல் போல் உங்கள் அறிவியற்சொற்கள் துணைக்கு வருவதில்லையே ! ஆறுதலளிப்பது ஆன்மீகமே என்பதை இப்போதாவது ஒப்புக் கொள்வீர்களா ?


உண்மையில் இது ஒரு சவாலான நடைமுறைச் சிக்கல். துன்பதுயரத்தில் இருப்பவர்களைச் சந்திக்கும்போது, “ஏதோ தலைக்கு வந்தது தலைபாகை
யோடு போச்சு; எல்லாம் நம்ம நேரம் சரியில்லை; உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் ; ஏதோ ஆண்டவன் நம்ம சோதிக்கிறான்; பேசாமல் அவன் மேல பாரத்தைப் போட்டுட்டு மனதை தேற்றிக்க வேண்டியதுதான்...” இப்படி பழக்கப்பட்ட வார்த்தைகளைக் கூறுவது சுலபம். அது போல் பாதிக்கப்பட்டோருக்காக ஜெபம் செய்வது; திருநீறு கொடுப்பது இப்படி துன்பத்தில் தானும் பங்குபெறுவதாகக் காட்டிக்கொள்வதும் எளிது .
ஆனால் இவை எதுவும் பிரச்சனைக்குத் தீர்வல்ல. ஆன்மீக வார்த்தைகள் தீர்வல்ல. வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்குத் தேவை சற்று நேர இளைப்பாறுதல் அல்ல; பாரத்தைக் குறைக்கவோ அல்லது பாரத்தைத் தாங்கும் அதிக வலுவோதான் தேவை . எனினும் இவை ஆறுதலான செயல்கள் / வார்த்தைகள் என பொதுப் புத்தியில் உறைந்து போயுள்ளது.

ஆனால் உண்மையில் அப்படிப் பேசுவது ஒருவித நழுவல்தனமே அதாவது எஸ்கேப்பிஸமே. திறந்த மனதோடு தோள் கொடுப்பதே பகுத்தறிவாளர்கள் முற்போக்காளர்கள் செயலாக இருக்கமுடியும். ஆன்மிக வாதிகள் போல் பூசி மெழுகவும் கூடாது; உண்மையைக் கூறுகிறேன் பேர்வழி என்று கீறி உப்பு தடவவும் கூடாது. நடந்ததைக் கேட்டறிவதும் சாத்தியமான உதவிகளை செய்ய முயலுவதும் அவசியம்


எடுத்துக்காட்டு: அறுவை சிகிச்சைக்கு தேவையான இரத்தத்துக்கு ஏற்பாடு செய்வது ஆறுதல் வார்த்தையை விட மேலானது. மருத்துவ அரைகுறை ஞானத்தில் ஆலோசனைகள் சொல்லி மிரட்டாமல் அல்லது தவறான வழிகாட்டல் செய்யாமல் இருப்பது மிகமிக அவசியம். அதே சமயம் மருத்துவ நண்பர்கள் உதவியுடன் உண்மைகளை அறிந்து சரியான நம்பிக்கையையும் வழிகாட்டலையும் செய்ய இயலுமானால் ஆறுதலைவிட நூறுமடங்கு மேலானது.  இக்கட்டான சூழலில் அவருக்கு பண உதவி , வேறுபல சின்னச் சின்ன உதவிகள் என நிறையத் தேவைப்படும் அப்போது உடனிருந்து நம்மால் இயன்ற அனைத்து வழிகளிலும் உதுவது மேலானது .இதை எல்லாம் செய்ய இயலாதவர்கள்கூட சந்திக்கும் போது அவர்களுடைய துயரத்தை அதிகரிக்கும் சொற்களைச் சொல்லாமல் - அவர்களின் மனவருத்தத்தைக் கோபத்தை மேலும் விசிறிவிடாமல், மீண்டெழ  முடியும் என நம்பிக்கையூட்டும் செய்திகளைச் சொல்லப்பழக வேண்டும்.

அதே சமயம் அவர்களை யாரேனும் தவறாக வழிகாட்டி சரியான சிகிட்சையை மேற்கொள்ள விடாமல்  மூடநம்பிக்கைகளில் ஆழ்த்தும் போதுஅல்லது சரியான தீர்வை நோக்கிச் செல்லாமல்  திசை மாறும் போது கொஞ்சம் கடுமையாய் நடந்து அவர்களை சரியான தீர்வை நோக்கி செலுத்துவதே தோழமை



ஓருவர் இறக்கிறபோது அவரவர் மத வழக்கப்படி இறுதி நிகழ்வு நடத்துவது தவறா? அது அவரவர் உரிமை அல்லவா? எல்லா மதத்திலும் ஏதோ ஒருவகையில் திவசம் அல்லது நினைவுகூரல் இருக்கத்தானே செய்கிறது? இதெல்லாம் மனித உணர்வுகள் தொடர்பான சடங்கல்லவா? இதனையும் முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர் எதிர்த்துத்தான் ஆகவேண்டுமா ?


ஆதி காலத்தில் மரணம் பற்றி புரியாமை இருந்தது; அப்போது மரணத்தை உணர்த்தவும் மீண்டும் அவர் வரமாட்டார் இயங்கமாட்டார் என உணர்த்தவும் பல வகை முயற்சிகள் செய்யப்பட்டன; பின்னர் அவை சடங்காக மாற்றப்பட்டன.  ஒருவர் இறந்த பின்னர் என்ன ஆவார் என்கிற மிகப் பெரிய கேள்விக்கு விடை தேடிய மனிதன் குழம்பி தத்துவத்தைச் சரணடைந்தான். அன்று மதமே தத்துவப் போரின் சாதனமாக இருந்தது . எனவே சாவு தொடர்பான நடைமுறைகளில் மத ஆதிக்கம் அதிகமாக உள்ளது.


திருமணம் போன்ற இதர நிகழ்வுகளுக்கும் இதற்கும் மிக நிறைய வேறுபாடு உண்டு. இறந்தவர் கையில் அதிகாரம் கிடையாது . இருப்பவர்களும் துயரத்திலும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் இருப்பதால் பெரும்பாலும் மத , சாதி ரீதியான சடங்குகள் ஆதிக்கம் செய்யும். அதுவும் இந்த நேரங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் சில  ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்சூழலைக் கையிலெடுத்து உத்தரவிடத் தொடங்கிவிடுவார்கள். இது உதவியாகுமா உபத்திரமாகுமோ கூற இயலாது. எனவே இறுதிச் சடங்குகள் பற்றிக் கொஞ்சம் நிதானமாகவே பேச இயலும்.


எல்லா மதத்தவருக்கும் இது பொருந்தும் . ஆகவே சாவு தொடர்பான சடங்குகளில் பல நேரங்களில் அர்த்தமற்றது எனத் தெரிந்தும் விட்டுக்கொடுகவேண்டியவர்களாகி விடுகிறோம். சிலர் தன் இறுதி நிகழ்வு எப்படி இருக்கவேண்டும் எனச் சொல்லிவிட்டோ எழுதிவைத்துவிட்டோ சென்றுவிடுகிறார்கள். மறைந்த திரைப்பட பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி இறப்புக்குப் பிறகு மத ரீதியான எந்தச் சடங்கும் கூடாதென எழுதிவைத்து விட்டுச் செத்தார் .  கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவரும் மேற்குவங்க முன்னாள் முதல்வருமான ஜோதிபாசு தனது உடலை மருத்துவமனைகுத் தானம் செய்யச் சொல்லி எழுதிவைத்திருந்தார். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் அப்படியே.வெளிநாடுகளிலே தன் கல்லறை வாசகத்தைக் கூட தானே எழுதி வைத்துப் போகிற பழக்கம்  உண்டு

காரல் மார்க்ஸ் உடல் ஏன் புதைக்கப்பட்டது? பெரியார் உடல் ஏன் புதைக்கப்பட்டது? கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி. ராமமூர்த்தி , . ஜீவானந்தம் உடல்கள் எரிக்கப்பட்டது ஏன்? பதில் சொல்வது சிரமம். பழக்கம் அல்லது மரபு ஏதேனும் சொல்லலாம். புதைப்பது நல்லதா? எரிப்பது நல்லதா? இது தனிக் கேள்வி.


அதே போல் திவசம் / நினைவுகூரல் எல்லா நாட்டிலும், ஏதோ ஒரு வடிவில் இருக்கிறது..  இறந்தவர்களை நினைவு கூர்வது சரியே. அது அவர்களின் சாதனையைக் கொண்டாடுவதாக, அவரின் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதாக அமையுமாயின் நன்று. ஆனால் வழிபடல் எவ்வகையிலும் ஏற்க இயலாது.  இறந்தபின் எதுவும் இல்லை. ஆன்மா இல்லை என்பதால் அது நிம்மதி தேடி அலைவதில்லை. சொர்க்கம் இல்லை. நரகம் இல்லை.  இறந்தவர் பேயாய் அலைவதும் இல்லை.  சாமியாய் ஆசிர்வதிப்பதும் இல்லை.  செத்தபின் ஒன்றுமில்லை. திவசம் /கல்லறை வழிபாடு உட்பட செய்யும் சடங்குகள் வீணே!  முதியோரை அவர்கள் உயிரோடு இருக்கும்போது உரிய மதிப்புக் கொடுத்து தக்க விதத்தில் பேணுவதே தனிநபர் கடமையும் சமூகக் கடமையுமாகும். செத்தபின் செய்யும் சடங்குகள் எல்லாம் வீணே.  எதற்கும் உங்கள் மரணத்திற்குப் பின்னால் செய்ய வேண்டியதை தயவு செய்து உயில் எழுதி வைத்திடுங்கள். அதுவே நல்லது.


நன்றி : தீக்கதிர் – வண்ணக்கதிர்   4 ஜனவரி 2015
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

0 comments :

Post a Comment