கோழிக்கோடு சொன்ன சேதி -2
Posted by
கோழிக்கோடு சொன்ன சேதி -2
அந்த 48 மணி நேரம் நடந்தது என்ன?
உட்கட்சி ஜனநாயகத்தின் உரத்த சாட்சி
என்ன சார்! உங்கள ஒரு வாரமா காணோம்? என அன்போடு விசாரித்த நண்பர்களிடம்
ஏப்ரல் 4 முதல் 9 வரை ஆறு நாட்கள் எங்கள் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றேன்
என கூறியதை அவர்கள் நம்பவில்லை. ஆறு நாட்கள் மாநாடா? அப்படி என்னதான்
செய்வீங்க? என அவர்கள் எதிர்கேள்வி கேட்டது நியாயம்தான். தமிழகத்தைப்
பொறுத்தவரை மாநாடு என்பது பெரும் கூட்டத்தைக் காட்டுவதும், தலைவர்கள்
உரையாற்றுவதற்குக் கைதட்டுவதும்தான் என்ற எண்ணத்தை இங்குள்ள பல கட்சிகள் வலுவாக விதைத்துள்ளன. கொடி பிடிக்கும் தொண்டன் முடிவெடுப்பான்
கோஷமிடும் தொண்டன் கொள்கை வகுப்பான் என்ற சொற்றொடர்கள் இங்கே பல கட்சிகளுக்கு வெறும்
சுவரொட்டி வாசகமே. இதற்கு முற்றிலும் மாற்றாய் அவ்வாசகத்தின் பொழிப்புரையாய் கோழிக்கோட்டில்
மாநாடு நடந்தது என்பதை அவர்களுக்கு விவரித்தபோது அவர் அதிர்ச்சியில் உறைந்தே போயினர்.
அரங்கிற்குள் பேராளர்கள் (டெலிகேட்டுகள்) மாநாடு ஆறு நாட்களுமாக 48 மணி நேரம் நடந்தது
என்று சொன்னபோது அந்த 48 மணி நேரமும் அப்படி என்னதான் பேசினீர்கள் என வெடிச் சிரிப்போடு
வினயமாய் அவர்கள் வீசிய கேள்வி நியாயமானது.
அதனை விளக்கியதோடு, தற்செயலாய் எம் பையிலிருந்த ஆவணங்களை
அவர்கள் முன் விரித்தபோது வியப்பின் உச்சிக்கே
சென்றனர். பொதுமக்கள் பலருக்கும் இதே கேள்வி இருக்கும் என்பதால் அதுகுறித்து சற்று
அலசுவோம்.
முதல் நாள் 11 மணி வரை மாநாட்டுத் திடலில் கலை நிகழ்வுகளும், கொடியேற்று நிகழ்ச்சிகளும், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும்
நிகழ்வும் நடந்தேறின. 11 மணி முதல் 1 மணி வரை அரங்கிற்குள் மாநாட்டு துவக்க நிகழ்ச்சிகள்
நடைபெற்றன. இது அனைவரும் பங்கேற்ற நிகழ்ச்சி. அன்று மதியம் 3 மணி முதல் 9ஆம் தேதி மதியம்
1 மணி வரை ஆறு நாட்கள் பேராளர்கள் மாநாடு நடைபெற்றது. தினசரி காலை 9.30 மணி தொடங்கி
இரவு 9 மணி வரை - தேநீர் உணவு இடைவேளை தவிர மாநாட்டுக்குள் மொத்தம் 48 மணி நேரம் உட்கட்சி
ஜனநாயகத்தின் உன்னத சாட்சியாய் விவாதங்களும் உரைகளும் தீர்மானங்களும் அமைந்தன.
இம்மாநாட்டில் அரசியல் தீர்மானம், தத்துவார்த்தத் தீர்மானம், அரசியல் ஸ்தாபன அறிக்கை என
மூன்று முக்கிய ஆவணங்கள் மனந்திறந்த விவாதத்திற்குப் பின் நிறைவேற்றப்பட்டன. அதேபோல,
கட்சி அமைப்பு விதிகளுக்குத் திருத்தமும் மாநாட்டால் அங்கீகரிக்கப்பட்டது.
அரசியல் தீர்மானம் ஆங்கிலத்தில் 59 பக்கங்கள் கொண்டது.
2 பகுதிகளை உள்ளடக்கியது. 203 பத்திகள் கொண்டது. முதல் பகுதி, சர்வதேச பகுதியாகும். இரண்டாவது பகுதி தேசியப் பகுதியாகும். தத்துவார்த்தத்
தீர்மானம் 81 பக்கங்களையும் 11 பகுதிகளையும் 160 பத்திகளையும் கொண்டது. முதல் 48 பக்கங்களில்
தீர்மானமும் அதைத் தொடர்ந்து 33 பக்கங்களில் 39 விளக்கக் குறிப்புகளும் அடங்கும். அரசியல்
ஸ்தாபன அறிக்கை என்பது அரசியல் பரிசீலனை, ஸ்தாபனப் பரிசீலனை,
வர்க்க வெகுஜன அமைப்புகளின் பரிசீலனை, 12 அட்டவணைகள்,
218 பக்கங்கள் கொண்டதாகும். இந்த விவரங்களை இங்கு குறிப்பிடுவதற்குக்
காரணம், அறிக்கைகள் வெறும் வசனமாகவோ தலைவர்களின் சொற்பொழிவாகவோ
அமையாமல், எவ்வளவு பொறுப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தவே. இந்த அறிக்கைகளை கட்சி முழுமையும் மாநாட்டுப் பேராளர்களும் நுட்பமாக விவாதித்தனர்
என்றால் எவ்வளவு சமூக பொறுப்பும் அரசியல் விழிப்புணர்வும் இருக்குமென்பதை சொல்லவும்
வேண்டுமோ? நண்பர்களிடம் இது குறித்து பேசியபோது மாபெரும் ஆய்வுப்
பணியை மேற்கொண்டீர்கள் என்று சொல்லுங்கள் என்றனர். ஆம், ஆனால்
இந்த ஆய்வு வெறுமே சில தலைவர்களால் மட்டுமே நிறைவேற்றப்படவில்லை. கட்சி அணிகள் முழுமையும்
பங்கேற்றது. 727 பேராளர்களும் 74 பார்வையாளர்களும் பங்கேற்று உணர்வுபூர்வமாய் ஈடுபட்டு
நிறைவேற்றியதாகும்.
அரசியல் தீர்மானமும் தத்துவார்த்தத் தீர்மானமும் மாநாடு
துவங்குவதற்கு 2 மாதங்கள் முன்பே கட்சி மத்தியக் குழுவால் பகிரங்கமாக வெளியிடப்பட்டுவிட்டது.
இது ரகசிய ஆவணமல்ல. இதன் மொழி பெயர்ப்பும் எல்லா மாநிலக்குழுவாலும் வெளியிடப்பட்டன.
கட்சி அணிகள் முழுவதும் இதை விவாதித்தது.
கட்சியின் 93,107 கட்சிக் கிளைகள்,
5,733 வட்டாரக் குழுக்கள், 971 பகுதி- வட்டக் குழுக்கள்,397 மாவட்டக் குழுக்கள்,
22 மாநிலக் குழுக்கள், 4 மாநில அமைப்புக் குழுக்கள்
என அனைத்து மட்டத்திலும் விவாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானத் திருத்தங்கள் மத்தியக்குழுவுக்கு
மாநாட்டுக்கு முன்பே அனுப்பப்பட்டது.
அரசியல் தீர்மானத்திற்கு 3,713 திருத்தங்களும், 483 யோசனைகளும் அனுப்பப்பட்டிருந்தன.
இதுபோக மாநாட்டில் பேராளர்கள் 326 திருத்தங்களையும் 33 ஆலோசனைகளையும் வழங்கினர். இதுபோல
தத்துவத் தீர்மானத்திற்கு 984 திருத்தங்களும் 86 யோசனைகளும் முன்கூட்டியே அனுப்பப்பட்டிருந்தன.
மாநாட்டின்போது பேராளர்கள் 234 திருத்தங்களையும் 29 ஆலோசனைகளையும் முன்மொழிந்தனர்.
இதன்மீது விவாதம் நடைபெற்றது.
அரசியல் தீர்மானம் மற்றும் அரசியல் பரிசீலனை அறிக்கைமீது
நடைபெற்ற விவாதத்தில் 47 தோழர்கள் பங்கேற்று 472 நிமிடங்கள் கருத்துகளை சொன்னார்கள்.
அதுபோல தத்துவத் தீர்மானத்தின்மீது 47 தோழர்கள் பங்கேற்று 472 நிமிடங்கள் கருத்துகளை
முன்வைத்தார்கள். இதுபோக அரசியல் ஸ்தாபன அறிக்கையின்மீது 40 தோழர்கள் 390 நிமிடங்கள்
கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள். ஆக இந்த மூன்று ஆவணங்களை சேர்த்து மட்டும் 1334
நிமிடங்கள் அதாவது 22 மணி நேரம் 24 நிமிடங்கள் 134 தோழர்கள் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள்.
ஏற்கனவே சுட்டியதுபோல மூன்று ஆவணங்களிலும் மொத்தமாக 5357 திருத்தங்களும், 633 யோசனைகளும் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. இப்போது நாம் சவால் விட்டுக்
கேட்கிறோம். வேறு எந்தக் கட்சியில் இவ்வளவு விரிவாக - இவ்வளவு பங்கேற்போடு - இவ்வளவு
நுட்பமாக தொண்டர்களின் கருத்துகள் முழுமையாக கேட்கப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது? உட்கட்சி ஜனநாயகம் என்பது மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை வெறும் வார்த்தையல்ல. உயிரோட்டமுள்ள செயல்முறை. அதன்
முழு சாட்சிதான் இவ்வளவு நெடிய விவாதம்.
இதன்பிறகு, தொகுப்புரை வழங்கப்பட்டு
திருத்தங்கள்மீது வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. ஒன்றிரண்டு தோழர்களின் ஆட்சேபனையோடு
ஆவணங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுபோக அமைப்பு விதிகளில் சில திருத்தங்களை மத்தியக்
குழு முன்மொழிந்தது. அதற்கும் 12க்கும் மேற்பட்ட திருத்தங்கள் பேராளர்களால் முன்மொழியப்பட்டன.
மாநாட்டுக்கு முன்பும், டஜனுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் அனுப்பப்பட்டிருந்தன.
அனைத்திற்கும் உரிய விளக்கம் சொன்ன பிறகு ஏற்கப்பட்டது.
இதுபோக, 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் தீர்மானக் குழுவால் முன்மொழியப்பட்டன.
உழைப்பாளி மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஒவ்வொரு பிரச்சனை மீதும் தீர்மானங்கள் அக்கறையோடு
பேசின. இந்தத் தீர்மானங்களும் எழுத்து மூலம் அனைவருக்கும் வழங்கப்பட்டு- உரிய திருத்தங்கள்
முன்மொழிய பெரும் வாய்ப்பு வழங்கப்பட்டு பல திருத்தங்கள் ஏற்கப்பட்டு மாநாட்டின் ஒட்டு
மொத்தக் குரலாய் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டின் முதல் தீர்மானம் அஞ்சலித் தீர்மானமாகும்.
அதுவே 24 பக்கங்கள் கொண்டது. கடந்த மாநாட்டிற்குப் பிறகு மறைந்த மூத்த தலைவர்கள், முன்னணி ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு போர்களத்தில் மடிந்த கியாகிகள்
பெயர் பட்டியலை முன்வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் 572 பேர்,
கேரளாவில் 27 பேர், பீகாரில் 10 பேர், திரிபுராவில் 6 பேர், ஆந்திராவில் 5 பேர், தமிழ்நாடு, சத்தீஷ்கர், ஒடிசாவில்
தலா இருவர், மஹாராஷ்டிராவில் ஒருவர் என பெரும் பட்டியல் மனதை
கனக்கச் செய்தது. இது சென்ற மாநாட்டுக்குப் பிறகு உள்ள கணக்கு. விடுதலைப் போர் தொடங்கி
இன்றுவரை கம்யூனிஸ்ட்டுகள் செய்துள்ள உயிர் தியாகத்தைக் கணக்கிட்டால் மலைப்பே ஏற்படும்.
வர்க்கப் பகைவர்களும், மத வெறியர்களும், சுரண்டும் கூட்டமும், ஆதிக்க சாதி வெறியர்களும்,
சமூக விரோதிகளும் எம் தோழர்களை அன்றாடம் குருதி வெள்ளத்தில் வீழ்த்துகின்றனர்.
ஆயினும், எம் போராட்டம் தொடர்கிறது, தொடரும்.
இம்மாநாடும் அதன் ஒரு பகுதியே!
ஆக, அந்த 48 மணி நேரமும் என்ன நடந்தது?
விவாதத்திற்கும் திருத்தங்களுக்குமே ஏறத்தாழ 24 மணி நேரத்திற்கு மேல்
செலவிடப்பட்டது. ஆவணங்களை முன்மொழிய, தொகுப்புரை வழங்க,
இதர 24 மணி நேரம் பயன்பட்டது.இதில்மொத்தமாக ஏறத்தாழ 8 மணி நேரம் அவரவர் தாய்மொழியில்
மொழிபெயர்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த அளவு விரிந்து பரந்த அரசியல் விழிப்புணர்வு மிக்க
உள்கட்சி ஜனநாயத்தை வேறெங்கு காண முடியும்? கட்சியின் மத்தியக்
குழுவை, தலைமைக் குழுவை, கட்டுப்பாட்டுக்
குழுவை ஏகமனதாக தேர்வு செய்ததென்பது வெறுமே தலைவருக்குக் கட்டுப்பட்டு தலையாட்டும்
செயலாக அல்ல. கருத்தொற்றுமை, செயலொற்றுமை அதற்கே மாநாட்டில் உட்கட்சி
ஜனநாயகம் முன்னுரிமை அளித்தது. அதில் வெற்றியும் பெற்றது. இம்மாநாட்டு ஆவணங்களில் தீர்மானங்களில்
வெளிப்படும் தொலை நோக்கையும் சமூக அக்கறையையும் சொல்லவும் வேண்டுமோ?
0 comments :
Post a Comment