கோழிக்கோடு சொன்ன சேதி -3

Posted by அகத்தீ Labels:


கோழிக்கோடு சொன்ன சேதி -3

மண்டிக் கிடக்குது இங்கே பிரச்சனைகள்
மக்களைத் திரட்டி களத்தில் நிற்பீர்!

பக்கம் பக்கமாய் ஆவணங்கள், மணிக் கணக்கில் விவாதங்கள் எல்லாம் எதை நோக்கி? மார்க்சியம் திண்ணை வேதாந்தம் அல்ல. மக்களை படிப்படியாய் முன்னேற்ற மார்க்கம் சொன்ன தத்துவம். அதனை வழிகாட்டியாகக் கொண்ட கட்சியின் மாநாட்டில் பேசப்பட்டது எல்லாம் மக்கள் பிரச்சனைகள் அன்றி வேறு என்ன?

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட தீர்மானங்களின் தலைப்புகளை, உள்ளடக்கத்தை ஒரு பருந்துப் பார்வையில் வலம் வந்தாலே மக்களோடு மார்க்சிஸ்ட் கட்சிக்கு உள்ள பற்றும் அக்கறையும் பளிச்சிடும்.

வறுமைக்கோட்டின் கீழே வாழ்கிற மக்களை மீட்டு எடுப்பதற்கு உருப்படியாக திட்டம் தீட்ட வக்கில்லாத அரசு மோசடியாக வறுமைக் கோட்டையே மாற்றி அமைத்ததை ஒரு தீர்மானம் கடுமையாகக் சாடியது. அதன் தொடர்ச்சியாக வந்த இன்னொரு தீர்மானம் 46 கோடி மக்களுக்கு மேல் முறைசாராத் தொழிலில் இருப்பதை - குறிப்பாக சமூகத்தில் உழைக்கத் தயாராக இருப்பவர்களில் 93 விழுக்காட்டினர் முறைசாராத் தொழிலாளியாகவே இருப்பதை அடிக்கோடிட்டு காட்டி அனைவருக்கும் சமூக பாதுகாப்புப் பலன்கள் வழங்க வேண்டுமென ஒரு தீர்மானம் வலியுறுத்தியது.

கெட்டும் பட்டணம் போ என்ற பழமொழிக்கு ஏற்ப பிழைக்க நகரங்களை நாடிய ஏழைப் பாட்டாளிகளின் வாழ்நிலை எவ்வளவு படுபாதாளத்தில் இருக்கிறது என்பதை கவலையோடு ஒரு தீர்மானம் அலசியதோடு இதற்குத் தீர்வு காணவும் வற்புறுத்தியது. மக்கள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சேமிக்கிற பல கோடி ரூபாயை சூறையாட சர்வதேச நிதி நிறுவனங்களும், பெரும் முதலைகளும் வாய் பிளந்து நிற்பதை நெஞ்சம் பதைக்க ஓர் தீர்மானம் இடித்து உரைத்தது. அதேபோல, வேலை வாய்ப்பு எப்படி முயல் கொம்பு ஆகிவருகிறது என்பதை இன்னொரு தீர்மானம் புள்ளி விவரங்களோடு வடித்துக் கொடுத்தது. மறுபுறம், இருக்கிற வேலைகளும் கான்ட்ராக்ட் முறைக்கு மாற்றப்படுவதை அடுத்து வந்த தீர்மானம் அம்பலப்படுத்தியது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட துணைத் திட்டம் படும்பாட்டை ஒரு தீர்மானம் படம் பிடித்தது. மலைவாழ் மக்கள் வாழ்வுரிமையையே கேள்விக்குறியாக்கும் தனியார் சுரங்கக் கொள்ளைக் குறித்து இன்னொரு தீர்மானம் குத்தீட்டியாய் பாய்ந்தது. நாடு முழுவதும் ஒவ்வொரு நிமிடத்திலும் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்கிற அவலத்தையும், விவசாயத் துறை சந்திக்கிற சவால்களையும், நிலச்சீர்திருத்தத்தின் அவசியத்தையும் அடுத்தடுத்த தீர்மானங்கள் வரைந்து காட்டின. பெண்கள், சிறுபான்மையோர், மாற்றுத் திறனாளிகள் என எந்தப் பிரிவினரின் வாழ்க்கைப் பிரச்சனையையும் விட்டு வைக்காமல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மிக முக்கியமானது.

வெறுமே செய்திக்காக நிறைவேற்றப்பட்டது அல்ல இந்தத் தீர்மானங்கள். மண்டிக் கிடக்கும் மக்கள் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி அதை நோக்கி மக்களைத் திரட்டி களத்தில் இறங்க ஆயுதமாகவே இத்தீர்மானங்கள் மாநாட்டு உலைக்களத்தில் புடம் போடப்பட்டன.

இந்தத் தீர்மானங்கள் ஒருபுறம். மறுபுறம், இரண்டு மாதங்களாக விவாதிக்கப்பட்ட அரசியல் தீர்மானமும், அரசியல் ஆய்வு அறிக்கையும் மிக முக்கியமானது. இருபது பக்கங்களில் 46 பத்திகளில் உலகை பீடித்து இருக்கும் பொருளாதார நெருக்கடி தொடங்கி உலகம் முழுவதும் ஏற்பட்டு வருகிற நெருக்கடிகளையும் எழுச்சிகளையும் மிக நுட்பமாக கோர்த்துத் தரப்பட்டுள்ளது. ஓர் இடத்தில் தீர்மானம் கூறுகிறது, சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு முதலாளித்துவத்திடம் இருந்து வந்த குதூகல மனநிலை மறைந்திருக்கிறது. அந்த இடத்தில் முதலாளித்துவத்தின் எதிர்காலம் குறித்த ஒருவகையான நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதுஎனவும் நெருக்கடியின் சுழற்சியில் இருந்து விடுபடுவதற்குள்ள ஒரே மாற்று சோஷலிசமே ஆகும். உழைக்கும் வர்க்க இயக்கத்தை வலுப்படுத்துவதும், விரிந்து பரந்த இடது சாரி அரசியல் மாற்றை உருவாக்குவதும் காலத்தின் தேவையாகும்என்றும் உறுதிபட உரைக்கிறது.

62 பக்கங்களில் 157 பத்திகளில் இந்தியாவின் சூழல் அலசப்பட்டுள்ளது. அந்நிய மூலதனம் மற்றும் பெரும் வர்த்தக நிறுவனங்ளுக்கு ஆதரவாக செயல்படும் ஐமுகூ அரசின் நவீன தாராளமயமாக்கல் நிகழ்ச்சி நிரல் குறித்தும் அதன் விளைவாய் எழும் பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சரிவு, உணவுப் பாதுகாப்பில் சிக்கல், விவசாயத் துறை நொடிந்து விவசாயிகளைத் தற்கொலைக்குத் துரத்துவது, ஊழல், உழைப்பாளி மக்கள் சந்திக்கும் சவால்கள் என தாராளமயமாக்கலின் இருபது ஆண்டுகளின் அவலத்தை மிகத் துல்லியமாக இத்தீர்மானம் அம்பலப்படுத்துகிறது. வகுப்புவாதம், பயங்கரவாதம், மத்திய - மாநில உறவுகள் சீர்கெடுவது, பண்பாட்டுச் சீரழிவு ஊடகங்களின் அரசியல், இங்குள்ள கட்சிகளின் நிலைமைகள் என இத்தீர்மானம் சுட்டாத விஷயமே இல்லை.

அடையாள அரசியல் குறித்து முதன்முறையாக கட்சியின் அரசியல் தீர்மானம் வலுவாகப் பேசி உள்ளது.

சமூக அடக்குமுறை, பாரபட்சம் மற்றும் சுரண்டலால் பாதிக்கப்படும் குழுக்கள் மற்றும் சமூகங்கள் அடையாள அரசியலை வளர்ப்பதற்கு வளமான மண்ணாக விளங்குகிறது. ஜாதி, ஆதிவாசி மற்றும் பாலியல் ஒடுக்குமுறைகளுக்கு   ஆளாகும்  ஒரு பகுதி மக்கள் அடையாள அரசியலின் பின்னால் அணி திரட்டப்படுவதற்கு ஏற்ற நிலையில் இருக்கிறார்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் குறுகிய நோக்கம் கொண்ட குழுக்கள் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய அரசியலுக்கு நிதி உதவி செய்கின்றன; இது வர்க்க ரீதியான திரட்டல் மற்றும் வர்க்கம் சார்ந்த இயக்கங்களைச் சிதைக்கும் நோக்கம் கொண்டது, எனவும்; பொதுவான வர்க்க அடிப்படையிலான இயக்கங்களைக் கட்டுவதன் மூலம் அடையாள அரசியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதேநேரத்தில் சமூகத்தின் பல்வேறு பகுதியினரிடம் காணப்படும் ஜாதி சமூக மற்றும் பாலியல் ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சனைகளைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது எனவும், எவ்விதக் குழப்பமும் இன்றி கட்சி வழிகாட்டி உள்ளது. சமூகப் பிரச்சனைகளைக் கையிலெடுக்க வலுவாக அறைகூவல் விடுத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலக் குழுக்கள் இப்பணியில் செயல்படத் துவங்கி உள்ளதை உரக்கப் பாராட்டி உள்ளது, தொடர வற்புறுத்தி உள்ளது.

மேலும், கடந்த 4 ஆண்டுகளில் அரசியல்ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் கட்சி சந்தித்த சவால்களை அரசியல் ஸ்தாபன அறிக்கை நுட்பமாக அலசியுள்ளது. மேற்கு வங்கத்தில் இடது சாரி அரசுகள் வீழ்த்தப்பட்டது. இதன் காரணத்தை இத்தீர்மானம் ஆராய்ந்துள்ளதோடு சில பிரச்சனைகளில் செய்துள்ள தவறுகளை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது. அதே வேளையில் 35 ஆண்டுகால மேற்கு வங்க இடது சாரி அரசின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. அதனை மீண்டும் உரக்கச் சொல்ல வேண்டுமென வற்புறுத்தி உள்ளது. கட்சியை விரிவாக்க, வலுவாக்க, உறுதியாக்க எல்லா வகையிலும் முயற்சி செய்ய கட்டளை இட்டுள்ளது.

நிலம், உணவு, வேலை வாய்ப்பு, சமூக நீதி இவற்றுக்காகவும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் மக்களைத் திரட்டிப் போராட மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. இடது சாரி ஜனநாயக மாற்று ஒன்றே உண்மையான மாற்றாக இருக்க முடியும் என்பது மிகவும் தெளிவாகி உள்ளது. ஆலைத் தொழிலாளிகள், முறைசாராத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி உழைக்கும் மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அறிவுஜீவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் நலன்களை இடது மற்றும் ஜனநாயகத் திட்டமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என தீர்மானம் ஆணி அடித்தாற்போல் சொல்லுகிறது.

இடது மற்றும் ஜனநாயக மேடையில் மேலே நாம் பட்டியல் இட்ட எண்ணற்ற பிரச்சனைகள் அடிப்படையிலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் தொடர்ச்சியாக மக்களைத் திரட்டிப் போராடுவதே ஒரே மாற்று. தேர்தல் நேரங்களில் அப்போதைய அரசியல் தேவைகளுக்காக செய்யப்படுகிற உடன்பாடுகள் மாற்று அல்ல, அது தீர்வும் அல்ல. மாறாக போராட்டக் களத்தில் - போராட்ட நெருப்பில் கைகோர்க்கிற பிணைப்பே உண்மையான இடதுசாரி மாற்று. அதுவே இந்திய மக்களை புதிய பாதையில் இட்டுச் செல்லும் ஒரே மார்க்கம். அவ்வழியில் போராட எழுவீர்! மக்களோடு இரண்டறக் கலந்து களத்தில் அணி வகுப்பீர்!

    

0 comments :

Post a Comment