பொங்கள் நன்னாளில் புத்தி வந்தது

Posted by அகத்தீ Labels:

 


பொங்கள் நன்னாளில்
புத்தி வந்தது


விடியக் காத்திருக்கும் இரவில்
மொட்டவிழ்ந்தது ஓர் கனவு
பேசும் முகம் புலப்படவில்லை
பேச்சு மட்டும் தெளிவாய்க் கேட்டது …
“ யார் நீங்கள் ?”
நடுங்கும் குரலில் நான் கேட்டேன் .
“ கடவுள்”
என்றது கம்பீரமாய் ..
“ உருவம் புலப்படவில்லையே ?
நம்புவது எப்படி ?
சந்தேகக் கணையைத் தொடுத்தேன் …
கை கொட்டி உரக்கச் சிரித்தார்
மெல்ல வாய் திறந்தார்
“ உழவனின் வியர்வையில்
நானிருப்பேன்
உழைப்பவன் குருதியில்
உறைந்திருப்பேன்
பசிப்பவன் முன்பு
ரொட்டியாய் வருவேன்
தவிக்கும் வாய்க்கு
தண்ணீராய் தெரிவேன்
நீங்கள் கட்டும்
பிரமாண்ட கோயிலிலோ
சர்ச்சிலோ மசூதியிலோ
நானில்லை
வியர்வையில்
ரத்தத்தில்
கண்ணீரில்
நானிருப்பேன்
குருதேவர் ரவீந்திர நாத் தாகூரும்
தேசப்பிதா காந்தியும் அதைத்தான்
எப்போதும் சொன்னார்கள்
உழவு செய்யாவிடில்
நாற்று நடாவிடில்
உரம் இடாவிடில்
நீர் பாய்ச்சாவிடில்
ஒரு கவளம் சோறுமின்றி
உலகமே முடங்கிப் போகும்
முற்றும் துறந்த முனிவரும்
பசியால் தவத்தை மறப்பார்
ஆம்… அதைத்தான்
வள்ளுவனும் சொன்னார்
‘உழவினார் கைமடங்கின் இல்லை இல்லை விழைவதும்
விட்டோம் என்பார்க்கும் நிலை ..’
உழைப்பைப் போற்று
உழவைப் போற்று
அங்கே நான் இருப்பேன்…”
கடவுள் பேசி மறைந்தார்
நான் விழித்தேன்
பொங்கள் நன்னாளில்
புத்தி வந்தது மக்களுக்கு
ஆட்சியாளருக்கு அல்ல...
சுபொஅ.

0 comments :

Post a Comment