தொலைநோக்கு கனவுகளும் துரத்தும் நிஜங்களும்

Posted by அகத்தீ Labels:

காதுல பூ சுற்றுறதுன்ணு கேள்விப்பட்டிருக்கோம் பூந்தோட்டத்தையே நடுறதைப் பார்த்திருக்கிறீங்களா?

ஜெயலலிதா வெளியிட்ட தொலைநோக்குத் திட்டம் 2023ஐப் புரட்டுங்கள் ..வெறுங்கையில முழம்போட கற்றுக்கலாம்

இப்போ நாம எங்கே இருக்கோம் என்பதைச் சொல்லாமலே காற்றுல படம் போட்டுக்காட்டினா எப்படி இருக்கும்?இப்படித்தான் இருக்கும்

இந்தியா2020அப்படின்னு பலநூறு பக்கத்தில்  அப்துல் கலாம் ஒரு கனவுபுத்தம் வெளியிட்டார்..அதைப் படிக்காமலே பாராட்டினார்கள் பலபேர்.உலகவங்கி ரீலை அச்சரம் பிசகாமல் அதே அமெரிக்க இங்கிலீஸில் தந்துவிட்டு கனவு காணச்சொன்னார்.அதை அப்போதே விமர்சித்த ஒரே ஏடு தீக்கதிர் மட்டுமே.எழுதியது அடியேன்தான்.இப்போது படியுங்கள் உலகமய சறுக்குப்பாதையில் விளகெண்ணை கொட்டிக் கொண்டு நூறுகிலோமீட்டர் வேகத்தில் வெறுங்காலோடு ஏற்றிவிட்ட கொடுமை புரியும்.அதற்குத்தான் அந்த கனவு என்பது விளங்கும்

முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஜான் பெர்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் படியுங்கள்.மூன்றாம் உலக நாடுகளை ஏமாற்றும் கனவு திட்டங்களை வரைந்து காட்டுவதின் பின்னால் உள்ள வல்லரசுகளின் சதிபுரியும்.அப்துல் கலாம் கனவும்-அம்மா கனவும் ஏன் என்பதும் விளங்கும்.ஆசியவளர்ச்சி வங்கியின் ஜிகினாதிட்டமே அம்மா வெளியிட்டுள்ள கனவுத்திட்டம்

சராசரி தனிநபர் வருமானத்தை ஆறுமடங்கு உயர்த்துவார்களாம்.குப்பனுக்கும் சுப்பனுக்கும் என்னகிடைக்கும் சொல்லவில்லையே.. பன்னாட்டு திமிங்கலங்கள் கொழுக்க தமிழக நிலத்தை,நீரை,இயற்கை வளங்களை தாரைவார்த்துவிட்டு ஏமாந்து நிற்கச் சொல்லும் மோசடியே இந்த கனவுத்திட்டம்.இந்த சராசரி என்ற வார்த்தை நம்மை மயக்கவைத்துவிடுகிறது.அதன் மோசடியை புரிய ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்.அந்தத் தெருவில் நாலு பணக்காரர்களின் வருமானம் ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் என்று வைத்துக் கொள்ளுங்கள் மீதமுள்ள 30 பேருக்கு வருமானம் ஒவ்வொருவருக்கும் ரூ.2000 என்று வைத்துக் கொள்ளுங்கள் ஆகமொத்தம் 34 பேரின் மொத்த வருமானம் ரூ.40,60.000 இதை 34 பேரின் சராசரியாக்கினால் ஆளுக்கு ரூ.1,19,411 வரும்.இது கணக்குத்தான்.சர்க்கரைன்னு எழுதி நாக்கில தடவுற கதைதான்.

சாதாரண பாமரனை அசரவைக்கும் வகையில் பலலட்சம் கோடிகளின் புள்ளிவிபரமாய் வரைந்து காட்டப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்?அதில்தான் சதி நிலைகொண்டுள்ளது.தமிழக அரசின் மொத்தபட்ஜெட்ட ஒருலட்சம் கோடிதான் என்கிறபோது ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கு முதலீடு செய்ய  அரசு என்ன செய்யப்போகிறது?தனியாரிடம் திட்டங்களை தாரை வார்ப்பதும்-உலக வங்கியிடம் சரணடைவதும் தான் முன்மொழியப்படும் யோசனை.சமூகநலன் சார்ந்து தனியார் முதலாளிகள் யோசிப்பார்களா?லாபவெறி தலைக்கேறி மாநிலத்தை சூறையாடுவார்களா?

விவசாயத்தைப் பொறுத்தவரை தொலைநோக்கு திட்டத்தில் அது தொலைந்தே போனது.சிலலட்சம் கோடிகள் ஒதுக்கீடு என்கிற வெற்று அறிவிப்பைத் தவிர வேறெதுவும் இல்லை.சுற்றுச்சூழலை-விவசாயத்தை கெடுத்த எறால் பண்ணைகள் குறித்தே மீண்டும் இத்திட்டமும் பேசுகிறது.

சரி இந்த கனவுத்திட்டம் ஏழை-பணக்காரன் இடைவெளியை குறைக்குமா? அதற்கான வாய்ப்பே இல்லை.பத்து பெருநகரங்கள் என்பதும்கூட பன்னாட்டு முதலாளிகள் தேவைக்குத்தான்.பெரும் பகுதி மக்களை தங்கள் சொந்த இடத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிவதுதான் நோக்கம்.பளபளப்பான தேசிய நாற்கர-அறுகர சாலைகளும் அதன் அருகிலேயே பள்ளமும் மேடுமாய் பல்லிளிக்கிற உள்ளூர் சாலைகளும்தான் நாம் காண்பது.இதன் நீட்சியாக பெரும் ஏற்ற தாழ்வுடன் சமுதாயத்தை சிறுபகுதியினருக்கு ஒளிரும் தமிழகம், பெரும்பகுதி தமிழருக்கு காய்ந்து தீய்ந்த தமிழகம் என்பதுதான் இந்த கனவுத் திட்டம்

இந்த கனவு திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியா?இல்லை.மனிதவள மேம்பாட்டில் இப்போது நாம் இப்போது எங்கே இருக்கிறோம்?சத்தான உணவு எத்தனை பேருக்கு கிடைக்கிறது?குடிதண்ணீர்,கழிப்பிடவசதி.வீட்டுவசதி ,கல்வி.மருத்துவம்.வேலைவாய்ப்பு,வேளாண்மை...இப்படி ஒவ்வொன்றிலும் இப்போதுள்ள நிலை-எய்த வேண்டிய நிலை-அதற்குத்தேவையான நிதி-அரசு முதலீடு செய்யும் வழி-இலக்கை எட்டும் காலவரையறை இப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கியது திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி.ஐந்தாண்டுதிட்டங்கள் முதலில் இப்படித் தீட்டப்பட்டன.சற்று பலனும் கிடைத்தது.இப்போது உலகமயச் சூழலில்-சந்தையின் இழுபறிக்கு அதாவது லாபவெறிகொண்ட சூதாட்டக்காரர்களின் இழுபறிக்கு மககள் நலம் பலியிடப்பட்டுள்ளது.இந்த கனவுத் திட்டமும் அதன் ஒருகூறே.

அடிப்படை கட்டுமான மேம்பாடு என்கிற கூப்பாடும் யதார்த்தமும் நேரெதிரில் உள்ளன.இதனை ஆய்வுசெய்து நிருபிக்க விரும்புவோர் நான் குடியிருக்கும் திருவள்ளூர் மாவட்டம் திரூரில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பை எடுத்துக் கொள்ளலாம்.சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் உலகவங்கியின் கனவுத்திட்டமாய் இது உருவாக்கப்பட்டது.சாலை.பாதாளச் சாக்கடை,குடிநீர் இணைப்புகள் அதற்கான ராட்சச மேல்நிலைத்தொட்டி,கல்யாண மண்டபம்,வணிக வளாகம்,கல்வி நிறுவனக் கட்டிடங்கள்,என எல்லாம் உருவாக்கப்பட்டது.3000 வீட்டுமனைகள் பல்வேறு பொருளாதாரப் பிரிவினருக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டன.பக்கத்திலே எந்த அடிப்படை வளர்ச்சியும் இல்லாத கருப்பு கிராமமாய் திரூர், தொழுவூர் குப்பம்,செவ்வாப்பேட்டை என அமைந்தது.வீட்டுவசதி வாரியக் குடியிருப்பை அம்மக்கள் ஆச்சரியமாப் பார்த்தனர்.இப்போது என்ன நிலை?சுமார் முன்னூறு வீடுகளே கட்டப்பட்டுள்ளன.சாலைகள் சீர்கெட்டு மேடுபள்ளமாய்-புழுதிக்காடாய்-புதர்மண்டிக் கிடக்கிறது.தண்ணீர் தொட்டி வெறும் நினைவுச் சின்னமாய் நிற்கிறது.பாதாளச் சாக்கடை தூர்ந்து ஆங்காங்கு சாக்கடை ஆறு ஓடுகிறது.கல்யாண மண்டபம்.வணிகவளாகம்,கல்விநிலையக் கட்டிடங்கள் சீண்டுவாரற்றுக் கிடக்கின்றன.அதன் யானை விலையால் யாரும் நெருங்குவதில்லை.கொட்டப்பட்ட பலகோடி ரூபாய் பாழாகிவிட்டது.ஏன்?

உலக வங்கிக்கு வட்டிகட்டியே வீட்டுவசதி வாரியமும் நொடிந்தது.இவர்கள் நிர்ணயித்த வருமான பிரிவின் அடிப்படையில் மிகக்குறைந்த வருவாய் பிரிவின் கீழ்-மானியத்தோடு மனை பெற்றவர்கள் யாரும் வீடு கட்டவில்லை.அன்றாடச் சோற்றுக்கே திண்டாடும் அவர்களால் எப்படி வீடுகட்ட முடியும்?மனையை வீடுகட்டிபின்தான் விற்கமுடியும். .சில ஆண்டுகளுக்கு முன் விதி தளர்த்தப்பட்டது.மனைகள் ரியல் எஸ்டேட் தரகர்களிடம் சிக்கி விலை தாறுமாறாக எகிறியது.வேறெந்த வளர்ச்சியும் கானோம்.இதற்கு மாறாக மிகக்குறைந்த வருவாய்ப் பிரிவினருக்காவது வீடுகளை அரசே தவணை முறையில் கட்டிக் கொடுத்திருந்தால் ஆயிரம் குடும்பமாவது குடியேறியிருக்கும்.அதையொட்டி பிறபிரிவிலும் வீடுகள் எழுந்திருக்கும்.வணிக வளாகம்.மண்டபம்,குடிநீர் எல்லாம் பயன்பட்டிருக்கும்.இப்போது திறந்தவெளிக் கழிப்பிடமாக உள்ளது.இதற்கு யார் காரணம் களயதார்த்தம் அறியாது உலக வங்கி சொன்னதை அப்படியே ஏற்று திட்டமிட்டதுதான் காரணம்.

அதுபோல் மதுரவாயல் தொகுதியை ஒருவர் சுற்றிவந்தால் கட்டுமான வளர்ச்சிக்கும்-சீரழிந்த உள்ளூர் நிலைக்கும் உள்ள மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியைக் காணலாம்.இப்படி தமிழகம் முழுவதும் நிறைய உதாரணங்கள் உண்டு.இதையெல்லாம் உள்வாங்காமல்-தமிழக நிலையை ஸ்கேன் செய்து நோயை சரியாக உணராமல் -மண்டபத்தில் யாரோ எழுதிக்கொடுத்த கனவுத்திட்டத்திற்கு உதட்டை அசைப்பதால் என்ன பயன்?இது சினிமா அல்ல நாட்டு நலம் என்பதை உணர வேண்டாமா?

ஒரு திட்டம் சரியானதா தவறானாத என்பதை அளக்க மகாத்மா காந்தியின் அளவுகோலே இன்றைக்கும் பொருந்தும்.அவர் சொன்னார், “நீங்கள் செய்கிற எந்தச் செயலாயினும் அது கடையனுக்கும் கடையனாய் தெருக்கோடியில் கிடக்கும் தரித்திர நாராயணனை ஒரு படி கைதூக்கி விடுமானால் அப்போதே அது சரியான செயலாகும்”இதன் பொருள் அதிவேக வளர்ச்சியே வேண்டாம் என்பதல்ல;மாறாக இந்திய தமிழக சூழலுக்கு ஏற்ற திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி வேண்டும் என்பதே.ஏற்ற தாழவை பெருமளவில் குறைக்கும் வகையிலான ஒருங்கிணைந்த வளர்ச்சிப்பாதையே இன்றையத் தேவை.அதனை உலகமயம் தராது.தாராளமயம் தராது.தனியார்மயம் தராது.உலக வங்கி,ஆசிய வங்கி,சர்வதேச நிதி நிறுவனம் தரும் திட்டங்கள் எதுவும் நம்மை விரும்பிய ஊர்கொண்டுபோய்ச் சேர்க்காது.
ஆம், முதல்வர் ஜெயலலிதா வழங்கும் தொலைநோக்கு கனவுத் திட்டம் அந்த மாயகண்ணாடியில் காட்டப்படும் வெறும் கனவே தவிர வேறலல..

0 comments :

Post a Comment