எது உங்களுக்கு சவுகரியம் ?

Posted by அகத்தீ Labels:எது உங்களுக்கு சவுகரியம் ?

=============================


சு.பொ.அகத்தியலிங்கம்
================================

நீ யோக்கியமா ?
நீ திருடவில்லையா ?

நீ செஞ்சி கிழிச்சிட்டியா ?
உன் ஒழுக்க லட்சணம் ஊருக்கே தெரியுமே ?

மாறி மாறி ஒரே வசனத்தை
அவர்கள் உமிழ்ந்து கொண்டிருக்க ..

அதுவே அரசியலென 
ஊடகப் புலிகள் அளந்து கொண்டிருக்க ..

நீ யோக்கியமா ?
நீ திருடவில்லையா ?

நீ செஞ்சி கிழிச்சிட்டியா ?
உன் ஒழுக்க லட்சணம் ஊருக்கே தெரியுமே ?


சந்தடி சாக்கில் அம்பானி அதானி
மூட்டை கட்டிக்கொண்டிருக்க ..

உள்ளூர் முதலைகள் போதாதென
உலக முதலைகள் உதிரம் குடித்துக் கொண்டிருக்க ..

சில்லறையாகவும் மொத்தமாகவும் 
நீதி விற்பனை களைகட்டிக்கொண்டிருக்க …

நீ யோக்கியமா ?
நீ திருடவில்லையா ?

நீ செஞ்சி கிழிச்சிட்டியா ?
உன் ஒழுக்க லட்சணம் ஊருக்கே தெரியுமே ?


போலீஸ் லத்திகள் நியாயம் கேட்பவனை 
பொளந்து கட்டிக்கொண்டிருக்க ..

சோற்றுக்கிலாதவன் கோவணத்தையும்
“0” ஐ அமுக்கி தானம் செய்துகொண்டிருக்க ..

வயிறு பசித்தழும் போதும் ராமா என்பதா 
அல்லா என்பதா பிதாவே என்பதா 

நீ யோக்கியமா ?
நீ திருடவில்லையா ?

நீ செஞ்சி கிழிச்சிட்டியா ?
உன் ஒழுக்க லட்சணம் ஊருக்கே தெரியுமே ?


சோற்றுக்கில்லாவிடிலும் சாதி கவுரவத்தை
தலை முழுகாமல் புதைகுழியில் தடுமாற 

இந்தியா வல்லரசாகிக்கொண்டிருக்கிறது
தமிழகம் முதன்மை மாநிலம் ஆகிக்கொண்டிருக்கிறது
நம்புவது உங்கள் தலை எழுத்து
நம்பாவிடில் என்கவுண்டர் , அவதூறு வழக்கு

எது உங்களுக்கு சவுகரியம் ?
சட்டுன்னு சொல்லுங்க !

நீ யோக்கியமா ?
நீ திருடவில்லையா ?

நீ செஞ்சி கிழிச்சிட்டியா ?
உன் ஒழுக்க லட்சணம் ஊருக்கே தெரியுமே ?

0 comments :

Post a Comment