தொழிலாளர் பத்திரிகைக்கு ஒரு கோபெக்

Posted by அகத்தீ Labels:




புரட்சிப் பெருநதி - 40


புரட்சிப் பெருநதி -40


தொழிலாளர் பத்திரிகைக்கு ஒரு கோபெக்









ரகசியமாக போல்ஷ்விக் தலைவர்கள் கூடி 
நிறைவேற்றிய தீர்மானம் 
‘‘இதனை ஏகாதிபத்திய யுத்தம்’’ எனக்கணித்தது.




- சு.பொ.அகத்தியலிங்கம்


1910இல் டால்ஸ்டாய் காலமானார் . மரண தண்டனையை எதிர்த்து ‘‘என்னால் மெளனமாக இருக்க முடியாது’’ என எழுதிய கட்டுரை; ரஷ்ய கிராமங்களின் மனச்சாட்சியை படம்பிடித்த அன்னா கரினா’’ நாவல் என அவரின் பங்களிப்புகள் நினைவுகூரப்பட்டன. ஜார் 2 ஆம் நிக்கோலஸ் முடிசூட்டு விழாவின் போது அவன் பரிசாக வழங்கிய இனிப்புக் குடுவையைப் பெற முண்டியடித்த கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துபோயினர்; சம்பவம் நடந்த ‘‘கொடியிங்கா’’ பெயரிலேயே எழுதிய கதை பெரிதும் பேசப்பட்டது. டால்ஸ்டாய்க்கு புகழஞ்சலி செலுத்தி லெனின் எழுதிய கட்டுரைகள் இலக்கிய உலகில் இன்றும் பேசப்படுகின்றன . 


1912 ஜனவரியில் செக்கோஸ்லேவேகியாவில் பிராக் நகரில் நடைபெற்ற மாநாட்டில் ரஷ்ய சமூக ஜனநாயக கட்சி ஸபோல்ஷ்விக்] என தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது.மென்ஷ்விக்குகள் தனிக்கட்சியாகிவிட்டனர். 


அதேவருடம் ஏப்ரலில் சைபீரியா லேனா தங்க வயலில் நடந்த வேலைநிறுத்தத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அதில் 270 பேர் பலியாகினார்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் ரஷ்யா முழுவதும் கோப அலையை எழுப்பியது.‘‘ஸ்வெஸ்தா’’ [ விண்மீன்] ஏட்டில் ஸ்டாலின் எழுதினார், ‘‘லேனா துப்பாக்கிப் பிரயோகம் , அமைதி என்ற பனிக்கட்டியை உடைத்துவிட்டது . ஆட்சியிலுள்ள தீமைகளெல்லாம் , நயவஞ்சகமெல்லாம் –ரஷ்யாவின் கொடுமைகளெல்லாம் – இன்றைக்கு லேனா நிகழ்ச்சியில் ஒளிக்கிரணங்களைப் போல் குவிக்கப்பட்டிருக்கின்றன .இதனால்தான் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடங்குவதற்கு லேனா துப்பாக்கிப் பிரயோகம் அடையாளமாக இருக்கிறது



’’.ஜனநாயகக் குடியரசு வேண்டும் ! – எட்டு மணிநேர வேலை – பண்ணை நிலங்களை பறிமுதல் செய்ய வேண்டும்!’’ என்கிற முழக்கங்களோடு மே தின வேலை நிறுத்தத்தில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.‘‘ரஷ்யாவெங்கும் மேதினத்தன்று பாட்டாளிவர்க்கம் நடத்திய வேலைநிறுத்தங்கள், தெரு ஆர்ப்பாட்டங்கள், தொழிலாளர் கூட்டங்களில் புரட்சிப் பிரகடனங்கள்.புரட்சிகரமான பிரசங்கங்கள் யாவும் புரட்சிப் பேரலை மீண்டும் ஓங்கிக் கிளம்பக்கூடிய கட்டத்தில் ரஷ்யா நுழைந்துவிட்டதை காட்டின’’ என்று லெனின் சுட்டிக்காட்டினார்.


1912 மே 5 அன்று ‘‘பிராவ்தா’’ ஸஉண்மை] வெளிவந்தது . சீக்கிரம் இவ்வேடு.விற்பனை அறுபதாயிரத்தைத் தாண்டியது .504 குழுக்கள் நிதிதிரட்டி பத்திரிகை வர உதவின . சட்டப்பூர்வ ஏடெனினும் 41 முறை பறிமுதல் செய்யப்பட்டது . 36 முறை ஆசிரியர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு 47 மாதங்களுக்கு மேல் சிறையில் வாடினர் . இரண்டரை வருடத்தில் எட்டுமுறை தடை செய்யப்பட்டது . ‘‘பிராவ்தா’’ தடை செய்யப்பட்டால், ‘‘ரபோச்செயா பிராவ்தா’’, ‘‘செவெர்ன்யா பிராவ்தா’’ என எட்டு அவதாரங்கள் எடுத்தன. ‘‘உண்மையை’’ அவ்வளவு எளிதில் சாகடிக்க முடியுமா என்ன? லெனின் வேண்டுகோள் விடுத்தார், ‘‘தங்கள் செய்திப் பத்திரிகைக்காக ஒவ்வொரு சம்பள தினத்தன்றும் ஒவ்வொரு தொழிலாளரும் ஒரு கோபெக் தருவதை வழக்கமாக்கிவிட வேண்டும் . 


வழக்கம்போல் பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பதும் நடக்கட்டும்.அதிகம் கொடுக்க முடியாதவர் கடந்த காலத்தைப் போல தொடர்ந்து கொடுக்கட்டும் . அதே நேரத்தில் ‘ தொழிலாளர் பத்திரிகைக்கு ஒரு கோபெக்’ எனும் வழக்கம் நிரந்தரமாகட்டும். ‘‘லெனின் பத்திரிகையை புரட்சியின் ஸ்தாபகராய் பார்த்ததோடு அதைப் பாதுகாக்கவும் பெருமுயற்சி மேற்கொண்டார்,


ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சியை, வெற்றியைப் பற்றி பிராவ்தாவுக்கு கடிதங்கள் எழுதியோ, வாழ்த்துகள் அனுப்பியோ, கண்டனங்கள் தெரிவித்தோ, ஏதோ ஒருவகையில் தொழிலாளர்கள் பிராவ்தாவில் உயிரோட்டமாய் பங்கேற்றனர். ‘‘உழவன் வாழ்க்கை’’ பகுதியில் தொடர்ந்து வெளியிட்ட கடிதங்கள் மூலம் பிராவ்தா கிராமங்களுக்குச் சென்று புரட்சியைத் தட்டி எழுப்பியது; ஒரு வருடத்தில் மட்டும் பதினோராயிரம் தொழிலாளர் கடிதங்களை பிரசுரித்தது .‘


‘1912இல் பிராவ்தா உதயமானது, 1917 ஆம் ஆண்டு போல்ஷ்விசம் வெற்றிபெற அஸ்த்திவாரக்காலாய்த் திகழ்ந்தது’’ என்பார் ஸ்டாலின்.


இக்காலகட்டத்தில் டூமாவுக்கு நடந்த தேர்தலில் 9 இடங்கள் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டன .இதில் படயேவ்,பீட்ரோவ்ஸ்கி, முரணோவ், சமோய்லாவ், ஷகோவ், மாலினோவ்ஸ்கி ஆகிய 6 பேர் போல்ஷ்விக் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .இதில் மாலினோவ்ஸ்கி பின்னர் ஆட்சியாளர் கைக்கூலியாகிப்போனார் .


இந்த காலகட்டத்தில் மீண்டும் காலாட்படையிலும் , கப்பற்படையிலும் ஆங்காங்கே கலகங்கள் வெடித்தன .65 மாலுமிகள் மீது விசாரணை நடைபெற்று 10 பேர் தூக்கிலிடப்பட்டனர். பலர் ஆயுள் தண்டனை பெற்றனர். இதனை ‘‘தொழிலாளர் கெசட்டில்’’ லெனின் எழுதினார்.


1913இல் ‘‘மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும், மூன்று உள்ளடக்கக் கூறுகளும்’’ என்ற தலைப்பில் ‘‘விழிப்பு’’ ஏட்டில் லெனின் எழுதிய கட்டுரை தத்துவ வெளிச்சம் பாய்ச்சியது. மொழிக்கொள்கை குறித்தும் இக்காலத்தில் விளக்கம் அளித்தார் . அக்டோபரில் பொரொன் கிராமத்தில் நடந்த சிறப்பு மாநாட்டில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அது வழிகாட்டியானது.



1914 ஜூலை 27 ஜார் அரசாங்கம் படைதிரட்ட அறைகூவல் விடுத்தது. கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஒருபுறமும் ஜெர்மன், ஹங்கேரி, ஆஸ்திரியா, இத்தாலி மறுபுறமும் என நாடிபிடிக்கும் ஆசையோடு முதல் உலக யுத்தத்தில் குதித்தன.லெனின் தங்கியிருந்த பொரோன் ஆஸ்திரேலிய ஆதிக்கத்தின் கீழ் இருந்தது . ரஷ்ய உளவாளி என்கிற சந்தேகத்தின் பேரில் லெனின் கைது செய்யப்பட்டார். உடல் நலிவுற்றிருந்த குரூப்ஸ்காயா தன்னையும் கவனித்துக் கொண்டு லெனினையும் சிறையில் சென்று சந்தித்து வந்தார் . 12 நாள் சிறைவாசத்துக்கு பின் ; ஜாரின் கையாளல்ல லெனின் என்பதால் ஆகஸ்ட் 19இல் விடுதலை செய்யப்பட்டார் . 

பொரோன் காட்டில் ரகசியமாக போல்ஷ்விக் தலைவர்கள் கூடி நிறைவேற்றிய தீர்மானம் ‘‘இதனை ஏகாதிபத்திய யுத்தம்’’ எனக் கணித்தது.‘‘இந்த ஐரோப்பிய மற்றும் உலக யுத்தமானது ஒரு முதலாளித்துவ, ஏகாதிபத்திய,வம்சாவளி யுத்தத்தின் தெளிவான குணத்தைக் கொண்டுள்ளது .
சந்தைகளுக்கான போராட்டம், அந்நிய நாடுகளைக் கொள்ளையடிக்கச் சுதந்திரம்,தத்தம் நாடுகளின் பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கத்தையும் ஜனநாயகத்தையும் ஒடுக்குகிற முயற்சி .முதலாளிகளுக்கு ஆதாயம் தரும்வகையில் ஒரு நாட்டின் கூலியடிமைகளை இன்னொரு நாட்டின் கூலியடிமைகளுக்கு எதிராக நிறுத்தி அனைத்து பாட்டாளிகளையும் ஏமாற்ற- துண்டாட –கபளீகரம் செய்கிற ஆசை. இதுவே இந்த யுத்தத்தின் ஒரே உள்ளடக்கமும் முக்கியத்துவமும் ஆகும்’’


யுத்தத்தில் போல்ஷ்விக்குகளும் மென்ஷ்விக்குகளும் எதிரெதிர் நிலை எடுத்தனர் . கம்யூனிஸ்ட் மற்றும் சமூக ஜனநாயக வாதிகளிடையேயும் கருத்துமாறுபாடு வெடித்தன. ரஷ்யத் தொழிலாளர்கள் லெனின் குரலுக்கு செவிசாய்த்தனர்.


புரட்சி தொடரும்...

நன்றி : தீக்கதிர் , 6/08/2017.

0 comments :

Post a Comment