எது ஆன்மீகம்
? [ 20 ]
முந்தைய அத்தியாயத்தில்
‘சரி கம ப ‘நிகழ்ச்சி குறித்து எழுதிய விமர்சனத்தில் ‘பக்தி ரவுண்ட்’ வைத்ததைப் போல் ‘பகுத்தறிவு’ ரவுண்ட் வைப்பார்களா என கேள்வி எழுப்பி
இருந்தேன் . அதற்கு பதில் சொல்வதாகக் கருதிக் கொண்டு ஒரு நண்பர் ‘ சினிமாவில் பகுத்தறிவுப்
பாடல் எத்தனை தேறும் ?’ என நக்கலடித்திருந்தார் .
உண்மைதான்
. தேடிச் சலித்தால் சிலவே தேறும் .ஆளும் வர்க்க கருத்துகளே [ ஆளும் கட்சி அல்ல ] சமூகத்தில்
ஓங்கி இருக்கும் .சுரண்டும் வர்க்கத்தின் அகழியும் மதிலுமாய் இருக்கும் மதமும் மதம்
சார்ந்த பண்பாடும்தான் ஓங்கி இருக்கும் .கலை இலக்கியத்திலும் அதுவே ஆதிக்கம் செலுத்தும்
. தமிழ் திரை உலகில் பகுத்தறிவு பார்வை தூக்கலாக இருந்த காலமும் உண்டு . ஆகவே வேறெந்த
மொழிகளைவிடவும் தமிழில் அறிவுபூர்வமான பாடல்கள் அதிகம் .இதனை கேள்வி கேட்ட அன்பர் மறந்துவிட்டார்
போல.
“பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனை கண்டான் பணம்தனை படைத்தான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்” இது பாவமன்னிப்பு படத்தில்
கண்ணதாசன் எழுதிய பாடல் . வேடிக்கை என்னவெனில் “ எதனைக் கண்டான் மதம்தனைப்
படைத்தான்” என்றுதான் கண்ணதாசன் எழுதி டி.எம்.செளந்தரராஜன் பாடியிருப்பார் .
மதத்தில் ஏறிவிட்டான் என்கிற அடுத்த வரியே சாட்சி . சென்சார் ஆட்சேபனையால் ‘மதம்தனை’ என்பது ’பணம்தனை’ என பின்னர்
மாற்றப்பட்டது.இப்படிப்பட்ட மத சித்தாந்த ஆதிக்கம் உள்ள திரைத்துறையில்
பகுத்தறிவுப் பாடல்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கும் . தேடித்தான் பாட வேண்டும்.
பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து சரி ! தேசிய கீதம் சரி ! கடவுள் வாழ்த்தென
ஒவ்வொரு பள்ளிலும் மதம் சார்ந்த பாடலை – பெரும்பாலான தனியார் பள்ளிகளில்
சமஸ்கிருதப் பாடலைப் பாடுவதை எப்படி நியாயப்படுத்த முடியும் .சமயபுரம் தனியார்
பள்ளி ஒன்றில் கீழ்க்கண்ட பாரதியார் பாடலை பாடுகின்றனர் .இது ஞாநியின் தேர்வெனச்
சொன்னார்கள் .
“ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.”
இப்பாடலும் மதச்சார்பின்மைக்கு அறிவியல் சாட்சி ஆகாது
.எனினும் எல்லா மதத்தையும் இணைக்கும் சமரச ஏற்பாடென்பதால் தற்காலிகமாக ஏற்பதில் குற்றம்
காண முடியாது .
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏராளமான அறிவியல் பாடல்களைப்
புனைந்திருக்கிறது .அவற்றை நன்கு இசை அமைத்து பெரிய அளவில் பிரபலப்படுத்தி பள்ளி மாணவர்களுக்குக்
கொண்டு செல்லலாமே ! அறிவியல் இயக்கமும் நான்கு
ஐந்து பாடல்களை தேர்வு செய்து
அழகான டிஜிட்டல்
காட்சி அமைப்புகளுடன் பாடல் வீடியோ வெளியிடலாமே ! என் ஆசையைச் சொன்னேன்.
குழந்தை வளர்ப்பிலும் கல்வியிலும் மிகப்பெரும் மாற்றம்
காண வேண்டும் . ஆனால் ’பந்தயக் குதிரைகளாய்’ போட்டிக்கு தயார் செய்கிற அணுகுமுறையையே
இன்றைய நவீன தாராள மய உலகம் விதிக்கிறது . இந்த போட்டியில் குழந்தமை மட்டுமல்ல மனிதமும்
கூடவே புதைக்கப்படுகிறது .
இந்த போட்டியில் மத ,சாதி அடையாளங்களும் ஒரு குழந்தைக்கு
சாதகமாகவோ [Positive ] பாதகமாகவோ
[Negative ] அமைந்துவிடுவதைப் பார்க்கிறோம் .ஆகவே தனக்கு சம்மந்த மில்லாத ஒரு பண்பாட்டுக்குள்
குழந்தைகள் வலிந்து திணிக்கப்படும் சமூகச்சூழல் நிலவுகிறது .இங்கு குழந்தைகளை சுயமாக
வளர்த்தெடுப்பது மாபெரும் சவாலாகிறது எனில் மிகை அல்ல. ஆகவே நடப்பது வெறும் ஆத்திக
vs பகுத்தறிவுச் சண்டை மட்டுமல்ல சமூக ,பொருளாதார ,பண்பாட்டு அரசியல் சவாலாகும் . சமூகத்தை
அறிவியல் கண்கொண்டு நோக்கினால் மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாய் கழலும் .
விஞ்ஞான முறைக்கும் மதங்களின் மூடநம்பிக்கைக்கும்
வித்தியாசத்தைக் காட்ட “ தோலும் கொம்புமாய் முடியும்” என்றொரு பஞ்சதந்திரக் கதையை மேற்கோள்
காட்டினார் சிந்தனைச் சிற்பி தோழர் சிங்காரவேலர்
. அக்கதையை என் வார்த்தைகளில் சொல்லுகிறேன்.
“ஒரு காட்டில் தமனகன் ,கரடகன் என்ற இரண்டு நரிகள் இருந்தன . காட்டில்
திடீரென ஒரு சப்தம் கேட்டு மிரண்டன .அது காட்டில் முன்னெப்போதும் கேட்டிராத சப்தம்
. அது யாருடைய சப்தம் ? எங்கிருந்து வருகிறது ? இரண்டும் குழம்பின . தமனகன் அது குறித்து
நாம் சுற்றிலும் தேடலாம் என்றது .கரடகன் வேண்டாம் வேண்டாம் வீண் விபரீதத்தை விலைகொடுத்து
வாங்க வேண்டாம் என அலறியது . ஆயினும் தமனகன் பிடிவாதமாய் கரடகனை இழுத்துக் கொண்டு சப்தம்
வந்த திசையில் தேடச் சென்றது. அங்கே ஓர் இடத்தில் ஓர் தோல் மேளமும் கொம்பும் இருக்கக்கண்டன
. அவை காற்றில் உரசிய சத்தமே அது . காற்று வேகமாக வீசும் போது கொம்பு படபடக்க மேளம்
அடிப்பதுபோல் சப்தம் அதிகமாயின .உண்மை புரிந்து இரண்டும் கெக்கொலி கொட்டிச் சிரித்தன.
இதனைக் குறிக்கத்தான் ‘ கொம்பும் தோலுமாய் முடியும்’ எனும் வழக்குச் சொல் உருவாயிற்று
.
ஆம். சில அற்ப விஷயங்களைக் கண்டு பயந்து சாகிறோம்
.அல்லது நம்பிக்கை அதிகமாகி விழுந்து வணங்குகிறோம் அல்லது ஏதேனும் பரிகாரம் ,சடங்கு
என ஓடுகிறோம் ; கொஞ்சம் மெனக்கெட்டு தேடினால் விடை கிடைக்கும் .வெளிச்சம் பிறக்கும்
.
ஆகவேதான் சிங்காரவேலர் அழுத்திச் சொன்னார் , “ உலக
அரசியல் சீர்கெட்டு உழல்வதற்கு முக்கிய காரணம் அரசியல் நடத்துவோருக்கு போதுமான விஞ்ஞானப்
பழக்கம் இன்மையே ஆகும் . அரசியல் நடத்துவதற்கும் குடும்பம் நடத்துவதற்கும் விஞ்ஞானம்
அவசியமாகும்.” ஆம் .ஆம்.ஆம். குடும்பம் நடத்துவதற்கும் அறிவியல் பார்வை தேவை.
“ நீங்களும்தான்
‘எது ஆன்மீகம்’ என தொடர்ந்து எழுதுகிறீர்களே எது நாத்திகம் என வரையறை செய்து விட்டீர்களா
?” என ஓர் நண்பர் கேள்வி எழுப்புகிறார் . கிடுக்கிப் பிடி போடும் போது இப்படி சட்டென
வேறு பக்கம் பாய்வது அவர்களின் வழக்கம்தானே .நாம் அதனையும் எதிர்கொள்வோம்.
நான் இத்தொடரின்
ஆரம்ப அத்தியாயங்களிலேயே ஆத்திகம் ஆயினும் நாத்திகம் ஆயினும் ஒற்றை முகாமாக இல்லை
.எண்ணற்ற கிளைகளும் உப கிளைகளுமாக பிரிந்து நிற்கின்ற வரலாற்று உண்மையைச் சொன்னேன்
.
ஒவ்வொரு தேசத்திலும்
ஒவ்வொரு காலத்திலும் எழும் சமூக சவால்களை எதிர்கொள்ள அவரவர் மேற்கொள்ளும் வியூகத்திற்கு
ஒப்பவும் தேவை மற்றும் புரிதலுக்கு ஏற்பவும் பல வடிவங்கள் எடுக்கும் . ஆத்திகம் ,நாத்திகம்
இரண்டுக்கும் இது பொருந்தும் .
இந்தியாவில்கூட
பழைய பகுத்தறிவு வாதம் மிக வித்தியாசமானது .கடவுள் மறுப்பைக்கூட நிந்தா ஸ்துதி என ஏற்றுக்கொண்ட
சனாதனம் ,இங்கு வைதீக எதிர்ப்பைத்தான் நாத்திகம் என முத்திரை குத்தியது . தமிழர் சித்தர்
மரபு வைதீக எதிர்ப்பு சார்ந்தது அல்லவா ?
ஆக ,நாத்திகம்
பகுத்தறிவு என்பவை குறித்த புரிதலும் தேசம் ,இடம் ,மாநிலம் ,சூழல் ,தேவை .அறிவியல்
புரிதல் ,மானுட நேயம் இவற்றுக்கொப்ப காலத்துக்கு ஒப்ப மாறுபடவே செய்யும். யார் ஒரு
அடி முன்னோட்டு வைத்தாலும் அது எவ்வளவு சிறியதாக இருப்பினும் மகிழ்ச்சியே ! அதே நேரம்
பகுத்தறிவு பேசிவிட்டு சாதிச் சிமிழுக்குள் அடைப்பட்டுக் கிடப்போரை ஏற்க இயலாது . புரட்சி
பேசிவிட்டு சனாதனத்தை கண்டு கொள்ளாமல் இருப்பதையும் ஏற்க இயலாது . ஆக சவால் கடுமையானதுதான்.
ஆத்திக நாத்திகச்
சண்டை நேற்றும் இருந்தது .இன்றும் இருக்கிறது .நாளையும் இருக்கும் . மனித குலம் இருக்கும்
வரை இருக்கும் . இரண்டு மனிதர்கள் இருந்தால் நிச்சயம் இரண்டு கருத்துகள் இருக்கத்தான்
செய்யும் . ஒவ்வொருவர் மூளையும் அவரவர் சூழல் ,புரிதல் ,தேவை ,முயற்சி இவற்றை சார்ந்து விதவிதமாய் யோசிக்கும்
. மனிதர்கள் யோசிக்கிற வரை கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் . சிலர் சரியாக
யோசிக்கலாம் ; சிலர் தவறாக யோசிக்கலாம் .அவ்வளவுதான்.
சிங்காரவேலர்
சொல்வார் ,”…மனிதன் பல்லாயிரம் வருஷங்களாகப் பேசத் தெரியாதவனாக இருந்தான் . அந்த காலத்தில்
‘கடவுள்’ என்ற சொல் வழங்காதிருந்தது .அதைப் பற்றி யாரும் பேசுவாரில்லை ;யாரும் சொல்வாரில்லை
.ஆனால் உலகில் உயிர் முளைத்து நூறுகோடி ஆண்டுகள்தான் இருக்கும் .இந்தக் காலங்களில் வாழ்ந்து மடிந்த கோடி கோடி கோடான
கோடி இவ்வுயிர்களுக்கு இச்சொல்லை தெரிந்திருக்காது .இந்த கற்ப காலங்களில் எந்த உயிரும்
இந்தச் சொல்லை சொல்லவும் இல்லை .மனிதன் மிருகத்திலிருந்து பேச ஆரம்பித்தான். இவன் பேசின
பிறகும் வெகுகாலம் இச்சொல்லை உச்சரிக்காது இருந்தான் .மனித பாஷை அபிவிருத்தி அடைந்த
பிறகே கடவுள் என்ற சொல்லை கற்பனை செய்யத் தொடங்கினான் .எனவே கடவுள் என்ற சொல் மனிதன்
உலகில் தோன்றிய பிறகே உண்டாயிருக்க வேண்டும். “
இந்த கற்பனைச்
சொல்லை சுற்றியே கோயில் ,மேள தாளம் ,பூஜை
,புனஸ்காரம் , மந்திரம் ,வழிபாடு ,சடங்கு ,சம்பிரதாயம் ,சொர்க்கம் ,நரகம் ,கர்மா , பூணூல் ,புனிதம் , வேதியர் , பக்தி ,முக்தி ,ஆன்கீகம்
இப்படி எண்ணற்ற மூடத்தனங்கள் விரிந்தன என விவரிக்கிறார் . இவைகளில் இருந்து விடுபட்டு
மனித நேயத்தை ,சகோதரத்துவத்தை , பேரன்பை சொல்ல முயன்ற ஆன்மீக ஞானிகள்கூட அவர்கள் மறைவுக்கு
பிறகு வெறும் வழிபாட்டு பிம்பமானதே வரலாறு . சுரண்டல் வர்க்கத்தின் ராட்சச கரங்களில்
ஆன்மீகமும் ஒரு போதை மருந்தே !
இப்படி கடவுள்
மீதும் மதத்தின் மீதும் கேள்விக்கணைகளை , அறிவியல் தாக்குதல்களை நடத்திய சிங்காரவேலர்
அதுமட்டுமே பகுத்தறிவு என்று சொல்லவில்லை . பகுத்தறிவு என்று சொன்னால் என்னவென்று இலக்கணமும்
வகுத்தார் .
“ பகுத்தறிவின்
தன்மை என்ன ? எல்லா விஷயத்திலும் [ரீசன் ] பகுத்தறிவை உபயோகித்தல் .எங்கே கொடுங்கோன்மை
தாண்டவமாடுகிறதோ ,அங்கே பகுத்தறிவு எதிர்த்துப் போராடும் .எங்கே சுதந்திரத்திற்கு அபாயம்
நேரிடுகிறதோ ,அங்கே பகுத்தறிவு இத்யாதி அபாயத்தைத் தடுக்கச் செல்லும் .எங்கே பசியும்
,பிணியும் ,வறுமையும் , அறியாமையும் வருத்துகின்றனவோ அங்கேயும் பகுத்தறிவு பசித்தோருக்கும்
வருந்துவோருக்கும் உதவி புரிந்து நிற்கும் .இவைதான் உண்மையான பகுத்தறிவின் அடையாளம்
மற்றவைக ளெல்லாம் போலி பகுத்தறிவே.”
போலிகளையும்
உண்மைகளையும் பகுத்தாய சிங்காரவேலரே வழியும் காட்டி இருக்கிறார் .அவரைத் தேடித்தேடி
வாசிப்பீர் !
இத்துடன்
இத்தொடர் முடிகிறது . மீண்டும் சந்திப்போம் .விரைவில் .
[ இத்தொடரை
நான் ஆரம்பிக்கும் போது நாலய்ந்து அத்தியாயம் எழுதவே திட்டமிட்டிருந்தேன் .இடையறா பின்னோட்டங்கள்
,கேள்விகள் தொடர அவற்றிற்கு பதில் சொல்ல தொடர் 20 அத்தியாயமாய் நீண்டு விட்டது . இன்னும்
கேள்விகள் விமர்சனங்கள் முடியவில்லை . ஆயினும் நீட்ட விருப்பமின்றி இப்போது முடித்துக்
கொண்டேன் .மீண்டும் தேவைப்படும் போது வருவேன் : சுபொஅ.]
சு.பொ.அகத்தியலிங்கம்
.
0 comments :
Post a Comment