எது ஆன்மீகம் ? [ 16 ]

Posted by அகத்தீ Labels:

 

 

 

எது ஆன்மீகம் ? [ 16 ]

 

 ஐயா ! நாத்திகர்களால தன் வீட்டையே திருத்த முடியலைன்னும் ஒத்துகிட்ட நீங்க … அந்த டெட் வெயிட்டை ஏன் இன்னும் சுமக்கிறீங்க ?” என்று அலைபேசியில் கலாய்த்தார் ஆன்மீக அன்பர் .

” ஹ…ஹா… [சத்தமாகச் சிரித்தேன்] … நான் பகுத்தறிவாளர் குடும்பத்தில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதைச் சொன்னேன் . அதே நேரம் மனைவியோ மகனோ அம்மாவோ சகோதரனோ ஒவ்வொருவருக்கும் அவரவர் சரி எனக் கருதும் பாதையில் பயணிக்க உரிமை உண்டென்றும் சொன்னேனே .அதுபோல் ஆத்திகர் சொல்வாரா ? சரி ! அது இருக்கட்டும் இந்த நாத்திகரைப் பெற்று வளர்த்ததும் ஒரு ஆத்திகத் தாய் தந்தைதானே .அதற்காக ஆத்திகரால் தன் பிள்ளையையே திருத்த முடியவில்லை என குதர்க்கவாதம் பேசலாமா ? அது சரியான வாதமே அல்ல. பகுத்தறிவாளர் அப்படிச் செய்யவே மாட்டார் .

 

நான் உங்களுக்கு இரண்டு கதை சொல்கிறேன் , ஒன்று இந்து மதம் சார்ந்தது இன்னொன்று இஸ்லாம் சார்ந்தது . முதலில் இஸ்லாம் கதை சொல்கிறேன்.

 

நபிகள் நாயகம் தான் இறப்பதற்கு முதல் நாள் இரவு மனைவியைப் பார்த்து சொன்னாராம் , “ உன் முகம் பதட்டமாக இருக்கிறது .என்னிடம் எதையாவது மறைக்கிறாயா ?”

அவர் , “  உங்கள் உடல்நிலை கருதி 20 தினார் சேமித்து வைத்திருக்கிறேன்.” என்றாராம்.

“ தப்பு செய்துவிட்டாய் ! அல்லா மீது நம்பிக்கை இல்லையா ? நீ நாத்திகராகிவிட்டாயா ? நாளைக்கு நமக்கு வேண்டியதை அல்லா அருள்வார் . அல்லாவை நம்பு. அந்த இருபது தினாரையும் யாருக்காவது தானம் செய்துவிட்டு வா “ என்றாராம் நபிகள் நாயகம் .

அவரும் தெருவுக்குச் சென்று அவற்றை தானம் செய்து வந்தாராம் .மறுநாள் நபிகள் மரணமடைந்தார்.

 

தனக்கென எதையும் சேர்த்துவைக்காத நபிகள் குறித்த கதையாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அன்றாடம் நமக்கு ஆண்டவன் படியளப்பான் என சேமிக்காமல் இருக்க முடியுமா ?

 

தனக்கும் சந்ததிக்கும் தேவைக்கு சேர்த்துவைக்கும் முஸ்லீம்கள் எல்லாம் நாத்திகர்கள் என இக்கதைப்படி குற்றஞ்சாட்டலாமா ?

 

திரெளபதி கதை உங்களுக்குத் தெரியும்தானே . திருதிராட்டினன் சபையில் துச்சாதனன் துயில் உரியும் போது ஒரு கையால் மார்பையும் மறு கையால் தன் மானத்தையும் மறைத்தபடி கண்ணனை வேண்டினாளாம் .ஆனால் கண்ணன் வரவில்லை .

 

இரண்டு கைகளையும் மேலேகூப்பி சரணாகதி அடைந்த போது கண்ணன் வந்து உதவினாராம் . இதுதான் சரணாகதி தத்துவம் என்பர் உபந்யாசிகள் .

 

சரி ! இப்போது உங்களை தாக்க வந்தால் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி கும்பிட்டு இறவனிடம் சரணாகதி அடைவீர்களா ? இயன்றவரை உங்களைக் காக்க சண்டையிடுவீர்களா ? சண்டையிட்டால் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை எனச் சொல்லலாமா ?

 

நோய்வந்ததும் மருத்துவமனை செல்வீர்களா ? நோயாளியை கோவிலில் கொண்டு போட்டு பிரார்த்திப்பீர்களா ? [ இப்படி ஜெபம் செய்யும் ஒரு கிறுத்துவப் பிரிவு இருக்கிறது .அதை சரியென அறிவார்ந்தோர் சொல்லவே மாட்டார்கள் ] மருத்துவமனை போனாலே நீங்கள் நாத்திகர் எனலாமோ !

 

யதார்த்த வாழ்வில் யாரொருவரும் முழு ஆத்திகரா  எனில் கேள்விக்குறியே ! அறிவியலோடும் நடைமுறையோடும் இயைந்து வாழ முற்படும் போதே ஆத்திகம் ஆட்டம் காணத் துவங்கிவிட்டது என்று கூறலாம் .ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் காலங்காலமாக விதைக்கப்பட்டுள்ள சில கருத்துகள் அவை எவ்வளவு தவறானவை என்றாலும்; அவ்வளவு சீக்கிரம் பட்டுப்போகாது .இதனை ஒவ்வொரு பகுத்தறிவாளரும் புரிந்தே வைத்துள்ளனர் .

 

பகுத்தறிவாளர்கள் எவ்வளவு அறிவியலாய் சிந்தித்தாலும் தான் வாழும் சமூகத்தில் இருக்கும் சில பழக்க வழக்கங்கள் கருத்தோட்டங்களை முற்றாக நிராகரித்து வாழ்ந்துவிடவும் முடியாது . வாழ்க்கைப் போரில் சில சமரசங்கள் ஒவ்வொருவருக்கும் தவிர்க்க முடியாதது ஆகிவிடும் .அதை பிடித்து தொங்கிக் கொண்டு பகுத்தறிவு தோற்றுப்போனது என சிலர் கேலி செய்வதும் வாதிடுவதும் யதார்த்த வாழ்வினைப் புரியாத அறியாமையால் இருக்கலாம் அல்லது ஆன்மீக தன்னகங்காரமாக இருக்கலாம் .

 

வாழப் போரிடும் ஒவ்வொருவரும் தன்னை தன் உழைப்பத்தானே நம்புகிறான் .நோய் வந்தால் மருத்துவரிடம்தானே போகிறான் . அதனாலேயே அவன் பகுத்தறிவாளன் ஆகிவிட்டான் என்பது சரியான வாதம் ஆகுமா ? எந்த ஆத்திகராலும் அவ்வாறு செய்யாமல் இருக்கவே முடியாது .

 

ஆனால் இப்படி குதர்க்கம் பேசுவது வேதத்திலேயே இருக்கிறது .இதனை  “சாமான்ய சள” என்பர் . பெரும்பாலான ஆத்திக நாத்திக விவாதங்களை இப்படி நகர்த்துவதால் உண்மையை நெருங்க முடியாமல் அரைகுறையாய் விவாதம் முடிகிறது.

 

இன்னொருவர் என்னிடம் கேட்டார் ,நேற்று வண்ணங்களைப் பற்றி எழுதினீர்கள் .நீங்கள் காவி வண்ணம் மீது மட்டும் வெறுப்பு பிரச்சாரம் செய்வது ஏன் ?

 

நியாயமான கேள்வி .காவி நிறம் துறவின் அடையாளமாக புத்தரால் அறிமுகப்படுத்தப்பட்டது . பின்னர் சனாதனம் அதை தனக்குரியதாக எடுத்துக் கொண்டது .

 

இப்போது கேள்வி “ அனைத்தையும் துறக்கிற நிறம் காவியா ?” அல்லது “அனைத்துக்கும் ஆசைப்படும் - பேராசைப்படும் நிறம் காவியா ?”

 

நானோ பகுத்தறிவாளரோ காவி என்ற நிறத்தின் மீது அலர்ஜி கொண்டவர்கள் அல்ல . யாருடைய காவி ? அவர் செய்வது என்பதுதான் கேள்வி .

 

 “ஸ்ரீ ராம ஜெயம்” எழுதுவது பக்தி . ஒரிவரின் தனிப்பட்ட செயல்பாடு .        ” ஜெய் ஸ்ரீ ராம்” என சங்கிகள் முழக்கமிடும் போது அது கொலை முழக்கம் ஆகிவிடுவதை தொடர்ந்து செய்திகளில் பார்த்து வருகிறோம். காவியும் அப்படித்தான் . யார் ? எவர் ? எதற்கு ? ஏன் ? எப்படி ? எங்கு ? என்றெல்லாம் கேள்வி எழுப்பும் போது விடை கிடைக்கும் .

 

வாழ்நாள் முழுவதும் காவி உடையோடும் திரிந்த ஒருவரை எனக்கு பிடிக்கும் . அவர் யார் ?

 

பீகாரில் ஒரு பெரிய நிலப்பிரபு குடும்பத்தில் பிறந்தவர் . இளமையில் அவருக்கு கிட்டாத வசதி வாய்ப்பே இல்லை .ஆயினும் வாழ்வில் சலிப்புற்று சந்நியாசியாக முடிவெடுத்து நடந்தே  பயணிக்கத் துவங்கினார் . வழிநெடுக விவசாயிகள் படும் துயரை நேரில் கண்டு மனமுடைந்தார் .நிலபிரபுக்கள் கொடுமையை எதிர்க்கத் துணிந்தார் .பீஹாரில் விவசாய சங்கம் அமைத்தார் .தந்தைக்கு எதிராகவே போராடினார் .

 

1936 லக்னோவில் காங்கிரஸ் கட்சி அகில இந்திய மாநாடு நடந்த போது இவர் தலைமையில் என்.ஜி.ரங்கா ,ஜெயப்பிரகாஷ் போன்றோர் கூடி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள் . ஆம். 1936 ஏப்ரல் 11 ஆம் நாள் காவி உடையணிந்த இவர் விவசாயிகளின் உரிமை காக்க செங்கொடியை ஏற்றினார் . சாகும் வரை காவி உடையோடும் தோளில் செங்கொடியோடும் விவசாயிகள் நலன் காக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

அவர்தான் தான் சுவாமி சகஜானந்தா !

 

இந்த காவி உடைக்காரர் சகஜானந்தாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும் . உங்களுக்கு ?

 

இன்னொரு காவி உடை சகஜானந்தர் எனக்கு பிடிக்கும் .அவர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர் .1890 ல் ஆரணி அருகே புதுப்பாக்கத்தில் பட்டியிலன சமூகத்தில் பிறந்தார் . பெயர் முனுசாமி . ஆற்காட்டில் கிறுத்துவ மிஷினரி பள்ளியில் பயின்றார் .கல்வியில் சிறந்து விளங்கினார் . குடும்பம் பிழைப்பு நிமித்தம் கோலார் தங்க வயல் குடிபெயர்ந்தது .அங்கு வைணவத்தில் ஈடுப்பாடு கொண்டு சந்நியாசி ஆனார் . காவி உடை ஏற்றார் . நடந்தே ஊர் ஊராகச் சென்று பலரிடம் உபதேசம் பெற்றார் . வியாசர்பாடி கரபாத்திர ஸ்வாமியின் ஆலோசனையின் பேரில் சிதம்பரம் சென்று , நந்தனின் பரம்பரை கல்வி கற்க வழிகாட்டினார் .1916 ஜூன் 17ல் நந்தன் கல்விக் கழகத்தைத் தொடங்கினார் . பட்டியிலின மக்கள் கல்விக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் .இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் . 1959 மே 1 ல் மறைந்தார் .ஒடுக்கப்பட்ட கல்விக்காக தன்னை அர்ப்பணிந்த இந்த காவி உடைக்காரர் சகஜானந்தரை எனக்கு பிடிக்கும் ? உங்களுக்கு ?

 

“ மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்” “ கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக வேண்டும்” வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிச் சோர்ந்த அன்பின் திருவுரு வள்ளலார் செய்த மகத்தான செயல்களை மறக்க முடியுமா ? அவர் வெள்ளுடை தரித்த துறவிதான்  ஆயினும் கருணை மிகு மாமனிதன் .சமூகசீர்திருத்த போராளி. இவரை எனக்கு பிடிக்கும் .உங்களுக்கு ?

 

”தாழக்கிடப்போரை தற்காப்பதே தர்மம்” என பாடுபட்ட வைகுண்டரை ,நாராயண குருவை ,குன்றக்குடி அடிகளாரை , ஓரளவு ராமனுஜரை எனக்கு பிடிக்கும். உங்களுக்கு ?

 

எல்லா மதத்திலும் இது போன்ற மாமனிதர்கள் உண்டு . இவர்கள் மதம் கடந்தவர்கள் .மானுடம் உய்ய நல்வழி காட்டியோர் .அவர்களின் ஆன்மீகம்  மனிதர்களுக்கானது .அதன் மீதுக்கு தத்துவார்த்த ரீதியா விமர்சனம் இருக்கலாம் ; ஆயினும் அவர்கள் மீது கொண்ட பெருமதிப்பு சற்றும் குறையாது .

 

காவி உடையும் , கலவர புத்தியும் ,வன்ம பேச்சும் , ஆதிக்க வெறியும் , வஞ்சகமும் , பிறர் மீதான வெறுப்பின் உச்சமும் மிக்கவர்களை நான் ஏற்க மறுக்கிறேன் .நீங்கள் ?

 

நாத்திக ஆத்திகப் போர் முடியவில்லை. தொடரும் .

 

தொடர்வோம்.[இடைவேளை]

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

 

 

 

 

 

 

 

 


0 comments :

Post a Comment