எது ஆன்மீகம் ? [ 14 ]

Posted by அகத்தீ Labels:

 

 

 

 

 

 

எது ஆன்மீகம் ? [ 14 ]

 

 “இந்தத் தொடரை யாரோ நாலுபேர் படிக்கக்கூடும் . நாலுபேராவது படிக்கட்டும்”, என்றுதான் தொடங்கினேன் .ஆனால் என்னை கூர்ந்து ஏராளமானபேர் கவனிக்கிறார்கள் என்பதை , அலைபேசி அழைப்புகளிலும் சிலர் அவர்களுக்கே உரிய பாணியில் எதிர்வினை புரிவதிலும் உணர்ந்து கொண்டேன் .

 

சென்ற அத்தியாயத்துக்கு சில ஆன்மீகப் பதிவுகளை பதிலாக சிலர் அனுப்பி உள்ளனர் .அதில் சில அவர்களின் புரிதலின் அளவையும் நல்லெண்ணத்தையும் பிரதிபலிப்பன .சில முரட்டுத்தனமானவை .அவைகளுக்கெல்லாம் நிச்சயம் இத்தொடரில் பதில் கிடைக்கும் .நிற்க !

 

ஆத்மா எனப் பேசத்தொடங்கினாலே அப்பேச்சு பகவத்கீதையை நோக்கி நகர்த்தப்படுவது இங்கு வாடிக்கை .நாமும் அதற்கு விதிவிலக்கல்ல . எனவே மேலும் சில செய்திகளைப் பார்ப்போம்.

 

 ஆத்மா அழிவற்றது . மீண்டும் மீண்டும் பிறக்கும் .பழைய சட்டையை கழற்றி எறிந்துவிட்டு புதிய சட்டையை அணிவதுபோல் ஆத்மா வேற்று உடலில் பிறக்கும் .இப்படி அறிவுக்கு பொருந்தாதவற்றை கீதை சொன்னது .முன் அத்தியாயங்களில் இதைப் பார்த்தோம்.

 

“ துன்பங்களில் மனங்கெடாதவனாய் , இன்பங்களில் ஆவலற்றவனாய் ,அச்சமும் சினமும் தவிர்த்தவனாயின் அம்முனி ‘மதியில் உறுதி வாய்ந்தவன்’ [ ஸ்திதப்பிரஞ்ஞன்] என்ப” [ கீதை 2:56]

 

எந்த உணர்ச்சியும் இல்லாமல் ஆசாபாசமற்று ஜடமாய் இயந்திரமாய் இயங்குவனை மனிதன் என்று ஏற்போமோ ? ஆனால் இவனைத்தான் ஸ்திதப்பிரஞ்ஞன் , களங்கமற்ற உள்ளத்தினன் என்கிறான் கீதாச்சாரியன்.

 

போர் செய்யும் போது ஈரமே துளியும் இல்லாமல் போர் செய்து கொன்றுகுவி என்று சொல்கிறான் கீதாச்சாரியன். ஆம். “எல்லாச் செயல்களையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு – ஆசை நீக்கி – யான என்பது அற்று –மனக்காய்ச்சல் தீர்ந்தவனாய் போர் செய்யக் கடவாய்!” [கீதை 3:19,20]

 

 ‘இரக்கம் எனும் ஒரு பொருள் இல்லா அரக்கன்’ என பிறரைப் பழிப்பதும் ஆன்மீகம்தான்  .ஆனால் கீதாச்சாரியனே இரக்கமற்று கொலை செய்யத்தூண்டுவது ஏன் ? இரக்கம் கொள்வது ஆன்மீகமா ? இரக்கம் கொல்வது ஆன்மீகமா ?

 

பாலஸ்தீனத்தில் ஒன்றுமறியா பிஞ்சுகளைக்கூட கொன்று குவிக்கும் இஸ்ரேலின் யுத்தவெறியைப் பார்த்தால் கிருஷ்ண பரமாத்மா மகிழ்ந்து கூத்தாடி என் கீதா உபதேசம் அமுலாகிறது என குதிப்பானோ ?

 

நான் ஏற்கெனவே கொன்றுவிட்டேன் .நீ ஒப்புக்கு வெளி உலகுக்காகக் கொல் . அதாவது செத்தபாம்பை அடி என்பது போல் உபதேசம் செய்கிறது கீதை ,

 

” உலகத்தை அழிக்கத் தலைப்பட்ட காலமே நான்  மனிதர்களை இங்கு கொல்லத் தொடங்கியுள்ளேன்.” [கீதை 11:32] என பேரழிவை நியாயப்படுத்துகிறார் கிருஷ்ணபரமாத்மா ; அப்போதும் கலங்காது இருப்பவனையே ஸ்திதப்பிரஞ்ஞன் என்கிறார் .

 

ஸ்திதப்பிரஞ்ஞனைப் பற்றி கீதையில் வரும் ஒவ்வொரு விளக்கமும் தன்னைத்தானே மையம் கொண்டவனாகவே – தன்னைத்தானே போற்றும் சுயமோகியாக மனிதனைச் சித்தரித்துக் காட்டுகிறது.

 

“ பார்த்தா ! ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்கள் அனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின் அப்போது ஸ்திரபுத்தியுடையோன் – ஸ்திதப்பிரஞ்ஞன் என்று கூறப்படுவான்” 2.55]

 

”ஆமை தன் அவயங்களை இழுத்துக் கொள்வது போல ,எப்புறத்தும் விஷய யதார்த்தங்களினின்று புலன்களை ஒருவன் மீட்க வல்லான் ஆயின் ’அவனறிவே நிலை கொண்டது’ .”

 

இது ஆன்மீக தன்னங்காரம் அல்லாமல் வேறு என்ன ?

 

நம்மைச் சுற்றி நடக்கிற அநீதிகளை துன்ப துயரங்களைக் கண்டும் காணாமல் தன்னில் ஒடுங்கி பரமாத்மாவைத் தேடுகிறேன் என்பது  அப்பட்டமான சுயநலும் சுயமோகமும்தானே !

 

மார்கஸ் பொதுவாய் சில கருத்துமுதல்வாதிகளைப் பற்றி குறிப்பிடுவதைப் போல “ போதை ஏறிய தத்துவ விசாரமே” இந்த ஸ்திதப்பிரஞ்ஞன் வாதம் எனில் மிகை அல்ல.

 

“கீதை தரும் மயக்கம்” எனும் நான் எழுதிய ஓர் நூலில் இருந்து சிலவற்றை இங்கு எடுத்துச் சொன்னேன் . மேலும் அறிய அந்நூலை வாசியுங்கள் .

 

ஆத்மா எனத் தொடங்கி ’ஸ்திரபுத்தியுடையோன்’ , ‘அவனறிவே நிலை கொண்டது’‘மதியில் உறுதி வாய்ந்தவன்’ ‘ஸ்திதப்பிரஞ்ஞன்’’ என வார்த்தை ஜாலம் செய்கிறது கீதை . மனம் பற்றி பேசினாலும் சரி ஆத்மா பற்றி பேசினாலும் சரி இறுதியில் மூளையில் வந்துதான் சேர்ந்தாக வேண்டும்.

 

மறுபுறம் அழுகையும் பற்கடிப்பும் மிகுந்த நம்மைச் சுற்றியுள்ள யதார்த்த உலகின் மீது கவனம் செலுத்தாமல் தன் சுய மகிழ்ச்சியை மட்டுமே தேடச் சொல்கிறது கீதை .இதுதான் அதன் ஆன்மீக வழிக்காட்டல் .

 

ஒருவர் முற்றும் துறந்து தவமிருக்க முடிவு செய்து காட்டுக்குப் போனார் . ஓர் மரத்தடியில் தாடி ஜடாமுடியுடன் கண்மூடி தவம் இருந்தார் . காற்றின் நிசப்தமும் இரைச்சலும் என்னை ஒன்றும் செய்யாது .பறவைகளின் ரீங்காரமோ , விலங்குகளின் கூச்சலோ ,காற்றின் இரைச்சலோ ,மரங்களின் சலசலப்போ எனக்கு பொருட்டல்ல . அமைதியில் மகிழ்வேன் என்று இருந்தார் .

அந்த வழியே இரண்டு பெண்கள் சளசளவென பேசியபடி அந்த வழியே நடந்தனர் . துறவியின் தவம் சற்று கலைந்தது .முறைத்துப் பார்த்தார் .பெண்கள் அமைதியாயினர் .

மறுநாளும் அதே பெண்கள் அந்த வழி நடந்தனர் ,ஆனால் அமைதியாக .ஆயினும் கொலுசுச் சத்தம் கேட்டு  தவம் கலைந்தது .துறவி முறைத்தார் . பெண்கள் அமைதியாயினர் .

மறுநாள் கொலுசு இல்லாமல் நடந்தனர் .ஆயினும் அவர்கள் சூடி இருந்த மல்லிகை மலர் வாசம் இழுத்தது .துறவி தவம் கலைந்து முறைத்தார் .

மறுநாள் பெண்கள் அந்தப் பக்கம் வரவே இல்லை .நேரம் கடந்து கொண்டே போகுதே  இன்னும் அவர்கள் வரவில்லையே என எண்ணி தவம் கலைந்தார் துறவி.

 

“ துன்பங்களில் மனங்கெடாதவனாய் , இன்பங்களில் ஆவலற்றவனாய் ,அச்சமும் சினமும் தவிர்த்தவனாயின் அம்முனி ‘மதியில் உறுதி வாய்ந்தவன்’ [ ஸ்திதப்பிரஞ்ஞன்] என்ப” [ கீதை 2:56] என்பது துறவிக்கே பொருந்தவில்லை .

 

கோவத்தை அடக்க முடியாதவர் துர்வாசர் . ஆசையை அடக்க முடியாதவர் விசுவாமித்திரர் ,தன் மனைவியை கல்லாகும்படி சபித்த கெளதம ரிஷி , சாதியத்தை துறக்க முடியாதவர் துரோணாச்சாரியார் . இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

 

ஸ்திதப்பிரஞ்ஞன் என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள் அன்றி வேறில்லை . “அனைத்துக்கும் ஆசைப்படுபவர்”தானே இன்றைய கார்ப்பரேட் சாமியார்கள் .  “ஜன்னலைத் திறந்து வை காற்று வரட்டும்” என சொல்லிவிட்டு படுக்கை அறையைத் திறந்து வைத்து காமகோட்டமாக்கியவர்கள்தானே நவீன குருஜிகள் .

 

வாழ்க்கைப் பாடுகளில் மனமொடிந்து நிற்பவர்களை கூப்பிட்டு மயக்கு மொழி பேசி பணம் பறித்து பின்னர் நடுத்தெருவில் புலம்பவிடும் ஆன்மீக வியாபாரிகள் எவ்வளவு பன்னிப்பன்னி விளக்கம் கொடுத்தாலும் அவர்கள் பேசும் ஆன்மீகம் என்பது கடைசிவரை விடுதலை தராது ; போதை வேண்டுமானால் தரலாம்.

 

விசால அன்பால் மனித குலத்தை விழுங்கியவர்கள் உண்டு . அவர்களோடு நமக்கு சண்டை இல்லை .அதை பின்னர் பார்க்கிறோம்.

 

என் நண்பர் கேட்டார் , “ உங்களுக்கு பிடிக்காமல் போகலாம் .ஆயினும் இதைச் செய்தால் என் மனம் நிம்மதியாக இருக்கிறது .அதில் உங்களுக்கு என்ன நட்டம் ?”

 

“ ஆமாம் .அதில் எனக்கென்ன நட்டம் ? சமுதாயத்துக்கு என்ன நட்டம் ?”

 

பேசுவோம் . தொடர்வோம்.

 

சுபொஅ.

 

 

 

 

 

 

 

 

 

 

 

0 comments :

Post a Comment