எது ஆன்மீகம் ?[1]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [1}

 

 “மதம் வேண்டாம் சார் ! ஆனால் Spiritual outlook தேவை.” என்றார் நண்பர்.  

 

உறவினர் பலரிடம் உரையாடும் போதும் இதுபோன்ற வாதம் எழுந்தது உண்டு .

 

ஆன்மீகம் [Spiritual] என்ற சொல் ஒவ்வொருவராலும் அவரவர் புரிதலுக்கு ஏற்ப ஒரு தற்காப்பு முகமூடியாய் பயன்படுத்தப்படுகிறது . எது ஆன்மீகம் என்று விவாதிக்க புகுன்றால் பலர் பலவிதமாய் வியாக்கியானம் செய்கிறார்கள் .

 

ஆத்திகம் ,ஆன்மீகம் ,நாத்திகம் ,பகுத்தறிவு  இப்படி எல்லா சொற்களும் பொருளுடைத்தனவே என்பதில் ஐயமே இல்லை . ஆயின் இச்சொற்களை யார் எங்கு எதற்கு எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியம்.

 

ஆத்திகம் ,ஆன்மீகம் என்பது வெளிப்பார்வைக்கு ஒற்றைச் சொல்லாகத் தோன்றினும் இதற்குள் ஆயிரம் வகைப்பாடுகள் உண்டு .

 

அதுபோல் நாத்திகம் ,பகுத்தறிவு என்பதைச் சார்ந்தும் நிறைய வகைப்பாடுகள் உண்டு .

 

ஒவ்வொன்றையும் தெளிதல் மிக முக்கியம் . பொதுவாய் சொல்லப்படும் வரையறையை முதலில் பார்ப்போம் .அவை சரியா பிழையா என பின் தொடர்வோம்.

 

ஆன்மீகம் என்பது மதம் சார்ந்ததல்ல என கருதும் நண்பரின் வாதத்தை முதலில் பார்த்தோம் . அது மெய்யா ?

 

ஆன்மீகம் என்பதை வாழ்வின் மெய்ப்பொருளைத் தேடும் உள்நோக்கிய பயணம் என வியாக்கியானம் செய்து கொள்வார்கள் .

ஆன்மீக உணர்வை தேடலை ஒவ்வொருவரும் தனித்தனியேதான் தேட முடியும் . பெற முடியும்.

ஆன்மீகத் தேடலுக்கு குறிப்பிட்ட விதிகளோ கட்டுப்பாடுகளோ யாரும் வரையறை செய்ய வில்லை .ஒவ்வொருவரின் ஆன்மீகத் தேடலும் தனித்துவம் ஆனது .

 

ஆயின், மதம் அத்தகையதா ? இல்லை.

மதம் ஒரு குழுவாக ஒரு பிரிவாக இயங்கக்கூடியது .அதன் உறுப்பினராகத்தான் நீ இருக்க முடியும் .

மதம் சில குறிப்பான சடங்கு சம்பிரதாயங்கள் விதிமுறைகள் கட்டுப்பாடுகளுக்கு உள்ளடங்கியவை.

மதம் எனப்படுவது நம்பிக்கை .புனித நூல் ,கடவுள் , வழிபாடு , சடங்காச்சாரங்களின் தொகுப்பு .

 

இவைகளை வரையறையாகக் கொண்டால் ஆன்மீகம் தனிப்பட்ட விவகாரம் ,மதம் ஓர் குழு சார்ந்தது என்கிற முடிவுக்கு வரலாமா ?

 

அப்படி ஆயின் ஆன்மீகம் பேசுவோர் யாரையும் வெறுக்க இயலாது .யாரையும் குரோதக் கண் கொண்டு நோக்கலாகாது . எல்லோரையும் அன்பால் அரவணைக்க வேண்டும் . வெறுப்பின் நிழல்கூட விழக்கூடாது . இப்படிச் சொல்வதா ?

அல்லது ஆன்மீகம் என்பது தன்னைச் சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாது தன் சுய திருப்தியில் சுருண்டுபோவதா ? தான் ,தன் மனம் ,தன் பேரின்பம் என்கிற சுயநல சிமிழில் அடங்கி ஒடுங்கி கிடப்பதா ?

 

ஆன்மீகம் என்போர் மதம் சார்ந்து உரையாடத் தொடங்கின் அவர் மதவாதியா ஆன்மீகவாதியா ?

நம்மைச் சுற்றிலும் ஆன்மீகம் பேசுவோர் , தன்னைச் சுற்றி ஒளிவட்டம் போட்டுக்கொண்ட ஆன்மீக குருக்கள் எனும் ஆன்மீக வியாபாரிகள் நிறைந்துள்ளனரே ! எல்லா ஊடகங்களிலும் ஆன்மிக இணைப்பு /பக்கங்கள் உண்டு . இவை எல்லாம் மதம் சாராதவையா ? மூடநம்பிக்கை ,வெற்று சடங்காச்சாரங்கள் , போலிப் புனைவுகள் , ஜனநாயகமற்ற ஆதிக்க கருத்தோட்டங்கள் , மாறுதல்களை செரிக்க முடியா ஒவ்வாமை ,பிற மதம் பிற பிரிவினர் மீது வெறுப்பு ,தன் மத வெற்றுப் பெருமிதம்  இவைதானே மண்டிக் கிடக்கின்றன .

 

அப்படியானால் அவை ஆன்மீகம் என்ற சொல்லுக்குள் அடங்குமா அடங்காதா ? அடங்குமாயின் ஆன்மீகம் மதத்தின் மீது பூசப்பட்ட கவர்ச்சி முலாம் எனலாமா ? அடங்காதாயின் ஆன்மீகப் போர்வையில் தொடரும் இந்த அழிச்சாட்டியங்களை எவ்வகையில் சேர்ப்பது ?

 

குழப்பம் தவிர்ப்பது ஆன்மீகவாதிகள் கடமை . ஆனால் குழப்புவதை மட்டுமே செய்கின்றனரோ ?

 

இதுபோல் நாத்திகத்திலும் உண்டு .

 

தொடர்வோம்….

0 comments :

Post a Comment