எது ஆன்மீகம் [ 19 ]

Posted by அகத்தீ Labels:

 

 எது ஆன்மீகம் [ 19 ]

 

சென்ற அத்தியாயத்தில் ‘ சிவன் பொம்மை’ ,பெருமாள் பொம்மை’ என குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் என்கிற சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மேற்கோளை சுட்டி இருந்தேன்.  இதனால் ‘மனக்காயம்’ அடைந்த ஓர் ஆன்மீக அன்பர் .உங்கள் நாத்திக குப்பையை குழந்தைகள் தலையில் திணித்து நஞ்சை விதைக்காதீர் எனக் காட்டமாக பதில் சொல்லி இருந்தார் .

 

சரி ! நாத்திகத்தை நாங்கள் திணிக்கவில்லை .நீங்கள் ஆத்திகத்தைத் திணிக்காதீர்கள் என சொன்னால் ஏற்பார்களா ? 18 வயதுக்கு பிறகு அவனோ அவளோ  யாரோ சுயமாக மதம் ,கடவுள் குறித்து முடிவெடுக்கட்டும் ;யாரும் எதையும் குழந்தைகள் ,சிறுவர்கள் மீது திணிக்க வேண்டாம் என விட்டுவிடலாம் தயாரா ?

 

நாய் பொம்மைக்கும் நாய்க்கும்  உள்ள வித்தியாசம் குழந்தைகளுக்குத் தெரியும். பொம்மைக் காருக்கும் உண்மைக் காருக்கும் உள்ள வித்தியாசம் குழந்தைகளுக்குத் தெரியும் . ஏனெனில் இரண்டையும் பார்க்கின்றது .பழகுகின்றது .சிவன் பொம்மை ,பெருமாள் பொம்மை ,மேரிமாத பொம்மை எங்கும் பொம்மைதான் ;கடவுளை பார்க்க முடியாது .ஆகவே குழந்தைகள் தலையில் திணிக்காதீர்கள் .தாங்களாக சரி எது தவறு எது எனக் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள் .

 

ஜீ டிவில் ’சரி கம ப’ எனும் ஓர் நிகழ்ச்சி வருகிறது .அதில் பங்கேற்கும் குழந்தைகளில் ஆற்றல் வியக்க வைக்கிறது .குரல் சொக்க வைக்கிறது .நானும் என் இணையரும் விரும்பிப் பார்க்கிறோம்.

 

அதில் பல குழந்தைகள் கழுத்தில் உத்திராட்சக் கொட்டையும் கையில் வண்ணக் கயிறுகளும் உள்ளன . நானறிய உத்திராட்சம் என்பது தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அணிந்து வந்தனர் .நான் படித்த பள்ளியில் நானும் இன்னும் ஒரிரு பேரே அணிந்திருந்தோம் . இன்று அது பரவலாக்கப்பட்டிருக்கிறதே .இது குழந்தைகள் விரும்பி அணிந்ததா ? இல்லையே ! வீட்டார் அணிவித்தனர் .ஏன் ? இது திணிப்பில்லையா ? நான் என் கழுத்தில் தொங்கிய உத்திராட்சக் கொட்டையை எட்டாம் வகுப்பு படிக்கும் போது அறுத்து எறிந்துவிட்டு அப்பாவிடமும் மாமாவிடமும் அடிவாங்கினேன்.அது தனிக்கதை .

 

அது போகட்டும் டிசம்பர் 7 ,8 தேதிகளில் பக்திப் பாடல் ரவுண்ட் குழந்தைகள் அற்புதமாகப் பாடி அசத்தினர் . நானும் இணையரும் ஒவ்வொரு குழந்தையின் குரலையும் ஆட்டத்தையும் வியந்து பார்த்தோம்.கேட்டோம்.பாராட்டுகிறோம்.

 

அம்மன் பாட்டு , முருகன் பாட்டு ,கர்ணன் படப்பாடல் ,விநாயகர் பாட்டு ,அய்யப்பன் பாட்டு, சுடலை மாடன் பாட்டு ,கருப்பசாமி பாட்டு , ’ராமன் அப்துல்லா’  படத்தின் இடம் பெற்ற ‘உன்மதமா என் மதமா ?” என்ற பாட்டு எல்லாவற்றையும் குழந்தைகள் பாடி அசத்தினர் .  ஒரே ஒரு சமஸ்கிருதப் பாடல் இடம் பெற்றது ; என்னைப் பொறுத்தவரை ரசிக்க முடியாத பாடல் அதுமட்டுமே . கிராமிய பாடல்கள் எல்லோரையும் ஆடவைத்தது .

 

எந்தப் பாடலையும் குழந்தைகள் தேர்வு செய்திருக்க முடியாது பயிற்சியாளர்கள் திட்டமிடலே அவை .  இந்த ஷோவில் சாமி வேடமிட்டு குழந்தைகள் நடிக்கவும் செய்தனர் . வேடிக்கை என்ன வெனில் வேடமிட்ட சாமியை வந்தவரெல்லாம் கும்பிட்டு அடிபணிந்ததுதான். இது என்ன வகை நம்பிக்கை ? கடைசியில் ஐயப்ப வழிபாடும் இடம் பெற்றது .அதில் இடம் பெற்ற நடுவராக வந்த பெண் பாடகர் ,” ஐயப்பன் கோவிலுக்குத்தான் போக முடியவில்லை .இங்கேயாவது ஐயப்பனை தரிசிப்போம்’ என்றது பஞ்ச் . ’உன் மதமா ? என் மதமா ?’ பாடலை இது பாடல் அல்ல செய்தி , ஸ்டேட்மெண்ட் [ STATEMENT ] என நடுவராக வந்த பிரபல பாடகர் கூறியது சரியா ? சித்தர் பாடல்களை எல்லாம் அப்படித்தான் சொல்வாரா ? அந்த சிறுவனிடம். 'நீ எந்த மதம் ?''என தொகுப்பாளினி கேட்டது அபத்தத்தின் உச்சம்.

 

சரி ! விஷயத்து வருவோம் . போட்டி சரிதான் . அது பாட்டுத் திறமையை நிரூபிக்கத்தான் .சந்தேகமில்லை .ஆயின் அது வடிவமைக்கப்பட்ட விதம் ஆத்திகத் திணிப்பு இல்லையா ? இதுபோல் பகுத்தறிவுப் பாடல்கள் என ஒரு ரவுண்ட் வைத்து ; அப்போதும் இதுபோல் அறிவியல் காட்சிகள் அமைக்கப்பட்டால் ‘மனம் புண்படும் கோஷ்டிகள்’ சும்மா இருப்பார்களா ?

 

குழந்தைகளுக்கு ஆத்திகத்தையும் திணிக்காதீர்கள் ! நாத்திகத்தையும் திணிக்காதீர்கள் ! அறிவியல் உண்மைகளைச் சொல்லுங்கள் . அறிவியல் வரலாற்றைச் சொல்லுங்கள் . என்ன ? எங்கு ? யார் ? எப்போது ?ஏன் ? எதற்கு ? எப்படி ?  என்பன போன்ற கேள்விகளைக் கேட்க பயிற்றுவித்தால் நன்று . பொம்மையை பொம்மை என்றுதானே சொல்ல வேண்டும் .

 

ஆனால் ஒரு சமூக யதார்த்தம் என்னவெனில் எந்தக் குழந்தையும் மதம் , கடவுள் ,பக்தி , சடங்குகள் ,சம்பிரதாயங்கள் ,மூடநம்பிக்கைகளை அறியாமல் ,பழகாமல் இந்த சமூகத்தில் வளரவே முடியாது .குடும்பச் சூழலும் சமூகச் சூழலும் ஐந்திலேயே வளைத்து விடுகிறது . இங்கே அறிவியலாய் சிந்திக்கத்தான் மெனக்கெட்டு பயிற்சி கொடுக்க வேண்டி இருக்கிறது .அப்படி எங்காவது ஒரு சிறு முயற்சி எனில் உடனே ‘மனம் புண்படும் கோஷ்டி’ வந்து கூப்பாடு போடத் துவங்கி விடுகிறது .

 

கங்கை எங்கே உற்பத்தியாகிறது ? இந்தக் கேள்விக்கு ,“இமயமலையில்  உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கி பாகிரதி நதியாகிறதுதேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது.” என்று பதில் சொன்னால் சரி . மாறாக சிவபெருமான் தலையில் உற்பத்தியாகிறது என்பது ஒரு கற்பனை .புனைவு .கதை . இப்படிச் சொன்னால் மனம் புண்படும் என்றால் அதற்காக குழந்தைகளுக்கு உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா ?

 

உலகம் எப்படி கடவுளால் படைக்கப்பட்டது என்கிற பைபிள் கதையை கதை என்றே சொல்லுங்கள் . பரிணாமக் கோட்பாட்டை ,பெருவெடிப்பு சித்தாந்தத்தை கூடவே சொல்லிக் கொடுங்கள் .

 

பூமிதான் மற்ற கிரகங்களோடு சூரியனைச் சுற்றி வருகிறது என்ற வானியல் அறிஞர் ஜியார்டானோ புரூனோ கத்தோலிக்க மதபீடத்தால் உயிரோடு எரிக்கப்பட்டார் . பரிணாமக் கோட்பாடு பைபிளுக்கு எதிராக இருப்பதாக கத்தோலிக்க மத பீடம் எதிர்த்தது . புரூனோவை எரித்ததற்காக கத்தோலிக்க மதபீடம் மன்னிப்பு கேட்டுவிட்டது .பரிணாமக் கொள்கையை பட்டும்படாமலும் ஒப்புக் கொண்டுவிட்டது . இதனைச் சொல்லுங்கள் .

 

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்  1932ல் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்ட சில பத்திகளை இங்கு நினைவூட்டுவது காலத்தின் தேவை எனக் கருதுகிறேன்.

 

“பஞ்ச தந்திரக் கதைகளில் சொல்லியிருக்கும் கதைகளை உண்மை என நம்பும் குழந்தைகளுக்கும் ,வேத ,புராண ,விவிலிய நூல்களில் சொல்லும் கதைகளை உண்மை எனச் சொல்லும் மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம் ?”

 

“ வேதங்கள் தெய்வ வாக்கானவை என்று நம்புகின்றபடியால் ,அவைகளில் கூறியுள்ள கதைகளை உண்மை என்று கொள்ளல் வேண்டுமென்பார் .இந்த வாதத்தில் முதல் வழக்கு என்னவெனில் ,வேதங்கள் தெய்வவ வாக்கு என்று நிரூபிக்கப்படும் வரை ,இவர்கள் கூறும் வாதம் பொருந்தாது . ஆதலின் அடுத்து வேத புராணங்களில் கூறியுள்ள அபூர்வ காரியங்கள் தற்காலத்தில் நடவாமையால் ஈஸாப் கதைகளைப் [ easop’s fables ] போன்ற கதைகளெனவே ஏற்படும்.”

 

அவர் அந்தக் கட்டுரையில் ஏசு உயிர்த்தெழுந்தார் என்ற கதையை கேள்விக்கு உள்ளாக்குவார் . சில வேளைகளின்  செத்துவிட்டதாக நாம் தவறாக் கருதியவர்கள் பிழைத்துக் கொள்வதும் உண்டு . அதோடு ஒப்பிட்டாலும் அதற்கும் சரித்திர சாட்சி இல்லை .செயிண்ட் ஜான் [Saint John]  , செயிண்ட் மார்க் [ Saint Mark ] எழுதிய சுவிசேஷங்களில் உயிர்த்து எழுந்தது இல்லவே இல்லை . ஏன் எனக் கேட்கிறார் ? துணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் எனச் சொல்லும் பிரகலாதன் கதையும் நரசிம்ம  அவதாரமும் வெறும் கற்பனையே . சைவ வைணவச் சண்டையில் வைணவத்தின் பெருமையைச் சொல்ல புளுகிய கதையே என்கிறார்.

 

இறுதியில் சொல்வார், “ வேத ,புராண திருவிளையாடல் யாவும் வெறும் கற்பனையாகவே முடிவதைக் கண்டோம்.”

 

மேலும் சொல்கிறார் , “ பிரபஞ்சத்தில் நமக்குத் தெரிந்த வரை,இருக்கும் பிராணிகளிலே மனிதனைப் போன்ற மூடப் பிராணி இல்லை என்றே சொல்லலாம்.  இல்லாத தெய்வங்களையும் பிசாசுகளையும் தானே சிருஷ்டித்துக் கொண்டு ,அந்த சொற்களுக்கு நற்குணத்தையோ துர்க்குணத்தையோ காட்டி , தான் கொடுத்த குணத்துக்கு தானே பயந்து ,அந்த பயத்தை போக்க பிரார்த்தனையும் பூசையும் வலியையும் காவைவும் செய்து ,அவைகளால் தன்னையும் பிறரையும் இம்சித்துக் கொண்டு ,இவ்வுலகில் உயிர்வாழும் சம்பவம் பிரபஞ்சத்தில் வேறு எங்கும் இருக்காது என்று தீர்க்கமாகச் சொல்லலாம்.”

 

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் புற்றுக்குள் இருக்கும் பாம்புக்கு உணவளித்தவர் யார் என இன்றைக்கும் கேட்பவர் இருக்கிறார்கள் .அன்றைக்கும் கேட்டிருக்கிறார்கள் . அவர்களை நோக்கி உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியில் சாகும் போது எந்த மதக் கடவுளும் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பியதோடு ; ஒரு சவாலும் விட்டார் ,

 

“வேண்டுமானால் காற்று ,கிரணம் [சூரிய ஒளி],ஜலம் நுழைய வழி இல்லாத ஒர் பெட்டி ஒன்றில் [ hermetically closed box ] ஒரு தவளையை இரண்டொரு நாள் மூடிவைத்து பிறகு அதை உயிருடன் பார்வதி ,பரமசிவன் வைத்திருக்கின்றார்களா என்று தெரிந்து நமக்குத் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

 

இப்படி மனித மூடத்தனத்தின் மீது பாய்ந்த சிங்கார வேலர்தான் அறிவியலை பரப்ப முழுக்க முழுக்க அறிவியல் பரப்ப என ‘புது உலகம்’ என்ற ஏட்டை துவக்கினார் . ஏட்டை துவக்கும் போது அவரின் வயது 76 . தமிழில் அறிவியல் சாத்தியமா எனக் கேட்பவர்களுக்கு 1936 லேயே  செயல் மூலம் பதில் சொன்னவர் .

 

மூடநம்பிக்கைகளை ,சாதியை ,மதத்தை ,ஆன்மீகப் புரட்டை  ஒரு பக்கம் தோலுரித்துக் கொண்டே மறுபக்கம் மனித குலத்தின் மெய்யான விடுதலை வறுமை ,வேலையின்மை ,ஏற்றதாழ்வு அற்ற சமத்துவ உலகை படைக்க எது வழி எனவும் காட்டியவர் சிங்கார வேலர் . அடுத்து பார்ப்போம்.

 

தொடர்வோம் [இடை வேளை ]

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

 

 

 

 

 


0 comments :

Post a Comment