எது ஆன்மீகம் ?[4]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [4]

 

மதங்களின் எண்ணிக்கையை கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்தோம் நேற்று . மதம் சார்ந்த தத்துவங்கள் மதத்தை மறுத்த தத்துவங்கள் குறித்து ஓர் பயணம் போனால் அது மிகப்பெரிய உலகமாய் நீளும் .ஆனமீகம் பற்றிய உரையாடல் அதன் துணையின்றி நகராது . அதனை பின்னர் பார்ப்போம்.

 

ஆனால் இவை எல்லாவற்றையும் கூட எண்ணி கணக்குச் சொல்லிவிட முடியும் . கடவுள் கணக்கை ஒரு போதும் சொல்லிவிடவே முடியாது .நம் நாட்டை எடுத்துக் கொண்டால் பெருந்தெய்வங்கள் , சிறு தெய்வங்கள் , முப்பத்தி முக்கோடி தேவர்கள் ,புருடர்கள் ,கிங்கரர்கள் ,கிராமப்புற தெய்வங்கள் இப்படி கணக்கின்றி நீளும் .அன்றாடம் புதிது புதிதாய் உருவாக்கப்படுவதும் உண்டு .

 

சென்னை மத்திய கைலாஷில் போனால் பாதி விநாயகர் உருவமும் பாதி அனுமார் உருவமும் கொண்ட ஒரு கடவுள் சிலை இருக்கும் .அது  “ஆதிஅந்தப் பெருமாளாம்”. அதாவது ஆதிக் கடவுள் விநாயகராம்  கடைசி [அந்தம்]கடவுள் அனுமாராம் .இரண்டும் கலந்தவர் ஆதிஅந்தப் பெருமாளாம். இது எப்படி இருக்கு ?

 

இப்படி அன்றாடம் பல்கிப் பெருகும் கடவுள் கணக்குக்கு முடிவே இல்லை .இந்தியாவில் மட்டுமல்ல கிரேக்கத்தில் , ஆப்பிரிக்காவில் ,அரபியேவில் ,ஆஸ்திரேலியாவில் , ஐரோப்பாவில் ,ஆசியாவில் .லத்தின் அமெரிக்க நாடுகளில் உலகெங்கும் பழங்குடி சமூக வாழ்வு தொடங்கி இன்றுவரை எண்ணற்ற கடவுள் அவதாரங்கள் சொல்லி முடியாது . நபிகள்கூட மெக்காவில் நுழையும் முன் எண்ணற்ற கடவுள் உருவங்களை உடைத் தெறிந்ததாக படிக்கிறோம் .

 

மக்கள் தொகையைகூட கணக்கிட்டு விடலாம் ;இந்த கடவுள் கணக்கு முடியவே முடியாது .கணக்கெடுக்கும் தருணத்திலேயே புதிதாக செய்துவிடுவார்கள் .

 

 ஆக ,மனிதனைக் கடவுள் சிருஷ்டிக்க வில்லை .மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும் ?

 

இந்த நேரத்தில் நான் அண்மையில் எழுதி ஒரு மலரில் வெளிவந்த கட்டுரை இங்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் ; “கடவுள் கணக்கும் கவலையும் ….” என்ற கட்டுரையைப் பகிர்கிறேன்.

 

கடவுள்கள்கூட எல்லோரும் சமம் அல்ல .கார்ப்பரேட் கடவுள்கள் , வசதியான கடவுள்கள் ,கஞ்சிக்கு வழியில்லாத கடவுள் , புலால் சாப்பிடாத கடவுள் ,புலால் சாப்பிடும் கடவுள் ,தீண்டக்கூடிய கடவுள் ,தீண்டாமை அனுஷ்டிக்கும் கடவுள் ,சீசனுக்கு சீசன் வந்து போகும் கடவுள்சாதிக்கொரு கடவுள் ,கலவரம் செய்யும் கடவுள்சேரிக்கு வர மறுக்கும் கடவுள் இப்படி விதவிதமாய் உண்டு .

 

 ஆனால் எந்தக் கடவுளும் ஏழையை இரட்சித்ததாய் இதுவரை சாட்சிகள் இல்லை .கடவுள்கள் எப்போதும் லஞ்சம் அதுதான் காணிக்கை கொடுக்கும் பணக்கார பக்தர்களுக்கும் , வேஷம் கட்டி மோசடி செய்கின்ற  சாமியார்களுக்குமே எப்போதும்  துணையாக இருக்கின்றன .

 

 இந்தியா முழுவதும் ஆறு லட்சத்து 49 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன . இவற்றில் கிராம தேவதைகள் ,நாட்டார் கோயில்கள் , தெருவோர திடீர் கோயில்கள் அடங்காது .

 

 தமிழ் நாட்டில்தான் அதிகம் கோயில்கள் இருப்பதாக கூறப்படுகிறது . அதாவது சுமார் 79 ஆயிரம் கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளதாக புள்ளிவிவரம் காணப்படுகின்றது . இதில் 38,675 கோயில்கள் மட்டுமே அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் வருகின்றன .

 

 கோவில்கள் இவ்வளவு இருந்தாலும் எல்லா கோயிலும் ஒன்றல்ல . தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால்  அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ரூபாய் 2 லட்சத்துக்கு மேல் பத்து லட்சம் வரை வருமானம் வரும் கோயில்கள்  492  தான் . பத்து லட்சத்துக்கு மேல் வருமானம் வரும் கோயில்கள் 536 மட்டுமே !

 

 ஆக 2.66 விழுக்காடு கோயில்கள் அதாவது 1,028 கோயில்கள் மட்டுமே  வசதி படைத்த சாமிகளைக் கொண்டது . மீதி 97 விழுக்காடு சாமிகள் அதாவது 37,647 கோயில்களில் சாமியின் அன்றாட சோற்றுக்கும் துணிக்கும் விளக்குக்கும் பெரிய கோயில்கள் கொடையாளர்கள் தயவில் அண்டிப் பிழைப்பவைதான் .

 

 சிதம்பரம் போல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வராத கோயில்கள் , சங்கர மடம் ,மேல்மருவத்தூர் ,கோவை ஜக்கி , கல்கி , வேலூர் பொற்கோயில் போன்ற பலவும்  கள்ளப் பணமும் கறுப்புப் பணமும் புரளும் பெரும் நிறுவனங்கள் எந்தக் கட்டுபாடும் அற்ற தனியார் கொள்ளைக் கூடங்கள் .

 

 வந்துபோன அத்திவரதர் கணக்கையே ஊன்றி கவனித்தால் ஆட்டையப் போட்டதே அதிகம் என்பதை அறியலாம்.

 

திருப்பதிதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கார்ப்பரேட் கடவுள் .  வட்டிக்கடைக்கு ஊருக்கு ஊர் கிளை திறப்பதுபோல் திருப்பதி மாநில மாநிலமாய் கிளை திறக்கிறது .அங்கு எல்லா கணக்குமே நாமம்தான் என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள் .

 

 அயோத்தி ராமர் கோயிலை திருப்பதி போல் இன்னொரு மாபெரும் கார்ப்பரேட் கோயிலாக்க சங்கிக்கூட்டம் திட்டமிட்டு வருகின்றது .பெரும் ஊழல் இப்போதே அதை சுற்றி அரங்கேறிவிட்டது .

 

 திருவனந்தபுரம் பத்மனாமசாமிகள் கோயிலுக்குள் சுரங்க அறைகளில் பாதுக்காக்கப்படும் தங்கம் ,வெள்ளி ,வைரம் ,வைடூரியம் எல்லாம் நாட்டுக்கும் மக்களுக்கும் கிஞ்ஞ்சிற்றும் பயனற்று “ பூதம் காத்த புதையலாய்” வீணாக அடைந்து கிடக்கிறது .

 

 இவை இந்து மதக் கணக்கு மட்டுமே . மசூதி ,தர்க்கா ,சர்ச் ,வழிபாட்டிடம் , குருத்துவாரா,புத்த விஹார் ,சமண கோயில் இத்யாதி இத்யாதி கணக்குகள் தனி . ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என்பதே உண்மை .

 

 புதிதுபுதிதாய் தினம் தினம் முளைக்கும் கோயில்கள் ,சர்ச்சுகள் ,மசூதிகள் ,தர்க்காக்கள் ஏராளம் . ஏராளம்.

 

 கோயில் இல்லா ஊரில் குடியிருக்காதே என்று சொன்னார்களாம் முன்பு ; இப்போது கோயிலோ மசூதியோ ,தர்க்காவோ ,தேவலாயமே , பிள்ளையாரோ ,மேரியோ ஏதோ ஒன்று இல்லா தெருவோ ,சந்து ,பொந்தோ இந்தியாவில் இல்லவே இல்லை .இதுபோக வீடு , அலுவலகம் ,அடுக்ககம் , பிய்ந்த குடிசை ,ஓடும் வாகனங்கள் எங்கும் ஏதோ ஒரு கடவுள் ஒட்டிக்கொண்டே இருப்பார் . ஆனால் விமோச்சனம்தான் கண்காணாத் தொலைவில்.

 

 ஏற்கெனவே உள்ள சடங்குகள் ,சம்பிரதாயங்கள் ,மூடநம்பிக்கைகள் போதாது என புதிது புதிதாக தினம் ஏதோ ஒன்றை கதை கட்டி பரப்பியவண்ணம் உள்ளனர் .அதுவும் யூ டியூப்புகளும் இணைய சங்கிகளும் 24X7 மணி நேரம் மூளையைக் கசக்கி பொய்யையும் புனை சுருட்டையும் விற்றுக்கொண்டே இருக்கின்றார்கள் .போலி அறிவியலையும் புனைசுருட்டையும் கலந்து வியாபாரம் கனஜோராய் நடக்கிறது .

 

 இவற்றைச் சுற்றி பெரும் பொருளாதார வட்டம் இயங்குகிறது .இந்த மதநிறுவனங்கள் சார்ந்து ஒரு கொள்ளைக்கூட்டமே பவனி வருகிறது . பல லட்சம் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் இவற்றை சுற்றியே பின்னப்பட்டு உள்ளது .

 

இவற்றைச் சுற்றி அரசியல் இயங்குகிறது .அதிகார மையம் இயங்குகிறது .மூடநம்பிக்கைகளும் அறியாமைகளும் இவற்றைச் சுற்றி கட்டமைக்கப்படுகின்றன . பண்பாடும் தத்துவமும் வாழ்நெறியும் கூட இவற்றை சுற்றியே கட்டமைக்கப் படுவதால் அறிவுக்கும் சமத்துவத்துக்கும் விலங்கிடப்படுகிறது .

 

 அதேசமயம் பள்ளி ,கல்லூரி ,மருத்துவமனை என மக்கள் நலம் சார்ந்த பணிகளுக்கு இவற்றிலிருந்து செலவிடும் தொகை குறுகிய சதவீதமே.

 

 மூளையில் பிணைக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கை விலங்கை உடைப்பது அவ்வளவு எளிதானதல்ல . ஆயின் சமூக சமத்துவத்துக்கான தொடர் போராட்டத்தில்  இவற்றை அம்பலப்படுத்தாமல் கடந்து செல்லவே முடியாது .

 

 செம்பில் களிம்பு சேராமல் சாம்பலால் துலக்கிக் கொண்டே இருப்பது போல் மனித மூளையில் கசடுகள் சேராமல் அறிவியல் துணையோடு கேள்விகள் எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்வேறு வழி இல்லை.

 

செய்வோம் .

 

தொடர்வோம்…

 

சுபொஅ.

24/10/24.

 

 

 

 

 

 

 


0 comments :

Post a Comment