எது ஆன்மீகம் ? [ 15 ]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [ 15 ]

 

ஆன்மீகம் , கடவுள் நம்பிக்கை இவை பற்றிய எல்லா உரையாடலிலும் ஒரு கட்டத்தில் பதிலற்றுப் போய் சொல்வார்கள் ;

“ இது என் நம்பிக்கை இதில் உங்களுக்கென்ன ?”

“ இப்படிச் செய்தால் என் மனம் திருப்தியாக இருக்கிறது . நான் மகிழ்ச்சியோடு இருப்பது உங்களுக்கு பிடிக்க வில்லையா ?”

“ உங்களுக்கு பிடிக்குது பிடிக்காமல் போகுது என் ஆத்மாவுக்குப் பிடித்ததை நான் செய்கிறேன் .அதில் தலையிட வேண்டாம்…”

இவையெல்லாம் மென்மையான கோபங்கள் .இதைவிட மிகவும்  கடுஞ் சொற்களை ஒவ்வொரு பகுத்தறிவாளரும் எதிர்கொண்டாக வேண்டும் .

 

அத்தனையும் எதிர்கொண்டபிறகும் பகுத்தறிவாளராக தொடர்வது பெரும் சவால்தான் . அதிலும் வீட்டுக்குள் பகுத்தறிவாளர் பாடு பெரும் திண்டாட்டமே . கணவன் பகுத்தறிவாளனாக இருப்பின் மனைவியின் கடவுள் நம்பிக்கைக்கு குறுக்கே நிற்கமாட்டார் . ஏனெனில் பகுத்தறிவு பெண்ணுரிமையின் பக்கம் நிற்பது .பகுத்தறிவு கருத்து சுதந்திரத்திற்கு குரல் கொடுப்பது .பகுத்தறிவு ஜனநாயகத்துக்கு போராடுவது .பகுத்தறிவு சமத்துவம் சமூகநீதி பக்கம் வாதாடுவது.

 

இதையே இன்னொருவிதமாக யோசித்துப் பாருங்கள். பெண் பகுத்தறிவாளராகவும் ஆண் ஆன்மீகவாதியாகவும் இருந்தால் அப்பெண் வீட்டில் தன் கருத்தை வாய் திறந்து சொல்லவும் முடியுமோ ? ஆணாதிக்கமும் ஆன்மீக அகங்காரமும் மதபழமைவாதமும் அதனை ஏற்காது அல்லவா ?

 

கணவன் –மனைவி , அப்பா –மகன்/ள் , அண்ணன் -தம்பி ,மாமன் – மச்சான் ,மாமியார் –மருமகள் ,அக்கா –தங்கை என எல்லா உறவுகளிலும் எல்லோரும் ஒரே கருத்தோடு ஒரே குரலில் பேச வேண்டும் என்பதே சர்வாதிகாரம் .ஒவ்வொருவருக்கும் தனித்தனி விருப்பமும் உரிமையும் உண்டு . அதை அங்கீகரிப்பதுதான் குடும்ப ஜனநாயகம் .

 

சரி ! நாம் விவாதத்துக்கு வருவோம் .  “ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் மன திருப்தி தருவதை  ஆத்ம சுகம் தருவதை ஏன் எதிர்க்க வேண்டும் ?”

 

தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் பழக்க வழக்கம் . தற்செயல் நிகழ்வுகள் , பிறந்ததில் இருந்து ஊட்டப்பட்ட நம்பிக்கைகள் இன்ன பிற காரணங்களால் சில செயல்கள் மனத் திருப்தி தரலாம் .அது அவர் விருப்பம் .அவர் தேர்வு . ஆனால் அதையே பிறருக்கு உபதேசிக்கும் போதும் அல்லது நியாயப்படுத்த கட்டுக்கதைகள் சொல்லும் போதுதான் பிரச்சனையாகிறது . விவாதம் செய்ய நேர்கிறது .

 

சிலர் தினசரி காலையில் எழுந்ததும் தங்கள் உள்ளங்கையைப் பார்ப்பார்கள் . அப்போதுதான் அந்த நாள் பிரச்சனை இல்லாத நாளாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை .இதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் கிடையாது .ஆயினும் தனிப்பட்ட ஒருவர் இப்படி இருப்பதால் யாருக்கும் கெடுதி இல்லை .ஆனால் இப்படித்தான் இருக்க வேண்டுமென பிறருக்கு அதனை போதனை செய்தால் கட்டாயப் படுத்தினால் பிரச்சனைதான். கேள்வி கேட்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.

 

சிலருக்கு சில வண்ணங்களை மிகவும் பிடிக்கும் . எந்த போட்டிக்கு நல்ல காரியத்துக்கு போனாலும் அவரை அந்த வண்ண சட்டையில் பார்க்கலாம் .அதே போல் சில வண்ணங்கள் அவருக்கு எரிச்சல் ஊட்டலாம் .பிடிக்காமல் இருக்கலாம் . இது தனிப்பட்ட ரசனை சார்ந்தது . அதற்கும் மேல் இதுதான் எனக்கு ராசியான நிறம் என்றுகூட ஒருவர் ஒன்றை நம்பலாம் .பின்பற்றலாம் . அதனால் நமக்கென்ன நட்டம் ? ஒன்றுமில்லை . ஆயின் அவர் தன் நம்பிக்கையை ரசனையை வீட்டில் உள்ளோர் எல்லோர் தலையிலும் திணிக்கும் போதோ , பொது வெளியில் வெறுப்பை உமிழும் போதோதான் பிரச்சனை ஆகிறது . அதற்கும் மேல் அந்த நிறத்துக்கு ஓர் ஆன்மீக சாயம் பூசும் போது நிச்சயம் விமர்சனத்தை எதிர்கொள்வது தவிர்க்க இயலாதது .

 

ஆடி மாதம் நான் புலால் சாப்பிடமாட்டேன் என ஒருவர் சொல்வதும் அப்படியே இருப்பதும் அவர் உரிமை .அதனால் நமக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை .ஆனால் புலால் சாப்பிடுவது ஓர் அசுத்தமான கீழான பண்பாடு என்கிற மாதிரி பேச்சும் செயலும் மாறும் போது அது பிழையாகிறது . கடவுளுக்கு சைவ உணவுதான் பிடிக்கும் அசைவம் எனில் வெறுப்பார் என்பது போன்ற பிரச்சாரம் பெரும்பகுதி மக்களின் உணவு பழக்கம் மீது தொடுக்கும் வன்மமான தாக்குதலே .அதனை விமர்சிக்க எதிர்க்க பிறருக்கு உரிமை உண்டு .

 

கடவுளை ,மதத்தை நம்பவும் வழிபடவும் உனக்கு உரிமை உண்டு .அதே போல் கடவுள் இல்லை என்ற உண்மையை ,மதம் ஓர் அபினி  உண்மையை என்ற சொல்லவும் பகுத்தறிவாளருக்கும் உரிமை உண்டு . உண்மையைச் சொன்னால் உங்கள் மனம் புண்படும் எனின் கோளாறு உங்களிடம்தான்.

 

சனாதம் எனில் நிரந்தரமான உண்மை ; மாறா உண்மை என ஒருவர் சொன்னார் . அப்படி மாறாத உண்மை என ஒன்று இல்லவே இல்லை .நீ காண்கிற இந்த பிரபஞ்சம் கூட நேற்று இருந்தது போல் இன்று இல்லை .இன்று இருப்பதுபோல் நாளை இருக்காது .மாறிக்கொண்டேதான் இருக்கும். மாறாத உண்மை ,மாறாத விழுமியம் ,மாறாத அறம் என்பதுகூட இல்லைதான் . ஆண் பெண் உறவுகூட யுகந்தோறும் எவ்வளவு மாறுதல்களைக் கடந்து வந்திருக்கிறது .இன்னும் எவ்வளவோ மாறுதல்களைச் சந்திக்க இருக்கிறது .நேற்றைய அளவுகோல் இன்றைக்குப் பொருந்தாது .இன்றைய அளவுகோல் நாளைக்கு பொருந்தாமல் போகும்தானே ! சனாதனம் என்பது கால வெள்ளத்தில் காணாமல் போய்க்கொண்டிருக்கிற ஒன்றே !

 

ஆன்மிகம் என்பது , ‘சுயத்தில் ஒடுங்கி பரமாத்மாவில் ஐக்கியமாகு’ என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலம்தானே தவிர யதார்த்தம் அல்ல. நடைமுறை சாத்தியமும் அல்ல.

 

எந்தவொரு மனிதரும் தனிமனிதராக மட்டுமே வாழ்ந்து முடிய முடியாது . அவர் உண்ண உடுத்த இருக்க வாழ ஒவ்வொரு நொடியும் சமூகத்தின் உழைப்பும் பங்களிப்பும் தேவை . ஆயிரக்கணக்கானோரின் வியர்வையிலும் உழைப்பிலும்தான் ஒவ்வொருவரும் வாழ்ந்தாக வேண்டும் . தாய் தந்தை பெற்றிருக்கலாம். ஆயினும் அந்த தாய் தந்தையும் சமூக உழைப்பின்றி வளர்ந்திருக்க முடியுமா . “ நான் பயாலஜிக்கல் குழந்தை இல்லை . அப்பா அம்மாவுக்கு பிறந்த குழந்தை இல்லை .தெய்வக் குழந்தை ..” என ஒருவர் நாட்டை ஏமாற்றலாம் .அது உண்மைஆகாது .

 

ஒருத்தர்  அனுபவிக்கும் ஒவ்வொன்றிலும் இரண்டறக் கலந்திருக்கும் வியர்வை ஒரே மதத்தவருடையதா ? ஒரே சாதியினருடையதா ? ஒரே இனத்தவருடையதா ? இல்லை.இல்லவே இல்லை .அனைத்து சாதி ,மத,இன உழைப்பிலும் இரத்தத்திலும்தான் ஒவ்வொரு தனிமனிதர் உயிர்துடிப்பும் அடங்கி இருக்கிறது .

 

இன்னும் ஏன் ? சுவாசிக்கிற காற்றை நீ மட்டுமா சுவாசிக்கிறாய் ? அந்தக் காற்று கடந்து வந்த பாதை ஒரு சாதிக்கு ஒரு மதத்துக்கு ஒரு இனத்துக்கு மட்டுமே உரியதா ? காற்று வரும் வழியெங்கும் நந்தவனம் மட்டுமா நிரம்பி இருக்கும் ? இல்லையே ! வயல் ,ஆலை ,மலர்வனம் ,மலக்குழி , காய்கனி , மாமிசம் ,மீன் ,இன்னும் என்னென்னவோ ? சுத்தமான ஒரு சாதிக் காற்றை, ஒரு மதக் காற்றை, சுத்தமான சைவக் காற்றை, உன்னால் சுவாசிக்க முடியுமா ?

 

ஆயினும் இன்றைக்கு மதம் ,சாதி என்று கூக்குரலிடுவதை என்றைக்கேனும் ஆன்மீகம் கண்டித்ததுண்டா ? அப்படிக் கண்டித்தால்  அந்த ஆன்மீகவாதிகளோடு நமக்கென்ன பகை ?

 

ஒவ்வொரு மனிதனும் தனி மனிதனாய் ,குடும்ப மனிதனாய் , ஊர் மனிதனாய், நாட்டு மனிதனாய் , உலக மனிதனாய்  ஒரே நேரத்தில் வாழ்ந்தாக வேண்டும் . Human beings are social beings who cannot live alone or in isolation . மனிதன் என்பவனே சமூக மனிதன்தான்.அவனால் தனித்தோ ஒற்றையாகவோ வாழ்ந்துவிட முடியாது .

 

ஆன்மீகம்வாதிகள் சுட்டுவது போல் ஆமைபோல் ஓட்டுக்குள் சுருங்கி வாழவேமுடியாது . நான் இப்படித்தான் இருப்பேன் .எனக்கு இதுதான் பிடிக்கிறது என்பது சரிதான் ; ஆயின் சமூகத்தை உதறிவிட்டு யாராலும் வாழ முடியாது .ஆகவே சமூகம்தான் தனிமனிதரைவிட உயர்ந்தது .சமூக மனிதராய் வாழ சகிப்புத்தன்மையும் எதிர்த்து கேள்விகேட்கும் போராடும் குணமும் தேவை .தவிர்க்க முடியாதது . எதிர்மறைகளின் போராட்டமும் ஒற்றுமையும்தான் வாழ்வும் பயணமும்.

 

மார்க்சியம் இதைத்தான் தெளிவாகச் சொல்கிறது .

 

கருத்து என்பது மனிதமனத்தில் பிரதிபலித்து சிந்தனையின்  வடிவங் களாக உருவம் பெறும் பொருளாயத உலகமே தவிர வேறல்ல.

சிந்தனை உணர்வு என்பவை உண்மையில் என்ன என்று கேள்வி கேட்டுக்கொள்வோமானால் மனித மூளையின் விளைவுகளே என்பதும்  இயற்கையின் அதன் சூழலின் உள்ளும் உடனும் வளர்ந்திருக்கிற ஓர் விளைவே என்பதும் தெளிவாகத் தெரியும் .

வாழ்நிலையிலிருந்து உணர்வு தோன்றுகிறதே அன்றி உணர்விலிருந்து வாழ்நிலை தோன்றுவதில்லை .

 

அப்படியாயின் துறவிகள் , மகான்கள் எல்லாம் இந்த சமூகத்தில் தோன்றியவர்கள்தாமே அவர்களின் அனுபவத் தெறிப்பை உதாசீனம் செய்ய இயலுமா ?

 

அடுத்து பார்ப்போம் .

 

தொடர்வோம்.

 

சுபொஅ.

 

 

 

 

 

 

 

 

0 comments :

Post a Comment