எது ஆன்மீகம் ? [ 10 ]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [ 10 ]

 

நேற்றைய என் கட்டுரையில் பின்னோட்டமிட்ட ஒரு நண்பர் கோவையில் கொரானாவுக்கு கோயில் கட்டியதை குறிப்பிட்டுள்ளார் . கொரானாவுக்கும் கோயில் கட்டுவர் ,நடிகை குஷ்புவுக்கும் கோயில் கட்டுவர் .இதிலிருந்தே கோவில்களின் ஜாதகத்தைத் தேடினால் அறியாமை மட்டுமே வெளிப்படும் என்பது புலனாகவில்லையா ? தமிழில் பிளேக் நோய் குறித்த அந்தாதிப் பதிவுகளை எல்லாம் சுட்டிக் காட்டுகிறார் இன்னொரு நண்பர் .

 

அது மட்டுமா ? நேற்று [04/11/24] இன்னொரு செய்தி ஒரு கோயிலில் ஏசி [ AC] சாதனத்திலிருந்து வடிந்த தண்ணீரை தீர்த்தம் என பக்தர்கள் கொண்டாடியதை பார்த்தோம் ! என் வாதத்துக்கு அவை வலு சேர்க்கின்றன . அது ஒரு புறம் இருக்கட்டும் .

 

உனக்கு மனசுன்னு ஒண்ணு இருக்குதா? இல்லையா?”

மனமென ஒன்று உண்டா?”

பார்வைக்கு இரண்டு கேள்விகளும் ஒன்றுபோல் தோன்றினும் ஒன்றல்ல.

 

முதல் கேள்வி வழக்கமாய் நம்மிடையே நடக்கும் உரை யாடலில் இடம்பெறுவது. எதிரே இருப்பவரின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் தன்மையுடையது.

 

இரண்டாவது கேள்வி அறிவியல் சார்ந்த வினா. இதற்கான விடை தேடல் தத்துவ உலகிற்கு நம்மை இட்டுச்செல்லும்.

 

 மனச்சாட்சியின் படி நடந்து கொள்வேன்எனஉறுதிமொழி ஏற்பதும்; ‘மனச்சாட்சி உறுத்தவில்லையா?’என குற்றம்சாட்டுவதும் இயல்பாக நடக்கிற ஒன்று.

 

திடீரெனமனம் என ஒன்று இல்லைஎன்று யாராவதுசொன்னால் ஏற்க இயலுமா உங்களால் .

 

சரி ! வேறு விதமாகச் சொன்னால் நம் உடலில் ஒவ்வொரு ஒரு உறுப்புக்கும் ஒரு தனித்த வேலை இருக்கும் ?  ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு உறுப்பு பொறுப்பாய் இருக்கும் .

உடலில் பொதுவாய் எந்தப் பணியுமின்றி இருக்கும் உறுப்புகள் இல்லை என்றே சொல்லலாம் .

 

எதனால் நீ பார்க்கிறாய் எனக் கேட்டால் ; கண்கள் என உடனே  நாம் சொல்லிவிடுவோம் அல்லவா ?

அதே கேள்வியை ஒரு கண் மருத்துவரிடம் கேட்டால்  ,அவர் கண்களின் படம் வரைந்து அதன் அமைப்பை - அது செயல்படும் விதத்தை - பார்வைக் கோளாறுகள் ஏன் ஏற்படுகிறது என்பதை எல்லாம் விவரித்துவிடுவார் .

 

எதனால் நீ கேட்கிறாய் எனக் கேட்டால் ; காதுகள் என உடனே நாம் சொல்லி விடுவோம் அல்லவா ?

அதே கேள்வியை ஒரு காது தொண்டை மூக்கு [ ENT ] மருத்துவரிடம் கேட்டால் அவர் காதுகளின் படம் வரைந்து அதன் அமைப்பைஅது செயல்படும் விதத்தைகாது கேளாமையை சரி செய்யும் வழியை நமக்கு தெளிவாகச் சொல்லிவிடுவார் .

 

மனம் , ஆத்மா எங்கே இருக்கிறது எனக் கேட்டால் நீங்கள் எந்த உறுப்பைக் காட்டுவீர்கள் ? உடனே நெஞ்சில் கைவைத்து இதயத்தைக் காட்டுவீர்கள் .

அப்படியானால் இதயத்தை படம் வரைந்து அதன் அமைப்புகளைச் சுட்டும் போது ஆன்மா ,மனம் எங்கே இருக்கிறது எனக் காட்ட முடியுமா ? எந்த மருத்துவரும் அப்படிச் செய்யவே முடியாது .மனம் உணர்ச்சி வசப்பட்டால் இதயம் வேகமாகத் துடிக்கலாம் .ஆனால் இதயத்தில் மனம் இல்லை .மனோவியாதி உளவியல் சிக்கல் உள்ளோருக்கு  மருத்துவர்கள் சிகிட்சை அளிப்பது மூளைக்குத்தானே ! அப்படியாயின் மூளையும் மனமும் ஒன்றா ? இக்கேள்வி மிகப் பெரியது .பதில் சொல்ல பல அடிப்படைகளை நாம் தெரிந்தாக வேண்டும்.

 

சிந்தனைச் சிற்பி தோழர் .சிங்காரவேலர் குறிப்பிடுவார் ,” கடவுள் , ஆன்மா , நரகம் ,மோட்சம் முதலியன மாயை சொற்கள் . மனிதனின் சொல்லின் திறமையால் உண்டானவைகளே ஒழிய ,கண்ணால் பார்த்த பொருளல்ல .மற்ற இந்திரியங்களாலும் நம் அனுபவத்தினாலும் வந்தவை களல்ல .

 

பேசும் சக்தி மனிதனுக்கு வந்திராவிடில் ,இந்த சொற்கள் உலகில் தோன்றி இருக்காது .மனிதனுக்கு முன்பாக ,பலகோடி வருஷங்களுக்கு முன்பாக,பலகோடி வருஷங்களுக்கு முந்தி உலகில் தோன்றிய சீவன்கள் எதற்கும் ,இந்த மாயைச் சொற்கள் கிடையாது.”

 

மேலும் அவர் சொல்கிறார் , “ உலகில் உள்ள மாயாஜாலம் முழுமையும் சொற்களின் மாயாஜாலம் என அறிக . The magie of words is enormous. சொல்லால் மயங்கும் மக்கள் கோடானுகோடி ,சொல்லால் விளையும் மாயைகளைப் போக்குவதற்கே மொழி சீர்திருத்தங்கள் [ Language reform ] ஆரம்பித்தல் அவசியமாகும் .”

 

நாம் மொழிச் சீர்திருத்தம் குறித்து பேச இக்கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கவில்லை ஆதலால் சொற்களால் எப்படி ஏமாற்றப்படுகிறோம் என்பதை சுட்டவே மேலே உள்ள மேற்கோளைச் சொன்னோம் . நிற்க .

 

ஆயினும்கார்ப்பரேட் குருஜிகளின் பேச்சை கேட்டால் ஒரு வித போதை ஏறும் , ஆங்கிலம் , சமஸ்கிருத ஸ்லோகம் , கொஞ்சம் போலி அறிவியல் , குட்டிக்கதைகள் , வாழ்க்கைத் துயர்கள் எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கலந்து மூடத்தனங்களை நம் மூளையில் திணிப்பதில் அவர்கள் வல்லுநர்கள். மனோவசியம் [HYPNOTISM ] ஹிப்பனாட்டிசம் செய்து விடுகிறார்கள் என சொல்லலாமோ ?

 

ஆக ,மனதை ஒருவர் ஈர்த்தார் எனில் மனம் என ஒன்று இருக்கும்தானே என சாதாரண மக்கள் கேட்டுவிடுவார்கள் இல்லையா ?

 

 

அதுவும் சாதாரண மக்கள் தங்கள் மனச் சாட்சிக்கு மிகவும் பயப்படு கிறவர்கள் . அவர்களிடம் போய் மனம் என ஒன்றில்லை . மூளைதான் எல்லாம் என்று சொன்னால் அவர்களால் ஏற்க முடியுமா ? புரிய முடியுமோ ?கடவுள் மறுப்பாளர்கள் கூட  மனச்சான்றின் படி உளச் சான்றின்படி என்றுதானே உறுதி மொழி ஏற்கிறார்கள் .

 

 

இப்படி முடிவற்ற கேள்விகளை எழுப்பலாம் .

 

மனம் vs அறிவு என வாதத்தை நீட்டலாம் .

 

அது மிகவும் ஆழமான உரையாடலாகப் போகும் .

 

வெறுமே 1300 கிராம் தான் மூளையின் அதிகபட்ச எடை .நம் உடல் முழுக்கவும் தன் கட்ட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலைமைச் செயலகம் மூளைதான்.

 

அண்மையில் THE CONVERSATION இதழில் 2013 ல் வெளிவந்த ஒரு கட்டுரையை தற்செயலாக வாசிக்க நேர்ந்தது .அதில் மூளையையும் மனதையும் குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது தெரியுமா ?

 

 

  “The brain and the mind are two sides of the same coin. We have always wanted to understand how our minds work but, until recently, lacked the tools to investigate the brain.”

 

 “மூளையும் மனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். நம் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் எப்போதும் புரிந்து கொள்ள விரும்புகிறோம், ஆனால் சமீப காலம் வரை, மூளையை ஆராய்வதற்கான கருவிகள் இல்லை.”

 

 

 மூளை என்ற ஜெல்லி போன்ற திசு அறியப்பட்ட பிரபஞ்சத்தில் மிகவும் சிக்கலான பொருள். அதன் 100 பில்லியன் நரம்பு செல்கள், ஒவ்வொன்றும் திகைப்பூட்டும் சிக்கலான வலைப்பின்னலில் ஆயிரக்கணக்கான பிற நரம்பு செல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.”

 

இந்த நூறுகோடி நரம்பு செல்கள் மூலமே நம் சிந்தனை ,செயல் ,கனவு ,நனவு ,விழிப்புணர்வு , தூக்கம் , நம் உடல் இயக்கம் ,கோபம் ,மகிழ்ச்சி , கருணை ,வெறுப்பு ,பாசம் ,நியாயம் ,அநியாயம் ,பக்தி , பகுத்தறிவு ,தர்க்கம் ,படைப்புத்திறன் , மூடநம்பிக்கை ,ஞாபக சக்தி இன்னபிற  என ஒவ்வொன்றையும் மூளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பது ஆச்சரியமான ஒன்று . மூளை பற்றிய ஆராய்ச்சி அறிவியல் துறையில் வியக்க வைக்கிறது .

 

அதே வேளை மனம் பற்றியும் விவாதம் தொடர்கிறது

 

தொடர்வோம் .இப்போது  இடைவேளை

 

சுபொஅ.

04/11/24.

 

 

 

 

 

0 comments :

Post a Comment