எது ஆன்மீகம் ? [13 ]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [ 13 ]

 

நவீன கார்ப்பரேட் குருஜிகள் பழைய கள்ளை புதிய மொந்தையில் விற்பதில் மகா கில்லாடிகள்.அதிலும் ஆத்மா குறித்த உருட்டல்களில் கைதேர்ந்தவர்கள் . ஆத்மா குறித்து  சத்குரு ஜக்கிவசுதேவ் சொல்லும் ஒரு குட்டிக்கதையை அவர் மொழியிலேயே பார்ப்போம் ; அது உபநிஷத் கதைதான்.

 

யோக பாரம்பரியம், 'ஸ்வேதகேது' என்ற மாணவனைப் பற்றி மிகப் பெருமையுடன் குறிப்பிடுகிறது.

 

ஸ்வேதகேது தன்னுடைய 12வது வயதில் ஒரு குருவிடம் அனுப்பப்பட்டான். வேதங்கள், உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரங்கள் முதலியவற்றை அவன் முழுமையாகக் கற்றுக்கொண்டான். வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கையாளப் போதுமானவற்றை அவன் கற்றுக்கொண்டதாகச் சொல்லி, குரு வழியனுப்பி வைத்தார்.

 

ஸ்வேதகேது வீடு திரும்பினான். அவனைப் பார்த்ததும், 'இப்படி முட்டாளாகத் திரும்பி வந்திருக்கிறாயே?' என்று அவனுடைய தந்தை முகம் சுழித்தார். ஸ்வேதகேது அதிர்ந்தான். 'இல்லை அப்பா, கற்கக்கூடியது அனைத்தையும் கற்றுவிட்டதாக குரு சொன்னாரே'.

 

'சொல்லித்தரக்கூடியது எல்லாவற்றையும் நீ கற்றறிந்துவிட்டாய், மறுக்கவில்லை. ஆனால் உனக்குள் இருக்கும் ஞானத்தின் மூலத்தை நீ அறியவில்லை என்பது உன் நடையைப் பார்த்தாலே புலப்படுகிறது' என்றார் அவன் தந்தை.

 

[ மேலே உள்ளவை ஜக்கி சொன்னது .ஸ்வேதகேதுவின் அப்பா பெயரைச் சொல்லாமல் விட்டுவிட்டார் . அவர் பெயர் உத்தாலகர் .அவர்தான்  இந்திய பகுத்தறிவு வாதத்தின் மூலவர் . அவர் வேதக் கல்வியின் போதாமையை இடித்துரைக்கவே மகனிடம் கேட்டார் . ஜக்கி தன் வாதத்துக்கு ஏற்ப திருத்தி கதை சொல்கிறார்.]

 

ஸ்வேதகேது கோபம் கொள்ளவில்லை. குருவிடம் திரும்பப் போனான். தந்தை சொன்னதைச் சொன்னான்.

 

', அதை அறியவேண்டுமா? ஆசிரமத்தில் இருக்கும் இந்த 400 மாடுகளைக் காட்டுக்குள் ஓட்டிப் போ. அவை பெருகி ஆயிரமானதும், திரும்பி வா. அதுவரை வேறு எதைப் பற்றியும் கவலைப்படாதே' என்றார் குரு.

 

 “ஆன்மீக வளர்ச்சிக்கு மூடத்தனமான பக்தியோ, குருட்டுத்தனமான நம்பிக்கையோ அவசியம் இல்லை.”

 

'என்னது... முற்றும் படித்தவனை மாடு மேய்க்கச் சொல்கிறீர்களா?' என்று ஸ்வேதகேது ஆத்திரப்படவில்லை. குருவின் சொல்லைத்தட்டாமல், அங்கிருந்த மாடுகளைக் காட்டுக்குள் ஓட்டிப் போனான்.

 

மாடுகளைப் பராமரிப்பதைத் தவிர வேறுஎதிலும் அவன் சிந்தனை போகாமல் இருக்கச் சில மாதங்கள் ஆயின. பசித்தால் சாப்பிடுவான். மற்றநேரம் அமைதியாக அமர்ந்து இருப்பான். ஒரு கட்டத்தில் மாடுகள், அவற்றின் பராமரிப்பு இவை பற்றிய சிந்தனைகளும் அற்றுப்போயின. பசுவுடன் இருந்தால் பசுபோல் இருந்தான். மரத்தின் அருகில் இருந்தால், மரத்துடன் ஐக்கியமானவனாக உணர்ந்தான்.

 

அவன் கற்றறிந்த வேதங்கள், உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரங்கள் எல்லாவற்றையும் மனம் மறந்தது. மொழி, எண்ணிக்கை எல்லாவற்றையும் கடந்த நிலையில் அவன் வாழ்ந்து வந்தான். பசுக்களுடன் புழங்கிப் புழங்கி அவற்றின் மொழிகூட அவனுக்குப் பழக்கமாகிவிட்டது. அவனுடைய கண்கள்கூட உருமாறி பசுக்களின் கண்களைப்போல் ஆகிவிட்டன.

 

சில ஆண்டுகள் ஆயின. ஒரு பசு அவன் முன்வந்து நின்றது.

 

'ஸ்வேதகேது, உன் குருவிடம் நீ திரும்பிப்போகும் நேரம் வந்துவிட்டது' என்றது.

 

ஸ்வேதகேது அப்போதும் எதுவும் சொல்லவில்லை. மாடுகளுடன் அவைபோன திசையில் நடந்தான். அவை ஆசிரமத்தில் போய் நின்றன. அங்கு இருந்த சீடர்கள் ஆவலுடன் மாடுகளை எண்ணினர்.

 

'குருவே, எண்ணிக்கை சரியாக ஆயிரத்தை எட்டிவிட்டது' என்றனர்.

 

'இல்லை, ஆயிரத்தொன்று' என்று திருத்தினார் குரு. 'ஸ்வேதகேதுவும் இப்போது பசுக்களுடன் ஒன்றி ஒரு பசுபோல் ஆகிவிட்டான். அவனுடைய அடையாளங்களைத் தொலைத்துவிட்டு, உயிரின் இருப்பாக முழுமையாக மாறிவிட்டான். இதுதான் ஞானத்தின் உன்னத நிலை' என்று நெகிழ்ந்தார் குரு.

 

படிப்பு அறிவில் மிகத் தேர்ந்தவனாக இருந்த ஓர் அறிஞன்கூடத் தன் குரு சொன்னதற்காக, மாடுகளை மேய்க்கப் போனான். அது அவனை இன்னமும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்றது என்பதற்காக சொல்லப்படும் நிகழ்வு இது.

 

ஆன்மீகத்தின் அடிப்படையே முழுமையான நம்பிக்கையும் அர்ப்பணிப்பும்தான்.  

[இதே ஜக்கி இதே கதையில் முன்பகுதியில் என்ன சொன்னார் ? “ஆன்மீக வளர்ச்சிக்கு மூடத்தனமான பக்தியோ, குருட்டுத்தனமான நம்பிக்கையோ அவசியம் இல்லை.” இப்படி மாறி மாறி குழப்புவதுதான் ஆன்மீக ஸ்டைல் ]

 அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாம். நல்வாய்ப்பும் ஆழ்ந்த ஞானமும் கொண்ட இந்தத் தேசத்தில் சில பொறுப்பற்ற மனிதர்களின் தவறான நடவடிக்கைகளால் மக்களின் நம்பிக்கை குலைந்து சிதறிவிடுகிறது.

 

இப்படிச் சொன்ன சத்குரு ஜக்கி வசுதேவின் கடைசி வரி அவருக்கே பொருந்திப்போவது தற்செயலா ? அது இருக்கட்டும்

 

இந்தக் கதை சொல்லும் செய்தி என்ன ? “உணர்ச்சிகளை சிந்தனையை முழுதாய் இழந்து நடைபிணமாக உலவுவதுதான் ஆன்மீகத்தின் இறுதி இலக்கோ? பல பைத்தியக்காரர்கள் அப்படித்தானே உள்ளனர் .அப்படியாயின் அவர்கள் ஆன்ம லயத்தில் இருப்பவரா ?

 

உத்தாலகர் மகனிடம் கற்கச் சொன்னது இதுவல்ல ; அவர் கற்கச் சொன்னது உழைப்பின் வலியை சுற்றியுள்ள மானுட இனத்தை நேசிக்க . ஆனால் ஜக்கி கோயில் மாடாய் சுற்றச் சொல்கிறாரோ ? மானுடத்தை உழைப்பை நேசித்தால் கார்ப்பரேட் குருஜிகளின் பிஸினெஸ் படுத்துவிடுமே !

 

கலீல் ஜிப்ரானின் குட்டிக்கதை வேறுவிதமாய் பேசும் 

 யாரும் வராத இந்த வயலில் தனியாக நின்றுகொண்டிருப்பது உனக்குச் சிரமமாக இல்லையா" என்று வெயிலில் நின்றுகொண்டிருக்கும் சோளக்கொல்லை பொம்மையைப் பார்த்து கேட்டேன்.

 இன்னொருவரை அச்சுறுத்துவதென்பது ஆழமான மகிழ்ச்சியை அளிப்பது; அது நீடித்திருக்கவும் கூடியது. அதனால் எனக்கு சலிப்பே வரப்போவதில்லை” என்று சோளக்கொல்லை  பொம்மை கூறியது.

ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு, ஆமாம் உண்மைதான். அந்த மகிழ்ச்சியை நானும் அறிவேன்.” என்றேன்.

வைக்கோலால் திணித்த உடலைக் கொண்டவர்களால்தான் அந்த உண்மையான மகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்" என்று சோளக்கொல்லை பொம்மை பதில் அளித்தது.

 

சோளக்கொல்லை பொம்மை இந்தப் பதிலால் என்னைப் பெருமைப்படுத்தியதா, சிறுமைப்படுத்தியதா என்று புரியாமல் அதைவிட்டு நீங்கினேன்.

 

ஒரு ஆண்டு கழிந்தது. சோளக்கொல்லை பொம்மை அதற்குள் தத்துவஞானியாகிவிட்டது. நான் அப்போது அதைக் கடந்து போனபோது சோளக்கொல்லை பொம்மையின் தொப்பிக்குக் கீழே இரண்டு காகங்கள் கூடுகட்டத் தொடங்கியிருந்தன.

 

சோளக்கொல்லை பொம்மை போல் எதைப் பற்றியும் கவலையில்லாமல் ; யார் கைப் பொம்மை என்கிற புரிதலுமின்றி வெறும் வைக்கோல் திணித்த மனிதனாய் நீ இருப்பதுதான் ஆன்மீகமா ? அல்லது அடுத்தவர் துன்ப துயரங்களை காதுகொடுத்து கேட்பதும் அவர்களுக்கு ஆதரவாய் நிற்பதுமே மானுடத் தன்மையாகும் . இதைத்தான் கலீல் ஜிப்ரான் சொல்கிறார்.

 

தன் ஆத்ம சுகம் ,ஆத்மாவில் லயித்து கிடப்பது என்றெல்லாம் சொற்சிலம்பம் ஆடுகிறவர்கள் அடுத்தவரையும் சக ஆத்மாவாக மதிக்கிறார்களா ? அவர்களின் துன்ப துயரங்களில் பங்கேற்கிறார்களா ? படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்கிற பழமொழியே இவர்களுக்காக உருவானதுதானோ ?

நான் கண்ணை மூடிக்கொண்டு ஆன்மீகவாதிகள் எல்லாம் போலிகள் ; பகுத்தறிவாளர்களெல்லாம் நேர்மையானவர்கள் என்று குற்றப்பத்திரிகை வாசிக்க மாட்டேன் . மனிதம் மிக்க நல்லவர்களும் இரு பக்கமும் உண்டு .சுயநலப் புழுக்களும் இரண்டு பக்கமும் உண்டு . அதனை இன்னொரு அத்தியாயத்தில் பேசுவோம்.

ஆனால் ஆன்மிகம் வார்க்க நினைக்கிற மனிதன் எப்படிப்பட்டவன் ? இக்கேள்விக்கும் பட்டென்று பதில் சொல்லிவிட முடியாது . ஆன்மீகம் என்ற போர்வையில் மதவாதிகள் சொல்வதற்கும் , எல்லையற்ற அன்பில் மூழ்கித் திழைத்து ஆன்மீகம் பேசுகிற விதி விலக்கானவர்களுக்கும் வித்தியாசம் உண்டு .பேசுவோம்.

மானுடத்தன்மையைக் கொல்வதுதான் ஆன்மீகமா ? பகவத் கீதையில்  “ஸ்திதப்பிரஞ்ஞன்” பற்றிய வாதம் என்ன சொல்கிறது ?

 

தொடர்வோம்…

 

சுபொஅ.

 

 

 

 

0 comments :

Post a Comment