எது ஆன்மீகம் ?[8]

Posted by அகத்தீ Labels:

 

 து ஆன்மீகம் [8]

 

ஒருவர் இறைவனை நோக்கி தவம் இருந்தார் .இறைவனும் நேரில் வந்து அவர் தவத்தை மெச்சி ,” உனக்கு என்ன வரம் வேண்டும் ?” என்று கேட்டார்.

 

அவர் , “ எனக்கு சாவே வரக்கூடாது” என வரங்கேட்டார்.

 

இறைவனும் ,”தந்தேன்.” என்றார் .

 

மகிழ்ந்தவர் , எல்லாம்  ‘டீக்கரம்’ வாங்கன்னு கூவினார் . ஒருவருக்கும் விளங்கவில்லை . வந்தவர்கள் விழிக்க , ஏன் எல்லோரும் ‘டாணி’ மாதிரிவிழிக்கீங்க என இவர் கேட்க ஒரே சிரிப்பு .அப்போது அவர் மனைவியும் அங்கு வந்தார் .அவர் பெயர் சகுந்தலா . சந்தோஷத்தோடு “ வா ‘டகுந்தலா’ !” என அழைக்க எல்லோரும் சிரித்தனர் . மனைவி என் பெயர் சகுந்தலா என திருத்த அவர் ‘டகுந்தலா’ என மீண்டும் சொல்ல குழப்பமானது .

 

 ‘சா’வே வரக்கூடாது என கேட்டதற்கு இறைவன் கொடுத்தவரம்; பேச்சில் ச ,சா, சி,சீ… மெய்யெழுத்தும் உயிர்மெய் எழுத்தும் வராமல் இருக்க வரம் கொடுத்துவிட்டாராம் .

 

இறைவனே நினைத்தாலும் சாவைத் தவிர்க்க முடியாது என்பது செய்தி .

 

“ யதா ஸர்வே ப்ரபித்யந்தே ஹ்ருதயஸ்யேஹ க்ரந்தய :

அத மர்த்யோசம்ருதோ பவதி ஏதாவத்யனு சாஸ்னம் .”

 

 “ மனதின் எல்லா முடிச்சுகளும் அவிழும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான் .” உபதேசம் இவ்வளவுதான் .

 

 என்ன தோழரே ! ஊரடங்கில் ஒரு மாதிரி ஆகிட்டீங்கன்னு நீங்க கேட்கலாம் . ஆனால் இது நேற்று ஒரு நண்பர் என்னை உசுப்பியதின் எதிர்வினை .[ இது கொராணா காலத்தில் நடந்தது .]

 

ஆம் .எம் பள்ளி கால நண்பர் .சுசீந்திரத்திலிருந்து அழைத்தார் . “ என்ன நண்பா ! உன் அலமாரி முழுவதும் கம்யூனிச புத்த்தகங்கள் மட்டும்தான் இருக்குமா ? ஆன்மீகம் மருந்துக்கும் இருக்காதா ?” எனக் கேட்டார் .

 

நான் அவருக்குச் சொன்னேன் . “ நண்பா ! பகவத் கீதை ,குரான்  எல்லாம் இருக்கிறது .பைபிள்  பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் இணைந்தது .இருந்தது .வீடு மாறும் போது தவறிவிட்டது .யாரேனும் நன்கொடையாத் தரலாமே !

 

நான் எந்த நூலாயினும் ஆன்மீக  ,ஜோதிடம் ,மந்திரம் ,பலான புத்தகம்   என எது கிடைத்தாலும்  ஒதுக்காமல் வாசிப்பவன் . கம்யூனிஸ்ட்டுகள் எதையும் ஒதுக்காமல் வாசித்து உண்மை ,பொய் அறிபவரே .

 

சரி ! நண்பர் கேட்டுவிட்டார் ! அதுவும் பால்ய நண்பர் . எனவே  ,

 

கட உபநிஷதம் “  மரணத்துக்கு பின்னால் எனும் உபதலைப்போடு 190  பக்கங்களில்  சுவாமி ஆசுதோஷானந்தர் விளக்கதோடு ,ஸ்ரீ ராமகிருஷ்ன மடம் வெளியீட்ட நூலை முன்வைத்துப் பேசப்போகிறேன்.

 

கதைச் சுருக்கம் : வாஸசிரவஸ் எனும் பிராமணர் ஒருவர் விசுவஜித் என்கிற ஒரு யாகத்தைச் செய்தார் . அந்த யாக முடியில் தான் விரும்பிய அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்பது விதி . ஆனால் அவரோ வறண்ட நிலம் ,பால்வற்றிய மாடு போன்ற தனக்கு பயனற்றவற்றையே தானம் செய்தார் .

 

இதைக் கண்ட அவர் மகன் நசிகேதன் வருந்தினான் .இப்படி பயனற்றவைகளை தானம் செய்தால் நரகம் கிட்டுமே என கலங்கினான் . தந்தை தனக்குப் பிரியமானதை தானம் செய்ய வலியுறுத்த எண்ணி , “ தந்தையே ! என்னை யாருக்குத் தானம் செய்யப் போகிறீர்கள் ?” எனக் கேட்டான் . கோவம் கொண்ட தந்தை , “ உன்னை எமனுக்குக் கொடுக்கப் போகிறேன் .”என்றார் .

 

தந்தை ஆத்திரத்தில் சொன்னாலும் சொன்னதுதான் .அதுதான் யாகவிதி .

 

தந்தை கண்ணீர் உகுக்க நசிகேதன் எமனுலகம் புறப்பட்டான் .

 

நசிகேதன் போனபோது அங்கே எமனில்லை .எனவே மூன்று நாட்கள் காத்திருக்க நேர்ந்தது .

 

எமன் திரும்பியதும் அவனிடம் மந்திரிகள் சொல்கிறார்கள் .யாருடைய வீட்டில்  ‘பிராமணன்ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ ,அற்ப புத்தியுடையவனான அவனுடைய நம்பிக்கைகள் , எதிர்பார்ப்புகள் எல்லாம் அழிகின்றன … ” எனத் தொடங்கி ராஜ்யமே அழியும் என எமதர்மனை மிரட்டிவிடுகின்றனர் .

 

பயந்துபோன எமதர்மன் நசிகேதனை அழைத்து என்னால் மூன்று இரவுகள் காத்திருக்க நேரிட்டதால் மூன்று வரங்களைக் கேள் தருகிறேன் என்கிறான் .

 

கதையைத் தொடர்வதற்கு முன் ஒரு செய்தி .

 

ஓன்று , மேலே  ‘பிராமணன் ஒருவன் உணவின்றிஎன்று நான் சொல்லியுள்ளேன் .நூலிலோ ’தூயவன்என்றே தமிழில் தரப்பட்டுள்ளது . ஸ்லோகத்திலோ ’ப்ராஹ்மணோஎன்றே இருக்கிறது. முப்பது வருடங்களுக்கு முந்தைய பதிப்புகளில் பிராமணன் என்ற மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் .[ பார்ப்பனர் என்றே தமிழாக்கம் செய்திருக்க வேண்டும் ] .இப்போது தூயவன் ,சான்றோன் , அறிவாளி ,ஞானி என இடத்திற்கு ஏற்ப ராமகிருஷ்ண மட வெளியீடுகள் அனைத்திலும் ஆம் எல்லா நூல்களிலும் இடம் பெறுவதை தொடர்ந்து கவனிக்கிறேன் .இது ஒரு கருத்துத் திரிபு ,  கருத்துத் திணிப்பு ஆகும். 

 

மீண்டும் கதைக்கு வருவோம் .

 

தன்னை தந்தை மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டுமென புத்திசாலித்தனமாய் முதல் வரம் கேட்டான் நசிகேதன் .அதன்மூலம்   தனக்கும் , தந்தைக்கும் நல்ல உயிர் காப்பரண் அமைத்துக் கொண்டான் .

 

இரண்டாவது வரமாக , மரணத்தை வெல்லும் யாகம் செய்யும் முறையை கேட்டறிகிறான் .அந்த யாகத்துக்கு “ நசிகேத யாகம்” எனும் பெயரும் பெறுகிறான் .

 

மூன்றாவதாக ,  “மரணம் என்றால் என்ன ? மரணத்துக்கு பின் என்ன ?” என்கிற கேள்விக்குப் பதில் கேட்கிறான் . எமனோ சாவே இல்லாத வாழ்க்கை தருகிறேன் ,காமதேனு தருகிறேன் ,கற்பகதரு தருகிறேன் , அது தருகிறேன் ,இது தருகிறேன் என ஆசையை விதைக்கிறானே தவிர கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல மறுக்கிறான் . நசிகேதன் பிடிவாதமாக இருக்கிறான் .

 

எமதர்மன் , “ வாக்கினாலோ ,மனதினாலோ ,கண்களாலோ அந்த இறுதி நிலையை அடைய இயலாது .’இருக்கிறதுஎன்று சொல்பவனைத் தவிர வேறு யார் இதனை அடைய முடியும் “ இப்படித் தொடங்கி ஆத்மா அனுபூதி என உபதேசம் நீள்கிறது . நாம் முதலில் சொன்ன வரிகளோடு உபதேசம் முடிகிறது . கடைசி வரை நசிகேதன் கேள்விக்கு கறாரான பதில் சொல்லவே இல்லை .

 

ஆயின் இந்த  ‘கட உபநிஷதம்சொல்ல வருவது என்ன ?

 

மரணம் யாருக்கு வேண்டுமானாலும் ,எப்போது வேண்டுமானாலும் வரும் அதற்கு தயாராய் மனதை விசாலப்படுத்து . வாழும் போது பிறருக்கு பயனுள்ள வாழ்க்கை வாழ் என்பதுதானே !

 

இதனை சுவாமி விவேகானந்தர் தன் பிரச்சாரங்களில் போதனைகளில் எடுத்தாண்டார் ; ஆனால் ஆர் எஸ் எஸ் கடைக்கோடி சங்கி முதல் உச்சாணி தலை வரை இந்த உபநிஷத்தை – உபதேசத்தை எடுத்துச் சொல்வது கிடையாது .சொன்னால் அவர்களுக்கே அது கேடாகிவிடுமே !

 

நாம் சொல்வோம் ; தாங்க முடியா துன்பஙளை ,துயரங்களை ,அவமானங்களை ,அடிஉதைகளைத் தாங்கிக் கொண்டு மனித குலத்துக்காக உழைப்போர் மட்டுமே பல நூறாண்டாயினும் சாகாது மக்கள் மனங்களில் வாழ்பவர் ஆகிறார் ,

 

காந்தி ,அம்பேத்கர் ,பெரியார் ,மார்கஸ் ,எங்கெல்ஸ் ,பகத்சிங் போன்றோரே அதற்கு உதாரணம் . மரணத்தைத் தாண்டி மக்கள்நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்துள்ள ‘ஆன்ம பலம் மிக்க ‘ மானுடர்   இவர்களே !

 

உயிர் பயம் ,மரணமயம் ,எதிர்காலம் குறித்த பயம் இவை போன்ற பயத்திலேதான் ஆன்மீகமும் மதமும் ஜீவிக்கிறதோ ?

 

தொடர்ந்து பேசுவோம் [ இப்போது இடை வேளை ]

 

தொடர்ந்து பேசுவோம்,

 

சுபொஅ.

30/10/24.

 

 

 

0 comments :

Post a Comment