ஆன்மீகம் எது ? [18]

Posted by அகத்தீ Labels:

 

ஆன்மீகம் எது ? [18]

 

 

 “ உங்க வாதத்துக்கே வருகிறேன் , மூளையில் மத நம்பிக்கை பதிந்து போனபின் அதை  அகற்றுவது எளிதல்ல ஆகவே எங்கள் நம்பிக்கையைக் காயப்படுத்தாதீர் எனக் கேட்பதில் என்ன பிழை ?”

இது இன்னொரு நண்பரின் வினா .

 

நேற்றைய பதிவில் போதைக்கு அடிமை ஆவது மூளையின் வேதியல் விளையாட்டு என்று மருத்துவர் சொன்னதைச் சுட்டினோம். போதை பழக்கமும் மூளையில் பதிந்து அடிக்ட்டாக அடிமையாக ஆக்கிவிட்டது என்பதற்காக ஏற்க முடியுமா ? முடியாது .கூடாது . அதை குடிநோயாகக் கருதி மருத்துவ சிகிட்சை அளிக்க வேண்டும் அல்லவா ? மீண்டெள வேண்டும் அல்லவா ?

 

மூளையில் பதிந்த பண்பாட்டின் ஒரு கூறே பெண்ணடிமைத்தனம் .அது காலங்காலமாகப் புகட்டுப்பட்டு வந்ததால் விளைந்த வினை . அதற்காக அதனை அப்படியே தொடர விடலாமா ? கூடாது . தொடர் விழிப்புணர்வுப் போராட்டங்களும் சட்ட நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றதே !

 

பழையன கழிதலும் புதியன புகுதலும் கூட மூளையில் சாத்தியமே .ஆகவே மத ,சாதிய ,மூடநம்பிக்கைகளுக்கு எதிராக புத்தியைத் தீட்டச் சொல்வது எப்படி நம்பிக்கையைக் காயப்படுத்துவதாகும் ? எதெற்கெடுத்தாலும் மனம் புண்படுகிறது என்பதே ஓர் அழுகிணி தற்காப்பு வாதமே ! உண்மையை எதிர்கொள்ள முடியாத போது ஆடுகிற அழுகிணி ஆட்டமே !

 

 “அதெல்லாம் சரி ! புராண ஆபாசங்களை பழைய குப்பைகளைக் கிளறி நாற்றம் வீசச்செய்து வாதிடுவது சரியான அணுகுமுறையா ? சிலர் தமிழ்நாட்டில் அதையே முழுநேரமாகச் செய்து கொண்டிருக்கிறார்களே ! நீங்களும் ஆதரிக்கிறீர்களே ! “ இப்படி ஒரு கேள்வியை வீசினார் நண்பர் .இம்முறை வீசியது அறிவியலாய் சிந்திக்கக்கூடிய ஒரு நபர்தான் என்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது .

 

இக்கேள்விக்கு சரி /தவறு என ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது . எல்லா கேள்விகளுக்கும் ஒற்றை வரிப் பதில் சாத்தியமில்லை.

 

யார் கேட்கிறார் ? யாரிடம் கேட்கிறார் ? ஏன் கேட்கிறார் ? எப்போது கேட்கிறார் என்பன போன்ற கேள்விகளோடு இணைந்தது பதில் . யாரிடம் பேசுகிறோமோ அவர் புரிதலுக்கு ஏற்பவும் பேசவேண்டும்தானே !

 

நான் அதை இரண்டு கோணங்களில் பார்க்கிறேன் .முதல் கோணம் நான் எழுதிய “கீதை தரும் மயக்கம்” எனும் என் நூலில் இருந்து மேற்கோளாகத் தருகிறேன்.

 

“ அடுத்த கேள்வி கீதையை அருளியதாகக் கூறப்படும் கிருஷ்ணன் ஒரு வரலாற்று நாயகனா ? கற்பனைப் பாத்திரமா ?

 

கி.வீரமணி ‘கீதையின் மறுபக்கம்’ நூலில் கிட்டத்தட்ட 40 பக்கங்கள் [ பக்கம் 39-79] இந்த ஆய்வுக்கு ஒதுக்கி இருக்கிறார். இதில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல விஷயங்கள் குறித்து கேள்விக்கணைத் தொடுத்திருக்கிறார் .காதல் லீலைகள் , அவதாரத் தன்மை இந்த இரண்டு முரண்பட்ட தன்மைகள் குறித்து பல்வேறு ஆதாரங்களுடன் விவரித்துள்ளார் . அதுபோல் ‘கிருஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே’ எனும் 88 பக்கங்கள் கொண்ட சிறிய நூலில் ஜோசப் இடமருகு புத்தருக்குப் பின்னர் தோன்றிய கற்பனையே கிருஷ்ண அவதாரமும் கிருத்து பிறப்பும் என்று நிறுவ முயற்சித்திருக்கிறார் .வாசிப்பதற்குரிய நூல்கள் அவை .வாசகர்கள் வாய்ப்பு கிடைத்தால் வாங்கிப் படிக்கவும்.

 

அதே சமயம் ‘ மார்க்சியமும் பகவத் கீதையும்’எனும் நூலில் எஸ். ஸி. சர்தேசாயும் ,திலிப் போஸும் கூறியுள்ள கீழ்க்கண்ட வரிகள் முக்கியமானவை :

 

‘ பண்டைய காலத்தின் எல்லா நாடுகளிலும் சமுதாயச் சிந்தனையில் ,சமுதாயக் கற்பனையில் அன்றைய காலச் சமுதாய அமைப்பு நிலைக்கு ஒரு பெரிய மனிதர் அவசியப்பட்டதால் அத்தகையவர்கள் வந்திருக்கிறார்கள் .’

 

‘இந்திரன் என்பவன் இருந்திருக்கிறானா ? இல்லை .அதுவும் கற்பனைதான்.இருப்பினும் ரிக் வேத காலத்து சமுதாயம் என்பதை இந்திரனுடைய பாத்திரம் இல்லாமல் கருதிப்பார்க்க முடியாது .இப்போது கிருத்துவினுடைய வரலாற்றுத் தன்மையும் வாதத்திற்குரிய பிரச்சனையாக இருப்பதைக் காணலாம்.’

 

‘எனவே , கீதை என்னும் சங்கை யார் ஊதி இருந்தாலும் அவர்தான் கிருஷ்ணன். அந்தப் பாடப் பொருளை அறிவியல் பூர்வமாக ஆய்ந்திட அது போதும்’ “

 

இந்த மிக நீண்ட மேற்கோள் ஆய்வு தளத்தில் பேசியது ; அங்கு நிதானமாகவும் நடுநிலையாகவும் வாதிடுவது தேவையாகிறது . இது சரியே !

 

இப்படி வாதிட்ட சர்தேசாயும் , திலிபோஸும்கூட முடிவாகச் சொன்னது என்ன ?

 

“கீதையின் அடிப்படையான மாற்ற முடியாத ,மீற முடியாத கட்டமைப்பு சதுர் வர்ண – நாலுவர்ண –வர்ணாரமும் வேதாந்தமும் ஆகும் . சதுர்வர்ணம் என்றால் உள்ளமைந்த குலப்பிரிவுக்கு உட்பட்ட பிறப்பின் அடிப்படையிலான சாதி வேறுபாடுகளைக் கொண்ட அமைப்பாகும் .வேதாந்தம் என்றால் மருட்சி வாதம் ஆகும்.”

 

கி.வீரமணியும் ’வர்ணாஸ்ரம காப்பே’ கீதையின் சாரம் என நிறுவி இருப்பார் .

இருவர் வாதமும் சொல்லும் பாணியும் வேறுபடினும் முடிவில் வந்து சேருமிடம் ஒன்றே.  இரண்டும் சரியே ! இரண்டும் தேவையே !

 

இன்னொரு பாதையைப் பார்ப்போம் . மகாபாரதத்தில் திரெளபதி ஐவருக்கு மனைவி .உப கதையில் கர்ணனோடு அவளுக்கு ஒரு பார்வை இருந்தது என்று சொல்வதும் உண்டு . கிருஷ்ணன் தன் அத்தை ராதையை கோபியராக்கினான் என்றொரு கதை உண்டு .தான் பெற்ற மகள் சரஸ்வதியையே பிரம்மா தாரமாக்கினார் என்றொரு கதை உண்டு . ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்றொரு கதை உண்டு .இவை எல்லாம் நாகரிகமாகச் சொன்னது . இதனை மிஞ்சும் எண்ணற்ற ஆபாசக் கற்பனைகளும் புளுகுகளும் உண்டு . இவற்றை எடுத்துச் சொல்லும் போது குமட்டத்தான் செய்யும். இந்தியாவில் மட்டுமல்ல - இந்து மதத்தில் மட்டுமல்ல உலகெங்கும் எல்லா மதங்களிலும் - எல்லா பண்பாடுகளிலும் அறிவுக்குப் பொருந்தாக் கதைகள் நிரம்பி வழியும் .

 

இவற்றை கட்டற்ற பாலுறவு கொண்ட ஆதிசமூகத்தின் மீள் நினைவுகளாய் இதிகாசங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்டதாய் கொள்ளின் அது சமூகப் பார்வை. அது பிழை இல்லை . ஒவ்வொரு சமூகத்திலும் அதன் முந்தைய சமூகங்களின் எச்ச சொச்சமும் கதையாய் , சடங்குகளாய் , சில நம்பிக்கைகளாய்த் தொடரத்தான் செய்யும் .அவற்றை சமூக இயல் நோக்கில் ஆய்வு செய்யும் போது சில சமூக உண்மைகள் புலப்படும் .

 

ராகுல் சங்கிருத்தியாயன் எழுதிய “ வால்கா முதல் கங்கை வரை” இது போன்ற சமூகப் பார்வையை நமக்கு வழங்கும் . ஜார்ஜ் தாம்சனின் “ மனித சமூகத்தின் சாரம் “ வாசிக்கும் போது எப்படி கடந்த காலத்தை உள்வாங்க வேண்டும் என்கிற தெளிவு கிடைகும் . ஆய்வாளர் டி.டி.கோசாம்பி போன்றோர் எழுதியவை புதிய பார்வையை செதுக்க உதவும் .

 

ஆனால் புராணப் புளுகுகளுக்கு தெய்வீக முலாம் பூசி - கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புனிதமாய் நம் தலையில் திணிக்கும் போது ; அதன் எதிர்வினை அந்த அபத்த ஆபாச கற்பனைகளை தோலுரிப்பதில் போய்த்தானே முடியும் . இதில் என்ன பிழை ? ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டுதானே !

 

இன்று மத அடிப்படைவாதம் மேலோங்கி எல்லா குப்பைகளையும் புனிதம் எனச் சொல்லி ; கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டதாய் தூக்கிச் சுமக்கச் சொல்லும் போது இவை குப்பை எனச் சொல்லத்தான் வேண்டும் .வேறு வழியே இல்லை .

 

குப்பைகளைக் கிளறி நாற்றம் எடுக்கச் செய்ய வேண்டுமா வேண்டாமா என்பது அந்தந்த சூழலுக்கு ஏற்ப எதிர்வினை வடிவம் கொள்ளும் .எல்லா காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் ஒரே மாதிரி எதிர்வினைகூடாது .நமது ஆயுதத்தை நம் எதிரியே தீர்மானிக்கிறான் .கருத்துக் களத்திலும் இதுவேதான்.

 

“ கம்பி வலைச் சிறைக்குள் அறிவியல் மலராது .அறிவியல் என்பது தேவையை அதிகரிப்பதாகும்.அறிவியல் என்பது பரிசோதனை,பகுப்பாய்வு மற்றும் தேவை அறிதல் ஆகும். அறிவியலும் சுதந்திரமும் முன்னோக்கி மட்டுமே பயணிக்கும்.சுதந்திரத்தை அழிக்கும் போர்வெறி அறிவியலையும் அழிக்கும் .” என்றார் டி.டி.கோசாம்பி.

 

 இன்றைக்கு மதவாதம் அறிவியல் பார்வை மீது போர் தொடுத்துள்ளது . ஒரு இருண்ட காலகட்டத்தில் நிற்கிறோம் . உணர்ச்சிகள் கொம்பு சீவப்படும் காலம் . ஆகவே இப்போதை அணுகுமுறை இடத்துக்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்பவுமே அமைய முடியும் . ஓர் விரிந்த அணியைக் கட்டி எழுப்ப சமரசங்களும் நட்பு முரண்பாடுகளும் தவிர்க்க இயலாதவை .

 

சில இடங்களில் அறுவை சிகிட்சை தேவைப்படும் .சில இடங்களில் ஊசி மட்டும் போதும் .சில இடங்களில் மாத்திரை மட்டும் போதும் . சில இடங்களில் சில கட்டுப்பாடுகளும் பயிற்சியும் போதும் .இது நோயின் தாக்கத்தைப் பொறுத்து மருத்துவர் முடிவெடுக்க வேண்டிய விஷயம் .கஷாயம் மட்டுமே போதுமான இடத்தில் கத்திவைக்க வேண்டியதில்லை .கத்திவைக்க வேண்டிய இடத்தில் கஷாயம் மட்டும் போதுமானது அல்ல . இதுதான் இந்த சமூக வியாதிக்கும் பொருந்தும் வழி .

 

ஆன்மீகம் என்று பேசத் துவங்கினாலும் அவர்களின் பேச்சு மதம் , கட்டுக்கதை ,மூடநம்பிக்கை இவற்றை சுற்றியே வட்டமிடுகின்றன .ஆன்மீகம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டதென சொல்லுவோரும் கடைசில் இங்கேதான் வந்து சேர்கின்றனர் .ஆகவே நமக்கு நிறைய வேலை இருக்கிறது .

 

சென்னை மாகாண முதல் நாத்திகர் மாநாட்டில் பேசிய தோழர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பெண்களிடம் கேட்டுக்கொண்டார் , “ இங்கு பெண் மக்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். குழந்தைகளுக்குக் ‘கடவுள்’,’சாமி’ என்று அழைத்துச் சென்றால் ,இது ‘சிவன் பொம்மை’, ‘இது பெருமாள் பொம்மை’, ‘இது அறுபத்தி மூவர் பொம்மை’என்று குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும் .அதன்படி எனது வீட்டிலுள்ள 4 வயது சிறுவனுக்கு உற்சவத்தில் பொம்மைகளைத் தூக்கி வருகிறார்களென்றே சொல்கிறேன்.” [சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம் பக்கம் 163]

 

தோழர் சிங்காரவேலர் ஊட்டிய சிந்தனைகளை மீண்டும் ஞாபகபடுத்தவேண்டிய காலகட்டம் இது .செய்வோம்.

 

தொடர்வோம்.. [இடைவேளை]

 

சுபொஅ.

 

 

 

 

 

 


0 comments :

Post a Comment