எது ஆன்மீகம் ? [ 9]
உயிர் பயம் ,மரணமயம் ,எதிர்காலம் குறித்த பயம் இன்னபிற பயங்கள் ,பதற்றங்கள் மனித குலத்தை ஆட்டுவிக்கின்றன . எல்லா ஏமாற்றுப் பேர்வழிகளுக்கும் இதுதான் நுழைவு வாயில் .
“பேய்க்கு பயந்தவங்க எல்லாம் என்னைக் கட்டிப்பிடிச்சுக்கோங்க!” என்றதும் கதை சொன்ன பாட்டியை தாவிக் கட்டிப் பிடித்துக் கொள்ளும் குழந்தைகள் போலத்தான் மனித குலம் நீண்ட காலமாக இருந்து வருகிறது .
பிளேக் நோய் ஓர் கொள்ளை நோய் .உலகை பலமுறை மரணத்தின் விழிம்பில் தள்ளிய நோய் . இந்த பிளேக் நோய் ஒரு முறை லண்டனை மிரட்டிக் கொண்டிருந்த சூழலில் மக்கள் எப்படி இருந்தனர் என்பதை 1772 ஆம் ஆண்டு புகழ்
பெற்ற ஆங்கில நாவலாசிரியர் டேனியல் டஃபே
[DANIEL DEFOE ] விவரிப்பதை அண்மையில் வாசித்த நூலொன்றில் கண்டேன்.நினைவில் இருப்பதைச் சொல்கிறேன்.
பெரும்பான்மையான மக்கள் ஆருடங்களையும் ,கோள்களின் நிலைகளையும் , புராணக் கதைகளையும் ,முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அப்போது நம்பினார்கள் என்கிறார் .ஜாதங்களை தூக்கி வைத்துக்கொண்டு பெரிதும் கலங்கினர்களாம் ; வீட்டின் கம்பங்களிலும் தெருமுனைகளிலும் , விதவிதமான மருத்துவர்களின் விளம்பரங்களை நோட்டிஸ் ஒட்டிவைத்திருந்தனராம் ; பிளேக் நோயிலிருந்து உங்களைக் காப்பாற்றக் கூடிய மருந்துகள் கிடைக்கும் என்பன போன்ற பல அறிவிப்புகள் சுவர்களை ஆக்கிரமித்தனவாம் ,இதுபோல் மந்திரம் ,தாயத்து போன்ற சர்வரோக நிவாரணிகளின் விளம்பரங்கள் எங்கும் தென்பட்டனவாம் இப்படி விவரிக்கிறார்.
நோய் பயத்தால் மந்திரம் மாயம் மருந்து அது இது என எதைச் சொன்னாலும் நம்பும் மனோநிலையில் மக்கள் கையறு நிலைக்கு தள்ளப்பட்டனர் என்கிறார் டேனியல் டஃபே . நோய் எதனால் வருகிறது என்கிற சிக்கிலின் முடிச்சு அவிழாத நேரம் அது. .
கோரானா காலத்திலும் அப்படி ஒரு குழப்பமும் பதட்டமும் நிலவியதைக் கண்டோம். பிரதமரே ‘விளக்கு பிடி ,மணியாட்டு’ எனச் சொல்லி பழியை கடவுள் மேல் போட்டார் . சம்மந்தா சம்மந்தமின்றி சில மருந்துகள் பெயர் பரவி அம்மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டன .விலை தாறுமாறாக ஏறின.சீனா ,தப்ளிக் ,முஸ்லீம் எச்சில் என விஷம் கக்கும் வதந்திகளை நம்பினர் . யோகா, ஆயுர்வேதா, சாணி ,கோமியம் , இந்த ஸ்லோகம் அப்படி இப்படின்னும் வந்த எதை எதையோ மக்கள் நம்பினர் . அதுவும் இந்த விஞ்ஞான யுகத்தில் நம் கண்முன் நடந்தது .கடைசியில் மருத்துவ அறிவியல் தலையிட்டு பரவலைக் கட்டுப்படுத்தி ,நோய் தடுப்பையும் கண்டறிந்து மனித குலத்தை மீட்டனர்.
இப்பவே அப்படியெனில் பிளேக் கொள்ளை நோய் பரவிய காலத்தை கற்பனை செய்து பாருங்கள் .
கொள்ளைநோய் அல்லது “பிளேக்” (Plague) குடலிய நுண்ணுயிரி வகையான எர்சினியா பெசுட்டிசால் [Yersinia
pestis]ஏற்படும் கொடிய நோய்த்தொற்று ஆகும். இந்த பாக்டீரியாவினால் பிளேக் நோய் ஏற்படுகின்றது என்பதை அலெக்சாண்டர் எர்சினும் ,ஷிபாசாபுரோ கிடசாட்டோவும் 1894இல் ஹாங்காங்கில் கண்டறிந்து அறிவித்தனர். இந்த நோயைப் பரப்பும் நோய்ப்பரப்பி உயிரினமாக இறந்த எலிகளின் (vector) உடலில் வாழும் உண்ணிகளை அடையாளம் கண்டவர் பவுல்-லூயி சைமண்டு ஆகும். இதன் பின்னரே மருத்துவ அறிவியல் பிளேக் நோயைக் கட்டுப்படுத்தியது .
பிளேக் நோயின் மீது ஏற்பட்ட அச்சத்தினால் நாட்டார் வழிபாட்டில் பிளேக் மாரியம்மன் வழிபாடு இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு,]கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம்
,தெலுங்கானா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் பிளேக் அம்மன் கோயில்கள் உள்ளன. பிளேக் அம்மன் சில கோயில்களில் முதன்மை தெய்வமாகவும், சில கோயில்களில் உப தெய்வமாகவும் ஆயின. [ அதன் பட்டியலே உள்ளது .இங்கு தேவை இல்லை ] அண்மையில் மிரட்டிய எய்ட்ஸ் நோய்க்குகூட கர்நாடகாவில் ஓர் அம்மன் கோயில் உருவாக்கப்பட்டதை ஓர் ஏட்டில் வாசித்தேன்.
அச்சமும் பதற்றமும் ஓங்கி இருக்கும் போது மத , மூடநம்பிக்கைகளை ,கண்மூடி பழக்கங்களை மிக எளிதாக ஊன்றிவிட முடிகிறது .
தொற்றுநோயின் போதுமட்டுமல்ல வறுமை ,வேலையின்மை ,கழுத்தை நெரிக்கும் கடன் ,கல்விக்கான நெருக்கடி , திருமணம் சார்ந்த நெருக்கடி ,தொழில் ,வியாபார நெருக்கடி இப்படி வாழ்வின் ஒவ்வோர் நொடியிலும் நாம் சந்திக்கிற நெருக்கடி ,நிச்சயமற்ற நிலை [uncertainty ] இவற்றால் உருவாகும் பதற்றம் ,பயம் போன்ற கையறு நிலையே ,’எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இங்குதான் அவரவர் வாழ்நிலைக்கு ஏற்ப ஏமாற்றப் படுகிறார்கள் .
கைரேகை ,ஜோதிடம் ,பரிகாரம் , நேர்த்திக் கடன் ,மந்திரவாதி ,பூஜை ,வழிபாடு , யார்யாரையோ நம்பி ஏமாறுவது ,மத சம்பிரதாயங்கள் , நவீன கார்ப்பரேட் குருஜிகளின் ஆன்மீக உடுக்கையடி இத்யாதிகள் நம்மைச் சுற்றி வட்ட மிடுகின்றன .அவரவர் சூழல் சார்ந்து ஏமாறுகின்றனர் . ஆனால் தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்பதைக்கூட உணர முடியாமல் அதில் மதுகுடித்தவன் போல்அதில் மூழ்கிக்கிடக்கின்றனர் . தற்காலிகமாக மறந்து கிடக்கின்றனர் .
இது ஒரு எஸ்கேபிஸம் [ escapisam ]அதாவது பிரச்சனைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளப் பயந்து தப்பி ஓடும் மனோநிலையே ! இதன் இன்னொரு முகம்தான் குடிக்கு அடிமையாதல் ,சாமியாராக வேடம் போட்டு
ஊராய் பிச்சை எடுத்து திரிவது , ஊரைவிட்டு குடும்பத்தை தவிக்கவிட்டு ஓடுவது , திருட்டு கொள்ளை சமூகவிரோதச் செயல்களுக்கு இரையாவது போன்ற எல்லாம் .
ஒவ்வொரு தனி மனிதரும் வாழ்வில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளால் அவரவர் சூழலுக்கு ஏற்ப எங்கோ வீசி எறியப்படுகிறார்கள் .
இதற்கான சமூகப் பொருளாதாரக் காரணங்களை ஆராயாமல் தீர்வை எட்ட முடியாது .முகநூலில் ஓர் நண்பர் ஒரு தேவார பதிகத்தைக் குறிப்பிட்டு இதை தினமும் ஓதினால் குடிப்பழக்கத்திலிருந்து மீளலாம் என எழுதி இருந்தார் .இதுபோல் வேலைகிடைக்க இந்த ஸ்லோகம் ,கடனிலிருந்து மீள இந்த ஸ்லோகம் , திருமணம் நடக்க இந்த ஸ்லோகம் , வாழ்வில் இன்பம் சுடர இந்த ஸ்லோகம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு ஸ்லோகத்தை ஆன்மீக இதழ்கள் வாராவாரம் அருளிக்கொண்டிருகின்றன .அதுபோல் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு சாமி ஒவ்வொரு கோயில் ஒவ்வொரு பரிகாரம் ஒவ்வொரு சடங்கு என இவை எழுதி குவிப்பதை வாசித்தால் இந்தியாவில் யாருக்குமே பிரச்சனையே இருக்கக்கூடாது .அவ்வளவு வழிகாட்டல்கள் இதில் ஏதோ ஒன்றை நம்புகிறவர்கள்தாம் பெரும்பாலோர் .
ஆயினும் அவர்கள் யாரும் பிரச்சனைகளிலிருந்து மீண்டதாகத் தெரியவில்லை .ஒரு பிரச்சனை பழகிப் பழகி மரத்துப் போக புதிய பிரச்சனைகள் முளைக்கின்றன . தலைவலி போய் திருகுவலி ஆரம்பமாகின்றன . அலை ஓய்ந்த கடலைத் தேடித் தேடி ஆழிப்பேரலையில் சிக்குகிற கதைதான் நடக்கிறது .
ஆன்மீகமும் மதமும் வேறு வேறு என ஒரு சாரார் எவ்வளவு கரடியாகக் கத்தினாலும் பெரும்பாலோர் தத்துவம் ,மதம், சடங்கு ,சம்பிரதாயம் , வழிபாடு ,மூடநம்பிக்கை போன்ற அனைத்தின் கலவையாகவே ஆன்மீகத்தைப் பார்க்கிறார்கள் என்பதே யதார்த்தம்.
இன்னொன்றும் நடக்கிறது ; தனிமனித சிக்கல்களை வைத்து மனதைக் கட்டுப்படுத்து , ஒருமுகப்படுத்து என்றெல்லாம் ஏகப்பட்ட உபதேசங்கள் . இந்த மனதுக்கும் ஆத்மாவுக்கும் என்ன சம்மந்தம் ? நம் உடலில் மனம் எங்கே இருக்கிறது ? ஆன்மா என்பது யாது ? இதற்கும் ஆன்மீகத்துக்கும் என்ன தொடர்பு ?
கொஞ்சம் குழம்பித் தெளிவோம்.
தொடர்வோம்.
சுபொஅ.
0 comments :
Post a Comment