எது ஆன்மீகம் ?[3]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [3]

 

 “பாவப்பட்ட மதங்களை எதிர்க்கும் நீங்கள் பவர்புல்லான மதங்களை எதிர்ப்பதில்லை ஏன் ?”

 

நான் இத்தொடரை எழுதத் துவங்கியதும் ; எதிர்ப்பும் பிறந்து விட்டது .அப்படியாயின் நான் செல்லும் பாதை சரிதான் .

 

முதலில் நான் குறிப்பிட்டிருப்பது என் முதல் கட்டுரைக்கு ஒரு நண்பர் போட்ட மறுமொழி . நான் எந்த மதத்தையும் குறிப்பிடாத போதே இப்படி தானாக வந்து குதிக்கிறார் .அவர் நோக்கம் ரகசியமல்ல .பிற மத வெறுப்பும் குரோதமுமே !

 

ஒரு கேள்வி . உலகில் எத்தனை மதங்கள் இருக்கின்றன ? சரியாக கணக்கிட முடியாமல் ஆய்வாளார்களே திணறிக்கொண்டிருக்கின்றனர் . தோழர் அ.குமரசேன் அண்மைக் கட்டுரை ஒன்றில் உலகில் சுமார் நாலாயிரத்துக்கும் அதிகமான மதங்கள் இருப்பதாய் தோராயமாகத்தான் சொல்லி இருக்கிறார் . அதுபோல மேட்ரிக்ஸ்என்ற திரைப்படத்தை தொடர்ந்து     ‘மேட்ரிக்ஸியம் (Matrixism)’ என்ற மதமே 2004 ல் உருவாக்கப்பட்ட வேடிக்கையை சொல்லியிருக்கிறார் .

 

நான் ஒரு கட்டுரையில் படித்தேன் சிலுவையை தலைகீழாக வைத்து சாத்தானை வழிபடும் ஒரு மதப் பிரிவும் உண்டாம் .ஜப்பானில் அடிக்கடி கூட்டாக தற்கொலை செய்துகொள்ளும் ஒரு மதப்பிரிவு உண்டு .

 

ஆபிரஹாமிய மதங்கள் எனச் சொல்லப்படும் கிறுத்துவம் ,இஸ்லாம்,யூதம் , சீன மதங்களான கன்பியூஸிசன் ,டாவோயிசம் ,சீனா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஓங்கி நிற்கும் புத்தம் , ஆப்பிரிக்க நாடோடி மதங்கள் , பழங்குடி மதங்கள் ,கீழை தேசத்து மதங்கள் , ஆதி வழிபாடுகள் , ஒரு மதத்திலேயே தோன்றிய வெவ்வேறு பிரிவுகள் இப்படி வகைவகையாய் மதங்களைப் பெற்றுப் போட்டுள்ளது மனிதகுலம் .

 

கிறுத்துவ ,இஸ்லாம் ,புத்தம் உட்பட உள்ள மதங்களில் பல்வேறு தனித்த பிரிவுகள் உண்டு .அவை ஒன்றையொன்று கடுமையாக எதிர்த்து நிற்பதும் கண்கூடு . ,ஓரிறைக் கோட்பாட்டை நோக்கி நகர்ந்த மதங்கள் , கணக்கற்ற கடவுள்களை சுமக்கும் மதங்கள் , கணக்கற்ற வழிபாட்டு முறைகள் பட்டியல் போடப் போட நீளும்

 

நம் நாட்டில் இந்து மதம் என்கிற பெயரில் ஒரு கதம்பம்  பிரிட்டீஸ்காரன் வகைப்படுத்தியதே . அப்போது அவர்கள் தேவைக்கு மக்கள் தொகை கணகெடுப்பு நடந்த போது , யாரெல்லாம் கிறுத்துவர் இல்லையோ , யாரெல்லாம் இஸ்லாமியர் இல்லையோ அவரெல்லாம் இந்து என்று ஒரு லேபிள் ஒட்டி பிரித்தான் .                                                          

 

 

ஆயின் , இந்திய துணைக் கண்டத்தில் பிராமணியம் அல்லது சனாதன தர்மம் , சைவம் (சிவன்), வைணவம் (திருமால்),  கௌமாரம் (முருகன்),  காணபத்தியம் (விநாயகர்), சௌரம் (சூரியன்),  சாக்தம் (சக்தி) நாட்டார் வழிபாடுகள் ,வைகுண்டரின் ஐயா வழி ,வள்ளலாரின் சமரச சன்மார்க்கம் , நாராயண குருவின் வழிவந்தோர் , கர்நாடகாவில் வலுவாக உள்ள லிங்காயத் உள்ளிட்ட பிரிவுகள் , மெய்வழிச் சாலை , மேற்கு வங்கத்தில் ஆனந்த மார்க்கிகள் . ஹரேகிருஷணா இயக்கத்தினர் எல்லாவற்றையும் இந்து என்கிற ஒற்றைச் சொல்லில் அடக்க முடியமா ?

 

சைவம் என்று சொன்னால் அது தமிழ்நாட்டில் புழங்கும் சைவசித்தாந்தம் ,  குஜராத் வட இந்தியாவில் புழங்கும் பாசுபத சைவம் மற்றும் அகோரிகள் ,வீரசைவம் ,லிங்காயத் , காஷ்மீர் சைவம் இப்படி பல பிரிவினர் . வைணவத்திலும் தென்கலை ,வடகலை மட்டுமல்ல வட இந்திய வைணவத்துக்கும் தென் இந்திய வைணவத்துக்கும் வேறுபாடு உண்டே .

 

இதில் வேடிக்கை என்ன வெனில் இதில் ஒரு பிரிவினர் தங்கள் கடவுளையும் வழிபாட்டு முறையையும் தவிர மற்றவற்றை மதிக்க மாட்டார்கள் . இறைவன் ஒருவன் அன்பானாவன் கருணை மிக்கவன் அருளாளன் எல்லாம் தெரிந்தவன் எங்கும் நிறைந்தவன் என்று சொன்னாலும் நடைமுறையில் ஒருவருக்கொருவர் முறுக்கிக் கொண்டுதான் நிற்பர் .இது எங்க பழக்கம் என்பதில் பெருமிதம் கொள்வர் .

 

எல்லா மதங்களும் கடவுள் நம்பிக்கையை ஆதாரப்பட்டே சொர்க்கம் ,நரகம் ,கர்மபலன் இப்படி பல  அறிவுக்குப் பொருந்தா கருத்தோட்டங்களையும்  சடங்காச்சாரங்களையும் பற்றி நிற்கும் .

 

இவ்வளவு மதங்கள் ஏன் ? இவ்வளவு மோதல்கள் ஏன் ?

 

சிந்தனைச் சிற்பி தோழர் ம. சிங்காரவேலர் மதம் ,கடவுள் ,மூடநம்பிக்கை , அறிவியல் பார்வையோடு இணைத்து எவ்வளவோ எழுதியுள்ளார் . நாம் வாசித்தோமோ ? உள்வாங்கினோமா ?

 

அவர் ஓர் கட்டுரையில் கேட்கின்றார் , “கடவுளை தயாபரன் ,ஆபத்பாந்தவன் ,அன்பன் எந்த மாத்திரத்தில் இந்தக் கொடுமைகளை மறக்க  முடியுமா ? 60,000 சமணர்களைக் கழுவில் ஏற்றினது கடவுள் பெயராலன்றோ ? கோடானகோடி பிசாசு பிடித்தவர்கள் என்று பெண்மக்களை அடித்துக் கொன்றது கடவுள் பெயரால் அன்றோ ? கிறுத்துவரும் முகமதியரும் கோடிக்கோடியாக 500 வருஷ காலம் சிலுவைப்போர் [ crusades] என்ற கொடும்போரில் மாண்டது சாமி பெயரால் அன்றோ? சாமி என்ற பெயரால் எத்தனை கட்டடங்கள் கோயில்கள் இடிந்தன ? எத்தனை நாடுகள் நாசமாயின ? சாமிக்காக இன்றைக்கும் நமது நாட்டில் எத்தனை தலைகள் உருளுகின்றன?”

 

“ இரண்டு உலகப் போர்களில் , இழந்ததைவிட மத மோதல்களில் அதிகம் இழந்துவிட்டோம் ” என்பார் ரிச்சர்ட் டாக்ஃ கின்ஸ் .

 

ஆன்மீக அலசலுக்கு கடவுள் கணக்கும் தெரிய வேண்டும்தானே.

 

தொடர்வோம்…

 

சுபொஅ.

23/10/24.

 

0 comments :

Post a Comment