இது நெருப்பை பொதிந்திருக்கும் ஆவணம்
நூலின் தலைப்பைப் பார்த்ததும்
ஓர் இலக்கிய பனுவல் என்ற எண்ணம் ஏற்படக்கூடும் ; ஆயின் இந்நூல் இதயத்தை உலுக்கும் நிகழ்கால உண்மைகளின் தொகுப்பு . நாட்டு நடப்பின் ஸ்கேன் ரிப்போர்ட்.
“ ‘புதிய’ இந்தியாவின் அடக்குமுறைகளையும் ,அவற்றுக்கு
எதிரான போராட்டக் குரலையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் ஒரு நூல்…” என இந்தியப்
பொருளாதார நிபுணர் ஜூன் த்ரீஸ் கூறியது மிகை அல்ல.
பீமா கோரன் ,சிஏஏ குடியுரிமைச்
சட்ட எதிர்ப்பு , டெல்லி வன்முறை உடபட முக்கிய நிகழ்வுகளில் எந்த ஆதாரமும் இன்றி கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் உண்மைக் கதைகளின் தொகுப்பு .இந்திய ஜனநாயகமும்
, சட்டமும் ,நீதியும் ,மனிதமும் ,ஊடகங்களும்
அம்மணமாய் ஒடுக்குமுறையின் கைகருவியாய் மாறிய கொடூர வரலாற்றின் சாட்சி இந்நூல்
.
பாதிரியார் ஸ்டான் சுவாமிகள்
,ஜி .என்.சாய்பாபா , உமர் காலித் ,பியூஷ் மனுஷ் ,வரவர ராவ் ,காலித் சைஃபி ,ஆனந்த் டெல்டும்பே,நடஷா
நார்வால் , பட்டியல் மீக நீளமானது . அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தோர் ,ஒடுக்கப்பட்ட
தலித் ,பழங்குடியினர் நலனில் அக்கறையோடு பாடுப்பட்டோர் , சிறுபான்மையோர் வாழ்வுரிமைக்கு
எழுந்து நின்றோர் , ,மனித உரிமைப் போராளிகள் என மனிதம் பொங்கிய மனிதர்களை சிறையில்
அடைத்து சித்தரவதை செய்து மகிழ்ந்த மோடி அரசின் சர்வாதிகாரத்தை தோலுரிக்கும் நூல் இது
.
எந்தவித ஆதாரமும் இன்றி
,சட்டநெறிமுறையும் இன்றி இப்படி பழிவாங்க நீதிமன்றமும் துணைபோனது மகா கேவலம் . இதனை
வாசிக்க வாசிக்க நெஞ்சம் கொதிக்கிறது .
நான் இந்தப் புத்தகத்தை வாசித்துக்
கொண்டிருந்த போது என் உறவுக்கார பேத்தி இமை [ நான்கு வயது ] புத்தகத்தின் அட்டையைக் காட்டி கேட்டாள்
, ”இது யாரு என்ன செய்றாரு “[குழந்தைக்கு சிறை என சொல்ல முடியுமா ?] “ தாத்தா ஜன்னல்
வழியாக நிலாவைப் பார்க்கிறார்” என்றேன் . டக்கென குழந்தை கேட்டது ,” ஆச்சி எங்கே
?” . தாத்தாவோடு ஆச்சி இருக்க வேண்டும் எனக் குழந்தை எதிர்பார்க்கிறது .இதுதான் உறவின்
மேன்மை .
இந்த நூலின் 176 வது பக்கத்தைப்
புரட்டுங்கள் ; நர்கீஸ் சைஃபி ,காலித் சைஃபின் மனைவி கூறுவதைக் கேளுங்கள் .
“ சிறையில் இருக்கும் அப்பாவிற்காக
ஒரு அட்டையில் ஓவியம் வரைந்தாள் என் மகள் மரியம் .நான் சிறைக்குச் சென்று அவரைச் சந்திக்கும்
போது அதனைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி என்னிடம் கொடுத்தாள் . ஆனால் ,நான் அவரைச்
சந்திக்க சிறைச்சாலை செல்லும் போது வாசலிலேயே அதனை அனுமதிக்க சிறைக்காவலர்கள் மறுத்துவிட்டனர்.இது
தெரிந்ததும் அவள் மனம் உடைந்து போய்விட்டாள்.அடுத்த முறை சிறைக்குப் போகும் போது வெறொரு
வழியை அவர் கண்டுபிடித்துவிட்டாள். அட்டையில் வரைந்ததையும் எழுதியதையும் போல் என் கையில்
மருதாணியால் வரைந்து விட்டாள் . இப்போது என்னுடைய கையை எந்தக் காவலராலும் தடுக்க முடியாதுதானே.அப்படித்தான்
நான் அடுத்த முறை சிறைக்குச் சென்று மரியம் எழுதியதையும் வரைந்ததையும் காட்டினேன்.”
அந்த அட்டையில் கையில் அப்படி
என்னதான் இருந்தது ? குழந்தை வரைந்து படம் அத்துடன் “we love you appuji proud of you” [ தந்தையே உன்னை
நேசிக்கிறோம் ! உன்னால் பெருமை கொள்கிறோம் ] இப்படி குழந்தை சொல்வது மகா பாதகமா ?
பாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு
உறிஞ்சு குழாய் குவளை மறுக்கப்பட்டதையும் ; சாய்பாபாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும்
,அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்பே அனுபவித்த சித்திரவதைகளையும் , உமர் காலித் எதிர்கொண்ட
கொடுமைகளையும் இன்னபிற அநீதிகளையும் ஆய்வு ,வாகுமூலங்கள் ,ஆதாரங்கள் மூலம் இந்நூல்
நெடுக குவித்திருக்கிறார்கள் .
பக்கங்கள் 39 முதல் 67 வரை
மொத்தம் 29 பக்கங்கள் , 241 முதல் 267 வரை மொத்தம் 27 பக்கங்கள் வெறும் பட்டியல்
எனப் புரட்டிச் செல்ல முடியாது . ஒவ்வொரு தகவலிலும் ஓர் அழுத்தமான வரலாறும் சோகமும்
புதைந்து கிடக்கிறது .
சாகர் தத்யாராம் கோர்க்கே
என்பவரின் சிறை அனுபவம் மிகவும் பதற வைப்பதாகும் . சிறைக் கண்காணிப்பாளர் டி.யூ .பவாரை
சந்தித்து மனுகொடுக்க காலில் செருப்பு இல்லாமல் சேற்றில் நிற்கும்படி சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்
. கோர்க்கே செருப்பைக் கழற்ற முடியாது ; “என்
மூதாதையர் காலில் செருப்பணியும் உரிமையைப் போராடி நிலை நாட்டி இருக்கிறார்கள் .” என
வாதிட மனுவைப் பெற மறுத்ததோடு தொடர்ந்து கொடுமைப் படுத்தி உள்ளனர் .சிறைச் சாலையில்
தாண்டவமாடும் சாதியக் கொடுமைக்கு அளவே இல்லை .அண்மையில் ஓர் நீதிபதியே இதனைச் சுட்டியுள்ளாரே
!
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
15 ஆம் தேதியன்று பாதிரியார் ஸ்டான் சுவாமி சிறையில் அடைக்கப்பட்டு நூறு நாட்கள் நிறைவடைந்திருந்தது.
அப்போது அவர் ஓர் குறிப்பு எழுதினார் ,
“………………….. …………………. இங்கிருக்கும்
விசாரணைக் கைதிகளைப் பார்க்கையில் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது .அவர்களிடமிருந்துதான்
எனக்கு இரண்டாவது பலம் கிடைக்கிறது .அவர்களில் பெரும்பான்மையோர் பொருளாதார ரீதியாகவும்
சமூகரீதியாகவும் பின்தங்கிய மக்களாகத்தான் இருக்கிறார்கள் . அவர்களில் பலருக்கும் அவர்கள்
மீது என்ன வழக்கு போடப்பட்டிருக்கின்றன என்றோ ,என்ன மாதிரியான குற்றச்சாட்டு அவர்கள்
மீது வைக்கப்பட்டிருக்கின்றன என்றோ கூட அறியாத அப்பாவி மனிதர்களாக இருக்கிறார்கள்
. வழக்கின் குற்றப்பத்திரிகையைக் கூட பார்த்திராதவர்கள்தான் அவர்களில் அதிகம் பேர்
. சட்ட உதவியோ வெறெந்த விதமான உதவியோ கிடைக்கப் பெறாமல் பல ஆண்டுகளாகச் சிறையில் வாழ்க்கையைக்
கழித்துக் கொண்டிருக்கிறார்கள் . எந்த அடிப்படை வசதியும் இல்லாமல்தான் பெரும்பாலான
விசாரணைக் கைதிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . ஒருவருக்கொருவர் இயன்றளவிற்கு உதவிக்கொள்வதற்கான
சூழலையும் சகோதரத்துவதையும் இங்கே பார்க்க முடிகிறது .”
21 மே 2022 அன்று ரமேஷ் கைசோர் சிறையிலிருந்து எழுதிய ஓர் கவிதை , தனக்கு கொசுவலை மறுக்கப்பட்டபோது எழுதியது
,’ எனதருமைக் கொசுவலையே’ என்பதாகும் . அந்தக் கவிதையின் கடைசில் சொல்கிறார் , “ ஆனால்
, / துக்கமில்லாதவனும் / அமைதியில்லாதவனும் / உரிமைக்காக எப்போதும் போராடுவான் / உன்னை
என்னிடமிருந்து பிரித்த / அந்த அதிகாரிக்கு இது தெரியாது போலேயே / அனதருமைக் கொசுவலையே”
ஆம் ,கடும் நெருக்கடிகளும்
ஒடுக்குமுறைகளும் லட்சியவாதிகளை நசுக்கிவிடாது . மாறாக அந்த சூழ்நிலையையே போரட்ட களமாக்கிவிடுவார்கள்
.
14 மார்ச் 2021 நடாஷா நர்வால் எழுதிய கடிதத்தில் சிறைக்குள் வரலாறே அறியாத விசாரணைக்
கைதிகளைக் கொண்டு பெண்கள் தினத்துக்கு அரங்கேற்றிய
நாடகத்தைப் பற்றிச் சொல்கிறது . ஒன்றுமறியாத அவர்களை சாவித்திரிபாய் பூலே , ஃபாத்திமா
ஷேக் ,ராணி லட்சுமிம்பாய் , சரோஜினி நாயுடு என நடிக்கவைத்த அனுபவம் . போராளிகளுக்கு
சிறைக்கூடமும் பயிற்சி பாசறைதான் எனச் சொல்கிறது .
இந்த புத்தகத்தில் நான் வாசிக்கும்
போது அடிக்கோடிட்ட வரிகளை எல்லாம் எழுத சுட்டிக் காட்டி முனைந்தால் அது முப்பது நாற்பது
பக்கங்களைத் தாண்டிவிடும் . ஆகவே சுருக்கிக் கொள்கிறேன் . இந்தப் புத்தகத்தை கண்கலங்கி
பாதியில் மூடிவிடாமல் முழுதாய் வாசிக்க வேண்டுகிறேன். இதில் சொல்லப்பட்ட பல செய்திகள்
நம் விழியைத் திறப்பவை எனில் மிகை அல்ல .
நக்சல் அரசியலோடு எனக்கும்
மாறுபாடு உண்டு . ஆயின் ,அவர்களின் அர்ப்பணிப்பை தியாகத்தை நான் ஒரு போதும் குறைத்து
மதிப்பிடமாட்டேன் . அவர்கள் ஒரு போதும் தேசவிரோதிகள் அல்லர் .
“நம்பிக்கையையும் போராட்ட
குணத்தையும் எந்த சர்வாதிகாரத்தாலும் கொன்றுவிட முடியாது .சில நேரம் அவை வெளிப்படையாகத்
தெரியாமல் இருக்கலாம் அல்லது அதன் வீரியம் குறைந்தது போலத் தெரியலாம் . ஆனால் நமது
நம்பிக்கையும் போராட்ட குணமும் மீண்டும் மலர்வதற்கான வழியைக் கண்டுபிடித்துவிடும்.”
நன்கு தமிழாக்கம் செய்த அன்பு மகன் இ.பா.சிந்தனுக்கு வாழ்த்துகள் .
இன்னும் எத்தனை காலத்திற்கு நிலவைக் கூண்டிலேயே அடைத்து வைக்க முடியும்
? [இந்திய
அரசியல் கைதிகளின் குரல் ]
ஆசிரியர்கள் :சுசித்திரா விஜயன் ,பிரான்ஸ்கா ரெச்சியா, தமிழில்
: இ.பா.சிந்தன்,
வெளியீடு : எதிர் வெளியீடு , 96 ,நியூ ஸ்கீம் ரோடு , பொள்ளாச்சி
– 642 002 .
தொடர்புக்கு : 04259 26012 / 99425 11302 ethirveliyedu@gmail.com , www.ethirveliyedu.com
சு.பொ.அகத்தியலிங்கம்.
27/01/2025 .
0 comments :
Post a Comment