எது ஆன்மீகம் ?[6]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [6]

 

நான் அடிக்கடி கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் கேட்கும் பழக்கம் உள்ளவன் .அதன் கருத்தோடு மாறுபடும் இடங்கள் நிறைய உண்டு .ஆயினும் பாடலின் எளிமையும் அனுபவத் தெளிப்பும் ஈர்ப்பானவை .

 

“தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெளியாமல் போனால் வேதாந்தம்” என கண்ணதாசன் திரைப்படப் பாடலொன்றில் போகிற போக்கில் சொன்ன வரிகள் மிக முக்கியமானவை.

 

தத்துவ உலகில் மரணம் ,மரணத்துக்கு பிந்தைய வாழ்வு பற்றிய விசாரணைக்கு முக்கிய இடம் உண்டு .ஆயினும் அது மட்டுமே தத்துவம் அல்ல . ஆனால் சோகப் பாடலை எல்லாம் தத்துவப் பாடலென்று சொல்லித் திரிகிறோம் .

 

“தத்துவமாகப் பேசி கழுத்தறுக்காதே!” என நீங்களும் நானும் பலரிடம் சொல்லியிருப்போம் . தத்துவம் என்பது ஏதோ நம் அன்றாட பிழைப்புக்கு அப்பாற்பட்டது என்கிற கருத்தோட்டம் சமூகத்தின் பொது புத்தியில் உறைந்து இருக்கிறது .

 

அதே நேரத்தில் வாழ்வின் போக்கில் பல்வேறு அனுபவ மொழிகளில் தத்துவத்தின் கீற்று வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் .

 

யாக்கை நிலைமை ,செல்வம் நிலையாமை ,புகழ் நிலையாமை , வாழ்க்கை நிலையாமை இப்படி பலவற்றை தத்துவ உலகம் விசாரிக்கும் . சினிமா பாடல்களிலும் அது போன்ற வரிகள் பளிச்சிடும் போது நம்மை ஈர்த்துவிட அதுவே தத்துவம் எனப் புரிந்து கொள்கிறோம் .

 

அவற்றில் பெரும்பாலானவை நம்பிக்கை வறட்சியைப் பேசுபவை .சில தன் நம்பிக்கையை ஊட்டுபவை .அப்படியாயின் தத்துவம் என்பது நம்பிக்கையா ? நம்பிக்கை வறட்சியா ? இங்கே நான் நம்பிக்கை எனச் சொல்வது கடவுள் நம்பிக்கை என புரிந்து கொள்ளக்கூடாது . தன்னம்பிக்கையையே சொன்னேன்.

 

ஆதியில் அரிஸ்டாட்டில் ,பிளாட்டோ , சாக்ரட்டீஸ் தொடங்கி எண்ணற்ற தத்துவஞானிகளை உலகம் கண்டுள்ளது .கிரேக்கத்துவ ஞானிகள் அரேபிய தத்துவஞானிகள் ,ஆப்பிரிக்க தத்துவ ஞானிகள் ,கீழை தேச தத்துவ ஞானிகள  ,மேற்கத்திய தத்துவ ஞானிகள் என விரிந்து கொண்டே செல்லும் பட்டியல் . சீனாவில்  கன்ப்யூசினசம் [Confucianism] , டாவோயிசம்[ Taoism ] இரண்டு  சொந்த தத்துவங்கள் உண்டு  , ஆயினும் இந்தியாவிலிருந்து போன தத்துவமான புத்தமும் அங்கு வேரோடிவிட்டது.

 

இந்திய தத்துவஞானமும் விரிந்தது .மிகவும் பழமையானது. பலகிளைகளைக் கொண்டது . புத்தம் ,சமணம் ,மீமாம்சம் ,சார்வாகம் ,லோகாயவாதம் ,வேதாந்தம் ,அத்வைதம் ,துவைதம் ,விசிஷ்டாட்டவைதம் ,சைவம் , வைணவம் ,சீக்கியம் ,ஜொராதுஷ்ட்ரா [பார்சி] பட்டியல் முடியவில்லை . ரொம்பப் பெரிது .இந்துத்துவம் அல்லது இந்துயிசம் என இப்போது பேசப்படுவது தத்துவமல்ல ; அது  மத வெறி சார்ந்த அரசியல் சொல்லாடல் .

 

மணிமேகலையையும் நீலகேசியையும் வாசித்தால் தமிழ் மண்ணின் ஊடாடிய தத்துவப் போக்குகளையும் மோதல்களையும் காணலாம். இதனை இன்னொரு நாளில் பார்க்கலாம்.

 

உலகெங்கிலும் எல்லா தத்துவ ஞானமும் கடவுளை சுற்றி பின்னப்பட்டது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது . அது உண்மையே அல்ல . கடவுள் ,மதம் நோக்கி பயணித்த தத்துவங்களும் உண்டு .மாறாக அவற்றை கேள்விக்கு உட்படுத்திய த்ததுவங்களும் நிறைய உண்டு .சாக்ரட்டீஸ் தொடங்கி மார்கஸியம் வரையும் நீளும் தத்துவ மரபில் கடவுளுக்கு இடம் இல்லாத தத்துவங்கள் நிறைய உண்டு . .

 

இந்தியாவின் தத்துவ மரபு முழுவதும் வேதாந்த மரபு என்கிற பொய் வலுவாக இங்கு சொல்லப்படுகிறது .உண்மை அதுவா ? இல்லவே இல்லை.

 

சமஸ்கிருதம் தெரியாமல் இந்திய தத்துவ மரபைப் பேசமுடியாது என சொல்வோருண்டு .சிறந்த தத்துவ ஆசிரியரும்,தேர்ந்த சமஸ்கிருதப் புலமை கொண்டவருமான தோழர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய” இந்திய நாத்திகம்என்ற நூலை இந்த இடத்தில் அசை போடுவது சாலப்பொருந்தும் .அவர் சொல்கிறார் ;

 

“இந்தியாவின் மரபு எனக் கறாராக வரையறுக்கப்படக்கூடிய தத்து வத்தை விருப்பு வெறுப்பின்றி ஆராய்கிற போது கடவுளுக்கு அங்கே இடம் தேடுவது வேண்டாத வேலையே என்பது தெளிவாகும். இந்தியாவின் தத்துவங்களில் இரண்டே இரண்டை மட்டுமே ஆத்திகம் சார்ந்தவை என மிகுந்த தயக்கத் துடன் கூறலாம்.....”

 

“நமது முக்கியமான தத்துவங்களுக்குள் வேதாந்தமும் (அதுவும் கூட ஒரளவுக்கே எனலாம்) நியாய - வைசேசிசமும் குறிப்பாகப் பிற்கால நியாய - வைசேசிசமும் மட்டுமே ஆத்திகம் சார்ந்தவை.இதற்கு மாறானவை பவுத்தம், சமணம், பூர்வ - மீமாம்சம், சாங்கியம், லோகாயதம் மற்றும் ஆதிநியாய - வைசேசிசம் ஆகியன; அவையனைத்தும் தீவிர நாத்திகவயமானவை. ”

 

சட்டோபாத்யாயா போகிற போக்கில் சொல்லவில்லை; ஆழ்ந்த புலமையோடு மேற் கண்ட தத்துவச் சாரங்களைக் கற்றுத் தேர்ந்து; சாறு பிழிந்து இந்நூலில் தந்துள்ளார் .“நமது நாகரீகத்தின் வரலாற்றைப் பின்னோக்கி நுணுகி ஆராய்ந்து பார்க்கும் போது வரலாற்றுக்கு முந்தைய ஒரு காலகட்டத்தில் அங்கே கடவுளே காணப்படவில்லை என்பதால் நாம் புரிந்து கொண்டிருக்கிற பொருளிலான மதம் இருக்கவில்லை என்பதை அறியமுடிகிறது ; ஆகவேதான் வேதங்களில் பேசப்படும் ஆதி ஆத்திகம் முக்கியமானது என்கிறார் சட்டோபாத்யாயா.

 

சொல்வதோடு நில்லாமல் அதனுள்ளும் நுழைந்து ஆதியில் எவ்வித சிறப்பு மற்ற எண்ணற்ற தெய்வங்களின் நம்பிக்கையில் தொடங்கி ஒரு கடவுள் நோக்கிய பயணமாக ரிக் வேதத்தில் வெளிப்படுவதை சுட்டிக் காட்டுகிறார். ஆதி நாத்திகம் தொடங்கிய சூழலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் .

 

ஈஸ்வரவாதமென அழைக்கப் பட்ட கடவுள் கோட்பாடு ; அதற்கு எதிர்நிலையில் நிரீஸ்வர வாதம் எனப்படும் கடவுள் மறுப்பு கோட்பாடு என இரண்டு சிந்தனைப் போக்கு உருவானதை மிகச்சரியாகச் சுட்டுகிறார். அதே போல் “ஈஸ்வர வாதத்துக்கும் ஸ்வபாவ வாதம் எனப்படும் இயற்கை வாதத்துக்கும் இடையில் தோன்றிய வாக்குவாதமே இந்திய சிந்தனை மரபில் தோன்றிய மதத்துக்கும் அறிவியலுக்குமான மோதலின் தெளிவான முன்னோட்டம் என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

 

“…உயிரியல் ஆய்வு நோக்கில் கடவுள் நம்பிக்கையின் பொருத்த மின்மை என்கிற ஒரம்சத்தை மட்டும் கருதுவது வரலாற்று முக்கியத் துத்தைக் குறைத்து மதிப்பிடுவதில் போய் முடியும். உண்மையில் சாங்கிய அறிஞர்கள் அதற்கும் மேலே சென்று ஏனையோரால் ஏற்றுக் கொள்ளப் பட்ட கடவுள் எனும் கருத்து தருக்கவியல்பாங்கில் எந்த அளவு உயர்ந்த பலம் கொ ண்டது என வினவினார்.”புத்தம் , சமணம் ஆகியவை ஆதியில் கடவுள் மறுப்புச் சிந்தனையோடு விளங்கியதையும்; காலப்போக்கில் அதனுள்ளும் கடவுள் நம்பிக்கை நுழைக்கப் பட்டதையும் மிக நுட்பமாக ஆதரத்தோடு நிறுவுகிறார்.

 

இவ்விடத்தின் பாரதிதாசன் பாடலொன்று நினைவுக்கு வருகிறது.

 

“மனைமக்கள் தூங்கினார் நள்ளிரவில் விடைபெற்று

வழிநடைச் சிரமம்இன்றி

மாபெரிய யுசிந்தனா லோகத்தைரு அணுகினேன்.

வந்தனர்என் எதிரில்ஒருவர்.

எனைஅவரும் நோக்கியே நான்கடவுள் நான்கடவுள்

என்றுபல முறைகூறினார்.

இல்லைஎன் பார்கள்சிலர்; உண்டென்று சிலர்சொல்வர்

"எனக்கில்லை கடவுள்கவலை"

 

எனவுரைத் தேன்.அவர், யுஎழுப்புசுவர் உண்டெனில்

எழுப்பியவன் ஒருவனுண்டே

இவ்வுலகு கண்டுநீ நானும்உண் டெனஅறிக!

என்றுரைத்தார். அவரைநான்

"கனமான கடவுளே உனைச்செய்த சிற்பிஎவன்?

காட்டுவீர்" என்றவுடனே

கடவுளைக் காண்கிலேன்! அறிவியக்கப் புலமை

கண்ட பாரததேசமே!”

 

’எழுப்பு சுவர் உண்டெனில் /

எழுப்பியவன் ஒருவனுண்டே /

இவ் வுலகு கண்டு நீ நானும் (கடவுளும் எனப் பொருள் )

உண்டென அறிக/’ என்றுரைத்தார் .

அவரை நான் /

‘கனமான கடவுளே உனைச் செய்த சிற்பி எவன் ? /

காட்டுவீர் என்றவுடனே/

கடவுளைக் காண்கி லேனே..” என்பார் பாரதிதாசன்.

 

பாரதிதாசன் சுவரை வைத்து வாதிட்டுள்ளார்; பழங்கால தர்க்கங்கள் மண்பானையை வனைந்தவர் யாரென்றேவிவாதம் தொடரும். அதனை பலகோணங்களில் பல தத்துவஞானிகள் வாதங்கள் மூலம் இந்நூல் நெடுக சொல்லியுள்ளார் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா . வாய்ப்புள்ளோர் நூலைத் தேடி வாசிப்பீர் .

 

இந்த தத்துவப் போருக்கும் ஆன்மீகத்துக்கும் தொடர்பு யாது ?

 

தொடர்வோம் …

சுபொஅ.

28/10/24.

 

 

 

0 comments :

Post a Comment