எது ஆன்மீகம் ? [ 12 ]
“ஆத்மார்த்தமாகப் பேசு” ,“ ஆத்மார்த்தமாக சொல்கிறேன்
“ , “ என் ஆத்மாவுக்கு துரோகம் செய்ய மாட்டேன்” , “என் ஆத்மாவுக்குத் தெரியும்”, “ஆத்ம
சரீர சுகமளிக்கும் அற்புத ஆராதனைகள்” இதுபோல் ஆத்மாவோடு தொடர்பு படுத்தி பேசிக்கொண்டே
இருக்கிறோம் . எழுதிக் கொண்டே இருக்கிறோம் .
ஆத்மா எங்கே இருக்கிறது
என்றால் நெஞ்சைக் காட்டுவார் பலர் . மருத்துவ அறிவியலில் அங்கு அத்மா என்ற பொருளில்லை
. மனதையும் ஆத்மாவையும் ஒன்றென பலநேரங்களில் குழப்பி புரிந்து கொள்கிறோம் . ஆனால்
” ““மூளையும் மனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.”[ “The brain and the mind are two sides of
the same coin.’] என முன் அத்தியாயங்களில்
தெளிந்துவிட்டோம் . ஆனால் மனமும் ஆத்மாவும் ஒன்றல்ல . மனம் மூளையின் கட்டளைக்கு உடபட்டதுதான்
. ஆத்மா என்பது வெற்றுச் சொல்லாடல் மட்டுமே .அதற்கு ஆழ்ந்த பொருள்கூற வந்த எல்லா மத
,ஆன்மீக நூல்களும் குழப்பத்திதான் போய் முடிந்தது .
சரி ! இங்கு பெரிதாய் போற்றப்படும்
பகவத் கீதையில் ஆத்மா பற்றிய கேள்விக்கு விடை தேடிப்பார்ப்போம் .
“ ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா
நபூய
அஜோ நித்ய : சாச்வதோ யம்
புரானோ
ந ஹண்யதே ஹண்யமானே சரீரே”
அதாவது ,” ‘ஆத்மா’ எப்போதும்
பிறப்பது மில்லை ; எக்காலத்திலும் இறப்பது மில்லை . ஒரு சமயம் இருந்து மறுசமயம் இல்லை
என்பது மில்லை . இது பிறப்பற்றது ; என்றும் உள்ளது ; நிலையானது ; பழமையானது ; சரீரம்
கொல்லப்படும் போது இது கொல்லப்படுவதில்லை. “
இதைவிட குழப்ப முடியுமா என்ன ? கீதாச்சாரியன் சொன்னது புரியவில்லையா ? புரிய
முயற்சிப்பதைவிட ஸ்லோகங்களை மனனம் செய்து நெட்டுரு போட்டு ஒப்பிப்பது எளிதானது .ஆனால்
எந்தப் பயனுமில்லை .
மேலும் விளக்கம் கேட்டால்
, “ ஆத்மா ; வெட்ட முடியாதது ; எரிக்க முடியாதது ; நனைக்க முடியாதது ; உலர்த்த முடியாதது
; நிலையாக உள்ளது ; அசைவற்றது ; இன்றும் என்றும் புதியது..” என அளந்து விட்டுக் கொண்டே
இருப்பான் கீதாச்சாரியன் .
நீ தலையைப் பியத்துக் கொண்டால்
பட்டெனச் சொல்வான் ,” பிறந்தவனுக்கு மரணம் நிச்சயம் உண்டு,மரணம் அடைந்தவன் பிறப்பது
நிச்சயம் . ஆகவே தவிர்க்க முடியாத ஒரு விஷயத்தைப் பற்றி நீ கவலைப் படாதே !”
மரணத்தின் போது ஆத்மா எங்கே
போகும் ? அதுவே மறுபடியும் பிறக்கு மென்றால் ; ஒரு சரீரத்துக்கு ஒரு ஆத்மா எனக் கொண்டால்
; அதுவே மறுபடி பிறக்கும் எனக் கொண்டால் ; மக்கள் தொகை பெருகாமல் அல்லவா இருக்க வேண்டும்
. புதிது புதிதாக ஆத்மா எங்கிருந்து வந்தது ?
குழப்புவது கீதையின் தனித்திறமை
.
“நைந்த துணிகளை கழற்றி
எறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகளைக் கொள்வது போல் ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து
புதியனவற்றை எய்துகிறது.”
ஒருவன் பழைய சட்டையை மாற்றி
எறிந்துவிட்டு புதிய சட்டை அணிந்த பின்னும் அவனாகத்தான் இருப்பான் .இன்னொருவனாக மாறான்
.இது நம் எல்லோருக்கும் தெரியும்தானே ! ஆத்மா வேறு உடலைச் சார்ந்த பின் அவன் யாராக
இருப்பான் ?
பிராமணன் ஆத்மா அடுத்த
பிறவியில் புதிய சட்டையாகத் தோட்டி சட்டையை [சரீரத்தை வரித்துக் கொண்டால் ] ஏற்றால்
அவன் பிராமணனா ? தோட்டியா ?
அதுபோல் தோட்டியின் ஆத்மா
அடுத்த பிறவியில் புதிய சட்டையாக பிராமணன் சட்டையை ஏற்றால் அவன் தோட்டியா ? பிராமணனா
?
ஏழு பிறவிகள் தோட்டியாக
பிறந்தவன் ஒவ்வொரு பிறவியிலும் முகம் சுழிக்காமல் தோட்டி வேலையை இறைவன் கட்டளையாக ஏற்று
செய்தால் அடுத்த பிறவியில் பிராமணனாகவே பிறப்பான் என்கிறார்களே ! பிரதர் மோடி கூட இதனை
தன் தன் கர்ம யோகம் நூலில் எழுதி இருக்கிறாரே ! அப்படியானால் சட்டை மாறியபின் அவன்
யார் ?
இப்படி கேள்வி கேட்டால்
அவர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரத்தானே செய்யும் .
ஆத்மாவை வருத்தி தவம் செய்தால்
பரமாத்மாவை கலக்கலாம் என்பவர் . ஆத்மா எது என சொல்லாமல் குழப்புவது ஏன் ? பசியை அடக்கி
அன்னம் தண்ணீர் இன்றி தவம் இருப்பதால் ; இச்சைகளை அடக்கி இருப்பதால் ; உடலை வருத்தி
ஆத்மா பெறப்போவதென்ன ?
இப்படி கேள்வி கேட்டால்
அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார்கள் .
“ ஆச்சர்யவத் பச்யதி கச்சிதேனம்
ஆச்சர்யவத் வததி ததைவ சான்ய
ஆச்சர்ய வச்சனை-மன்ய :ச்ருனோதி
ச்ருவாப்யேனம் வேத ந சைவ
கச்சித் “
அதாவது ஆச்சரிய வஸ்துவைப்
போல் ஒருவன் பார்க்கிறான் ; ஒருவன் கேட்கிறான் ; ;ஒருவன் பேசுகிறான் ; ஆனால் எவனும்
ஆத்மாவை அறிந்தவனில்லை.”
அவ்வளவுதான் .ஆத்மாவை யாருமே
புரிந்து கொள்ளவே முடியாதாம் . யாருமே புரிந்து கொள்ள முடியாததை எப்படி நம்புவது ?
ஏன் அதைப் பற்றி பேச வேண்டும் ?
ஆக ,எந்த ஆன்மீக நூலாயினும்
மிகப்பெரும் உபந்யாசியாயினும் இதையே பல குட்டிக் கதைகளோடு விளக்கு விளக்கிவிட்டு .இதை
யாரும் புரிந்து கொள்ளவே முடியாது ; சும்மா கண்ணையும் காதையும் மூளையையும் மூடிக்கொண்டு
நம்புங்கள் என ஒரே போடாகப் போட்டு விடுவார்கள் .
பைபிளில் தெசலோனிக்கேயர் 5:23 கூறுகிறது, "சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முழுவதுமாக பரிசுத்தப்படுத்துகிறார்; உங்கள் ஆவியும் ஆத்துமாவும் சரீரமும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையில் குற்றமில்லாமல் காக்கப்படும்.”
நப்ஸ் என இஸ்லாம் ஆத்மாவைப்
பற்றி குறிப்பிடுகிறது .
ஆக அனைத்து மதங்களும் ஆத்மா
என்பதை எதோ ஒரு வகையில் சொல்கிறது .ஆனால் எந்த மதமும் ஆத்மா இதுதான் என அறுதியிட்டு
காட்டுவதே இல்லை . இல்லாத ஒன்றை எப்படிக் காட்ட இயலும் ?
ஆனாலும் ஆத்மா
எனும் சொல் வாழ்வில் புழங்காத இடமே இல்லை .
ஓர் ஆன்மீக
நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னார் , ”ஆத்மா என்பது வேறொன்றுமில்லை அழிவற்ற
உண்மை . அது குறித்த அச்சத்தில்தான் குற்றங்கள் நடக்காது இருக்கின்றன.”
கடவுளை பரமாத்மா
என்பதால் அதை நோக்கிய மனோ ரீதியான பயணத்தை
ஆத்மா என்பார்களோ . இதில் அந்தராத்மா என வேறு சொல்கிறார்கள் . இவை எல்லாமும் மனிதர்களை
அச்சத்தில் ஆழ்த்தி குற்றங்களை குறைக்கப் போவதாய் காதில் பூ சுற்றுகிறார்கள் .
கிரிமினல்களில்
நூற்றுக்கு 99 பேர் கடவுள் நம்பிக்கை மிக்கவர்களே ! அவர்கள் யாரும் ஆத்மாவை மறுப்பவர்களல்ல
ஏற்பவர்களே . அப்படி இருந்தும் குற்றச் செயல் பெருகுவது ஏன் ?
அதைவிட அபத்தமானது
ஒருவர் இறந்ததும் “அவர் ஆன்மா சாந்தி அடைவதாக”
என இரங்கல் செய்தி சொல்லிவிடுகிறோம். இதையே RIP
[ Rest In Peace ] என கிறுத்துவர்களும் சொல்கிறார்கள் . இப்படி ஒவ்வொரு மதமும் சொல்கிறதே
செத்த உடன் ஆன்மா எங்கோ பயணிப்பதாகவும் அங்கே சாந்தி கிடைக்க வேண்டும் என்பதும் நம்
அதீத கற்பனையைத் தவிர வேறொன்றுமில்லை . பொருளற்ற வார்த்தைகளே !
இந்த ஆத்ம
மயக்கமும் விளையாட்டும் இத்தோடு முடிவதில்லை . ஜக்கி வசுதேவ் சொன்ன உபநிஷத் கதையும்
, கலீல் ஜிப்ரான் சொன்ன குட்டிக்கதையும் பேசுவதென்ன ? அடுத்து பார்ப்போம்.
தொடர்வோம்
[இடைவேளை]
சுபொஅ.
10/11/24.
0 comments :
Post a Comment