எது ஆன்மீகம் ? [7]
“உலகப் படைப்பின் வழி நிறைவடையும் கடவுளின் நோக்கம்தான்
என்ன? எந்தவொரு நோக்கமுமின்றி எந்த வொரு அடி மடையன் கூட எதையும் செய்திடான்?” எனகிறார்
குமரிலப் பட்டர் என்கிற அன்றைய மீமாம்ச ததுவச் சிந்தனையாளர்.
“ கடவுளின் திருவிளையாடல்” என சமாளிக்கிறார் பாதராயணர்என்ற வேதாந்தி.
இவை போன்ற ஏராளமான வாதங்களை
ஆதாரபூர்வமாக அடுக்கி தேவிபிரசாத்சட்டோபாத்யாயா இந்திய தத்துவ மரபில் பெரிதும் மேலோங்கி இருந்தது
வேதாந்தமல்ல ; பகுத்தறிவும் நாத்திக வாதமுமே என நிறுவுகிறார் .
அவரின் , “ இந்திய நாத்திகம்” , “தத்துவத்தின் தொடக்கங்கள்” போன்ற அறிமுக நூல்கள் தொடங்கி , இன்றுவரை
மாபெரும் ஆவணமாகத் திகழும் “ இந்திய தத்துவங்களில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்”
என்கிற நூல்வரை தமிழில் வெளிவந்துள்ளன . ஆழமாக அறிய விரும்பும் இளைய தலைமுறை வாசித்தறிக
.
வேடிக்கை என்னவெனில் இவற்றைப் படித்து நாம் தெளிந்து கொள்ளலாமே
தவிர மதவெறியர்களிடம் வாதிட முடியாது காரணம் அவர்களின் தத்துவ பலம் அல்ல ; மாறாக குதர்க்க
வாதம் . நீங்கள் ஒரு கேள்வி கேட்டால் அவர்கள் வேறொரு பதில் சொல்வார்கள் .
” பகவத் கீதை சாதிய அடுக்குமுறையை , வர்ணாஸ்ரமத்தை நியாயப்படுத்துகிறதே
! ’சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்’ ‘நான்கு வர்ணத்தையும் நானே படைத்தேன்’ எனச் சொல்கிறதே
? இது நியாயமா ?” என நீங்கள் கேள்வி கேட்டால் , “ குரானை நீங்கள் விமர்சிக்கத்தயாரா?”
என மடை மாற்றுவார்கள் . இது ஏதோ சங்கிகளுக்கு இப்போது வந்த வியாதி அல்ல . ஆதிமுதல்
இதே வியாதிக்கு ஆட்பட்டவர்கள்தான் இந்த வேதாந்த மரபினர் . இது குறித்து சட்டோபாத்யாயா
சொல்கிறார் .
விவாதத்தில் “சாமானிய சள” எனப்படும் போக்கு; அதாவது உண்மையான மைய இழையை விட்டு
விட்டு குறுக்குசால் ஓட்டுகிற போக்கு; வார்த்தைகளைப் பிடித்து தொங்குகிற போக்கு; ஆத்திகவாதிகளிடம்
மேலோங்கி இருந்தது .இதனை தன் எழுத்துகளில் அம்பலப் படுத்துகிறார் சட்டோபாத்யாயா.
ஒருவர் அர்த்தமில்லாமல்
சள்சளன்னு பேசுவதை நாம் ’சளசள’ன்னு பேசுறார் என சொல்லுவது இதைத்தானோ !
சங்கிகளின் விவாதம் இப்படித்தானே
இருக்கிறது .
தத்துவம் பேசுவதாகச் சொல்லி
அரசியல் பேசுகிறேனோ !
“அரசியல் இல்லாமல் நீங்களும்
இல்லை .நானும் இல்லை .எனவே தத்துவத்தின் வளர்ச்சி குறித்து பயில்வது அரசியல் ,அறிவியல்
,வரலாற்றுக் கண்ணோட்டம் பண்பட அவசியமாகும்.
ஆக ,ஒரு மனிதனுக்கும் அல்லது
அமைப்புக்கும் இந்த உலகம் பற்றி இருக்கும் கண்ணோட்டமே தத்துவம்.
தத்துவத்தின் முதல் பிரச்சனை
இயற்கைக்கும்[மனிதன்,பொருள் ] ஆன்மாவுக்கும் [ உயிர் ,கருத்து ] உள்ள தொடர்பு பற்றியதாகும்.
அடுத்த பிரச்சனை இந்த பிரபஞ்சத்தை
அறிய முடியுமா முடியாதா என்பதாகும் “
இப்படி “ தத்துவதின் வரலாறு”
எனும் சிறு பிரசுரத்தில் தோழர் .வீ.பழனி குறிப்பிடுகிறார் .
இப்படி சில நூல்களை நாம்
சுட்டிக்காட்டினால் , “ உங்களுக்கு இந்து மதத்தை குறை சொல்லாவிட்டால் தூக்கம் வராது
; அப்படிப்பட்ட நூல்களத்தான் தேடித்தேடி படிப்பீர்கள் என என் மீது பாய காத்திருப்பார்கள்
.கொரானா காலத்திலும் முகநூலில் அப்படி ஒரு புகார் என்மீது எழுந்தது . அப்போது சொன்ன
பதிலை நாளை பார்ப்போம்.
சிந்தனைச் சிற்பி தோழர்
ம.சிங்காரவேலர் 1932 ல் குடியரசு ஏட்டில் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரை “ பொதுவுடைமை
விளக்கம்” கிட்டத்தட்ட நூறு பக்கங்கள் கொண்ட இக்கட்டுரை பின்பு நூலாகவும் வெளிவந்தது
அதில் சொல்கிறார் ;
“இந்திய தேசத்தில் மாத்திரம்
மூன்று தீமைகள் குடிகொண்டிருப்பதைக் காணலாம். அவையாவன மத பேதம் ,ஜாதி பேதம் , பொருளாதார
பேதம்.மற்ற தேசங்களில் இம்மூன்றில் பொருளாதார பேதம் மட்டுமே காணப்படும். [ சில நாடுகளில்
மத பேதமும் / நிற பேதமும் உடன் சேரும் : இது என் கருத்து] இந்திய தேசத்தில் மாத்திரம்
இம்மூன்றும் நிலை பெற்றுள்ளன .ஆதலின் இந்திய தேசத்தில் பொருளாதார வித்தியாசத்தை மாத்திரம்
போக்குவது தேச சீர்திருத்ததிற்கு போதுமானதாகாது. இந்திய தேசத்தில் பொருளாதார வித்தியாசம்
ஒழிவதோடு ,மத வித்தியாசமும் ஜாதி வித்தியாசமும் ஒழிய வேண்டியது அவசியமாகும் .பல ஆண்டுகளாய்
பல பெரியோர் மதச் சீர்திருத்தத்தை மாத்திரம் முயற்சித்து வந்தனர். அது பலிக்காமல் போயிற்று.”
ஆக ,மதம் ,சாதி , வர்க்கம்
இம்மூன்றும் நிலவும் இந்திய மண்ணில் ஓர் ஒருங்கிணைந்த பார்வையும் வியூகமும் தேவைப்
படுகிறது .ஆனால் நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்தால் நாம்
எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியே எழுகிறது ..
தீபாவளி நெருக்கத்தில்
ஓர் ஏட்டில் ஆன்மீகப் பகுதியில் வந்த கட்டுரை இப்படி ஆரம்பிக்கிறது ,
“எங்கே அச்சமும் கவலையும் இருக்கிறதோ அங்கே நிச்சயம் கடவுள் தன்மை இருக்காது என்கிறது ஆன்மிகம். ஒரு கடவுளை நம்பி சரண் புகுந்து, அடைக்கலமான பிறகு, `எல்லாம் அவன் செயல்' என்று உணர்ந்த பிறகு, அங்கு எப்படி அச்சமும் கவலையும் இருக்க முடியும். நானே செய்கிறேன் எனும்போதுதான் எல்லாப் பிரச்னைகளும். `அவன்தான் செய்விக்கிறான்' எனும்போது அங்கே ஒரு நிம்மதி வந்துவிடும். அப்படி ஒரு கடவுள் ……….. இருக்கிறார்.”
நான் எந்த கடவுளுக்கும் பிராண்ட் அம்பாசிடர் அல்ல
ஆகவே பெயரைத் தவிர்த்துவிட்டேன். இப்படி ஒரு கடவுள் இருந்தால் எங்கும் அச்சமும் கவலையும்
இல்லாமல் தொலையுமோ ?
இது மட்டுமல்ல ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு கோயில்
என்றும் ஒவ்வொரு புண்ணிய ஸ்தலமென்றும் , பரிகாரம் இவை என்றும் வாரந்தோறும் இந்த “ஆன்மீக” ஏடுகள் புளி போட்டு விளக்கு விளக்கு என
விளக்கிக் கொண்டிருக்கின்றன .
கவி ரவீந்திரநாத் தாகூரின் ஒரு கவிதையை இங்கு நினைவிற்கு வந்தது . பலமுறை படித்திருப்போம்
,கேட்டிருப்போம் அன்றாட வாழ்வோடு சேர்ந்து அலசி இருப்போமா ?
“ எங்கு மனம் அச்சமற்றதாக ,தலைநிமிர்ந்து இருக்கிறதோ
,
எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ,
எங்கே உலகம் குறுகிய உள்நாட்டுச் சுவர்கள் என்ற பிளவுகள்
அற்றதாக இருக்கிறதோ ,
எங்கே வார்த்தைகள் உண்மையின் அடியாழத்திலிருந்து வெளிப்படுகிறதோ,
எங்கே சலியாத உழைப்பு விழுமிய நிலையை நோக்கி நீள்கிறதோ,
எங்கே பகுத்தறிவு என்னும் தெள்ளிய நீரோடை மூடப்பழக்கமெனும்
பாலையில் வழிதவறிப் போகாதிருக்கிறதோ,
எங்கே என்றும் விரிந்து நோக்கும் எண்ணத்திலும் செயலிலும்,
மனதை முன்னிறுத்தி நீ அழைத்துச் செல்கின்றாயோ ,
அங்கே ,அந்த சுதந்திரமான உலகத்தில்
என் தந்தையே , என் நாடு விழித்தெழுவதாக !”
[ கவிதை மொழியாக்கம் : வி.பா.கணேசன் ]
பேசுவோம் தொடர்ந்து …
சுபொஅ.
29/10/24.
0 comments :
Post a Comment