எது ஆன்மீகம் ? [ 11 ]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [ 11 ]

 

” ஆயினும் எத்தனையோ எழுத்தாளர்கள் மனம் பற்றிய தத்துவங்களை அடிப்படையாக வைத்து புனைவு இலக்கியங்கள் வடிக்கின்றனர் ....” இது என் முந்தைய பதிவுக்கு ஓர் சகோதரி இட்ட பின்னூட்டம் .

 

“ஆம் . மனம் குறித்த விவாதம் முடியவில்லை . தொடர்கிறது .” என நான் பதில் சொன்னேன்.

 

 

2014 ஆம் ஆண்டே நான் ஒரு மதிப்புரை எழுதிய ஒரு நூலை இங்கு மீண்டும் அசைபோடுகிறேன். பா. வீரமணி எழுதியுள்ளமனமென ஒன்று உண்டா?” என்கிற நூல்தான் அது .மனம்குறித்த ஒரு பரந்த விவாதத்திற்குத் தளம் அமைத்துள்ள அதில் இருந்து சில செய்திகள் .

 

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்வெளியிட்டு வரும் மாத இதழானசெந்தமிழ்ச் செல்வியில் ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் நடந்துள்ளது. புலவர் நடேசநாராயணன்மனம் என்று ஒன்றில்லைஎன இரு ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். அதற்கு தமிழாகரர் தெ.முருகசாமிஎன்பவர்மனம் என ஒன்று உண்டுஎன மறுப்பு எழுதினார். பா. வீரமணி அவரை மறுத்துமனம் என ஒன்று இல்லைஎன பதிலடி கொடுத்தார். மீண்டும்தெ.முருகசாமி தன் முந்தைய நிலைப்பாட்டை வலியுறுத்தி யும் வீரமணியை மறுத்தும் பதில் எழுதினார். மீண்டும் வீரமணி அதனை மறுத்துமனமென ஒன்று இல்லைஎன உறுதி செய்தார். இவை அனைத்தின் தொகுப்பாக இந்நூல்வந்துள்ளது. ஆக ஒருபக்க கருத்தாக அன்றி இருதரப்பு வாதமாக ஒட்டியும் வெட்டியும் விவாதத் தொகுப்பாக இந்நூல்வந்துள்ளது.

 

 உண்மையில் மனம் என்று ஒன்று இல்லை . புலன்களால் பெறும் அறிவுகள், புலன் நரம்புச் செல்களில் மூளை நரம்பு செல்களில், நினைவுகளாகப் பதிந்து விடுகின்றன . இந்த நினைவுகளையே நாம் `மனம்எனக் கற்பனை செய்து கொள்கிறோம். மனம் என்பது அருவம். நிழல். மனம் என்று எந்த உறுப்பையும் சுட்டிக்காட்ட முடியாது. ஆனால், அறிவுக்கு அடையாளம் காட்ட முடியும். ஆம்! நமது ஐந்து பொறிகள்தாம் அறிவின் உறுப்புகள். அறிவின் வாயில்கள்என்று நடேச நாராயணன் விவாதத்தைத் துவங்குகிறார். இது உண்மையை நெருங்க செய்யும் வாதம். ஆயினும் முழு உண்மையாகுமா ?

 

 

தெ.முருகசாமி மனம் வேறு மூளை வேறு என வாதிடுகிறார். “மனமோ காட்டலாகாப் பொருளாகிய அக உறுப்புஎன்கிறார் . மேலும் மனமே மூளையை ஆட்டுவிப்பதாகக் கூறுமளவுக்குச் சென்றுவிடுகிறார். தொல்காப்பியம், குறள் இவற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளோடு வாதிடுகிறார் இவர். “.. தொல்காப்பியர்மக்கள் தாமே ஆறறிவுயிரேஎன்பதாகமட்டும் கூறவில்லை. அந்த ஆறாவது அறிவு மனத்தால் அமைவது என்பதாகவே பதிவு செய்துள்ளார்என்கிறார் முருகசாமி.

 

தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல்; அது மொழியின்இலக்கண முறைமையைப் பற்றிப் பேசுவது. எழுத்தைப் பற்றியோ, சொல்லைப் பற்றியோ ஒரு முடிவுக்கு வருவதற்குஅந்நூலைத் துணை கொள்ளலாம். ஆனால் மனம் என்பதுஉடற்கூற்றியல் அறிவியலைச் (ANATOMY) சார்ந்தது.அதுவும் இப்போது எலும்புகள், வயிறு, நுரையீரல், இதயம்போன்ற உறுப்புகளுக்குத் தனித்தனித் துறை வளர்ந்திருப்பதைப் போன்று மனதைப் பற்றிய உளவியல் [PSYCHOLOGY] துறையும் மூளையோடு தொடர்புடைய நரம்பியல் துறையும்நன்கு வளர்ந்துள்ளன. இக்காலத்தில் மனம் பற்றிய ஒருசரியான முடிவுக்கு வரவேண்டுமானால் உளவியலும் மூளைத் தொடர்புடைய நரம்பியல் துறையும்தாம் நமக்கு சரியான வழிகாட்ட முடியும் தொல்காப்பியமோ வேறு இலக்கண நூல்களோ அல்ல; நாம் எந்தப் பொருளைப் பற்றி ஆராய்ந்தாலும் அதற்குத் திரும்பத் திரும்பத் தொல்காப்பியத்தையும், திருக்குறளையும், மற்ற சமய நூல்களையும் எடுத்துக்காட்டி அவைகூறும் முடிவுகளே சரியானவை எனச் சாதிக்கிறோம் . இது இக்கால அறிவியல் உலகத்துக்குப் பொருந்தாதுஎன்கிறார் வீரமணி.

 

ஆறாவது அறிவு என்பது என்ன? இதற்குபழக்க அறிவாகும்என நடேச நாராயணர் கூறும் விளக்கம் போதுமானதல்ல. ஆறாவது அறிவு எது என்பது குறித்த தெளிவுமனம் குறித்த புரிதலுக்கு அடிப்படையாகத் தெரிய வேண்டும்.இதனை பகுத்தறிவென்பர். அதாவது நன்மை தீமைகளைப்பகுத்துப் பார்க்கும் அறிவென்றே பலரும் சொல்லிவைத்துள்ளனர் .ஆயினும் இதுவும் முழு உண்மையை நெருங்கவில்லை. “கருவிகளை படைக்கும் திறனேஆறாவது அறிவென மார்க்சும் எங்கெல்சும் வரையரைசெய்ததே சரியான பார்வையாகும். இதனை வீரமணி உள்வாங்கியுள்ளது அவரது வாதத்துக்கு வலு சேர்க்கிறது.

 

உளவியல் துறையை ஏன் மூளைதுறை என்று கூற வில்லை என்பன போன்ற சில வாதங்களோடும்; அறிவியல் ரீதியாக மூளையின் பாத்திரம் யாது? புற உலகின் பிரதி பலிப்புத்தான் சிந்தனை என மார்க்ஸ் எவ்வாறு முடிவுக்கு வந்தார் ? சில வேதியல் மருந்துகளின் உதவி கொண்டு மன வியாதிகளைத் தீர்க்க முடிவது எப்படி ? மூளையின் சிறுபகுதியை அறுவை சிகிச்சை செய்துகூட உளவியல் சிக்கல்களுக்கு தீர்வுகாணப்படுகிறதே எப்படி? மூளைதான் அடிப்படை என்பதை இதன் மூலமெல்லாம் அறியமுடியும் என வாதிடுகிறார் .

 

மூளைச்சாவு என்பதையே இப்போது மரணம்என ஏற்றுக்கொள்வதையும் தன் வாதத்திற்கு வலுசேர்க்க வீரமணி பயன் படுத்துகிறார். “எண் ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம்என்ற பழமொழி மெய்யாகிறது வீரமணி வாதத்தில். மூளைகுறித்த பல்வேறு அறிவியல் செய்திகளை விவரிக்கிறார். பெருமூளை , சிறுமூளை குறித்த அறிவியல் செய்திகளை தருகிறார். இதனை நாம் பள்ளியில் படித்திருக்கிறோம். அதனை வாழ்க்கையோடுஉரசிப்பார்த்திருக்கிறோமாஎன்பதுதான் கேள்வி. அதைத்தான் வீரமணி செய் துள்ளார்.

 

மகிழ்ச்சி, கோபம், என பல்வேறு உணர்ச்சிகளை மூளையே உணர்கிறதென்றும் ; அப்போதுஇரத்த ஓட்டமும் இதயத்துடிப்பும் மாறுபடும் ; இதயத்தில் கைவைப்போம் ; இதனால் மனம் இதயத்தோடு சம்பந்தப்பட்டதாகக் கருதிவிட்டோம் என்பதையெல்லாம் வீரமணி பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார் .

 

அன்பு ,பாசம், இரக்கம் போன்ற நல்லுணர்வுகளும் மூளையின் அறிவுச்சேகரங்களே என நிறுவுகிறார் . பேய், பிசாசு போன்றவைகற்பனையே எனச் சாடுகிறார் . அறிவியல் பார்வையோடுதான் இவற்றை அணுகவேண்டும் என்கிறார் .

 

மனம் என்ற ஒன்று இல்லை என்கிறபோது அதனோடுதொடர்புடைய ஆன்மா, கடவுள் போன்ற கருத்தோட்டங்களும் ஆட்டம் காண்கின்றன . மாயாவாதத்துக்குஎதிராகவும் கருத்து முதல் வாதத்துக்கு எதிராகவும் மார்க்சியத்தை அதாவது இயங்கியல் பொருள் முதல் வாதத்தை முன்வைக் கிறது . இது மிகவும் அடிப்படையானது . ஆகவே இந்நூலை மிக நுட்பமாகப் படித்து விவாதம் செய்தால் தத்துவப் புரிதல் வலுவடையும் .

 

இந்நூல் படித்து முடியும் முன் பல கேள்விகள் எழுவது தவிர்க்க இயலாது .

 

 மனம், ஆன்மா என்பதெல்லாம் மூளையின் உணர்ச்சிப் பிரதேசத்தின் பதிவு” என்ற அறிவியல் புரிதல் மிகச் சரிதான். ஆனால் அந்த உணர்ச்சிகள் ஒரு இயற்பியல் சக்தியாக தனிமனிதனிடமும் சமூகத்திலும் வினையாற்ற வில்லையா? இந்நிலையின் மனத்தின் சமூகப் பாத்திரம் குறித்தும்; தனிமனிதனுக்குள் மனதின் பாத்திரம் குறித்தும் வெறும் எந்திரவியல் பார்வை போதுமா? சரியானதா? பயன் தருமா ?

 

·மனச்சாட்சி , மக்களின் மனஓட்டம், சமூக உளவியல், மனதை வென்றெடுப்பது மனதை ஒருமுகப்படுத்துவது, மன உறுதி இவையொற்ற சொற்பிரயோகங்களுக்குப் பின்னால்உள்ள ஆற்றலை வெறுமே மூளையின் செயல்பாடென மட்டும் சுருக்கிக் கூறிவிட இயலுமா?

 

  ஒரு கருத்து மக்களின் கவ்விப் பிடிக்கும் போது அது ஒரு இயற்பியல் சக்தியாகி விடுகிறதுஎனக் காரல் மார்க்ஸ் அறுதியிட்டுக் கூறியது மனத்துக்கும் பொருந்தும் அல்லவா ? மார்க்சிஸ்டுகளும் மனம், மன உறுதி, மனச்சாட்சி போன்ற மனம் தொடர்பான வார்த்தைகளைத் தொடர்ந்து பெருமளவு பயன்படுத்திவருதல் கண்கூடு. இதன் பொருள் கருத்துமுதல் வாதிகள் நோக்கில் மனம் என்று இவர்கள் கூறாவிடினும் மனம் எனும் இயற்பியல் சக்தியை இவர்கள் குறைத்து மதிப்பிடவில்லை அல்லவா?

 

இது போன்ற கேள்விகளை தொடர்ந்து எழுப்பி விளக்கம்தேடும் போது ஒருங்கிணைந்த சரியான பார்வையும் புரிதலும் வலுப்பெறும் . சென்ற கட்டுரையில் ஓரிடத்தில் சுட்டிய , “மூளையும் மனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.”[ “The brain and the mind are two sides of the same coin.’] வாசகமே இப்போதைக்கு நம் தெளிவுக்கு வர போதுமல்லவா ?

 

அடுத்து ஆத்மா எங்கே இருக்கிறது ?

 

தொடர்வோம்

 

சுபொஅ.

05/11/24.

 

 

 

 

 

 

 

 

0 comments :

Post a Comment