365.242190 நாட்களே ஓர் ஆண்டு ….

Posted by அகத்தீ Labels:

 


 


 

365.242190 நாட்களே ஓர் ஆண்டு ….

 

  “ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடாதீர்கள்!” எனக் கிணற்றுத் தவளைகள் ஆண்டு தோறும் கத்தும் .இந்த ஆண்டும் உண்டு . கார்கேரியன் காலண்டர் அதுதான் ஆங்கிலக் காலண்டர் அடிப்படையில் ஊதியம் வாங்கிக் கொண்டு ,வாழ்வை நடத்திக் கொண்டுதான் இக்கூச்சல் !

 

சரி ! விஷயத்துக்கு வருவோம் !

 

இப்போது காலண்டர் என்பது 12 மாதங்கள் . 365/366 நாட்கள் . நாள் என்பது 24 மணி நேரம் . சரி இது என்ன புதுத் தகவலா ? இதை ஏன் எழுதி கழுத்தறுக்கிறீங்க எனக் கேட்போரே ! இதைக் கண்டடைவதற்கே வரலாற்றில் எவ்வளவு காலம் பிடித்திருக்கிறது தெரியுமா ?

 

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் யாரோ ஒருவரின் கண்டு பிடிப்பல்ல ’வெங்கலயுகம்’ தொடங்கி [ அதற்கு முன்னரும் முயற்சிகள் உண்டு ]வான் பார்த்து , நிழல் , மணல் ,நீர் எனத் தொடங்கி இன்றைய நிலையை அடைய பெரும் பயணம் நடந்ததே வரலாறு . இப்போது காலண்டரைப் பார்ப்போம்.

 

நமக்கு வரலாறு என்பது கதைதானே !

 

ஒரு முறை நாரதர் கிருஷ்ணனிடம் “ நீ மட்டும் அறுபதினாயிரம் கன்னியருடன் இருக்கிறீர்கள் .எனக்கு ஒன்று தரக்கூடாதா ?” என்று கேட்டார் . “ என்னை நினைக்காத ஒரு பெண்ணை நீ அனுபவிக்க கடவாய்” என கிருஷ்ணரும் வரும் கொடுத்தார் .அப்படி ஒரு பெண் உலகத்தில் தேடித்தேடி அலைந்தும் எங்குமே கிடைகாததால் நாரதர் தன் முடிவை மாற்றி தானே பெண்ணாக மாறி கிருஷ்ணரைப் புணர்ந்து ’பிரபவ’ முதல் ‘அட்சய’ வரை 60 குழந்தைகளைப் பெற்றார் . இதுவே ஆரிய ஆண்டுக் கணக்கு அறுபதாகி சித்திரை வருடப் பிறப்பானது . உலகெங்கும் இதுபோல் எண்ணற்ற புராணப் புளுகுகள் எல்லா நாட்டிலும் உண்டு .

 

 

 

ரோஸலிண்ட் மைல்ஸ் எழுதிய ‘உலக வரலாற்றில் பெண்கள்’ என்ற நூலில் பெண்கள் தங்கள் மாதவிடாய் , மகப்பேறு காலம் இவற்றை வான் நோக்கி பெளர்ணமி ,அம்மாவாசையைக் கணக்கிட்டு நட்சத்திரம் நோக்கி பானை ஓட்டில் குறித்து வைத்ததே காலண்டரின் தொடக்கம் என்பார் .

 

விவசாய வேலைக்கு மழைப்பொழிவை அறிய வான் நோக்கி நடசத்திரம் , சந்திரனின் தேய்வும் வளர்ச்சியும் இவற்றை ஆதாரமாகக் கொண்டு கணக்கிடலே பின்னர் காலண்டர் ஆனது ;வானவியலுக்கும் அடிப்படை ஆனது என்பதும் உண்மை .

 

2013 ஆண்டு ஸ்காட்லாந்தில் தொல்லியல் ஆய்வாளர்கள்  ஒரு காலண்டரை கண்டடைந்தனர் . இது அபெர்டீன்ஷையரின் வாரன் ஃபீல்டில் [Warren FieldAberdeenshire ] 10,000 ஆண்டுகள் பழமையான காலண்டர் அமைப்பின் பண்டைய ஆதாரங்களாகும் . இந்த நாட்காட்டி "முதல் ஸ்காட்டிஷ் நாட்காட்டி " ஆகும். சுமேரிய நாட்காட்டியைத் தொடர்ந்து எகிப்திய, அசிரிய மற்றும் ஏலமைட் [EgyptianAssyrian and Elamite calendars. ] நாட்காட்டிகள் வந்தன. இந்தியாவில் பஞ்சாங்கம் இவ்வகையில் உருவானது .

 

காலண்டர் என்றாலே  ரோம் நாட்டில் லத்தின் மொழியில்  “ கூப்பிடு” [to call out] என்றுதான் பொருள் . பிரெஞ்சு மொழி இதே சொல்லை அப்படியே நாட்காட்டிக்கு பயன் படுத்தியது .உலகம் இதை அப்படியே சுவீகரித்துக் கொண்டது . வர்ஷா என்னும் வடசொல்லிலிருந்து மருவியது வருடம் என்று கூறலாம். வர்ஷா என்றால்பொழிதல்என்பது பொருள். விவசாயத் தோடும் பெண்களின் வாழ்வியலோடும் பிணைந்தே காலண்டர் உருவானது என்பர் அறிஞர் பெருமக்கள்  . ஆகவே பொழிதல் எனும் பொருள்பட வருடம் என்ற சொல்லை பழக்கத்தில் ஏற்கலாம்தானே .ஆண்டு என்பது தூய தமிழ்ச் சொல்.

 

 

ஆதியில் 12 மாதங்கள் இல்லை .பத்து மாதங்களே இருந்தன . ஏப்ரல் ,ஜூன் ,ஜூலை ,ஆகஸ்ட்  இப்படி மாறி மாறி ஆண்டின் தொடக்கமாக இருந்தது உண்டு .ஒவ்வொரு நாட்டிலும் கோமாளி மன்னர்கள் போட்ட கூத்து இதன் பின் கதையாகும் .

 

சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சந்திரக் காலண்டர் ,சூரியனை அடிப்படையாகக் கொண்ட சூரியக் காலண்டர் என இரண்டும் புழக்கத்தில் வந்தன.

 

ஜனவரியை முதல் மாதமாகக் கொண்ட கார்கேரியன் காலண்டர் [Garoorian calender ]1592 ல் புழக்கத்தில் வந்தது . சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலமான வட அயணக் காலம் [ உத்திராயண காலம் ] ஜனவரியிலேயே தொடங்குவதால் ஜனவரியே ஏற்புடையதாயிற்று .

அப்போதும் ஏப்ரல்தான் ”வருடபிறப்பு” என அடம்பிடித்தோரை மட்டம்தட்ட உருவானதே ”ஏபரல் ஃபூல்” என்ற சொற்றொடரும் நிகழ்வுகளும். தை முதல் நாள் தமிழர் புத்தாண்டு என்பதும் இதனை நெருங்கி இருக்கிறது . சித்திரையின் ஆபாசக்கதை முதலில் பார்த்தோம் . அதை மறப்போம்.

365.242190 நாட்களே ஓர் ஆண்டு . ஆகவேதான் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரி 29 நாட்களாகி 366 நாட்கள் கணக்கு வருகிறது . உலகம் வர்த்தக மற்றும் நடைமுறைக்கு கார்கேரியன் காலண்டரை ஏற்றுக்கொண்டாயிற்று .நம் சம்பளநாள் ,பிறந்த நாள் ,திருமணநாள் எல்லாம் இக்கணக்கில்தான் . இதை இன்னும் ஆங்கில ஆண்டென்று பிழையாகச் சொல்லி வருகிறோம் .என் செய்ய ?

 

கார்க்கேரியன் காலண்டர் வழக்கில் வந்தாலும் அவரவர் மதம் ,பண்பாடு ,நாடு ,பிரதேசம் ,மொழி சார்ந்து பல்வேறு காலண்டர்களும் புழக்கத்தில் உள்ளன .அவை வெறுமே சடங்கு ,சம்பிரதாய ,பண்பாட்டு ஆண்டுகளே!

 

தமிழர் நமக்கு ஜனவரி 1, மற்றும் தை முதல் நாளே புத்தாண்டுகள் .

 

இப்போதும் காலண்டரை இன்னும் திருத்தி சில நாட்கள் பின்னுக்கு கொண்டு போக வேண்டும் என்கிற குரல் வானவியலாளர்கள் மத்தியிலே எழுகிறது .நாளை உலகு ஏற்கக் கூடும் . மாறாதது எதுவும் இல்லை .சனாதனமாய் பழமைக் கட்டி அழுவது பேதமையே !

 

சுபொஅ.

31/12/24.

 

 

 

 


0 comments :

Post a Comment