மகாத்மா ! எங்களை ஒருபோதும் மனித்துவிடாதே !

Posted by அகத்தீ Labels:

 


மகாத்மா !

எங்களை ஒருபோதும்

மனித்துவிடாதே !

 

ஒவ்வொரு நாளும்

மதவெறி

ஆட்டம் போடும் போதும்…

 

ஒவ்வொருநாளும் நீ

நேசித்த தரித்திர நாராயணர்கள்

மேலும் மேலும் அழுத்தப்படும் போதும்…

 

உன் உடையையே மாற்றிய

இந்தியாவின் முதுகெலும்பு

விவசாயிகள் ஒடுக்கப்படும்போதும்…

 

மவுனம் காத்துவிட்டு

இன்றொரு நாள் மட்டும்

அஞ்சலி செலுத்தும்

 

நடிப்பு தேசபத்தியே

இங்கு

கொண்டாடப்படுகிறது !

 

மகாத்மா !

எங்களை ஒருபோதும்

மனித்துவிடாதே !

அநீதிக்கு எதிராய்

குரல் கொடுக்காத யாரையும்

மன்னித்துவிடாதே !

 

 

சுபொஅ.

30/01/25


மனச்சாட்சி சொன்னது ,

Posted by அகத்தீ Labels:

 

மனச்சாட்சி சொன்னது ,

“ என்னோடு வாழ்வது

மிகமிக கஷ்டம்தான்.”

 

அவன் மறுமொழி சொன்னான்,

“ ஆம் .அறிவோம்.

இதயத்தை மரத்துப் போகச் செய்யும்

வித்தை அறிவோம்..”

 

மனச்சாட்சி மயங்கி விழுந்தது

மனக்குரங்கின் ஆட்டம் தொடங்கியது .

 

ஹிட்லர் ,கொயாபல்ஸ் ,முசோலினி

எல்லோரும் ஒற்றை உருவில்

ஒரே நாட்டில் ஒரே தேசத்தில்

ஒரே மொழியில் இரே குரலில் …

 

சுபொஅ.

29.01.25.

இது நெருப்பை பொதிந்திருக்கும் ஆவணம்

Posted by அகத்தீ Labels:

 




இது நெருப்பை பொதிந்திருக்கும் ஆவணம்

 

நூலின் தலைப்பைப் பார்த்ததும் ஓர் இலக்கிய பனுவல் என்ற எண்ணம் ஏற்படக்கூடும் ; ஆயின் இந்நூல் இதயத்தை உலுக்கும் நிகழ்கால  உண்மைகளின் தொகுப்பு . நாட்டு நடப்பின் ஸ்கேன் ரிப்போர்ட்.

 

 “ ‘புதிய’ இந்தியாவின் அடக்குமுறைகளையும் ,அவற்றுக்கு எதிரான போராட்டக் குரலையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் ஒரு நூல்…” என இந்தியப் பொருளாதார நிபுணர் ஜூன் த்ரீஸ் கூறியது மிகை அல்ல.

 

பீமா கோரன் ,சிஏஏ குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு , டெல்லி வன்முறை உடபட முக்கிய நிகழ்வுகளில் எந்த ஆதாரமும் இன்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் உண்மைக் கதைகளின் தொகுப்பு .இந்திய ஜனநாயகமும் , சட்டமும் ,நீதியும் ,மனிதமும் ,ஊடகங்களும்  அம்மணமாய் ஒடுக்குமுறையின் கைகருவியாய் மாறிய கொடூர வரலாற்றின் சாட்சி இந்நூல் .

 

பாதிரியார் ஸ்டான் சுவாமிகள் ,ஜி .என்.சாய்பாபா , உமர் காலித் ,பியூஷ் மனுஷ் ,வரவர ராவ் ,காலித் சைஃபி ,ஆனந்த் டெல்டும்பே,நடஷா நார்வால் , பட்டியல் மீக நீளமானது . அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தோர் ,ஒடுக்கப்பட்ட தலித் ,பழங்குடியினர் நலனில் அக்கறையோடு பாடுப்பட்டோர் , சிறுபான்மையோர் வாழ்வுரிமைக்கு எழுந்து நின்றோர் , ,மனித உரிமைப் போராளிகள் என மனிதம் பொங்கிய மனிதர்களை சிறையில் அடைத்து சித்தரவதை செய்து மகிழ்ந்த மோடி அரசின் சர்வாதிகாரத்தை தோலுரிக்கும் நூல் இது .

 

எந்தவித ஆதாரமும் இன்றி ,சட்டநெறிமுறையும் இன்றி இப்படி பழிவாங்க நீதிமன்றமும் துணைபோனது மகா கேவலம் . இதனை வாசிக்க வாசிக்க நெஞ்சம் கொதிக்கிறது .

 

நான் இந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த போது என் உறவுக்கார பேத்தி இமை  [ நான்கு வயது ] புத்தகத்தின் அட்டையைக் காட்டி கேட்டாள் , ”இது யாரு என்ன செய்றாரு “[குழந்தைக்கு சிறை என சொல்ல முடியுமா ?] “ தாத்தா ஜன்னல் வழியாக நிலாவைப் பார்க்கிறார்” என்றேன் . டக்கென குழந்தை கேட்டது ,” ஆச்சி எங்கே ?” . தாத்தாவோடு ஆச்சி இருக்க வேண்டும் எனக் குழந்தை எதிர்பார்க்கிறது .இதுதான் உறவின் மேன்மை .

 

இந்த நூலின் 176 வது பக்கத்தைப் புரட்டுங்கள் ; நர்கீஸ் சைஃபி ,காலித் சைஃபின் மனைவி கூறுவதைக் கேளுங்கள் .

 

“ சிறையில் இருக்கும் அப்பாவிற்காக ஒரு அட்டையில் ஓவியம் வரைந்தாள் என் மகள் மரியம் .நான் சிறைக்குச் சென்று அவரைச் சந்திக்கும் போது அதனைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி என்னிடம் கொடுத்தாள் . ஆனால் ,நான் அவரைச் சந்திக்க சிறைச்சாலை செல்லும் போது வாசலிலேயே அதனை அனுமதிக்க சிறைக்காவலர்கள் மறுத்துவிட்டனர்.இது தெரிந்ததும் அவள் மனம் உடைந்து போய்விட்டாள்.அடுத்த முறை சிறைக்குப் போகும் போது வெறொரு வழியை அவர் கண்டுபிடித்துவிட்டாள். அட்டையில் வரைந்ததையும் எழுதியதையும் போல் என் கையில் மருதாணியால் வரைந்து விட்டாள் . இப்போது என்னுடைய கையை எந்தக் காவலராலும் தடுக்க முடியாதுதானே.அப்படித்தான் நான் அடுத்த முறை சிறைக்குச் சென்று மரியம் எழுதியதையும் வரைந்ததையும் காட்டினேன்.”

 

அந்த அட்டையில் கையில் அப்படி என்னதான் இருந்தது ? குழந்தை வரைந்து படம் அத்துடன்  “we love you appuji proud of you” [ தந்தையே உன்னை நேசிக்கிறோம் ! உன்னால் பெருமை கொள்கிறோம் ] இப்படி குழந்தை சொல்வது  மகா பாதகமா ?

 

பாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு உறிஞ்சு குழாய் குவளை மறுக்கப்பட்டதையும் ; சாய்பாபாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் ,அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்பே அனுபவித்த சித்திரவதைகளையும் , உமர் காலித் எதிர்கொண்ட கொடுமைகளையும் இன்னபிற அநீதிகளையும் ஆய்வு ,வாகுமூலங்கள் ,ஆதாரங்கள் மூலம் இந்நூல் நெடுக குவித்திருக்கிறார்கள் .

 

பக்கங்கள் 39 முதல்  67 வரை  மொத்தம் 29 பக்கங்கள் , 241 முதல் 267 வரை மொத்தம் 27 பக்கங்கள் வெறும் பட்டியல் எனப் புரட்டிச் செல்ல முடியாது . ஒவ்வொரு தகவலிலும் ஓர் அழுத்தமான வரலாறும் சோகமும் புதைந்து கிடக்கிறது .

 

சாகர் தத்யாராம் கோர்க்கே என்பவரின் சிறை அனுபவம் மிகவும் பதற வைப்பதாகும் . சிறைக் கண்காணிப்பாளர் டி.யூ .பவாரை சந்தித்து மனுகொடுக்க காலில் செருப்பு இல்லாமல் சேற்றில் நிற்கும்படி சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் . கோர்க்கே செருப்பைக் கழற்ற முடியாது ;  “என் மூதாதையர் காலில் செருப்பணியும் உரிமையைப் போராடி நிலை நாட்டி இருக்கிறார்கள் .” என வாதிட மனுவைப் பெற மறுத்ததோடு தொடர்ந்து கொடுமைப் படுத்தி உள்ளனர் .சிறைச் சாலையில் தாண்டவமாடும் சாதியக் கொடுமைக்கு அளவே இல்லை .அண்மையில் ஓர் நீதிபதியே இதனைச் சுட்டியுள்ளாரே !

 

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதியன்று பாதிரியார் ஸ்டான் சுவாமி சிறையில் அடைக்கப்பட்டு நூறு நாட்கள் நிறைவடைந்திருந்தது. அப்போது அவர் ஓர் குறிப்பு எழுதினார் ,

 

“………………….. …………………. இங்கிருக்கும் விசாரணைக் கைதிகளைப் பார்க்கையில் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது .அவர்களிடமிருந்துதான் எனக்கு இரண்டாவது பலம் கிடைக்கிறது .அவர்களில் பெரும்பான்மையோர் பொருளாதார ரீதியாகவும் சமூகரீதியாகவும் பின்தங்கிய மக்களாகத்தான் இருக்கிறார்கள் . அவர்களில் பலருக்கும் அவர்கள் மீது என்ன வழக்கு போடப்பட்டிருக்கின்றன என்றோ ,என்ன மாதிரியான குற்றச்சாட்டு அவர்கள் மீது வைக்கப்பட்டிருக்கின்றன என்றோ கூட அறியாத அப்பாவி மனிதர்களாக இருக்கிறார்கள் . வழக்கின் குற்றப்பத்திரிகையைக் கூட பார்த்திராதவர்கள்தான் அவர்களில் அதிகம் பேர் . சட்ட உதவியோ வெறெந்த விதமான உதவியோ கிடைக்கப் பெறாமல் பல ஆண்டுகளாகச் சிறையில் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் . எந்த அடிப்படை வசதியும் இல்லாமல்தான் பெரும்பாலான விசாரணைக் கைதிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . ஒருவருக்கொருவர் இயன்றளவிற்கு உதவிக்கொள்வதற்கான சூழலையும் சகோதரத்துவதையும் இங்கே பார்க்க முடிகிறது .”

 

21 மே 2022 அன்று ரமேஷ் கைசோர்  சிறையிலிருந்து எழுதிய  ஓர் கவிதை , தனக்கு கொசுவலை மறுக்கப்பட்டபோது எழுதியது ,’ எனதருமைக் கொசுவலையே’ என்பதாகும் . அந்தக் கவிதையின் கடைசில் சொல்கிறார் , “ ஆனால் , / துக்கமில்லாதவனும் / அமைதியில்லாதவனும் / உரிமைக்காக எப்போதும் போராடுவான் / உன்னை என்னிடமிருந்து பிரித்த / அந்த அதிகாரிக்கு இது தெரியாது போலேயே / அனதருமைக் கொசுவலையே”

 

ஆம் ,கடும் நெருக்கடிகளும் ஒடுக்குமுறைகளும் லட்சியவாதிகளை நசுக்கிவிடாது . மாறாக அந்த சூழ்நிலையையே போரட்ட களமாக்கிவிடுவார்கள் .

 

14 மார்ச் 2021 நடாஷா நர்வால்  எழுதிய கடிதத்தில் சிறைக்குள் வரலாறே அறியாத விசாரணைக் கைதிகளைக் கொண்டு  பெண்கள் தினத்துக்கு அரங்கேற்றிய நாடகத்தைப் பற்றிச் சொல்கிறது . ஒன்றுமறியாத அவர்களை சாவித்திரிபாய் பூலே , ஃபாத்திமா ஷேக் ,ராணி லட்சுமிம்பாய் , சரோஜினி நாயுடு என நடிக்கவைத்த அனுபவம் . போராளிகளுக்கு சிறைக்கூடமும் பயிற்சி பாசறைதான் எனச் சொல்கிறது .

 

இந்த புத்தகத்தில் நான் வாசிக்கும் போது அடிக்கோடிட்ட வரிகளை எல்லாம் எழுத சுட்டிக் காட்டி முனைந்தால் அது முப்பது நாற்பது பக்கங்களைத் தாண்டிவிடும் . ஆகவே சுருக்கிக் கொள்கிறேன் . இந்தப் புத்தகத்தை கண்கலங்கி பாதியில் மூடிவிடாமல் முழுதாய் வாசிக்க வேண்டுகிறேன். இதில் சொல்லப்பட்ட பல செய்திகள் நம் விழியைத் திறப்பவை எனில் மிகை அல்ல .

 

நக்சல் அரசியலோடு எனக்கும் மாறுபாடு உண்டு . ஆயின் ,அவர்களின் அர்ப்பணிப்பை தியாகத்தை நான் ஒரு போதும் குறைத்து மதிப்பிடமாட்டேன் . அவர்கள் ஒரு போதும் தேசவிரோதிகள் அல்லர் .

 

“நம்பிக்கையையும் போராட்ட குணத்தையும் எந்த சர்வாதிகாரத்தாலும் கொன்றுவிட முடியாது .சில நேரம் அவை வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம் அல்லது அதன் வீரியம் குறைந்தது போலத் தெரியலாம் . ஆனால் நமது நம்பிக்கையும் போராட்ட குணமும் மீண்டும் மலர்வதற்கான வழியைக் கண்டுபிடித்துவிடும்.”

நன்கு தமிழாக்கம் செய்த அன்பு மகன் .பா.சிந்தனுக்கு வாழ்த்துகள் .

 

இன்னும் எத்தனை காலத்திற்கு நிலவைக் கூண்டிலேயே அடைத்து வைக்க முடியும் ? [இந்திய அரசியல் கைதிகளின் குரல் ]

ஆசிரியர்கள் :சுசித்திரா விஜயன் ,பிரான்ஸ்கா ரெச்சியா, தமிழில் : இ.பா.சிந்தன்,

வெளியீடு : எதிர் வெளியீடு , 96 ,நியூ ஸ்கீம் ரோடு , பொள்ளாச்சி – 642 002 .

தொடர்புக்கு : 04259 26012 / 99425 11302  ethirveliyedu@gmail.com  ,  www.ethirveliyedu.com

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

27/01/2025 .

 

 

 


செய்திகளின் எதிரொலி

Posted by அகத்தீ Labels:

 




செய்திகளின் எதிரொலி

 

[ சமூக வலைதளங்களில் இன்று பார்த்த செய்திகளின் எதிரொலி ]

 

ஒருவர் இதயத்தை

தனியே சுமந்தபடி

மெட்ரோ ரயில் பறக்கிறது

இன்னொருஉயிர் பிழைக்கிறது

ஹைதராபாத்தில்

மருத்துவ சாதனை !

 

சாதாரண மனிதன்

மருத்துவக் காப்பீடுக்கு

நாயாய் அலைகிறான்

செலவு செய்ததில்

கால்வசி பெறவும்

கடும் போராட்டம் .

பிரபல நடிகரோ

35 லட்சம் கேட்கிறார்

25 லட்சம் கிடைக்கிறது உடனே !

உயிர் காப்பீட்டில் கூட

மலையும் மடுவுமாய்

ஏற்ற தாழ்வுகள் !

 

கோமியம் குடித்தால்

நோயற்ற வாழ்வு

நூறாண்டு வாழலாம்

உபதேசிப்பவர்

நட்சத்திர மருத்துவமனையில்

வெளிநாட்டில் சிகிட்சை !

 

மருத்துவ கார்ப்பரேட்கள் மீது

மக்களின்  எல்லையற்ற கோபம்

அதிசய சுகமளிக்கும் தொடுதல்

அதை சாப்பிட்டால் போதும்

இதைச் செய்தால் போதும்

இப்படி நடந்தால் போதும்

இலவச ஆலோசனைகளில்

சீக்கிரம் விடை பெறும் உயிர் !

 

மருத்துவ அறிவியல்

சகலருக்குமானது

மருத்துவக் கண்டுபிடிப்புகள்

மகத்தானவை

கார்ப்பரேட்டுகளின் லாபவெறியில்

வியாபாரப் பொறியில்

உயிர்கள் பணையம்

 

நோயே அண்டாமல் வாழக்

கனவு காண்பது இனிது !

நோய் நம்மை சுற்றி

முற்றுகை இட்ட வண்ணம் உள்ளதே !

சிகிட்சை கைக்கு எட்டும் வகையில்

மருத்துவ அறிவியல் சாதனை

வேருக்கும் விரைந்து பாயும்

சமூக விடியல் பூப்பது எப்போது ?

 

சுபொஅ.

19/01/25



எது ஆன்மீகம் ?[1]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [1}

 

 “மதம் வேண்டாம் சார் ! ஆனால் Spiritual outlook தேவை.” என்றார் நண்பர்.  

 

உறவினர் பலரிடம் உரையாடும் போதும் இதுபோன்ற வாதம் எழுந்தது உண்டு .

 

ஆன்மீகம் [Spiritual] என்ற சொல் ஒவ்வொருவராலும் அவரவர் புரிதலுக்கு ஏற்ப ஒரு தற்காப்பு முகமூடியாய் பயன்படுத்தப்படுகிறது . எது ஆன்மீகம் என்று விவாதிக்க புகுன்றால் பலர் பலவிதமாய் வியாக்கியானம் செய்கிறார்கள் .

 

ஆத்திகம் ,ஆன்மீகம் ,நாத்திகம் ,பகுத்தறிவு  இப்படி எல்லா சொற்களும் பொருளுடைத்தனவே என்பதில் ஐயமே இல்லை . ஆயின் இச்சொற்களை யார் எங்கு எதற்கு எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியம்.

 

ஆத்திகம் ,ஆன்மீகம் என்பது வெளிப்பார்வைக்கு ஒற்றைச் சொல்லாகத் தோன்றினும் இதற்குள் ஆயிரம் வகைப்பாடுகள் உண்டு .

 

அதுபோல் நாத்திகம் ,பகுத்தறிவு என்பதைச் சார்ந்தும் நிறைய வகைப்பாடுகள் உண்டு .

 

ஒவ்வொன்றையும் தெளிதல் மிக முக்கியம் . பொதுவாய் சொல்லப்படும் வரையறையை முதலில் பார்ப்போம் .அவை சரியா பிழையா என பின் தொடர்வோம்.

 

ஆன்மீகம் என்பது மதம் சார்ந்ததல்ல என கருதும் நண்பரின் வாதத்தை முதலில் பார்த்தோம் . அது மெய்யா ?

 

ஆன்மீகம் என்பதை வாழ்வின் மெய்ப்பொருளைத் தேடும் உள்நோக்கிய பயணம் என வியாக்கியானம் செய்து கொள்வார்கள் .

ஆன்மீக உணர்வை தேடலை ஒவ்வொருவரும் தனித்தனியேதான் தேட முடியும் . பெற முடியும்.

ஆன்மீகத் தேடலுக்கு குறிப்பிட்ட விதிகளோ கட்டுப்பாடுகளோ யாரும் வரையறை செய்ய வில்லை .ஒவ்வொருவரின் ஆன்மீகத் தேடலும் தனித்துவம் ஆனது .

 

ஆயின், மதம் அத்தகையதா ? இல்லை.

மதம் ஒரு குழுவாக ஒரு பிரிவாக இயங்கக்கூடியது .அதன் உறுப்பினராகத்தான் நீ இருக்க முடியும் .

மதம் சில குறிப்பான சடங்கு சம்பிரதாயங்கள் விதிமுறைகள் கட்டுப்பாடுகளுக்கு உள்ளடங்கியவை.

மதம் எனப்படுவது நம்பிக்கை .புனித நூல் ,கடவுள் , வழிபாடு , சடங்காச்சாரங்களின் தொகுப்பு .

 

இவைகளை வரையறையாகக் கொண்டால் ஆன்மீகம் தனிப்பட்ட விவகாரம் ,மதம் ஓர் குழு சார்ந்தது என்கிற முடிவுக்கு வரலாமா ?

 

அப்படி ஆயின் ஆன்மீகம் பேசுவோர் யாரையும் வெறுக்க இயலாது .யாரையும் குரோதக் கண் கொண்டு நோக்கலாகாது . எல்லோரையும் அன்பால் அரவணைக்க வேண்டும் . வெறுப்பின் நிழல்கூட விழக்கூடாது . இப்படிச் சொல்வதா ?

அல்லது ஆன்மீகம் என்பது தன்னைச் சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாது தன் சுய திருப்தியில் சுருண்டுபோவதா ? தான் ,தன் மனம் ,தன் பேரின்பம் என்கிற சுயநல சிமிழில் அடங்கி ஒடுங்கி கிடப்பதா ?

 

ஆன்மீகம் என்போர் மதம் சார்ந்து உரையாடத் தொடங்கின் அவர் மதவாதியா ஆன்மீகவாதியா ?

நம்மைச் சுற்றிலும் ஆன்மீகம் பேசுவோர் , தன்னைச் சுற்றி ஒளிவட்டம் போட்டுக்கொண்ட ஆன்மீக குருக்கள் எனும் ஆன்மீக வியாபாரிகள் நிறைந்துள்ளனரே ! எல்லா ஊடகங்களிலும் ஆன்மிக இணைப்பு /பக்கங்கள் உண்டு . இவை எல்லாம் மதம் சாராதவையா ? மூடநம்பிக்கை ,வெற்று சடங்காச்சாரங்கள் , போலிப் புனைவுகள் , ஜனநாயகமற்ற ஆதிக்க கருத்தோட்டங்கள் , மாறுதல்களை செரிக்க முடியா ஒவ்வாமை ,பிற மதம் பிற பிரிவினர் மீது வெறுப்பு ,தன் மத வெற்றுப் பெருமிதம்  இவைதானே மண்டிக் கிடக்கின்றன .

 

அப்படியானால் அவை ஆன்மீகம் என்ற சொல்லுக்குள் அடங்குமா அடங்காதா ? அடங்குமாயின் ஆன்மீகம் மதத்தின் மீது பூசப்பட்ட கவர்ச்சி முலாம் எனலாமா ? அடங்காதாயின் ஆன்மீகப் போர்வையில் தொடரும் இந்த அழிச்சாட்டியங்களை எவ்வகையில் சேர்ப்பது ?

 

குழப்பம் தவிர்ப்பது ஆன்மீகவாதிகள் கடமை . ஆனால் குழப்புவதை மட்டுமே செய்கின்றனரோ ?

 

இதுபோல் நாத்திகத்திலும் உண்டு .

 

தொடர்வோம்….

எது ஆன்மீகம் ?{2]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [2]

 

ஆன்மீகம் பற்றிய விவாதம் நாத்திகத்தை தொடாமல் செல்ல இயலாது . நாத்திகம் குறித்து சில செய்திகள் தெரிவோம்.

 

 பொதுவாய் நாத்திகர் என்று சொன்னாலும் அதிலும் நாத்திகர் ,பகுத்தறிவாளர் ,சுயமரியாதைக்காரர் ,கம்யூனிஸ்ட் ,மதச்சார்பற்றோர் ,மதமறுப்பாளர் ,கடவுள் மறுப்பாளர் , ஐயுறுவோர் ,கடவுள் கவலையற்றோர் ,சுதந்திர சிந்தனையாளர் ,அறிவியல் பார்வையாளர் ,பொருள் முதல்வாதி ,லோகாயவாதி ,சித்தர் மரபு ,ஆதிபவுத்தம் ,சார்வாகம் இப்படி பல வகைப்பாட்டில் நாத்திகம் அல்லது பகுத்தறிவு தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உலகெங்கும் இயங்குகிறது

 

Irreligion, which may include deismagnosticismignosticismanti-religionatheismskepticismietsismspiritual but not religiousfreethoughtanti-theismapatheismnon-beliefpandeismsecular humanism, non-religious theismpantheismpanentheism, and New Age, varies in the countries around the world. இப்படி விக்கிபீடியா பெரிய பட்டியலையே சுட்டுகிறது .இவற்றை அப்படியே தமிழாக்கம் செய்யவில்லை .தமிழில் நாமறிந்த சிலவற்றை ஆரம்பத்தில் சுட்டினேன்.

 

எல்லோரும் ஒருப்போல் பேசுவதில்லை . ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்த பார்வை உண்டு .ஆயினும் இப்பிரிவினர் எல்லோரும் மனிதனை அனைத்துக்கும் மேலாக மதிக்கின்றனர் .அறிவைப் பயன்படுத்தக் கோருகின்றனர் . உலக மாந்தரை சாதி ,மத ,இன ,பிரதேச இன்ன பிற அடிப்படையில் பிளவுபடுத்துவதை நிராகரிக்கின்றனர் . கண்மூடிப் பழக்கங்களை கேள்விக்கு உட்படுத்துகின்றனர் . ஆயினும்  “சமூக மாற்றம் ”  [ social change ]எனும் கேள்வியில் நாத்திகர் எல்லோரும் ஒரே நிலையில் இல்லை. பொதுவாக  “சமூக சீர்திருத்தமே” [social reform] பெரும்பாலோர் நிலை .ஆயினும் ,உங்களுக்குத் தெரியுமா இந்த நாத்திகர்கள் யாரும் பிற மதவழிப்பாட்டு தலங்களை இடித்ததில்லை .

 

மொத்தத்தில் மனிதத்தை உயர்த்திப் பிடிப்பவர்களே நாத்திகர்கள் . இதில் தவறினால் அவர்களை நாத்திகர்கள் எனச் சொல்லல் தீதே !

 

பெரியார் பேசிய நாத்திகமும் அறிவியல் அறிஞர் ஸ்டீவன் ஹாக்கிங் பேசிய நாத்திகமும் ஒரே குரலில் இல்லை . பெரியார் சாதி என்னும் இழிவை வெறுத்தார் .சாதியை நியாயப்படுத்தும் மதத்தை எதிர்த்தார் .மதத்தை காக்கும் கடவுளை நிராகரித்தார் . ஆக மனிதனின் சமத்துவ நோக்கில் கடவுளை நிராகரித்த மனிதநேயர் அவர் . அவர் பாணி சீழ்க் கட்டியை நீக்க அறுவை சிகிட்சை செய்யும் பாணி . வலுவாக  கடவுள் மறுப்பு ,நாத்திகம் ,பகுத்தறிவு பேசி மக்கள் தலைவராய் நின்றதுதான் இவரது தனித்துவம் .சாக்ரட்டீஸ் இங்கர்சால் போன்றோரின் பகுத்தறிவுவாதம் இன்னொரு தளம் .

 

 “இயங்கியல் பொருள் முதல்வாத” சித்தாந்த அடிப்படையில் கடவுளையும் மதத்தையும் அணுகியவர்கள் கம்யூனிஸ்டுகள் . எல்லாவகையிலும் மனிதர்களுக்கிடையே சமத்துவம் தழைக்க வேண்டும் என்பது அவர்கள் நிலை . சமூக மாற்றமே இவர்களின் இறுதி இலக்கு.

 

ஸ்டீவன் ஹாக்கிம் ஓர் இயற்பியல் அறிஞர் . இளமையிலேயே இறந்து போவார் என்கிற மருத்துவக் கணிப்பை ; மீறி உடல் முழுவதும் சதை செயலற்று முடங்கிய போதும் சிந்திப்பதை நிறுத்தாமல் இயற்பியல் உலகில் சாதனை செய்தவர் . அவர் அறிவியல் ரீதியாக கடவுளை மறுத்தார் .அவர் பேசிய நாத்திகம் அறிவியல் தளத்தில் சவாலாக நிற்கிறது .

 

“விசுவாசி,” “ஐயுறாதே என்பது மதங்களின் பாதையாகவும் “கேள்வி கேள்,” “சந்தேகி என்பது அறிவியல் பாதையாகவும், பார்வையாகவும் உள்ளது.

 

மதங்களைப் பற்றிய விமர்சனம்தானே எல்லா தத்துவ விமர்சனங்களுக்கும் அடித்தளம். ஆனால் மதங்களை அறிவியல்பூர்வமாகக் கூட விமர்சிக்க முடியாத ஒரு பாசிச சமூகச் சூழல் இன்று நிலவு கிறதே ஏன்?

 

ரிச்சர்ட் டாக்ஃ கின்ஸ் என்கிற மேலைதேச மரபணு விஞ்ஞானியும் பகுத்தறிவாளரும் தன் பத்து வயது மகளுக்கு எழுதிய புகழ்பெற்ற கடிதத்தில் கூறுவார்: “துப்பறியும் நிபுணர்கள் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி உண்மைகளை கண்டறிவதுபோல் எல்லாவற்றையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்

 

கடவுள், புனிதநூல், பழம்பெருமை எல்லாம் இத்தகு விமர்சனத்துக்கு உட்பட்டதே என்பதே பகுத்தறிவாளர் வாதம். இது ஒரு பாதை.

 

இப்படி புனித நூல்களை ஆராயக்கூடாது என்பது மத நம்பிக்கையாளர் வாதம்

 

. “திருடனைக் கண்டுபிடிப்பதற்காக வீட்டில் சோதனை செய்ய நுழையும் போலீஸ்காரர் மனோபாவத்துடன் கீதையையோ பிற மதத்தவர் கௌரவிக்கும் மார்க்க தரிசன நூல்களையாவது படிப்பதில் பயனில்லை. படிப்பது கூடாது என்றார் ராஜாஜி. 

 

இன்று அதற்கும் ஒருபடி மேலே போய் அவை  கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்று வாதிடப்படுகிறது.  அறிவியல் கண்டுபிடிப்புகளை கருத்துக்களைக் கொண்டு மதவாத கருத்துக்களை நியாயப்படுத்தும் ஆபத்தான போக்கும் தலைதூக்கியுள்ளது.

 

அறிவியலைப் பற்றி நின்று உண்மையைச் சொல்ல நாம் தயங்கக்கூடாது. அறிவியல் என்பது இத்தகைய சோதனைகளைக் கடந்து வெற்றி பெறவே என்பதறிக !

 

சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் பழுத்த பகுதறிவாளர் ,பொதுவுடைமை சித்தாந்தி .அவர் பகுத்தறிவு என்றால் என்ன என்ற கேள்விக்கு சொன்ன பதில் முக்கியமானது .

 

பகுத்தறிவின் தன்மை என்ன? எல்லா விஷயத்திலும் பகுத்தறிவை உபயோகித்தல்; எங்கே கொடுங்கோன்மை தாண்டவமாடுகிறதோ அங்கே பகுத்தறிவு எதிர்த்துப் போராடும்எங்கே சுதந்திரத்திற்கு அபாயம் நேரிடுகிறதோ அங்கே பகுத்தறிவு இத்யாதி அபாயத்தைத் தடுக்கச் செல்லும். எங்கே பசியும் பிணியும் வறுமையும் அறியாமையும் வருத்து கின்றனவோ அங்கே பகுத்தறிவு பசித்தோருக்கும் வருந்துவோருக்கும் உதவிபுரிந்து நிற்கும்இதைத்தான் உண்மையான பகுத்தறிவின் அடையா ளம். மற்றவைகளெல்லாம் போலிப்பகுத்தறிவேஎன்றார்

 

 

ஆன்மீகமும் அன்பைத்தானே போதிக்கிறது என்கிறார்கள் .அதனையும் அலசுவோம்….

 

 

தொடர்வோம்…

 

சுபொஅ.

22/10/24.

 

 

எது ஆன்மீகம் ?[3]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [3]

 

 “பாவப்பட்ட மதங்களை எதிர்க்கும் நீங்கள் பவர்புல்லான மதங்களை எதிர்ப்பதில்லை ஏன் ?”

 

நான் இத்தொடரை எழுதத் துவங்கியதும் ; எதிர்ப்பும் பிறந்து விட்டது .அப்படியாயின் நான் செல்லும் பாதை சரிதான் .

 

முதலில் நான் குறிப்பிட்டிருப்பது என் முதல் கட்டுரைக்கு ஒரு நண்பர் போட்ட மறுமொழி . நான் எந்த மதத்தையும் குறிப்பிடாத போதே இப்படி தானாக வந்து குதிக்கிறார் .அவர் நோக்கம் ரகசியமல்ல .பிற மத வெறுப்பும் குரோதமுமே !

 

ஒரு கேள்வி . உலகில் எத்தனை மதங்கள் இருக்கின்றன ? சரியாக கணக்கிட முடியாமல் ஆய்வாளார்களே திணறிக்கொண்டிருக்கின்றனர் . தோழர் அ.குமரசேன் அண்மைக் கட்டுரை ஒன்றில் உலகில் சுமார் நாலாயிரத்துக்கும் அதிகமான மதங்கள் இருப்பதாய் தோராயமாகத்தான் சொல்லி இருக்கிறார் . அதுபோல மேட்ரிக்ஸ்என்ற திரைப்படத்தை தொடர்ந்து     ‘மேட்ரிக்ஸியம் (Matrixism)’ என்ற மதமே 2004 ல் உருவாக்கப்பட்ட வேடிக்கையை சொல்லியிருக்கிறார் .

 

நான் ஒரு கட்டுரையில் படித்தேன் சிலுவையை தலைகீழாக வைத்து சாத்தானை வழிபடும் ஒரு மதப் பிரிவும் உண்டாம் .ஜப்பானில் அடிக்கடி கூட்டாக தற்கொலை செய்துகொள்ளும் ஒரு மதப்பிரிவு உண்டு .

 

ஆபிரஹாமிய மதங்கள் எனச் சொல்லப்படும் கிறுத்துவம் ,இஸ்லாம்,யூதம் , சீன மதங்களான கன்பியூஸிசன் ,டாவோயிசம் ,சீனா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஓங்கி நிற்கும் புத்தம் , ஆப்பிரிக்க நாடோடி மதங்கள் , பழங்குடி மதங்கள் ,கீழை தேசத்து மதங்கள் , ஆதி வழிபாடுகள் , ஒரு மதத்திலேயே தோன்றிய வெவ்வேறு பிரிவுகள் இப்படி வகைவகையாய் மதங்களைப் பெற்றுப் போட்டுள்ளது மனிதகுலம் .

 

கிறுத்துவ ,இஸ்லாம் ,புத்தம் உட்பட உள்ள மதங்களில் பல்வேறு தனித்த பிரிவுகள் உண்டு .அவை ஒன்றையொன்று கடுமையாக எதிர்த்து நிற்பதும் கண்கூடு . ,ஓரிறைக் கோட்பாட்டை நோக்கி நகர்ந்த மதங்கள் , கணக்கற்ற கடவுள்களை சுமக்கும் மதங்கள் , கணக்கற்ற வழிபாட்டு முறைகள் பட்டியல் போடப் போட நீளும்

 

நம் நாட்டில் இந்து மதம் என்கிற பெயரில் ஒரு கதம்பம்  பிரிட்டீஸ்காரன் வகைப்படுத்தியதே . அப்போது அவர்கள் தேவைக்கு மக்கள் தொகை கணகெடுப்பு நடந்த போது , யாரெல்லாம் கிறுத்துவர் இல்லையோ , யாரெல்லாம் இஸ்லாமியர் இல்லையோ அவரெல்லாம் இந்து என்று ஒரு லேபிள் ஒட்டி பிரித்தான் .                                                          

 

 

ஆயின் , இந்திய துணைக் கண்டத்தில் பிராமணியம் அல்லது சனாதன தர்மம் , சைவம் (சிவன்), வைணவம் (திருமால்),  கௌமாரம் (முருகன்),  காணபத்தியம் (விநாயகர்), சௌரம் (சூரியன்),  சாக்தம் (சக்தி) நாட்டார் வழிபாடுகள் ,வைகுண்டரின் ஐயா வழி ,வள்ளலாரின் சமரச சன்மார்க்கம் , நாராயண குருவின் வழிவந்தோர் , கர்நாடகாவில் வலுவாக உள்ள லிங்காயத் உள்ளிட்ட பிரிவுகள் , மெய்வழிச் சாலை , மேற்கு வங்கத்தில் ஆனந்த மார்க்கிகள் . ஹரேகிருஷணா இயக்கத்தினர் எல்லாவற்றையும் இந்து என்கிற ஒற்றைச் சொல்லில் அடக்க முடியமா ?

 

சைவம் என்று சொன்னால் அது தமிழ்நாட்டில் புழங்கும் சைவசித்தாந்தம் ,  குஜராத் வட இந்தியாவில் புழங்கும் பாசுபத சைவம் மற்றும் அகோரிகள் ,வீரசைவம் ,லிங்காயத் , காஷ்மீர் சைவம் இப்படி பல பிரிவினர் . வைணவத்திலும் தென்கலை ,வடகலை மட்டுமல்ல வட இந்திய வைணவத்துக்கும் தென் இந்திய வைணவத்துக்கும் வேறுபாடு உண்டே .

 

இதில் வேடிக்கை என்ன வெனில் இதில் ஒரு பிரிவினர் தங்கள் கடவுளையும் வழிபாட்டு முறையையும் தவிர மற்றவற்றை மதிக்க மாட்டார்கள் . இறைவன் ஒருவன் அன்பானாவன் கருணை மிக்கவன் அருளாளன் எல்லாம் தெரிந்தவன் எங்கும் நிறைந்தவன் என்று சொன்னாலும் நடைமுறையில் ஒருவருக்கொருவர் முறுக்கிக் கொண்டுதான் நிற்பர் .இது எங்க பழக்கம் என்பதில் பெருமிதம் கொள்வர் .

 

எல்லா மதங்களும் கடவுள் நம்பிக்கையை ஆதாரப்பட்டே சொர்க்கம் ,நரகம் ,கர்மபலன் இப்படி பல  அறிவுக்குப் பொருந்தா கருத்தோட்டங்களையும்  சடங்காச்சாரங்களையும் பற்றி நிற்கும் .

 

இவ்வளவு மதங்கள் ஏன் ? இவ்வளவு மோதல்கள் ஏன் ?

 

சிந்தனைச் சிற்பி தோழர் ம. சிங்காரவேலர் மதம் ,கடவுள் ,மூடநம்பிக்கை , அறிவியல் பார்வையோடு இணைத்து எவ்வளவோ எழுதியுள்ளார் . நாம் வாசித்தோமோ ? உள்வாங்கினோமா ?

 

அவர் ஓர் கட்டுரையில் கேட்கின்றார் , “கடவுளை தயாபரன் ,ஆபத்பாந்தவன் ,அன்பன் எந்த மாத்திரத்தில் இந்தக் கொடுமைகளை மறக்க  முடியுமா ? 60,000 சமணர்களைக் கழுவில் ஏற்றினது கடவுள் பெயராலன்றோ ? கோடானகோடி பிசாசு பிடித்தவர்கள் என்று பெண்மக்களை அடித்துக் கொன்றது கடவுள் பெயரால் அன்றோ ? கிறுத்துவரும் முகமதியரும் கோடிக்கோடியாக 500 வருஷ காலம் சிலுவைப்போர் [ crusades] என்ற கொடும்போரில் மாண்டது சாமி பெயரால் அன்றோ? சாமி என்ற பெயரால் எத்தனை கட்டடங்கள் கோயில்கள் இடிந்தன ? எத்தனை நாடுகள் நாசமாயின ? சாமிக்காக இன்றைக்கும் நமது நாட்டில் எத்தனை தலைகள் உருளுகின்றன?”

 

“ இரண்டு உலகப் போர்களில் , இழந்ததைவிட மத மோதல்களில் அதிகம் இழந்துவிட்டோம் ” என்பார் ரிச்சர்ட் டாக்ஃ கின்ஸ் .

 

ஆன்மீக அலசலுக்கு கடவுள் கணக்கும் தெரிய வேண்டும்தானே.

 

தொடர்வோம்…

 

சுபொஅ.

23/10/24.