Time Machine

Posted by அகத்தீ Labels:




"Time Machine" அதாவது “கால இயந்திரம்” ஒன்று என் கனவில் வந்தது . எனக்கும் அதற்கும் உரையாடல் தொடங்கியது .

TM : என் மீது ஏறிக்கொள்! நீ விரும்பிய பழைய காலத்துக்கு எடுத்துச் செல்கிறேன் .

நான் : என் இணையரையும் அழைத்துக் கொள்ளட்டுமா ?

TM : ஆஹா , வரலாம் .தடை இல்லை . முதுமையில் காதல் கெட்டியாக இருக்கிறது போல……. ம்…ம்.. நடக்கட்டும் …நடக்கட்டும்…

நான் : மணமுடித்து வருடங்கள் கடகடவென உருண்டோடிவிட்டதே …

TM : சரி ! எந்த வருடம் எந்த தேதிக்கு பின்னுக்கு போக வேண்டும் …

நான் : [ சற்று வெட்கத்தோடு ] என் இணையரை பெண் பார்த்த நாளுக்கு…

TM : ஓ ! அங்கிருந்து கதை தொடங்கவா ? ஏன் ?

நான் : நான் அன்றிலிருந்து செய்த தவறுகள் ,அவசரக் குடுக்கைத் தனங்கள் , கோப தாபங்கள் , தடுமாற்றங்கள் ,புரிதல் குறைபாடுகள் எல்லாம் எனக்கும் அவளுக்கும் இப்போது புரிகிறது … பக்குவம் வந்துவிட்டது …

TM : அதனால் என்ன சொல்ல வருகிறீர்கள் …

நான் : பழையபடி அங்கிருந்து வாழ்வைத் தொடங்கினால் இந்த ஐம்பதாண்டு அனுபவத்தோடு தெளிந்த நீரோடையாக வாழ்க்கைக் கொண்டு போகலாம் .. தென்றல் மணக்க ரீங்காரமிடலாம்…

TM : எல்லாம் சரி ! புதிய தப்புகள் நிகழாது என உங்களால் உறுதிகூற முடியுமா ? இனி கோப தாபம் உருவாகாதென்று உறுதியாக சொல்ல முடியுமா ? கணினி இல்லாத அலைபேசி இல்லாத அமேசான் இல்லாத சுவிக்கி இல்லாத ; ‘இன்று நீ அனுபவிக்கும் பலதும்’ இல்லாத நேற்றுக்குள் உன்னால் இனி வாழமுடியுமா ?

நான் : சாத்தியமில்லை … சாத்தியமில்லை… நேற்றின் நெருக்கடிகளும் கசப்பும் பண முடையும் சவால்களும் கூடவே வரும் அல்லவா ? யோசிக்கவே பயமாக இருக்கிறதே !

TM : ஆம் .ஆம். நிச்சயம் .ஒவ்வொரு காலகட்டமும் அததற்கு உரிய பிரச்சனைகளும் சவால்களும் மிக்கதுதான்… காயங்களும் சிராய்ப்புகளும் மோதலும் கூடலும் இல்லாமல் வாழ்க்கை வறட்டு இயந்திரமாகிவிடுமே என்னைப்போல !

நான் : ஆமாம் . ஆமாம் . ஆமாம். பட்டறிவின்றி வாழ்க்கை ஏது ?

TM : சரியாகச் சொன்னீர்கள் ! நிச்சயமாக நேற்று என்பது முடிந்து போனது .அசை போடலாம் . அனுபவம் பெறலாம் . நேற்றில் வாழ முடியாது . நாளை என்பதை கனவு காணலாம் அதற்காக விதை போடலாம் இன்றில் காலூன்றாமல் நேற்றின் பாடம் கற்காமல் நாளையில் பறக்க இயலாது …

நான் : மெய் … மெய்… அப்புறம் ஏன் உன் மீது ஏறி பின்னோக்கி பயணம் போக வேண்டும் ?

TM : நேற்றின் பாடம் கற்க . ஒரு கற்பனை .ஓர் அசை போடல் . வேர்களை அடையாளம் காண அவ்வளவுதான் … இன்றும் நாளையும் நம் கையில்தான் … நேற்றும் அப்படித்தான் இருந்தோம்… கால இயந்திரம் விரைந்து கொண்டே இருக்கிறது … சூழல் மாறிக்கொண்டே இருக்கிறது …கருவிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன … அதனை ஒட்டி … கருத்துகளும் …கலாச்சாரமும் ..வாழ்வின் ஒவ்வொரு கூறும் மாறிக்கொண்டே இருக்கின்றன … நீயும்தான் …

நான் : அப்படியானால் உன் பணி யாது ?

TM : நேற்றில் உன்னை பயணிக்கச் செய்து பரிணாம மாற்றங்களை சமூக மாற்றங்களை தனிமனித மாற்றங்களை வாழ்க்கை மாற்றங்களை உனக்கு உணர்த்துவதும் மாற்றங்களை சாதிக்க உன்னைத் தூண்டுவதும் மட்டுமே என் பணி …

நான் : ஆஹா ! என்னுள் ‘அக்னிக் குஞ்சு’ ஒன்று படபடக்கிறது .நன்றி !

TM : மிக்க மகிழ்ச்சி ! நன்றி !

சுபொஅ.
06/09/25

0 comments :

Post a Comment