’மாமன்’ திரைப்படத்தை முன்வைத்து ….

Posted by அகத்தீ Labels:

 




 “அரசு EWS  குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஒதுக்கும் வீடுகளில் எந்த வசதி இருக்கிறது ? எட்டிப் பார்த்து வாருங்கள் !.....”

 

 

’மாமன்’ திரைப்படத்தை முன்வைத்து ….

 

மிகத் தாமதமாக அண்மையில் ‘மாமன்’ திரைப்படம் பார்த்தேன் . இது அப்படம் குறித்த விமர்சனம் அல்ல . ஆயின் அப்படம் பற்ற வைத்த ஒரு பொறியினை விரிவாக்கம் செய்து ஓர் சமூகப் பிரச்சனையை , பண்பாட்டு பிரச்சனையை விவாதிக்கலாம் எனக் கருதுகிறேன். கொஞ்சம் விசாலமனதோடு வாசிக்க வேண்டுகிறேன்.

 

திருமணத்திற்கு பிறகும் மாமனோடுதான் படுத்து உறங்குவேன் , ஒன்றாகத்தான் இருப்பேன் என[ பாசத்தைக் கொட்டி வளர்க்கும்] அக்கா மகன் பொடியன்  அடம் பிடிப்பதால் வரும் உறவுச் சிக்கலை படம் ஆக்கி இருக்கிறார்கள் . திரைக்கதை அமைப்பு , கையாண்ட முறை இவற்றில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு . விமர்சனங்கள் உண்டு .ஆயினும் வழக்கமான அடிதடி குத்துப்பாடு மசாலா தடவாத  மாறுபட்ட படம் . நடிப்பு சிறப்பு . அதனால் படம் எனக்குப் பிடித்திருக்கிறது .

 

கிராமப்புறத்தில் சிலரின் முதல் இரவுகளில் இதுபோன்ற சம்பவங்கள்  கேள்விப் பட்டிருக்கிறோம் .  பெரியவர்கள் குழந்தைக்கு வேறு ஆசை காட்டி மடை மாற்றி சமாளிப்பார்கள் . திரைப்படம் கொஞ்சம் நாடகபாணி ஆக்கி இருக்கிறது . சரி ! சினிமாவில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பது புரிகிறது . படம் பார்த்த பின் நான் கொஞ்சம் யோசித்தேன் . கேள்வி எழுந்தது .

 

திருமணமானவர்கள் அனைவருக்கும் நம் நாட்டில் நம் பண்பாட்டில் ’தாம்பத்தியத்திற்கான முழு வாய்ப்பும் சுதந்திரவெளியும்’ இருக்கிறதா என்பதுதான் என் மனதில் தெறித்த மையமான கேள்வி .

 

கலைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போது சூப்பர் ஸ்டார் உட்பட பலர் கொந்தளித்து ஒருவரின் படுக்கை அறையில் எப்படி  போலீஸ் நுழையலாம் என கண்டனம் முழங்கினர் . சரிதான் .அது மனித உரிமை மீறல் . கண்டிக்கப்பட வேண்டும் . மனித உரிமை அக்கறை உள்ள எல்லோரும் கண்டித்தனர் . இப்போதும் அந்த கண்டனம் மிகச்சரி என்றே கருதுகிறேன்.

 

அதேவேளை , இங்கு சமூகத்தில் தனி படுக்கை அறையே இல்லாத நிலையே பெரும்பாலோருக்கு உள்ளதே .  இதைப் பற்றி யாரும் பெரிதாய் இதுவரை கவலைப்பட்டதாகவே தெரியவில்லையே .இது மனித உரிமை மனித மாண்பு மீறாலகப் பேசப்படுவதே இல்லையே . இதுதான் முரண்பாடு . மேலிருப்போருக்கு பேசப்படும் ’நியாயம்’ கீழே வரவர ’கனத்த மெளனம்’ ஆகிவிடுகிறது. 

 

கூட்டுக் குடும்ப வாழ்வில் கணவன் மனைவி தனித்து மனம்விட்டு பேசுவதற்கான வாய்ப்பு பொதுவாக  நம் சமூகத்தில்  உண்டா ? பெரும்பாலும் இல்லை . பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவிக்குத் தனித்த படுக்கை அறை உண்டா ? கேள்விக்குறிதான் .

 

ஒரு வேளை நடுத்தரக் குடும்பத்தில் இளம் தம்பதியினருக்கு அப்படி ஓர் அறை ஒதுக்கப்படும் போது ஐம்பது அறுவது வயது மாமனார் மாமியார் நடுக்கூடத்தில் தூங்க வேண்டும் . மகனுக்கோ மகளுக்கோ திருமணம் ஆனபின்னும்

 ’பெருசுகளுக்கு சுகம் கேட்குதோ’ என்கிற எள்ளல் பேச்சு இங்கு சர்வசாதாரணம் .

 

ஆணோ பெண்ணே எந்த வயதாயினும் தனிப்படுக்கை அறை தேவை என்பதை ஏற்றாலும் அதற்கான வாய்ப்போ வசதியோ இல்லாத சமூகச் சூழல் .பொருளாதார நிர்ப்பந்தம் இங்கு கோலோச்சுகிறது .

 

‘தனிக் குடித்தனம்’ என்கிற கோரிக்கையின் நியாயம் இதன் பின்னால் ஒளிந்திருக்கிறது . மறுபுறம் பொருளாதாரச் சூழலும் பண்பாட்டு இறுக்கமும் தடையாகவும் வந்து நிற்கிறது .இது பொதுவிவாதமாக ஆக்கப்படுவதே இல்லை .

 

 

பெரும்பாலான குடும்பங்களில் ‘ படுக்கை அறையே கிடையாது ‘; எட்டுக்கு எட்டு ஒற்றை அறையில் கணவன் மனைவி தாய் தந்தை மகன் மகள் எல்லோரும் ஒன்றாய் உறங்க வேண்டிய கட்டாயம் . இட்டுக்கட்டி சொல்ல வில்லை . அரசு EWS  குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஒதுக்கும் வீடுகளில் எந்த வசதி இருக்கிறது ? எட்டிப் பார்த்து வாருங்கள் !

 

அடுக்களை ,படுக்கை அறை ,பூஜை அறை , படிப்பறை ,கூடம் எல்லாம் ஒற்றை அறைதான் .போனால் போகுதென்று ஒரு கழிப்பறை மட்டும் கூடுதலாக இருக்கும் . [ நான் இங்கு EWS எனச் சொன்னது ஒடுக்கப்பட்ட அடித்தட்டு ஏழைகளை .  வருடத்திற்கு எட்டு லட்சம் வருமானம் பெறும் மேல்ஜாதி அரிய வகை ஏழைகளை [EWS] அல்ல . அது அயோக்கியத்தனமான இட ஒதுக்கீடு ] இதைத்தான் பொதுவாய் வீடு கொடுத்து விட்டதாக அரசு தப்பட்டம் அடித்துக் கொள்ளும் .

 

அடிக்கடி தீப்பிடிக்கும் குடிசை வீடுகளைவிட இது மேலானதுதான் , ஆனாலும் மனித மாண்புகள் தலைகுனியும் வீடுகள்தாம் இவை  . எட்டடி கூட்டுக்குள்ளே ஆறெழு பேர் வாழும் என்று சொல்லக்கூடாது எப்படியோ காலந்தள்ளும் சர்க்கஸ் . இதுவா மாண்பான வாழ்க்கை ? இதுவா மனிதம் ?

 

இருக்கிற இடம் மிகவும் சிக்கலாக இருப்பினும் ஆண் பெண் பாலின உணர்ச்சி மழுங்கிவிடாதே . பூனை இருக்கும் வீட்டில்தான் எலியும் குடும்பம் நடத்தி குட்டி போடுகிறது என்பதுபோல் ; எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் இயந்திரகதியாய் தாம்பத்தியம் நடந்தேறிக் கொண்டிருக்கும் .இங்கே ஆணின் திருப்தி மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் பெண்ணின் இச்சை பேசவே முடியாது .தலைவன் முன் தலைவி தன் இச்சையை சொல்லவும் கூடாது எனத் தடுக்கும் சீரழிந்த பண்பாட்டை என்ன பண்ணித் தொலைப்பது ?

 

சரி ! இதுதான் இப்படி எனில் . தனி படுக்கை அறை உள்ள வீட்டில் இரு குழந்தை பிறந்ததும் குழந்தைக்குத் தனிப் படுக்கை என்பது பொதுவாகக் கிடையாது .இரண்டு மூன்று குழந்தைகள் உள்ள குடும்பதில் இடநெருக்கடி மிகப் பெரும் வாழ்க்கை சவால்தான்.

 

கடைசி குழந்தை  கட்டிலின் மேலே  இருவருக்கும் இடையில் , கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் கட்டிலுக்கு அடியிலும் கட்டிலுக்கு பக்கத்திலும் தூங்க வேண்டும் . தாத்தா பாட்டி இருக்கும் வீட்டில் வளர்ந்த குழந்தைகள் அவர்களுக்கு அருகில் திண்ணையிலோ கூடத்திலோ ! மீண்டும் யோசித்துப் பாருங்கள் தாம்பத்தியம் வெறும் இயந்திரம் போல் நடந்தேறும் இனப்பெருக்கமும் கைக்கூடும் ஆயினும் முழுமை அடையாத உணர்ச்சிகள் வேறு வேறு வடிவத்தில் வெடிக்கும் . பல குடும்ப முரண்களில் இதனை கணக்கில் எடுக்காமலே பஞ்சாயத்து ஒருதலைப் பட்சமாக பேசி முடிக்கப்படும் .

 

நான் அமெரிக்கா சென்ற போது கவனித்தேன் . மேலை நாடுகளில் அப்படித்தான் .அங்கு குழந்தைகளுக்கு தனிக் கட்டிலில் தனி அறையில் படுத்து உறங்கப் பழக்கிவிடுகிறார்கள் . பெற்றோரோடு தூங்க வைப்பது சட்டப்படி குற்றம் . குழந்தைகள் தானேதான் சாப்பிட வேண்டும் .ஊட்டிவிடக் கூடாது .  காரில் பயணிக்கும் போது மடியில் குழந்தையை வைத்துக் கொள்ளக்கூடாது .தனி இருக்கை .தனி ஏற்பாடு . குழந்தைகள் சுயமாக செயல்படவே ஊக்குவிக்கப் படுகிறார்கள் . இதனால் பாசம் இல்லாதவர்கள் என நாம் கருதுவது தவறு . குழந்தைகள் உரிமைக்கு அங்கு அதிக முக்கியத்துவம் உள்ளது . குழந்தையின் ஒப்புதல் இல்லாமல் தொடக்கூட முடியாது .நல்ல பண்பாடு .  நம் பண்பாட்டு சூழலில் இருந்து பார்க்கும் போது சில மனத்தடைகளும் உருவாகத்தான் செய்கிறது .

 

அதுபோல் எந்த வயதாயினும் கணவன் மனைவிக்கு ‘பிரைவேசி ‘முக்கியம் என்கிற புரிதல் வலுவாக இருக்கிறது . ஆம் .அது இயற்கைத் தேவை அல்லவா ? நாமும் இதனை பின்பற்றலாம்தான் ஆயின் இதற்குரிய இடவசதியும் பணவசதியும் பண்பாட்டுத் தெளிவும்  உறுதியும் தேவை அல்லவா ? அவ்வளவு சீக்கிரம் நமக்கு அது வந்துவிடுமா ?

 

பல குடும்பச் சிக்கல்களை கூர்ந்து அலசினால்  ; அது மாமியார் மருமகள் பிரச்சனை ஆயினும் அல்லது கணவன் மனைவி முரண்பாடு ஆனாலும் அவர்களின் தாம்பத்ய உறவில் ஏற்படும் விரிசல் இருப்பது புலனாகும் .

 

கணவன் மனைவி சுதந்திரமாக மனம்விட்டு பேச உறவாட ஒரு ’பிரைவேசி’ இல்லாத போது அதனால் ஏற்படும் அழுத்தம் மாமியார் மருமகள் மோதலாகவோ, கணவன் மனைவி சண்டையாகவோ வெடிக்கும் . இதில் இளம் தம்பதியருக்கு மட்டுமல்ல குடும்பதின் மூத்த தம்பதியினருக்கு ‘பிரைவேசி ‘ தேவைப்படுகிறது என்கிற பார்வைக் கோளாறு ஆட்டுவிக்கிறது.

 

இப்பார்வையை இப்போது இளைய தலைமுறை உணர்கிறது மாற்ற எத்தணிக்கிறது. ஆயினும் பண்பாட்டு இறுக்கமும் வாழ்க்கை நெருக்கடிகளும் வாய்ப்பிற்கு முட்டுக்கட்டைப் போடுகிறது .

 

இது வெறும் உடலுறவு சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல . மனம் விட்டுப் பேச , பழகவே பிரைவேசி  தேவைப் படுகிறது . காலம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது கணவன் மனைவிக்கே தனித்தனி அறைகள் . அவரோ /இவரோ அனுமதி இன்றி அங்கு நுழையக்கூட முடியாது . இரண்டு பேருக்கும் தனித்துவம் உண்டு என்கிற திசையில் மேற்கின் பண்பாடு நகர்கிறது .அதற்கான சூழலும் அமைகிறது .

 

இங்கு அதை எல்லாம் மேல்மட்டத்தில் உள்ள ஒன்றிரண்டு சதவீதம் குடும்பங்கள் மட்டுமே யோசிக்க முடியும் . மற்றவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க இயலாத சூழல் உள்ளது. மேற்கில் இந்த எண்ணிக்கை சற்றுகூடுதல் அவ்வளவுதான் .ஆயினும் இந்தப்  பார்வை பரவலாகி உள்ளது . அங்கும் நம் குடும்பங்கள் போல் இடவசதி பணவசதி இல்லாதோர் சந்திக்கும் பிரச்சனைகள் உண்டு . ஆனாலும் பண்பாட்டுச் சூழல் நம்மைவிட ஜனநாயகமானது .மிகவும் பரந்தது . நாமும் அதை நோக்கி பயணிக்கலாம் .

 

கும்பத்தில் ஜனநாயக் காற்று வீச வேண்டும் . குழந்தைகள் ,முதியோர்கள் ,தம்பதியர் , பெற்றோர் என ஒவ்வொருவருக்கும் உரிமைகளும் உண்டு .கடமைகளும் உண்டு . இதில் ஆணாதிக்கமோ பெண்ணாதிக்கமோ வயது உறவு நிலை சார்ந்த ஆதிக்கமோ  இல்லாத ஜனநாயக பூர்வமாக அனைத்தையும் அணுகுகிற ”குடும்ப ஜனநாயக் பண்பாட்டை” நோக்கிப் பயணிப்பது தவிர்க்க முடியாதது . காலத்தின் தேவை . இதற்கான விவாதங்கள் தொடங்குவதே முதல் படியாகும் . திரைப்படங்களிலும் களமாக வேண்டும் . மாமன் படம் எனக்கு இதனை பேசச் சொன்னது .

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

10/09/25 .


0 comments :

Post a Comment