கட்சிக் கல்வி : நேற்றும் இன்றும்

Posted by அகத்தீ Labels:

 






கட்சிக் கல்வி : நேற்றும் இன்றும்

[ இது முழுக்க முழுக்க என் அனுபவம் புரிதல் சார்ந்தது மட்டுமே . சற்று பெரியது .கொஞ்சம் பொறுமையாகப் படியுங்கள் என வேண்டுகிறேன். ]

சில நாட்கள் முன்பு ஒரு பழைய தோழர் எப்படியோ என் அலைபேசி எண்ணை தேடிவாங்கிப் பேசினார் . ரொம்ப மகிழ்ச்சி . “இன்றைக்கு கட்சிக் கல்வி சிபிஎம்மில் பெருமளவு குறைந்து விட்டது” என அவர் வருந்தினார் .எங்கள் உரையாடல் முழுவதும் கிட்டத்தட்ட அதனைச் சுற்றியே வட்டமிட்டது .

“இங்கே நடந்த உரையாடல் சார்ந்து நான் ஒரு பதிவு எழுதுவேன்” என அவரிடம் வாக்குக் கொடுத்தேன் . அதன் பின் நான் பலவற்றை நினைத்துப் பார்த்தேன் . எழுதுகிறேன்.

“நேற்று எல்லாம் சிறப்பாக இருந்தது ; இன்று எல்லாம் கேட்டுப்போச்சு” என்கிறவர்களோடு எனக்கு உடன் பாடில்லை . நேற்றின் தேவையும் சூழலும் வாய்ப்பும் இன்றைய தேவையும் வாய்ப்பும் சூழலும் ஒருப்போல் இல்லை . ஆகவே நேற்றையும் இன்றையும் வறட்டுத்தனமாக ஒப்பிட விரும்பவில்லை . அனுபவத் தடங்களில் கொஞ்சம் அழைத்துச் செல்வேன் .

“கட்சித் திட்டம்” , மனிதகுல வரலாறு “” மார்க்சிய தத்துவம்”, “ சிபிஎம் சிபிஐ எம் எல் தத்துவ வேறுபாடு “ , “ சுதந்திரப் போராட்ட வரலாறு”, “ ரஷ்யப் புரட்சி வரலாறு” , “ சீனபுரட்சி வரலாறு” , “ தெலுங்கான போராட்ட வரலாறு “ “ கட்சி வரலாறு” “ கட்சி அமைப்பு “ “ மார்க்சியப் பொருளாதாரம்” “ திராவிட இயக்க வரலாறு” “ இந்திய மண்ணின் பொருள்முதல்வாதம்” “ உயிரின் தோற்றம்” ” ஏகாதிபத்திய சதிகள்” இப்படிப்பட்ட தலைப்புகளில் தோழர்கள் பி.ஆர்.பரமேஸ்வரன் , வி.பி.சிந்தன் . பி.ராமச்சந்திரன் , கே.வரதராஜன் , எஸ் ஏ பெருமாள் ,வே.மீனாட்சிசுந்தரம் ,எஸ் ஏ பெருமாள் , மதுரை எழிலன் என்கிற சுந்தரம் , மைதிலிசிவராமன் , ஆத்ரேயா , நெல்லைச் செல்வன் உட்பட [ இன்னும் சில பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வரவில்லை ] ஒரு பெரும்படை களத்தில் நின்றது . தோழர் ஏ.பாலசுப்பிரமணியன் , எம் ஆர் வெங்கட்ராமன் போன்றோரும் வகுப்பில் ஆசிரியராக வருவார்கள் .

அப்போது வகுப்பு எனில் ஒவ்வொரு தலைப்புக்கும் மூன்று மணி நேரம் தொடங்கி ஏழு மணி நேரம் எல்லாம் நடக்கும் . கடைசியில் கேள்வி பதில் இருக்கும் . அதுவும் ஒரு கேள்விக்கே கால் மணி /அரை மணி நேரத்துக்கு குறையாமல் பதில் சொல்லுவார்கள் . இது போக மத்தியக் குழு முடிவுகள் குறித்து அரசியல் ரிப்போர்ட் அடிக்கடி நடை பெறும் . குறைந்தது இரண்டரை மணி நேரம் ரிப்போர்ட் செய்வார்கள் .

நான் முதன் முதலில் கலந்து கொண்ட வகுப்பு தோழர் து .ஜானகிராமன் அவர் வீட்டில் நான் உட்பட நான்கைந்து இளம் தோழர்களுக்கு கட்சியைப் பற்றி அவர் பேசியதுதான் . முழுநாள் வகுப்பாக கலந்து கொண்டது தோழர் பி.ஆர் .பரமேஸ்வரன் ‘கட்சித் திட்டம் ‘ குறித்து பேசியதுதான் .அப்புறம் ஓர் முறை ‘மார்க்சிய தத்துவம் குறித்து ‘ ஒரு நாள் முழுக்க [ ஏழு மணி நேரம் ] அவர் பேசுவதைக் கேட்டுவிட்டு அசந்துவிட்டேன் .அதையே பலநாள் பேசிக் கொண்டிருந்தேன் . முதன் முதல் பி.ஆர்.பி வகுப்பில் நான் கேட்ட ”சந்தேகம் புரட்சி எப்போது வரும் ?” . பல வகுப்பாசிரியர்களிடம் இதே கேள்வியைக் கேட்டுள்ளேன் . அன்றைய புரிதலின் தரம் அவ்வளவுதான்.

சென்னையில் வாலிபர் சங்கம் கிட்டத்தட்ட மேலே பட்டியலிட்ட தலைப்புகள் சார்ந்து வாலிபர் சங்க மேடைக்கேற்ற தலைப்பாக்கி டிக்கெட் போட்டு சிறப்புக் கூட்டம் நடத்திய அனுபவம் உண்டு .இரண்டு மணி நேரம் உரை இருக்கும் . சுமார் அறுநூறு பேருக்கு குறையாமல் பங்கேற்பார்கள் . சென்னை கேரள சமாஜத்தில்தான் பெரும்பாலும் நடை பெறும் . நிதிக்கு நிதியும் ஆச்சு , அரசியல் கல்வியும் ஆச்சு !

அன்றைய கல்வி போதனையின் வடிவமும் தேவையும் அன்றைய பொது சமூகச் சூழல் , உறுப்பினர்கள் பெரும்பாலோரின் பள்ளிக் கல்வித் தரம் ,வாய்ப்பு இவை சார்ந்தே தீர்மானிக்கப்பட்டது . ஆகவே மேலிருந்து அனைத்தையும் ”ஸ்பூண் ஃபீடு” [spoon feed ] என்பார்களே அதுபோல் வாயில் ஊட்டுவதுபோல் மேலிருந்து விலாவாரியாகச் சொல்வதாகவே அமைந்தது . ஆகவே பல மணி நேரம் வகுப்பு என்பது அன்றைக்குத் தவிர்க்க முடியாததாக இருந்தது ..

அன்றைய போதனை முறை ’ஒத்த கருத்தோட்டத்தை’ எல்லோர் மூளையிலும் பதியம் போடுவதில் வெற்றி பெற்றது ஆனால் அது கடிவாளம் கட்டிய குதிரை போல் ஒரு நேர்கோட்டு பயணமாகவே அமைந்தது . அப்போதே இந்த பாணியில் தொடர்ந்து மணிகணக்கில் போதிப்பது மட்டும் போதாது . வேறு வடிவங்களும் தேட வேண்டும் என்கிற விவாதமும் நடந்தது .

பின்னர் என் போன்றவர்கள் களத்துக்கு வந்த காலம் . வகுப்பு ஒன்றைரை மணி முதல் இரண்டுமணி நேரம் என்றானது .ஒரே நாளில் இரண்டு மூன்று தலைப்புகளில் போதனை என்றானது .பாடக் குறிப்புகள் வழங்கப்பட்டன . எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதின் எதிரொலி இது . நான் ஏராளம் வகுப்புகளில் ஆசிரியராக இருந்துள்ளேன்.

அன்றைய பின்னணியில் ’மார்க்சிஸ்ட்’ என்கிற தத்துவ ஏடொன்று துவக்கப்பட்டது .இன்னும் வந்து கொண்டிருக்கிறது . அவ்வேடு மாறுபட்ட கோணங்களில் கட்டுரை எழுதவும் அதனை ஒட்டி விவாதமாக பலர் எழுதவும் இறுதியில் சரியாண கோணத்தில் தெளிவுபடுத்துவதும் என்கிற முயற்சி செய்ய வேண்டும் என்பது அப்போது பேசப்படது . பேச்சோடு நின்று போனது . இப்போதுவரை செயலுக்கு வந்ததாகத் தெரியவில்லை . தோழர் ஈ எம் எஸ் எப்போதும் தேசாபிமானியில் சிந்தாவில் இப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்வார் . அதில் பலநேரங்களில் விவாதத்தை அவரே துவக்கி தூண்டிவிடுவார் . அவரே நிறைவும் செய்வார் .இது கட்சி முழுவதையும் கருத்து ரீதியாக ஒருங்கிணைக்க ஆயுதமானது . மாறுபட்ட கருத்து விவாதம் தவறல்ல ; இறுதியில் கட்சி முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்.

அன்றைய தலைவர்கள் பரந்த புத்தக வாசிப்பனுபவம் கொண்டவர்களாக இருந்தனர் .ஆனால் களத்தில் அப்படி இல்லை . ஆகவே இதில் மாற்றம் கொண்டுவர பெரும் முயற்சி நடந்தது . என்சிபிஹெச் பதிப்பகத்தில் சோவியத் யூனியன் வெளியீடாக அடிப்படை மார்க்சிய நூல்கள் மிக மலிவான விலையில் தமிழில் தாரளமாக கிடைத்தன .வாங்கிக் குவித்தனர் .ஆனால் படிப்பதும் புரிவதும் எல்லோருக்கும் வாய்க்கவில்லை காரணம் கடினமான மொழிபெயர்ப்பாக இருந்தது . அதேநேரம் சோவியத் நாவல்கள் ,சிறுகதைகள் மிகப்பெரும் வாசகர் பரப்பைச் சென்றடைந்தன

எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதின் எதிரொலி .கட்சிக்குள் புத்தக வாசிப்பு முக்கியமாக இரண்டு வகையில் இருந்தது . முதல் ரகம் ஆழமாக பலதரப்பட்ட நூல்களைத் தேடி வாசிக்கும் பிரிவினர் .இவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு . கட்சி பிரசுரங்கள் ,வெளியீடுகள் , ஏடுகள் இவற்றுக்குள் வட்டமிடும் பெரும்பாலோர் . சொல்லப் போனால் கட்சிப் பார்வைக்கு வெளியே எட்டிப்பார்ப்பதே குற்றம் என்கிற பார்வைகூட இருந்தது என்றாலும் தப்பில்லை .

’நீண்டபயணம்’ ,சமரன்’ போன்ற நக்சலைட் ஏடுகளை நாம் வாசிப்பதை யாராவது பார்த்துவிட்டால் கட்சிக் கிளையில் பெரும் விவாதமாகிவிடும் . அப்படித்தான் நூல்கள் வாசிப்பும் . இது கட்சிக் கட்டுப்பாடாக மூத்த தோழர்கள் சிலர் பார்த்ததும் உண்டு .நான் பலமுறை சிக்கி கடிப்பட்டதும் உண்டு . நான் கண்ணில் பட்டதை எல்லாம் வாசிக்கும் டைப் . பிரச்சனைதான் .

நோக்கு என்கிற கவிதை ஏட்டில் [ டிராஸ்கிய ஏட்டில் ] சு.பொ.அலி என்ற பெயரில் நான் எழுதிய கல்ராயன் மலை கொத்தடிமைகள் குறித்த நெடுங்கவிதை வந்தது . வாலிபர் சங்க மாவட்ட மாநாட்டில் அதனை சிலர் விற்ற போது தடுக்கப்பட்டனர் .நானும் கண்டிக்கப்பட்டேன் .இனி இந்த ஏடுகளில் எழுதக்கூடாது என அறிவுறுத்தப்பட்டேன். இதை எல்லாம் சொல்லுவதற்கு காரணம் .அன்றைய கட்சிக் கல்வி குறிப்பிட்ட வட்டத்துக்குள் தோழர்களை சுழலவைத்தது .

ஆனால் இன்றைய சூழல் முற்றிலும் மாறியுள்ளது .கட்சிக்குள் கற்றவர் எண்ணிக்கை பெரிதும் உயர்ந்துள்ளது . கல்லூரிக்கு போனவர்களும் கணிசமாக உள்ளனர் . இன்றைய கட்சி உறுப்பினர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவருள் பல்வேறு கருத்துகளை சரியாகவோ தவறாகவோ அலைபேசியும் கணினியும் கொட்டிக்கொண்டே இருக்கிறது . கூகுள் ஆண்டவர் உதவியால் எந்தத் தகவலையும் நொடியில் பெற்றுவிட முடியும் . இப்போது AI செயற்கை மூளை அல்லது இயந்திர மூளை கொட்டும் தகவல்களை அலசிப் பார்க்கத்தான் பழக்க வேண்டி இருக்கிறது .

இன்றைய வாசிப்பு தளமும் மிகவும் விரிவடைந்துள்ளது . நான் ஐம்பது அறுபது வயதில் படித்தவைகளை 25 வயதுக்குள் படித்துவிடுகிறார்கள். ஆக , கொரானா காலத்தில் இணையதளம் மூலம் கல்வி சாத்தியமாயிற்று .இப்போது மணிக்கணக்கில் ஒரே இடத்தில் உட்கார வைப்பது மிகச் சிரமம் . ’ஒன் வே டிராபிக் போல’ மேலிருந்து அள்ளிக் கொட்டுவது என்கிற முறை கிட்டத்தட்ட காலாவதி ஆகிக்கொண்டிருக்கிறது .கலந்துரையாடல் ,உரையாடல் என கொடுப்பதும் வாங்குவதுமாய் இருவழிக் கல்வியாகிக் கொண்டிருக்கிறது .

இன்றைய இளைஞர்கள் சமூகவலைதளங்கள் மூலம் பெற்ற பல்வேறு தவறான தகவல்கள் , எதிர் சிந்தனைகள் இவற்றோடுதான் வருகிறார்கள் .ஆளும் வர்க்கம் கருத்துருவாக்கத்தில் அசுரவேகத்தில் இயங்குகிறது .அதன் கடும் பாதிப்போடு வரும் இளைஞர்களோடு நட்போடு உரையாடி பயிற்றுவிப்பது இன்றைய சவால் . இணையத்தில் படித்தது கேட்டது எல்லாமே சரி என்றோ தவறென்றோ சொல்லிவிட முடியாது .பாலையும் தண்ணீரையும் சேர்த்து வைத்தாலும் பாலை மட்டுமே பிரித்து குடிக்கும் அன்னப்பறவை இருந்ததாக கற்பனையில் சொல்வார்களே அது போன்ற திறமைக்கு தயார்படுத்த வேண்டும் . அந்த அளவு சவால் உள்ளது .

’அடையாள அரசியல்’ , ’மதவெறிக்கு எதிரான தத்துவப்போர்’ , ‘சாதியத்துக்கு எதிரான தத்துவப் போர்’ , ‘வரலாற்றை மதவெறி இன்றி புரிய வைக்க பெரும் முயற்சி’ ,’எது ஜனநாயகப் பண்பாடு’ , ’பாலின சமத்துவம்’ , ’உலகமய பொருளாதாரமும் அரசியலும்’ , இப்படி கல்வியின் வட்டம் விரிவாகிக்கொண்டே இருக்கிறது . தேவை பெருத்துக் கொண்டே இருக்கிறது.

1] DIALITICAL MATERIALISAM 2] HISTORICAL MATERIALISAM 3] POLITICAL ECONOMY 4] COMMUNIST MOVEMENT 5] PROGRAMME 6] SOCIAL GROPES 7] ORGANISATION 8 ] THEREAT OF RSS AND HINDUTVA FORCES HOW TO COUNTER THEM

என கடசியின் மத்தியக்குழு எட்டு பாடத்திட்டங்கள் வெளியிட்டுள்ளது . ஆங்கிலத்தில் அவை கிடைக்கின்றன . தமிழிலும் கிடைக்கலாம் . மேலும் பல நூல்களும் சிறுவெளியீடுகளும் உள்ளன ,இன்னும் தலைப்புகளும் பரப்பும் விரிவாகிக் கொண்டே செல்கிறது . கட்சிக் கல்வியின் வளர்ச்சியும் தேவையும் அத்தகையதுதான் .

1981 வாலிபர் சங்க திருப்பூர் மாநில மாநாட்டில் தோழர் என் .நன்மாறன் சொன்னார் , “ ’கற்றலின் கேட்டலே நன்று’ என்று சொன்னது எப்போது ? ‘ எல்லோரும் படிக்கக்கூடாது ; நாங்க மட்டும்தான் படிக்கணும்னு’ சொன்ன காலகட்டத்தில் சொன்னது . அது மலையேறிவிட்டது .எல்லோரும் படிக்கணும் .சுயகல்விக்கு தூண்டுவது மட்டுமே இன்றைக்கு நம் அரசியல் வகுப்பாக இருக்க முடியும் .சுயகல்விக்கு மாற்றாக அரசியல் வகுப்புகள் இருக்க முடியாது.”

அது மெய்தானே . இன்றைக்கு கட்சி உடனடியாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயக் கடமையாக நிர்ணயித்துள்ள பட்டியலில் ’புத்தக வாசிப்புக்குத் தூண்டுவதும்’ இடம் பெற்றுள்ளது .இது காலத்தின் தேவை . புத்தக வாசிப்புக்கு மாற்று இல்லை . புத்தக வாசிப்பு என்பது ’இ புக்’ வாசிப்பதும்தான்; இணைய வாசிப்பும்தான் .

நாங்கள் சோதித்த ஒரு முயற்சி . தோழர் வே.மீனாட்சி சுந்தரம் மாவட்டச் செயலாளர் .நான் செயற்குழு உறுப்பினர் . தோழர் க.சின்னையா மூவரும் கட்சிக் கல்விக்குழு .ஒரு தலைப்பை தேர்வு செய்வோம் . வாசிக்க வேண்டிய முக்கிய நூல்களின் பட்டியல் தேர்வு செய்வோம் . கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்கள் ,முழுநேர ஊழியர்கள் அனைவருக்கும் நூல் பட்டியலை அனுப்பி நூல் கிடைப்பதை உறுதி செய்தி வகுப்பு நடை பெறும் . ஒருவர் 15 அல்லது 20 நிமிடம் அறிமுக செய்வார் .பின் யார் வேண்டுமானாலும் கேள்வி எழுப்பலாம். யார் கைதூக்குகிறார்களோ அவர்கள் பதில் சொல்லலாம் . எல்லோரையும் கேள்வி கேட்பவராகவும் பதில் சொல்லுகிறவராகவும் மாற்றுவது எங்கள் வேலை .சரியான பதில் கிடைக்கும் வரை மேலும் சிலரை பதில் சொல்லக் கோருவோம் .தேவைப்பட்டால் நாங்கள் தலையிடுவோம் .சில வகுப்புகள் இப்படி நடைபெற்றன .அப்புறம் நின்று போனது . இதற்கு பெரு முயற்சி தேவைப்பட்டதே காரணம் . இது ஒரு சோதனை முயற்சியே !

காலமும் சூழலும் கருவிகளும் மாறியுள்ளன .நாமும் மாற வேண்டும் .கட்சிக் கல்வியும் நவீனமாக வேண்டும் . கருத்துப் போர் நடத்த ஒவ்வொருவரும் தன்னை கருத்துரீதியாக ஆயுத பாணியாக்க வேண்டிய நேரம் . ’அரைத்த மாவை அரைக்காமல்’ ஒவ்வொரு நொடியும் புதுப்பித்துக் கொண்டே இருக்கு வேண்டியுள்ளது . எனக்கு ஓர் நினைவு தோழர் பி.ஆர்.சி எங்கு பேசினாலும் அண்மையில் தான் படித்த நூல் ஒன்றை குறிப்பிட்டு அதிலிருந்து சில தகவல்களைச் சொல்லி படிக்கத் தூண்டுவார் . மைதிலி சிவராமனும் அப்படிச் செய்வார் .

ஐடி [IT]யில் வேலை பார்ப்பவர்களிடம் கேளுங்கள் தங்களை அப்டேட் பண்ணாதவர்கள் பணியில் நிலைக்கவே முடியாது .ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டே இருந்தால்தான் வாழமுடியும் . கட்சி கல்வியும் அப்படித்தான் . பேசுவது எளிது .நடைமுறை சவால் மிக்கது .இதில் முயற்சி போதவில்லை .தேவைக்கு ஏற்ப இல்லை என்பது சரிதான் .ஆனால் இதனை ஒரு வழிப்பாதையில் சரி செய்ய முடியாது .பன்முகப் பார்வையும் அணுகுமுறையும் தேவை .இளைய தலைமுறை அதில் வெல்வார்கள் என்கிற நம்பிக்கையோடு விடை பெறுகிறேன்.

சுபொஅ.
08/09/25.

0 comments :

Post a Comment