ரகசியம் தெரியுமா ?

Posted by அகத்தீ Labels:

 


உங்களுக்கு ’அவரை’ப் பற்றி ரகசியம் தெரியுமா ?

முகநூலில் ஒருவர் இப்படிக் கேட்டிருந்தார் .

நான் அவரிடம் திருப்பிக் கேட்டேன் ,

உங்கள் மனதில் பூட்டிவைத்துள்ள ரகசியங்களை

உங்கள் மனைவியோ பிள்ளைகளோ அறிவார்களா ?

அல்லது

உங்கள் மனைவியின் இதயக் கூட்டுக்குள்

புதைந்து கிடக்கிற ரகசியங்களை

நீங்களோ பிள்ளைகளோ அறிவீர்களா ?

ஒவ்வொருவர் நெஞ்சுக்குள்ளும்

தகிக்கும் உண்மைகளையோ

ஆழக்குழி தோண்டி

புதைக்கப்பட்ட ரகசியங்களையோ

முழுவதும் யாராவது  சொல்லிவிட முடியுமா ?

நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும் போதோ

வாக்கு மூலம் கொடுக்கும் போதோ

முழு உண்மையும் சொல்வோமென்றா

சத்தியம் செய்கிறோம்

இல்லவே இல்லை.

’நான் சொல்வதெல்லாம் உண்மை .

உண்மையைத் தவிர வேறில்லை’

அவ்வளவுதான்

எல்லா உண்மையும் சொல்லப்போவதில்லை .

இதுதான் யதார்த்தம் .

ஆனாலும் பாருங்கள்

இரண்டு பேர் மட்டுமே சந்தித்து

என்னென்ன உரையாடினார்கள்

என்பதை எல்லாம்

இந்த யூ டியூப் சேனல்கள்

புட்டுபுட்டு வைக்கிறது

அதுமட்டுமா

அவர்கள் மனதிற்குள்

போட்டிருக்கிற சதித்திட்டங்களை

விலாவாரியாக விளம்புகிறது

உளவுத்துறை தகவல்கள்

உளவுத்துறைக்கே தெரியும் முன்னர்

ஊடகப் புலிகளின்

பாக்கெட்டுக்கு வந்து விடுகிறது .

ஆக ,

உலகின் எல்லா ரகசியங்களும் தெரிந்த

ஒரே ஏகாம்பரம்

இந்த யூ டியூப்பர்களும்

ஊடகப் புலிகளும்தான்

மனைவியோ கணவனோ

யாராயினும் ஒருவர்

உள்ளத்தில்

இறுக்கப் பூட்டப்பட்ட ரகசிங்களை

இன்னொருத்தர் அறிய

ஒரே வழி

இந்த யூடியூப்பர்களை

ஊடகப்புலிகளை அணுகலாம் !

 

சுபொஅ.

25/09/25


0 comments :

Post a Comment