மீன்பிடி காலத்தில்தான் வலைவீச வேண்டும்…

Posted by அகத்தீ Labels:

 


 

மீன்பிடி காலத்தில்தான் வலைவீச வேண்டும்…

 

நான் அரசியல் வகுப்பு நடத்துகிற போதும் சரி ; நான் கலந்து கொள்ளும் போதும் சரி ‘ கேள்வி பதில்’ நேரம்தான் எனக்கு மிகவும் பிடித்தது . நான் ஓய்வில் இருக்கும் போதும் என்னை நோக்கி தினசரி கேள்வி கேட்கவும் பதில் பெறவும் அலைபேசியிலோ / வாட்ஸ் அப்பிலோ வந்து விடுகிறார்கள் . எனக்கு மகிழ்ச்சியும் திருபதியும் அதுதான் … அதில் ஒன்றிரண்டை மட்டுமே பொதுவெளியில் பகிர்வேன்.

 

“ நீங்கள் ’இளையர்களை தைரியமாக விஸ்தாரமாகக் சேர்க்க வேண்டும்’ என லெனின் கூறியதை நேற்றுச் சுட்டிக்காட்டினீர்கள் . சரிதான் ,ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது ? புதிது புதிதாய் முளைப்பவர்களை நோக்கி ஈசல் போல் படை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள் . நாம் சேர்ப்பது எப்படி ?”

 

தோழரின் கவலையும் அக்கறையும் புரிகிறது .இது விரக்தி அல்ல ; ஆதங்கம் என்றே எடுத்துக் கொள்கிறேன்.  கொஞ்சம் கடந்த காலத்தைப் புரிந்து கொள்ளுவோம் . விடுதலைப் போரில் காங்கிரஸ் பலமாக இருந்த போது , இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கி ஈர்க்கப்பட்ட போது , இந்துமகா சபை ,ஆர் எஸ் எஸ் போன்ற வலது சாரி அமைப்புக்கள் களத்துக்கு வந்த போது , காங்கிரஸ் சோஷலிஸ்ட் மற்றும் வேறுபல கட்சிகள் உருவான போது அரசியல் களம் மிகவும் சூடாகவும் சுறுசுறுப்பாகவும் போட்டி போட்டுக்கொண்டு இளைஞர்களை ஈர்த்துக் கொண்டிருந்தது . அந்த காலகட்டத்தில்தான் பல்வேறு சதிவழக்குகளை எதிர்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைதூக்கியது . அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் , அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அப்போதுதான் முளைவிட்டன . இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னத்தி ஏர் அதுதான் . ஆக ,வெட்ட வெளியில் அல்ல , வலுவான போட்டியாளர்களுக்கு நடுவில்தான் பயணம் தொடங்கியது .

 

[ “ இங்கு எத்தனை எத்தைனை கட்சிகள் ….  ஏன்?” என்ற தலைப்பில் நாலய்ந்து நாட்கள் வரும் கட்டுரைத் தொடருக்கு தயார் செய்து கொண்டிருக்கிறேன் . முகநூலிலோ ஏதேனும் இணைய இதழிலோ வெளிவரலாம் .காத்திருங்கள்.]

 

தமிழ்நாட்டில் சமூகசீர்திருத்த இயக்கமும் திராவிட கருத்துகளும் வலுவாக இளைய தலைமுறையை ஈர்த்துக் கொண்டிருந்த கால்கட்டத்தில் , பெரியாரும் அண்ணாவு ஈர்ப்பு மையமாக உலாவந்த காலகட்டத்திதான் தான் என் மூத்ததலைமுறையினர் கம்யூனிஸ்டாக பரிமாணம் பெற்றனர்.

 

திமுக வலுவான அமைப்பாக இருந்த காலத்திதான் எம்ஜிஆர் எனும் மாபெரும் காந்தமும் இளைய தலைமுறையை சுண்டி இழுத்துக் கொண்டிருந்தது ;  இன்னொரு புறம் நக்சலைட்டுகள் ஈர்ப்பும் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது .  இந்த காலகட்டத்தில்தான் என் தலைமுறை களம் கண்டது .

 

சாதி சங்கள வீறுடன் களம் கண்ட நேரத்தில்தான் வாலிபர் சங்கமும் களத்தில்  நின்றது . “வன்னியர் கொடியைத் தவிர அந்நியர் கொடி எதையும் எங்கள் கிராமத்தில் பறக்கவிட மாட்டோம்.” என சாதி அமைப்பினர் வீச்சரிவாளுடன் வீதியில் நின்ற நேரத்தில் கிராமந்தோறும் நம் வாலிபர் சங்க வெண்கொடியை சாதிசங்க எதிர்ப்பை  மீறி பறக்கவிட்ட வரலாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துக்கு உண்டு . சாதி அமைப்புகளின் சவாலை மீறித்தான் வேர்விட்டது அன்று .

 

 

இந்தச் சூழலில்தான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை நாங்கள் கட்டி எழுப்பினோம் . போட்டியாளரே இல்லாத மைதானத்தில் ஓடி வரவில்லை . இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில மாநாடு ஓசூரில் நடைபெறும் வேளையில் இதனைச் சுட்டிக் காட்டுவது தேவை அல்லவா ?

 

ஆனால் ,அன்றைக்கு இன்று போல் சமூக ஊடகங்களும் ரீலுக்கு மயங்கும் சூழலும் மிகக் குறைவு என்பது உண்மையே ;  அப்போதும் சினிமா கவர்ச்சி தமிழ்நாட்டு அரசியலில் தாக்கம் செலுத்தவே செய்தன .  அதில் ஓர் தத்துவ நீரோட்டம் , கொள்கை சார்ந்த செய்திகளும் இருந்தன . எதிர்நீச்சலாகத்தான் நாங்கள் நீந்திக் கொண்டிருந்தோம் .

 

இப்போது மிகவும் சிக்கலான சமூகச் சூழல் ஆனால் அதே டிஜிட்டல் ஆயுதம் தாங்கிய இளைஞர்களே எங்கும் உலவுகின்றனர் . கத்தி பொதுவானது காய்கறி வெட்டப் பயன் படுத்துகிறோமா , அறுவை சிகிட்சைக்கு பயன்படுத்துகிறோமா , கொலை செய்யப் பயன் படுத்துகிறோமா என்பது கத்தியின் முடிவல்ல ; நம் முடிவே !

 

மின் தடை காலத்தில் மீன் பிடிக்க முடியாது . மீன் பிடி காலத்தில் எல்லோரும் போட்டி போடுவார்கள் . நாம் நிறைய கட்டுமரங்களை கடலில் இறக்குவோம் .நமக்குரிய பங்கைப் பெறுவோம் . இது மீன் பிடிக்காலம்.

 

போக்குவரத்தே இல்லாத மைதானத்தில் சைக்கிளோ / டூ விலரோ /ஃபோர் வீலரோ ஓட்டுவதில் பெருமை இல்லை . போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வண்டி ஓட்டுவதே முக்கியம் . கடல் கொந்தளிக்கும் போது தலைமைதாங்கி ,சுக்கானை இயக்கி கப்பலை பாதுகாப்பாய்  கரை சேர்ப்பவனே சிறந்த மாலுமி .

 

இவை வெறும் வசனம் அல்ல ; வரலாற்றுப் பாடம் . நம்பிக்கையோடு களம் ஏகுவோம் . வெற்றி தாமதமாகலாம் ; யாரும் தட்டிப் பறித்துவிட முடியாது .

 

இன்னொரு கேள்வியும் கேட்டார் . “ தேர்தல் அரசியலில் கரைந்து போகிறோம் .காணாமல் போகிறோம் . நம் தனி முத்திரை எங்கே ?”

 

இதுவும் ஆதங்கமே ! தேர்தல் அரசியல் வேண்டுமா வேண்டாமா என்பதை நம் உணர்ச்சிகளால் தீர்மானிக்க முடியாது .அக புற அரசியல் சூழலே தீர்மானிக்கும் . தேர்தல் களத்தை வலதுசாரிகளுக்கும் பாசிஸ்ட்டுகளுக்கும் தடையின்றி திறந்துவிட முடியாது .கூடாது . பாசிசத்தை வீழ்த்த எந்த வியூகம் இப்போது தேவையோ அதனைக் கைக்கொள்வது தவிர்க்க முடியாதது .தவிர்க்கக் கூடாதது . போராட்டமும் சமரசமும் கலந்ததுதான் வாழ்க்கையும் அரசியலும் . எப்போதும் ’புனித புரட்சியாளர்கள்’ ’தூய்மைவாதிகள்’ ’மடிசங்கிகள்’a போல் தனித்து ஓரம் போகச் சொல்லுவார்கள் .அது எதிரிகளுக்கே சாதகமாகும் என்பதறிக ! கிட்டத்தட்ட என்ஜிஓக்கள் பேசும் ’அறம்’ இதுதாம். இதற்கும் மேல் இதனை விவாதிக்க விரும்புவோர் நேரில் சந்திக்கும் போது பேசலாம் .பொதுவெளியில் அல்ல.

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

24/09/25 .


0 comments :

Post a Comment